அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். நலமாகவிருப்பீர்களென எண்ணுகிறேன். உங்களது விகடன் பேட்டிகளை கேட்கும் வாய்ப்புக்கு கிடைத்தது. கேள்விகளும், பதில்களும் ஆர்வத்தைத் தூண்டின. குறிப்பாக நீங்கள் ஓரிடத்தில் தர்க்கம், கற்பனை, உள்ளுணர்வு பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். உங்கள் அனுபவத்தில் படைப்பாக்கங்களில் குறிப்பாக நாவல், சிறுகதை என்று வரும்போது இன்மூன்றினதும் இடமென்ன? படைப்பின் வடிவத்தைப் பொறுத்து ஒன்று மற்றையதிலும் மேலோங்கி நிற்கும் யதார்த்தம் உள்ளதா?
அன்புடன்
யோகன் (கன்பரா)
***
அன்புள்ள யோகன்,
புனைவாக்கத்தில் தர்க்கம் உள்ளுணர்வு ஆகியவற்றின் இடம் பற்றி விரிவாகவே பேசியிருக்கிறேன். தர்க்கம் என்பது ஒரு படைப்பின் வடிவம், அதன் அறிவார்ந்த உள்ளடக்கம் ஆகியவற்றை முடிவுசெய்கிறது. கற்பனை என்பது அந்தப்படைப்பின் நுண்செய்திகள், உரையாடல்கள், உணர்ச்சிச் சித்தரிப்புகள், மன ஓட்டங்களின் மொழிவடிவம் ஆகியவற்றை தீர்மானிக்கிறது. உள்ளுணர்வு ஒரு படைப்பின் உள்ளுறையாக திகழும் வாழ்க்கைப்பார்வையை, மெய்மையை கண்டறிகிறது. படைப்பில் வெளிப்படாமல் நிற்பது அதுதான்
ஜெ
***
அன்புள்ள ஜெ
விகடன் பேட்டியின் எல்லா பகுதிகளையும் பார்த்தேன். மிகச்சிறப்பாக இருந்தது. உங்களுக்கு பேட்டி எடுத்த இருவர் மீதும் இருக்கும் நட்பு உங்கள் முகமலர்வில், சிரிப்பில் தெரிந்துகொண்டே இருந்தது. சில பேட்டிகள் ஃபார்மலாக ஆகிவிடும். அப்போது பேட்டி அளிப்பவரும் ஃபார்மலாக பேசுவார். என்னைப் பொறுத்தவரை பேசும் கருத்துக்களை விடவும் பேசும்போதுள்ள முகபாவனைகளும் மனநிலைகளும் முக்கியம் என நினைக்கிறேன்.
ரா.சிவக்குமார்
அன்புள்ள சிவக்குமார்
ஆமாம், அந்தப்பேட்டியின்போது மிக உற்சாகமான மனநிலையில் இருந்தேன். மூன்றுமணிநேரம் இயல்பாக ஓடியது.
ஜெ