எங்கள் ஒலிம்பிக்ஸ்

அன்புள்ள ஜெ

நலம்தானே?

உங்கள் இணையதளத்தில் விளையாட்டு செய்திகளே இல்லை. ஒலிம்பிக் செய்திகள் இல்லை. நாம் தங்கம் வென்றபோதாவது ஏதாவது போடுவீர்கள் என்று நினைத்தேன். வேண்டுமென்றே விளையாட்டுக்களை ஒதுக்குகிறீர்களா?

டி.ராஜ்குமார்

***

அன்புள்ள ராஜ்குமார்

நீங்கள் புதுவரவு. நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். உண்மையிலேயே எனக்கு எந்த விளையாட்டைப்பற்றியும் எதுவும் தெரியாது. கிரிக்கெட் ஹாக்கி ஃபுட்பால் எதைப்பற்றியும் அடிப்படைகளே அறிமுகமில்லை. இதுவரை ஒரு முறைகூட இவற்றை ஆடியதில்லை. ஒருநாள்கூட இவ்விளையாட்டுக்களை டிவியில் பார்த்ததில்லை. இத்துறைகளில் எந்த செலிபிரிட்டிகளையும் அறிமுகமில்லை.

சினிமாவுக்கு வந்தபின் பல முன்னாள் இன்னாள் விளையாட்டுத் துறை நட்சத்திரங்களை பார்ட்டிகளில் சந்திப்பேன். பெரும்பாலானவர்களை டிவியின் விளம்பர மாடல்கள் என என் மூளை பதிவுசெய்து வைத்திருக்கும். டிவியே இருபதாண்டுகளாகப் பார்ப்பதில்லை என்பதனால் அதுவும் மங்கல்தான். ஆகவே மையமான ஒரு புன்னகையுடன் சமாளித்துச் சென்றுவிடுவேன். தங்களை இன்னொரு மனிதருக்கு தெரியாமலிருக்க வாய்ப்பே இல்லை என அவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதனால் எந்தச் சிக்கலும் வருவதில்லை.

எனக்கு விளையாட்டு ஆர்வமிருந்தது எல்லாம் 20 வயது வரை. ஆனால் அது வேறொரு உலகம், வேறொரு காலம். தமிழ்நாட்டில் குமரிமாவட்டத்தில் விளவங்கோடு, கல்குளம் தாலுகாக்கள் கேரளத்தில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் நெடுமங்காடு, காட்டாக்கட, நெய்யாற்றின்கரா ஆகிய மூன்றுமாவட்டங்கள் சேர்ந்த ஒரு கலாச்சார மண்டலம் உண்டு. அதுவே எங்கள் வட்டம். வெளியே ஓர் உலகமிருக்கும் செய்தியே தெரியாது.

இங்கே புகழ்பெற்ற விளையாட்டுக்கள் மூன்று. கிளியந்தட்டு, கபடி, ஓணப்பந்து. கிளியந்தட்டு ஒரு கேளிக்கை விளையாட்டு. ஒரு ஆறடுக்கு களத்தில் முதற்களம் முதல் கடைசிகளம் வரை ஆட்களை ஏமாற்றியபடியே தாண்டிச்செல்லவேண்டும். எல்லா களத்தில் தடுக்க ஆளிருக்கும்.

போட்டி விளையாட்டுக்கள் கபடியும் ஓணப்பந்தும். கபடி ஆற்றுமணலில் விளையாடப்படுவது. மற்ற ஊர் கபடி போலில்லாமல் கொஞ்சம் மல்யுத்தமும் கலந்திருக்கும். ஓணப்பந்து இப்பகுதிக்கே உரிய ஆட்டம். கிரிக்கெட் பந்து அளவிலுள்ள தோல்பந்தை கையால் அடித்து வீசி, காலால் தடுத்து ஆடப்படுவது. இருபக்கமும் 12 பேர் இருப்பார்கள்.

இதில் கபடியில் ஒருகாலத்தில் அறியப்பட்ட சாம்பியனாக பரிசுகள் பெற்றிருக்கிறேன். ஓணப்பந்தும் விளையாடுவேன். கபடித்தழும்புகள் இப்போதும் கால்முழுக்க உண்டு.

ஜூனில் இடவப்பாதி மழை தொடங்கி ஜூலை முதல்வாரத்தில் முடிந்ததும் போட்டிகள் ஆரம்பிக்கும். இளம்சாரலும் குளிர்காற்றும் ஓணம் வரை இருக்கும் என்பதனால் நாளெல்லாம் விளையாடலாம். விவசாய வேலைகள் இருப்பதில்லை என்பதனால் எல்லாருமே வந்துவிடுவார்கள். ஓணத்தின்போதுதான் வானம் தெளிந்து வெயில் தலைகாட்டும்

ஊருக்கு ஊர் கபடி, ஓணப்பந்து அணிகள் உண்டு.  அக்காலத்தில் ஓணப்பந்தில் முழுக்கோடு, காட்டாக்கடை, மஞ்சாலுமூடு நெடுமங்காடு அணிகள் முந்தியவை. ஆகஸ்டில் ஓணத்திற்கு முந்திய நாள் கடைசிப்போட்டி. சாம்பியன் அணிக்கு சுழற்கேடயம். திருவிதாங்கூர் மகாராஜா அளிப்பது. உண்மையாகவே பொன்முலாம் பூசியது. மகாராஜா அல்லது அவரது பிரதிநிதியால் அளிக்கப்படும்.

தொண்ணூறுகள் வரைகூட இப்போட்டிகள் நடந்தன. பின்னர் இல்லாமலாயின. இன்று சில இடங்களில் சும்மா வேடிக்கைக்காக ஆடிப்பார்க்கிறார்கள். ஓணப்பந்து என இணையத்தில் தேடினால் நானே பேசிய தொலைக்காட்சிக் காணொளிகளே வந்து நிற்கின்றன. ஒரு வீடியோவில் பயல்கள் காமாசோமாவென விளையாடுகிறார்கள். விளையாட்டே வேறுமாதிரி இருக்கிறது.

இன்று தனித்த கலாச்சார மண்டலங்களே மறைந்துவிட்டன. உலகமே ஒற்றைப் பண்பாட்டால் இணைக்கப்பட்டுள்ளது.  போலித்தேசியவெறிகள் விளையாட்டு என்ற பேரில் வளர்க்கப்படுகின்றன. இதன்மூலம் உருவாகும் இழப்புகள் திகைக்கச் செய்கின்றன.

முதல்விஷயம் சமூகக்கொண்டாட்டம் என்பதே இல்லாமலாகிவிட்டது. வாழ்க்கை என்பது வேலை மற்றும் வீட்டில் தனிமையில் ஓய்வு மட்டுமே என்பதாக மாறிவிட்டது. என் நினைவில் முன்பெல்லாம் ஆண்டில் நூறுநாட்கள் ஏதேனும் சமூகக் கொண்டாட்டங்கள் இருக்கும். அத்தனை பேரும் கொண்டாடும் விளையாட்டுக்கள், விழாக்கள். வறுமையிலும் அது மகிழ்ச்சியான வாழ்க்கையோ என்று இன்று தோன்றுகிறது.

ஓணப்பந்தும் கபடியும் ஒவ்வொருநாளும் ஆடுவோம். ஓணத்தையொட்டி கிட்டதட்ட இரண்டு மாதகாலத் திருவிழா. என் பார்வையில் விளையாட்டு என்பது அதுதான். அதிலிருக்கும் கொண்டாட்டம்தான். எங்கோ எவரோ விளையாடுவதை டிவியில் பார்த்து ஃபேஸ்புக்கில் கூச்சலிடுவதில் எனக்கு ஆர்வமில்லை. இன்று அனைவருமே பார்வையாளர்களாக ஆகிவிட்டனர். ஆட்டக்காரர்கள் அதிபயிற்சி பெற்ற சில நிபுணர்கள் மட்டுமே.

நான் என் நினைவின் உலகில் வாழவே விரும்புகிறேன். அதை இன்றைய ஊடகக் கொண்டாட்டங்களைக்கொண்டு அதை அழித்துக்கொள்ள விரும்பவில்லை.

ஜெ

முந்தைய கட்டுரைஅறியப்படாத தீவின் கதை, உஷாதீபன்
அடுத்த கட்டுரைஎழுத்தாளன் என்னும் நிமிர்வு