‘தீயின் எடை’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன்,

‘வெண்முரசு’ நாவல்தொடரில் 22-ஆவது நாவல் ‘தீயின் எடை’. தீயைப் போலவே தீமைக்கும் எடை இல்லை. அளக்கவியலாத அறமீறல்கள், எடையிட முடியாத மானுடக் கீழ்மைகள் ஆகியவற்றை அறத்தராசில் நிறுத்தி அளக்கவும் எடையிடவும் முயற்சிசெய்யும் மானுடத்தின் அறிவிலி மனத்துக்கு அறிவுரையைப் பகர்கிறது இந்த நாவல்.

‘முற்றழிவே போர்’ என்றால், ‘வெற்றி’ என்பதற்குப் பொருள்தான் என்ன?’ என்று நம்மைச் சிந்திக்க வைக்கிறது இந்த நாவல். இளைய யாதவரின் வழக்கமான புன்னகையைத்தான் நாம் இந்தக் கேள்விக்குப் பதிலாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

குருஷேத்திரத்தில் நிகழ்த்தப்பட்ட ‘முற்றழிவு’ குறித்துத் துயருறும் யுதிஷ்டிரரிடம் இளைய யாதவர் கூறும் பதில், மானுட வாழ்வியல் யதார்த்தத்தை மேலும் மேலும் நிறுவி, உறுதிப்படுத்துகிறது.

இளைய யாதவர் புன்னகையுடன், எல்லாக் களங்களும் மண்மூடும்இன்னும் பதினாறு நாட்களில் நினைவு என ஆகும். நாற்பத்தொரு நாட்களில் கடந்தகாலம் என உருக்கொள்ளும். ஓராண்டில் வெறும் சடங்கென்று நின்றிருக்கும்என்றார்.

இந்த ‘முற்றழிவு’ ஏன் நிகழ்த்தப்பட்டது? ஒரு பிழை. அதற்கு நிகரீடு செய்வதற்காகச் செய்யப்பட்ட மற்றொரு பிழை. அந்தப் பிழைக்கு நிகரீடு செய்ய பிறிதொரு பிழை எனப் பிழைகளின் தொடர்சங்கிலி இரு திசையிலும் நீண்டதால், இறுதியில் இருதரப்பினராலும் முற்றழிவு நிகழ்த்தப்பட்டது.

இந்திரப்பிரஸ்தத்தில் துரியோதனன் கவனக்குறைவாகத் தடுமாறி விழுந்ததும் அதன் பின்விளைவாக நிகழ்ந்தனவற்றைச் சரியான புரிதலின்றி அவன் உணர்ந்து கொண்டனவும் ‘ஊழின் பிழை’ எனக் கொள்ளலாம்.

அவன் வாணரவதத்தில் அரக்குமாளிகையை எரித்து, பாண்டவர்களைக் கொல்லத்துணிந்தமையும் பன்னிருபடைக்களத்தில் சகுனியால் கள்ளப்பகடையைக் கொண்டு சூதில் வென்றமையும் திரௌபதியைச் சிறுமைசெய்தமையும் அவன் செய்த முப்பிழைகள்.

அந்த முப்பிழைக்கும் நிகரீடு செய்யவே பாண்டவர்களால், குறிப்பாக இளைய யாதவரால் குருஷேத்திரப் போர்க்களம் முன்னெடுக்கப்பட்டது. கௌரவர்களின் தரப்பில் போரறங்கள் மீறப்பட்டன. குறிப்பாக அபிமன்யூ படுகொலை. அதற்கு இணையாகவே பாண்டவர்களின் தரப்பிலும் போரறங்கள் எல்லைகடந்து மீறப்பட்டன. பிதாமகர் பீஷ்மர், துரோணர், பூரிஸ்சிரவஸ் ஆகியோர் வீழ்த்தப்பட்ட முறைகள் அனைத்துமே பாண்டவர்களின் தொடர் பிழைகள்தான். அவை ஆகப் பெரிய போரற மீறல்களே!

இந்தப் போர்க்களத்தில் போரறத்தைத் தன்னளவில் இறுதிவரை மீறாதவர்கள் துரியோதனனும் அஸ்வத்தாமனும்தான். துரியோதனன் பலமுறை பீமனைக் கொல்ல நேர்கிறது. ‘ஆயுதம் இழந்து நிற்கும் ஒருவனைக் கொல்லக் கூடாது’ என்ற போரறத்தைப் பேணி, அவனைக் கொல்லாமல் விட்டுவிடுகிறான்.

நான் அவனைக் களத்தில் சந்தித்தேன். அவனைக் கொன்றாகவேண்டும் என்றே போரிட்டேன். உயிரின் விசையாலும் அதையும் விஞ்சும் வஞ்சத்தின் விசையாலும் அவன் எனக்கு நிகராகவும் அவ்வப்போது என்னைக் கடந்து எழுந்தும் போரிட்டான். என் தாக்குதலில் இருந்து தப்ப அவன் கள எல்லையைக் கடந்து காட்டுக்குள் புகுந்தான். அவன் குரங்கின் முலையுண்டவன், காட்டுமரக் கிளைகளின்மேல் தாவும் கலை அறிந்தவன். அது தெரிந்திருந்தும் அவனைக் கொன்றேயாகவேண்டும் என்பதனால் நான் அவனைத் துரத்திச் சென்றேன். என்னால் அவன் ஏறிய மரங்கள்மேல் ஏற இயலவில்லை. ஆகவே, அந்த மரங்களை என் கதையால் அறைந்து உடைத்தேன். கதையை வீசி எறிந்து அவனை நிலத்தில் வீழ்த்தித் தாக்கினேன். வென்றிருப்பேன், ஆனால், அவன் கதை உடைந்து தெறித்தது. படைக்கலமில்லாமல் அவன் என் முன் கிடந்தான். என்னால் அவனைக் கொல்ல இயலவில்லை.என்றான் துரியோதனன்.

இறுதியில், சுனைநீருள் பேரூழ்கத்தில் ஆழ்ந்து தன் பிறவியைக் கடக்க முயற்சிசெய்யும் துரியோதனனைப் பீமனும் இளைய யாதவரும் இணைந்து, அவனின் தவத்தைக் கெடுக்க முயற்சிசெய்கின்றனர்.

பின்னர், கதாயுதப் போரின் ஆகப்பெரிய பிழையினைத் துணிந்துசெய்து, துரியோதனனை வீழ்த்துகிறான் பீமன். பீமன் செய்த அந்த மாபெரும் பிழையினைத் தலைவணங்கி ஏற்பதுபோலவே துரியோதனன் எந்த விதமான சலனமும் இல்லாமல் தன் உயிரை ஒரு சுடரை அணைப்பதுபோல அணைத்து, தன்னை இந்த உலகிலிருந்து நீக்கிக் கொள்கிறான்.

உண்மையிலேயே ‘பேரறத்தான்’ என்று நாம் இந்த வெண்முரசு நாவல்தொடரில் ஒருவரைக் குறிப்பிட வேண்டுமென்றால், துரியோதனனைத்தான் நாம் அவ்வாறு அழைக்க வேண்டும். அஸ்தினபுரியின் மீது பெரும்பற்றுக் கொண்டவர்கள் இருவர். ஒருவர் பிதாமகர் பீஷ்மர். மற்றொருவர் துரியோதனன். இதனை அம்புப்படுக்கையில் இருக்கும் பீஷ்மரின் சொற்களின் வழியாகவும் உறுதிப்படுத்திக்கொள்ள முடிகிறது. அந்தப் பெரும்பற்றால்தான் துரியோதனன் பாண்டவர்களை 12 ஆண்டுகள் காடோடிகளாகவும் ஓராண்டு முகமிலிகளாகவும் மாற்றிவிட்டு, அஸ்தினபுரியைச் சீரும் சிறப்புமாக ஆட்சிசெய்ய முடிந்தது. தருமருக்கு நிகராக ஆட்சிசெய்தவன் துரியோதனனே என்று துணிந்து சொல்லலாம்.

கொண்ட கொள்கையில், எடுத்துக்கொண்ட பணியில் இறுதிவரை நின்று போராடியவர்கள் மூவர்தான். ஒருவர் துரியோதனன். மற்றொருவர் பீமன். பிறிதொருவர் துச்சாதனன். இறுதிவரை குருஷேத்திரப் போரை நடத்தியவர் துரியோதனன். திரௌபதிக்காக வஞ்சினம் உரைத்து, அதை நிறைவேற்றியவர் பீமன். தன் தாய் காந்தாரியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டுத் தன் வாழ்நாள் முழுவதும் தன் அண்ணனுக்குக் காவலாகவும் நிழலாகவும் இருந்தவன் துச்சாதனன். அவர்களின் பாதை சரியா? தவறா? என்ற ஆராய்ச்சியைத் தாண்டி, அவற்றைப் புறக்கணித்து, ஒட்டுமொத்தத்தில் ‘செயல்வீரர்கள்’ என்று நான் இந்த மூவரை மட்டுமே கூறுவேன். இம்மூவர் செய்ததும் ‘கர்மயோகமே’ என்பேன்!

சுனைநீருள் பேரூழ்கத்தில் ஆழ்ந்திருக்கும் துரியோதனனால் வேடன் ஜல்பனைப் பொறுத்தருள (மன்னிக்க) முடிகிறது. ஆம், இறுதிவரை மாபெரும் உளவிரிவுடன் இருந்தவர் துரியோதனனே!

எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்களுக்கு வாசகர்கள் கடிதம் எழுதுவது உண்டு. அந்தக் கடிதங்களுள் சிலவற்றை எழுத்தாளர் தன்னுடைய வலைத்தளத்தில் பதிவிடுவதும் உண்டு. அந்த வகையில், ஐக்கிய ராஜ்ஜியம் மான்செஸ்டரிலிருந்து வெங்கடேஷ் அவர்கள் எழுத்தாளருக்கு எழுதிய கடிதம் 8.8.2021 அன்று எழுத்தாளரின் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. அந்தக் கடிதத்தின் இறுதி வரி பின்வருமாறு அமைந்துள்ளது.

‘என் தமிழில் உள்ள பிழையை ஜல்பனைத் துரியோதனன் நடத்தியது போல் தயை கூர்ந்து மன்னிக்கவும்.”

காவியங்களில் இடம்பெறும் காவியமாந்தர்களும் நிகழ்வுகளும் அறச்சிந்தனைகளும் ஏதாவது ஒருவகையில் எளிய மக்களின் பொதுவெளிப் பயன்பாட்டில் வெளிப்படும்போதுதான் அந்தக் காவியம் தன்னைப் பொதுவெளியில் காலந்தாண்டி நிலைப்புக்கொள்ளச் செய்ய முடியும். நாம் திருக்குறளையும் சிலப்பதிகாரத்தையும் கம்பராமாயணத்தையும் அவ்வாறுதான் பொதுவெளிப் பயன்பாட்டில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் அவை பெருந்திரள் மத்தியில் உயிர்ப்புத் தன்மையையும் நிலைப்புத் தன்மையையும் கொண்டுள்ளன. அந்த வகையில், ‘வெண்முரசு’ நாவல்தொடர்களும் உயிர்ப்புக்கொள்ளும் நிலைப்புக் கொள்ளும் என்பதற்கு மேற்கொண்ட கடித வரியும் ஒரு சான்று என்பேன்.

துரியோதனனின் மரணத்தால் நிலைகுலைந்த அஸ்வத்தாமன் அதற்கு நிகரீடு செய்யவே இரவில், ஆயுதமின்றி, மருத்துவ முகாமில் புண்பட்டு வீழ்ந்திருக்கும் பாண்டவர்களின் புதல்வர்களைக் கொன்றுகுவிக்கிறான். இந்தப் போர்க்களத்தில் அதிசக்தியுடைய ஆயுதங்களைப் பயன்படுத்தாதவன் அஸ்வத்தாமனே என்பதை நாம் இங்கு நினைவுகூர வேண்டும். அதனை ஒரு நோன்பாகவே கொண்டிருந்தான் அஸ்வத்தாமன். உச்சமான மனநிலையழிவின் போது மானுடர்கள் எந்தக் கீழ்மைக்கும் இறங்குவார்கள் என்பதற்கு அஸ்வத்தாமன் ஒரு சான்றாகிவிட்டான்.

பீமனின் உருவில் இரும்புப் பொம்மையைச் செய்த துரியோதனன் அதனோடு பல ஆண்டுகளாகப் போரிட்டு வந்தான். அதனைக் குருஷேத்திரப் போர்க்களத்துக்குக் கொண்டு வந்திருந்தான். அது எரிந்து சிதைந்த செய்தியை ஏவலன் கூறும்போது, ‘எரிபரந்தெடுத்தல்’ என்ற சொல்லினைப் பயன்படுத்துகிறான்.

ஏவலன், அரசரின் தனிக்குடிலுக்குள் இருந்தது. சற்று முன்னர்தான் அவர் இதைத் தேடிக்கொண்டுவரும்படிச் சொன்னார். எரிபரந்தெடுத்தலால் பாடிவீடு எரிந்து சரிந்தபோது, இது உள்ளே சிக்கிக்கொண்டது. சாம்பலுக்குள் கண்டெடுத்தோம்என்றான்.

அது என்ன எரிபரந்தெடுத்தல்?

“இயங்குபடை அரவம் எரிபரந்து எடுத்தல்

வயங்கல் எய்திய பெருமை யானும்

கொடுத்தல் எய்திய கொடைமை யானும்

அடுத்தூர்ந்து அட்ட கொற்றத் தானும்

மாராயம் பெற்ற நெடுமொழி யானும்

பொருள் இன்று உய்த்த பேராண் பக்கமும்

வருவிசைப் புனலைக் கற்சிறை போல

ஒருவன் தாங்கிய பெருமை யானும்

பிண்ட மேய பெருஞ்சோற்று நிலையும்

வென்றோர் விளக்கமுந் தோற்றோர் தேய்வும்

குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளையும்

அழிபடை தட்டோர் தழிஞ்யொடூ தொகைஇக்

கழிபெருஞ் சிறப்பின் துறைபதின் மூன்றே.

இது, வஞ்சித்திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(தொல்காப்பியம், புறத்திணையியல், நூற்பா எண் – 65)

‘எரிபரந்தெடுத்தல்’ என்பது, வஞ்சித்திணையில் இடம்பெறும் 13 துறைகளுள் ஒன்று. அதன் பொருள் தீக்கிரையாக்குதல் ஆகும். வீடு, ஊர், நாடு, நகரம் போன்றவற்றைத் தீக்கிரையாக்கும் நிகழ்ச்சி இன்றும் வெறுப்பின் காரணமாக நடைபெறுவதைக் காணலாம் என்கிறார் ம. மயில் இளந்திரையன். (ம. மயில் இளந்திரையன், தொல்காப்பிய பொருளிலக்கணதத்தில் வீரம் – ஓர் ஆய்வு’, பாரதியார் பல்கலைக்கழகம், 2010).

இவரைப் போலவே தமிழறிஞர்கள் பலரும்  ‘எரிபரந்தெடுத்தல்’ என்பதற்கு இதே விளக்கத்தைப் பல்வேறு முறைகளில் தெரிவித்துள்ள நிலையில், வாணி அறிவாளன் அவர்கள் ‘செந்தமிழ்ச்செல்வி’ இலக்கிய இதழில் (ஏப்ரல் 2014) இக்கருத்தை மறுத்து ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையின் கருத்துகளைப் பல்வேறு சான்றாதாரங்களுடன் மறுத்து, ‘எரிபரந்தெடுத்தல் – மறுசிந்தனை’ என்ற தலைப்பில் ‘செந்தமிழ்’ இலக்கிய இதழில் (அக்டோபர் 2014) புதுச்சேரியைச் சார்ந்த தெ. முருகசாமி அவர்கள் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அக்கட்டுரையில் அவர், ‘எரிபரந்தெடுத்தல்’ என்பது, ‘எரியூட்டலே’ என்று நிறுவியுள்ளார்.

சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப் பாண்டரங்கண்ணனார் பாடிய புறநானூற்றுப் பாடலை இதற்குச் சான்றாகக் காட்டலாம்.

“வினைமாட்சிய விரைபுரவியொடு

மழையுருவின தோல்பரப்பி

முனைமுருங்கத் தலைச்சென்றவர்

விளைவயல் கவர்பூட்டி

மனைமரம் விறகாகக்

கடுதுறைநீர்க் களிறுபடீஇ

எல்லுப்பட விட்ட சுடுதீ விளக்கம்

செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்றப்

புலங்கெட இறுக்கும் வரம்பில் தானைத்

துணைவேண்டாச் செருவென்றிப்

புலவுவாட் புலர்சாந்தின்

முருகற் சீற்றத் துருகெழு குருசில்

மயங்கு வள்ளை மலர் ஆம்பல்

பனிப்பகன்றைக் கனிப்பாகல்

கரும்பல்லது காடறியாப்

பெருந்தண்பணை பாழாக

ஏம நன்னாடு ஒள்எரி ஊட்டினை1

நாம நல்லமர் செய்ய

ஓராங்கு மலைந்தன பெருமநின் களிறே”.

(புறநானூறு, 16)

“புலவர் மன்னர் பெருங்கிள்ளியைப் பார்த்து, ‘முருகன் போலும் குருசில் நீ, பகைவர் நாட்டுள் புகுந்து அவர் ஊர் சுட்ட தீயினது ஒளி செல்சுடர் ஞாயிற்றுச் செக்கர் போலத் தோன்றுகிறது. இவ்வாறு தீயிட்டுக் கொழுத்திய அந்நாடு ‘கரும்பல்லது நாடறியாப் பெருந்தண் பணை’ பொருந்திய நன்னாடு. ஆனால், நீ எரியூட்டிச் செய்த போரில் உன் களிறுகளும் உன் கருத்துக்கு ஒப்பப் போர் மலைந்தன’ என்று கூறுகின்றார். சிவந்த கதிரவன் காண மக்கள் குடியிருக்கும் ஊர்களை அழிக்க இடப்பட்ட தீயின் உயர்ந்து ஓங்கிய நெருப்பின் ஒளி நெருப்புச் சுடர்க் கதிர்களைப் பரப்பும் கதிரவனின் செவ்வானம் போலத் தோன்றியது. பகைவரது நாட்டை அழிக்கச் செய்யும் எல்லையில்லாத படையினையும் உதவிக்கு வேறு துணைப்படை வேண்டாத போர் வெற்றியினையும் பெற்றாய்!” (நன்றி – வ.க.கன்னியப்பன்)

எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் உவமைகளைக் கையாள்வதில் வல்லவர். ‘வெண்முரசு’ நாவல்தொடரில், எண்ணற்ற உவமைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றைத் தொகுத்தால், தனியாக ஒரு புத்தகமாகவே வெளியிடலாம். இந்த நாவலில் என்னை ஈர்த்த ஓர் உவமை –

வானின் காற்று அடுக்குகளில் நிகழ்வனவற்றை நிழல் தரையில் எளிய வரைபடம் என நிகழ்த்திக் காட்டியது.

சல்லியரை வெல்லும் வழியினை இளைய யாதவர் உரைக்கும் பகுதியில் இந்த உவமை இடம்பெற்றுள்ளது.

அவருடைய நச்சு அம்புகளைத் தவிர்க்க ஒரே வழிதான் உள்ளது, விழிகளைத் தூக்காதே. நிழல்நோக்கிப் போரிடுஎன்றார் இளைய யாதவர். சல்யர் போரிட்டுச்சென்ற வழியெங்கும் வெவ்வேறு வகையில் இளித்தும் வலித்தும் கிடந்த படைவீரர்களின் உடல்களை அவன் கண்டான். பெரும்பாலானவர்களின் கண்களுக்குள் அம்புகள் நுழைந்துவிட்டிருந்தன. அவன் அவரை அதன்பின் நேர் நோக்கவேயில்லை. நிழல்நோக்கிப் போரிடுவது மேலும் எளிதென்றும் கண்டுகொண்டான். வானின் காற்று அடுக்குகளில் நிகழ்வனவற்றை நிழல் தரையில் எளிய வரைபடம் என நிகழ்த்திக் காட்டியது.

‘வெண்முரசு’ நாவல்தொடரில் இந்த நாவலில்தான் சகுனியின் அகவாழ்க்கை பற்றிய வரிவான செய்திகள் இடம்பெற்றுள்ளன. சகுனிக்கும் அவரின் மகனுக்குமான மனப்போராட்டங்களைக் கூர்மையாக வெளிப்படுத்தியுள்ளார் எழுத்தாளர். சகுனிக்குள் நிறைந்திருக்கும் பேரன்பு வெளிப்படும் இடம் இது.

அவன் செல்வதை நோக்கிக்கொண்டிருந்தார். அவருடைய அதே உடல். அதே அசைவுகள். ஆனால் அவன் அவர் அல்ல. ஒருகணம் அவன்மேல் எழுந்த வெறுப்பைக் கண்டு அவருடைய அகம் அஞ்சியது. உடனே, அவன்மேல் பேரன்பு எழுந்து மூடிக்கொண்டது. அவனை அருகே அழைத்து நெஞ்சோடு தழுவிக்கொள்ளவேண்டும் என்று தோன்றியது. அவன் சென்று மறைந்தபின் அவன் காலடி பட்ட தரை எனத் தன் நெஞ்சை உணர்ந்தார்.

‘வெண்முரசு’ நாவல்தொடரில் அர்சுணனின் ‘காண்டீபம்’ என்ற வில் பற்றியும் கர்ணனின் ‘விஜயம்’ என்ற வில் பற்றியும் விரிவாகக் கூறப்பெற்றுள்ளன. இந்த நாவலில்தான் தர்மரின் ‘தயை’ என்ற வில் பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது. படைக்களத்துக்குப் பெயர் ‘தயை’யா? என்ற இளிவரலுடன் அறிமுகமாகும் இந்த வில், எல்லா விற்களைக்காட்டிலும் அதிசிறந்தது என்பதை அறியமுடிகிறது. காரணம் இது தெய்வங்கள் கையாளும் வில். இது அறத்தின் சீற்றம். தன்னிலக்கைத் தானே தேரும் அம்புகளை எய்யும் வில் இது. எல்லாவற்றுக்கும் மேலாக இது தர்மனின் கையில் இருக்க வேண்டிய வில். அதை உணர்ந்ததால்தான், துரியோதனன் இதனைத் தான் வைத்துக்கொள்ளாமல் தர்மனிடமே கொடுத்துவிடுகிறான்.

எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் ‘வெண்முரசு’ தொடர் நாவல்களில் பல இடங்களில் உவமைக்காகக் ‘கவந்தன்’ என்ற சொல்லைப்  பயன்படுத்தியுள்ளார்.

நடுவே கவந்தனின் வாய் எனத் திறந்திருந்த இருட்குகை ஒன்றுக்குள் இருந்து அவ்வொலி எழுந்துகொண்டிருந்தது. ஆயுதங்களுடன் உள்ளே முதலில் நுழைந்த உக்ரசேனன் விதிர்த்து பின்னடைந்தான். (முதற்கனல்)

பெரும் பிலம் என்று எண்ணுகிறேன். இருபுறத்திலிருந்தும் நீர்ப்பரப்பு பெருகிவந்து மடிந்து அதிலிறங்கி மறைந்துகொண்டிருக்கிறது. மானுட உயிர்கொள்ளத் திறந்த கவந்தனின் வாய். (செந்நா வேங்கை)

இருபுறமும் இரு மடைப்பள்ளியர் நின்று உணவை அள்ளிப்பரிமாற இருகைகளாலும் கவந்தன் போல் பேருருளையை உருட்டி வாயிலிட்டு பற்கள் அரைபட மூச்சிரைக்க உண்டு கொண்டிருந்த திருதராஷ்டிரர் (பன்னிரு படைக்களம்)

களிற்றுயானை நிரைபோல கரிய கோட்டை கொண்டது. கவந்தனின் வாய்போல அருகணைபவரெல்லாம் அதன் வாயிலினூடாக உள்ளே சென்று மறைகிறார்கள். எத்தனை நீர் பெய்தாலும் நிறையாத கலம்போல. (நீர்க்கோலம்)

நகுலன் கவந்தனின் வாய்க்குள் என உடல்கள்என்றான். சகதேவன் வெறுமனே நோக்கிவிட்டு நடந்தான். (தீயின் எடை)

யார் அந்தக் கவந்தன்? ‘கம்பராமாயணம்’ ஆரணிய காண்டத்தில் கவந்தன் இடம்பெறுகிறான்.

ராமனும் லக்குவனும் சீதையைத் தேடிப் புறப்பட்டனர். ஏறத்தாழ 500 மைல் தொலைவுக்குக் காட்டுப் பகுதியில் நடந்தனர். அந்தக் காட்டுப் பகுதியில் இருந்த கொடிய பூதமான கவந்தனிடம் சிக்கிக் கொண்டனர்.

கவந்தனுக்குத் தலை இல்லை. அவனது வயிற்றிலேயே வாய், கண் முதலியன இருந்தன. அவன் கைகள் மட்டும் சில மைல் தொலைவுவரை நீண்டிருந்தன. அவன் தன் கைக்குக் கிடைத்த அனைத்து உயிர்களையும் வளைத்துப் பிடித்துத் தன் வயிற்றுக்குள் போட்டுக் கொ(ல்)ள்வான். ஐந்து பாவங்களும் ஒன்று சேர்ந்ததுபோல அவன் இருந்தான்.

அந்தப் பூதத்தைப் பார்த்த ராமன் மனம் தளர்ந்தான். “எல்லாம் இழந்துவிட்டேன். இனி, நான் எப்படி அயோத்திக்குத் திரும்பிச் செல்வேன்?. எப்படி என்னால் இனி மிதிலைக்குச் செல்ல முடியும்? நான் இந்தப் பூதத்திற்கு உணவாகிவிடுகிறேன்” என்றான்.

“உங்களுக்குத் துணையாக வனத்திற்கு வந்த நான், தங்களையும் இழந்துவிட்டுத் தனியனாக எப்படிச் செல்லமுடியும்? தங்களுக்கு ஓர் அழிவு ஏற்படும் என்றால், அது என்னைத் தாண்டித்தான் நிகழவேண்டும்” என்றான் லக்குவன். ராமன் செயலற்று இருந்தான்.

“நமது வாளால் இந்தப் பூதத்தைக் கொல்வோம்” என்றான் லக்குவன். முன்னேறிச் சென்றான். அவனைத் தடுத்த ராமன், “நானே இப் பூதத்தைக் கொல்வேன்” என்று கூறி முன்னே சென்றான். லக்குவன் அவனை முந்திச் சென்றான்.

இதைக் கண்ட அந்தப் பூதம், “என் முன் நிற்க அனைவரும் அஞ்சுவர். நீங்கள் என் முன் வீரமாக நின்று, என்னை அவமதித்து விட்டீர்கள். நான் உங்களை விழுங்குவேன்” என்றது.

இருவரும் சேர்ந்து அந்தப் பூதத்தின் தோள்களைத் தம் வாளால் வெட்டி வீழ்ந்தினர். உடனே கவந்தன் புதிய உருவில் தோன்றி, இருவரையும் வணங்கினான்.

லக்குவன், “நீ யார்?” என்று அவனிடம் கேட்டான்.

“நான் தனு (விசுவாவசு). நான் ஒரு கந்தர்வன். முனிவரின் சாபத்தால் தலையற்ற பூதமாகத் திரிந்தேன். உங்களால் நான் இன்று சாபவிடுதலை பெற்றேன்” என்றான்.

“நீங்கள் நல்லவர் சிலரின் துணைகொண்டு சீதையைத் தேடிச் செல்லுங்கள் என்றான்” தனு.

“நீங்கள் இங்கிருந்து சென்று, தவப்பெண் சவரி என்பவளைச் சந்தியுங்கள். இரலைமலை மீது ஏறிச் சுக்கிரீவனை நட்புகொண்டு, சீதையைத் தேடுங்கள்” என்றான். பின்னர் அவன் வானத்தை அடைந்தான்.

தனு என்ற கந்தர்வன்தான் பூதவடிவில் இருந்த ‘கவந்தன்’.

இளைய யாதவரும் பாண்டவர்களும் துரியோதனனைத் தேடிச் செல்லும் போது அவர்களுக்குள் நிகழும் ஓர் உரையாடலில், தொல்காப்பியர் வந்துவிடுகிறார்.

நெடுந்தொலைவுக்குப் பின்னர்தான் யுதிஷ்டிரன் முதல்முறையாகச் செல்திசையை எண்ணினார். இளைய யாதவரை அணுகி நாம் எங்குச் செல்கிறோம்?” என்று கேட்டபடி தொடர்ந்தார். நான் அந்த இடத்தைச் சொற்களாகவே அறிந்திருக்கிறேன். சொல்லில் இருந்து அந்நிலத்தை மீட்டெடுத்துக்கொள்கிறேன்…” என்றார் இளைய யாதவர்.

யுதிஷ்டிரன் இவ்வண்ணம் நடந்து சென்று அந்நிலம் அமைந்த சொல்வெளிக்குள் நுழைந்துவிட்டால் நன்றுஎன்றார். சொற்கள் பொருள்கொண்டவை. எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே என்று சொன்ன மூதாதை மானுடனுக்கு அளித்த ஆறுதலையும் நம்பிக்கையையும் தெய்வங்களும் அருளியதில்லை.

இங்கு எழுத்தாளர் குறிப்பிடும் மூதாதை தொல்காப்பியர்தான்.

“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே.”

(தொல்காப்பியம், நூற்பா எண் – 642.)

பாண்டவர்கள் தன் தந்தையைப் போரறம் மீறிக் கொன்ற பின்னர் அவரைச் சிறுமை செய்த திருஷ்டத்யும்னன் மீது அஸ்வத்தாமன் பெருஞ்சினத்தில் இருந்தான். அந்தச் சினத்தை அவன் தணித்துக்கொண்ட விதம் பற்றி விவரிக்கும் போது எழுத்தாளர் பின்வரும் பத்தியை எழுதியுள்ளார்.

அஸ்வத்தாமன் திருஷ்டத்யும்னனை மாறிமாறி வெறியுடன் மிதித்தான். அவன் உடலின் அனைத்து உறுப்புகளையும் மிதித்தே சிதைத்தான். திருஷ்டத்யும்னனின் உடலில் இருந்து பிரிந்த உயிர் குரல்கொண்டதுபோல அவன் கதறல் வேறெங்கிருந்தோ என எழுந்தது ஆசிரியரே! ஆசிரியரே! ஆசிரியரே!என்னும் ஓலத்துடன் திருஷ்டத்யும்னன் நிலத்தில் கிடந்து நெளிந்தான். ஆசிரியரே! ஷத்ரியன், ஆசிரியரே. நான் ஷத்ரியன், ஆசிரியரே!என்று அவன் குரல் குழைந்தது. அக்குரல் மேலேயே மிதிகள் விழுவதுபோலிருந்தது. அக்குரல் நெளிந்து சிதைந்து உருவழிந்தது. ஷத்ரியன், ஆசிரியரே!சொற்கள் துணுக்குகளாகி இருளில் பரவின. ஓய்ந்து அவை அமைதியாக மாறிய பின்னரும் அஸ்வத்தாமன் உதைத்துக்கொண்டே இருந்தான்.

பெருஞ்சினங்கள் எளிதில் தணிவதில்லை. அவை உள்ளத்திலும் உடலிலும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். இலக்கை அடைந்த பின்னரும் தன்னுடைய தொடக்க விசையால் உந்தப்பட்டு அம்பு மேலும் மேலும் முன்னகர்வதைப் போல. அதனால்தான், திருஷ்டத்யும்னன் இறந்த பின்னரும் அஸ்வத்தாமனின் கால் அவனுடலை உதைத்துக்கொண்டே இருக்கிறது.

போர்க்களச் செய்திகளைப் பெண்கள் அறிந்து எதிர்கொள்ளும் மனப்பாங்கினை எழுத்தாளர் வெவ்வேறு வகையாகச் சித்தரித்துள்ளார். குந்தியும் திரௌபதியும் காந்தாரியும் பானுமதியும் வெவ்வேறு முறைகளில் அவற்றை எதிர்கொண்டு எதிர்வினையாற்றுகின்றனர்.

குந்தி அழிக்கப்பட்டவர்களைவிட அழிபடாமல் தப்பித்தவர்களைப் பற்றியே சிந்திக்க்கிறார். திரௌபதியின் உள்ளத்தில் எழுந்த மாயை அழிக்கப்பட்டவர்களின் குருதியை உண்டு செரிக்கிறார். பானுமதிக்குத் தன் கணவன் துரியோதனனின் மரணம் முன்னமே தன்னுள் பலமுறை எதிர்பார்க்கப்பட்டது போலத்தான் இருக்கிறது. காந்தாரிக்கு யாருடைய அழிவும் பெரிதாகத் தெரியவில்லை. பாண்டவ புதல்வர்களின் படுகொலை சார்ந்த ஒற்றுச் செய்திதான் அவரைக் கதறச் செய்கிறது.

ஒருவகையில் காந்தாரி அறச்செல்வியாகத் திகழ்கிறார் என்றுதான் தோன்றுகிறது. முன்பே அவர் போருக்குச் செல்லும் தன் மைந்தர்களை வாழ்த்தும்போது, ‘அறம் வெற்றிபெறட்டும்’ என்ற பொருளில்தான் வாழ்த்தினார். அவர் அறச்செல்விதான்.

அஸ்தினபுரியைத் துரியோதனன் ஆட்சிசெய்தாலும் அவனின் நிழலாக இருந்து ஆண்டவர் துரியோதனனின் முதல் மனைவி பானுமதிதான். துரியோதனன் குருஷேத்திரப் போருக்குப் புறப்பட்டதும் அஸ்தினபுரியின் ஒட்டுமொத்த ஆட்சிப் பொறுப்பும் பானுமதியிடம் வந்துவிடுகிறது. அவள் தன்னளவில் திரௌபதியாகவே மாறிவிடுகிறாள்.

ஒவ்வொரு நாளும் குறைந்துகொண்டிருந்த படைகளைக் கொண்டு ஒவ்வொரு நாளும் பெருகி வந்த எதிர்ப்புகளை வெற்றியுடன் எதிர்கொண்டு அஸ்தினபுரியை உறுதியுடன் பானுமதி நிலைநிறுத்தினாள். பத்துத் துரியோதனர்களுக்கு நிகரானவர் அரசிஎன்று முதுமக்கள் சொல்லிக் கொண்டார்கள்.  ஆண்கள் கைபதறும் பொழுதுகளில் பெண்கள் பதினாறு கைகளுடன் எழுகிறார்கள்என்றனர் சூதர்.  கனகர் அரசர் துரியோதனன் ஆயிரம் கண்கள் கொண்டவர். அரசியோ இந்நிலத்தின் அனைத்து மணற்பருக்களையும் விழிகளாக ஆக்கிக்கொண்டவர்என்றார்.

குருஷேத்திரத்தில் பாண்டவர்கள் வென்ற செய்தியை நகுலன் முறைப்படி அஸ்தினபுரிக்கு அறிவிக்க வருகிறான். அப்போது, அஸ்தினபுரி எவ்வாறெல்லாம் பெண்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதை எழுத்தாளர் விவரிக்கிறார். அதனைப் படிக்கும்போது, ஆண்கள் கைபதறும் பொழுதுகளில் பெண்கள் பதினாறு கைகளுடன் எழுகிறார்கள்என்ற கருத்து வாசகரின் மனத்துக்குள் உறுதிப்படும். சிறுமியென்றும் கன்னியென்றும் மனைவியென்றும் அன்னையென்றும் பேரன்னையென்றும் பெண்கள் பதினாறு கைகள் கொண்ட கொற்றவையாகவே எழட்டும். அதுவே, காலத்தின் தேவையும்கூட. ஆம்! அவ்வாறே ஆகுக.

முனைவர் . சரவணன், மதுரை

இருட்கனி, வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

‘திசைதேர்வெள்ளம்’ வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

கார்கடல் வாசிப்பு முனைவர் ப சரவணன்

‘எழுதழல்’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன் 

கிராதம் முனைவர்  முனைவர் ப சரவணன் மதுரை

சொல்வளர்காடு – முனைவர் ப சரவணன் மதுரை

‘செந்நா வேங்கை’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன், மதுரை  

‘இமைக்கணம்’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன்

பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்,

‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்

காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை  

‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை

‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்

வண்ணக்கடல் வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

முதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன்

முந்தைய கட்டுரைகடலைமொழிகள்
அடுத்த கட்டுரைகுகை, கடிதங்கள்