ஆலயம், இறுதியாக…
ஆலயம் ஆகமம் சிற்பம்
ஆலயம் எவருடையது?
அன்புள்ள ஜெயமோகன்,
என் முதல் கடிதம்.
ஆலய விவாதத்தின் போது எழுந்த ஒன்று. தற்போதைய லெளகீக வாழ்க்கைக்கு ஆலயம் உணர்த்திராத ஒன்றை சாமியார்கள் உணர்த்தி விடுகிறார்களா?
ஆலயம் ஒரு செவ்வியல், தன்னைத் தானே முழுமைப் படுத்திக் கொள்ளக்கூடியது, என்ற ஒன்றாக இருந்தாலும், எந்தச் செவ்வியலும் தன்னை அறியாமலே சமூகத்தின் நுண்ணுணர்வில் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டு தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
எங்கள் ஊர்க் கோவிலுக்கு வரும் தாத்தாக்கள் இயல்பாக “அடியே…ஏண்டி இப்படி…வாடி சீக்கிரம்…” என்றுப் பேத்தியை அழைப்பது போல் அம்மனை அழைப்பார்கள். அதே போல் ஒவ்வொருவரும் தனக்குத் தேவையான ஒன்றை அவர்களே கண்டு எடுத்துச் செல்வதை பார்த்திருக்கிறேன். அவை கீழிருந்து மேல் வரும் மழைத்துளி போல் சமுதாயத்தை உரசிச் செல்வதாகப் பட்டது.
(ஒரு பக்கம்) இந்த நுண்ணுணர்வு குறைந்து வருமானால் சமுதாயத்தில் மாற்றம் /பாதிப்பு ஏற்படுமா?
(இன்னொரு பக்கம்) குலதெய்வங்கள் பெற்றிருக்கும் இடம் கூடப் பெறாமல் ஆலயங்கள் சென்று விடுமா? இந்தச் சூழலைப் பார்க்கும் போது புதுமைப்பித்தனின் சாத்தன் (சிற்பியின் நரகம்) தான் நினைவுக்கு வந்தார். சிறிது நேரத்தில், அதில் வரும் சந்நியாசியை எண்ணிக்கொள்ளவா இல்லை பைலார்க்கஸை எண்ணிக்கொள்ளவா என்றுக் குழம்பியது.
ரமணன்
கோவில்பட்டி .
***
அன்புள்ள ரமணன்,
நாம் இளமையில் ஒன்றை எண்ணிக் கொள்கிறோம், நம் வாழ்க்கை நம்மில் தொடங்கி நம்மில் முடிவது என. அகவை முதிர, அனுபவங்கள் சேரச்சேர ஒன்றை அறிகிறோம், நம் வாழ்க்கை ஒரு தொடர். நாம் நேற்றிருந்தவர்களின் இயல்பான நீட்சி அன்றி வேறல்ல.
நேற்றிருந்தவர்களின் அனுபவங்களில் திரண்டு வந்த அறிதல்கள், அவர்களில் நிகழ்ந்த மெய்மைகள் இலக்கியங்களாக, கலைகளாக நம்மிடம் வந்து சேர்ந்துள்ளன. அவர்களின் உள்ளுணர்வுகள், அவர்களின் கனவுகள் படிமங்களாக, ஆழ்படிமங்களாக நம்மை வந்து சேர்ந்துள்ளன. அந்த படிமங்களின், ஆழ்படிமங்களின் தொகையைத்தான் நாம் ஆன்மிகம் என்கிறோம். ஆன்மிகம் அமைப்புகளாகவும் ஆசாரங்களாகவும் நம்பிக்கைகளாகவும் மாறும்போது மதம் என்கிறோம்.
தூயநிலையில் ஆன்மிகத்திற்கு மதத்தின் அமைப்பும் ஆசாரமும் நம்பிக்கையும் தேவையில்லை. ஆனால் ஆன்மிகம் மதத்தின் குறியீடுகள், படிமங்கள், ஆழ்படிமங்கள் வழியாகவே தன்னை நிகழ்த்திக்கொள்ள முடியும். தொடர்புறுத்திக் கொள்ள முடியும். ஆகவே ஆன்மிகம் எப்போதுமே மதத்தின் ஒரு பகுதியாகவும் மதத்தைக் கடந்ததாகவும் நிலைகொள்கிறது.
ஆலயங்கள் மதம், ஆன்மிகம் இரண்டுக்குமே உறைவிடங்கள். அவை நம் முன்னோர் உருவாக்கிச் சென்ற ஆழ்படிமத்தொகை. அவை அவர்களின் கனவுகளின் கல்வடிவம். இன்றிருக்கும் கல்வடிவுகளில் இருந்து அவை நம் கனவுகளுக்குச் செல்கின்றன.
ஆலயம் என்றும் இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். அதைவிட்டு விலகும்போது நாம் உணரும் இழப்பு மீண்டும் நம்மை அதைநோக்கிக் கொண்டு செல்லும். அதை முன்பிருந்தோர் அணுகிய அதே வழியில் நாம் அணுகாமலிருக்கலாம், நாம் அங்கே ஏதோ ஒருவகையில் சென்றுகொண்டேதான் இருப்போம்.
ஜெ