பிரயாகையின் துருவன் – இரம்யா

துருவனில் தொடங்கி துருவனில் முடியும் ஒரு நாவலாக பிரயாகை அமையப் பெறுகிறது. ”சொற்கனல்” பகுதி வாசிப்பிற்குப் பின்னர் ஒவ்வொரு நாளும் எழமுடிந்த நேரமெல்லாம், துருவன் தெரியும் அதிகாலை, அதி-இரவு நேரத்தில் துருவனை நோக்கி மனதுருகிக் கொண்டிருந்தேன். நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருப்பது சிறுவயதிலிருந்தே பிடிக்குமெனக்கு. அதனுடன் பேசிக் கொண்டிருக்கும் ஓர் பித்து வாய்க்கப்பெற்றிருக்கிறது. புதிதாக எங்கு சென்றாலும் அங்கு தங்க நேரும் சமயங்களில் முதலில் நான் காண்பது வானைத்தான். எனக்கு அணுக்கமான மூன்று நட்சத்திரங்களைக் கண்டதும் ஒரு அமைதி கொள்வேன். அது தவிர அதிகாலையும் அந்தி மாலையும் மேற்கு வானில் தெரியும் வெள்ளியான சிரஸை மிகப்பிடிக்குமெனக்கு. அவர்கள் இருவருமே பொறாமை கொள்ளுமளவு நான் துருவனை நாவலில் ரசித்திருந்தேன் உங்களின் வார்த்தையின் துணை கொண்டு.

”வடமீனாக எழுந்த சிறுவனை வணங்குக. அவன் அடைந்த நிலைபேற்றையே ஊழ்கத்திலமர்வோர் ஒவ்வொருவரும் இலக்காக்குக. கன்னியர் அவன் பெயர் சொல்லி கற்பில் அமைக! கற்றறிந்தோர் அவனை எண்ணி விவேகத்தில் அமைக. படைக்கலம் கொண்டோர் அவனைநோக்கி விழிதூக்கி அறம் உணர்க!” என்ற உங்களின் வரி கொண்டு தான் அவனைக் கண்டடைந்து முதலில் தொழுதேன்.

வானத்து அதிசயக் காட்சிகள் தோன்றுந்தோறும் பிரமித்து “நான் காணும் இந்தக் காட்சிகளை ஏதோவோர் நிகழ்த்தகவில் என் முன்னோர் கண்டிருப்பார்களா?” என்று நினைத்ததுண்டு. ஆனால் வாய்ப்பில்லை என்றும் தோன்றும். ஒவ்வொரு நாளும் வானம் வேறு வேறு உடையை உடுத்திக் கொள்கிறது. நட்சத்திரங்கள் வேறு வேறு காலத்தினின்று புன்னகை செய்கின்றன. அதனால் தான் எத்தனை முறை கண்டாலும் வானம் எனக்கு சலிப்பூட்டுவதில்லை.

ஆனால் துருவனை, நிலைபெயராதவனை, காலத்தில் நின்று, மானுடர்களுக்கு “காலம்” எனும் பரிமாணத்தை உண்டாக்கியவனை, நான் கண்ட அதே அவனை, எனக்கு முன் அதைக் கண்டறிந்த காலத்திலிருந்து கண்டுகொண்ட மானிடனைப் போலவே நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்ற எண்ணமே சிலிர்ப்பைத் தந்தது. என்னைப்போல எனக்குப் பின்னும், இன்னும் இந்த மானுடமே நுரைத்துக் குமிழ்ந்து வெடித்தாலும் எஞ்சியிருப்பவனை வணங்கினேன்.

”ஒரு கண்ணிமைப்பால் அடையக்கூடுவனவற்றில் என்னைப்போன்றவர்களின் சித்தம் தங்காது.” என்று துருவன் சொல்லும்போது நான் இந்தப் புவியில் அடைய வேண்டியவை என நான் வகுத்துக் கொண்ட யாவும் என்னை விட சிறு குமிழிகளாக நின்று என்னைப் பார்த்து சிரிப்பது போலத் தோன்றியது. ஒன்றில் அமைந்து விட்டால் அதையே பெரியதென நினைத்து ஓடி அடைந்து விட்டால் கிடைக்கும் வெறுமையை நினைத்துப் பார்த்தேன். எதிலுமே அமைந்து விடாமல் செயல்! செயல்! என்று முன்னோக்கி செல்ல வேண்டும் என்று சென்று கொண்டிருக்கும் உங்களை நினைத்துக் கொண்டேன். “ஒரு போதும் சென்றடையவில்லை எனும் நிறைவின்மையை அடைக!” என்பதை மீண்டும் கண்டடைந்தேன். மானுடர்கள் கை கொள்ள வேண்டியது அதுவாகத்தானே இருக்க முடியும்.

துருவனை வைத்து ஞானத்தைப் பற்றிச் சொன்ன வரிகள் மேலும் திறப்பைத் தந்தன ஜெ. “எந்த அறிதலும் அறியப்படும் அத்தருணத்துக்கு மட்டும் உரியதே. நிலையான ஞானம் என்பது விண்ணில் இல்லை என்பதனால் மண்ணிலும் இயல்வதல்ல. இதோ இந்த ஒற்றைவிண்மீன் மட்டும் நிலையானது என்றால், இதை வைத்து நாம் வகுத்து அறியும் ஞானமும் இதைப்போல நிலையானதாகவே இருக்கும். இது காலத்தாலும் இடத்தாலும் மாறாதது என்றால் நாம் உருவாக்கும் ஞானமும் எதிர்காலத்தின் முடிவின்மை வரை நீடிக்கக்கூடியதே” என்று மானுடம் உணர்ந்த தருணம் நிலையான ஞானத்தைப் பற்றிய திறப்பைத் தந்தது. சங்க காலம் தொடங்கி இன்று வரை தாம் கண்ட நெறிகளை சான்றோர் பின் வரும் தலைமுறைகளுக்காக எழுதி வைத்திருக்கின்றனர். வாய் மொழியாக, பழமொழியாக, கதைகளாக, திருவிழாவாக, சடங்காக என அவை நம்மைப் பின் தொடர்ந்து வருகின்றன. ஆனால் இன்று இங்கு இலக்கியத்தில் ஒரு நவீன வாசகனாக நின்று கொண்டே அவற்றை இக்காலக்கட்டத்திற்கு ஏற்றாற்போல வாசிக்க வேண்டியிருக்கிறது. இங்கிருந்து இந்தக்கணத்துக்காகவே நான் சிந்திக்கிறேன். ஞானம் நிலையானது என்பதையும் உணர்கிறேன்.

”அன்றுவரை அந்தந்தக் கணத்துக்காகவே மானுடம் சிந்தித்தது. அந்நாளுக்குப்பின் எதிர்காலத்துக்காகச் சிந்தித்தது. கோடிச்சிதல்கள் சேர்ந்து கட்டும் புற்று போல ஞானம் துளித்துளியாகக் குவிந்து வளர்ந்தது. பேருருவென எழுந்து பிரம்மத்தை நோக்கி கைநீட்டியது.” என்ற வரிகளை அணைத்துக் கொள்கிறேன். நீங்கள் எப்பொழுதும் சொல்லும் எறும்புப் புற்று உவமை நினைவில் எழுந்து ‘நம்மால் அறிய முடியாத மாபெரும் செயல் திட்டத்தின் சிறுபகுதிதான் நாம்’ என்ற வரியைக் கொண்டு என்னை நிறைத்தது.

பிரயாகை

சொற்கனல் பகுதி துருவனை அறிமுகப்படுத்தியபின் வரும் பகுதிகளில் துருவன் பிரயாகையின் மாந்தர்களை நிலைத்து நின்று பார்த்துக் கொண்டிருப்பவனாய், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருளில் அமைபவனாய் காட்சியளிக்கிறான்.

துரோணர் தன் மாணாக்கர்களுக்கு துருவனை அறிமுகப்படுத்தி, “அதோ தெரிகிறான் துருவன். பரம்பொருளுக்கும் கிடைக்காத நிலைபேறு அவனுக்குக் கிடைத்தது என்கிறார்கள் ரிஷிகள். அவனை மையமாக்கியே வானமும் பூமியும் இயங்குகின்றன. ஒளிமிகுந்த பால்வழியில் விஷ்ணுவின் பாதங்களில் அமர்ந்திருக்கிறான். யோகியர் ஒவ்வொரு மாதமும் துருவனை பார்த்தாகவேண்டும். கற்புள்ள மங்கையர் ஒவ்வொரு வாரமும் அவனைப் பார்க்கவேண்டும். படைக்கலமேந்திய வீரன் ஒவ்வொருநாளும் அவனைப்பார்க்கவேண்டும்.” என்று கூறுகிறார். துரோணர் அர்ஜூனனைப் பிரியும் ஒரு தருணம் நிலையழிந்தவனாக பிரிவாற்றவியலாமல் தவிக்கிறான். அவனுடைய அன்பை உணர்ந்தவனாக துரோணர் அவன் விடை பெறுகையில் ”இனி உன்னுடன் நான் இருக்கமாட்டேன். எப்போதும் என் வடிவாக துருவன் உன்னுடன் இருப்பானாக!” என்கிறார்.

அஸ்தினாபுரியின் இன்னொரு ஆசிரியரான கிருபர் சொல்லும்போது “வடமீன் பகலிலும் தெரியும் நாளில் குருகுலநிறைவு கொண்டாடப்படவேண்டும் என்பது ஆன்றோர் முறை. இன்று அதோ விண்ணில் துருவன் தெரிகிறான். ஞானம் என்பது நிலைபெறுநிலை. துருவன் அருளால் அது கைகூடுவதாக! ஆசிரியரையும் துருவனையும் வணங்கி அருள்கொள்ளுங்கள்” என்று வாழ்த்துகிறார். இங்ஙனம் ஆசிரியர் வாழ்த்தும் ஒளிப்புள்ளியாக துருவன் அமையப் பெறுகிறான்.

துருவனை நோக்கும் போதெல்லாம் நம்மை வந்து அழுத்தும் சொற்கள் தருமனுடையவை. துருவனை நினைவு கூறும்போதெல்லாம் பாண்டுவும் தருமனும் வந்து புன்னகைக்கிறார்கள். அர்ஜூனனிடம் தருமன் கூறும்போது “அறத்தில் வாழ நினைப்பவன் முடிந்தபோதெல்லாம் துருவனைப் பார்க்கவேண்டும் என்பார் என் தந்தை. அறக்குழப்பம் வரும்போதெல்லாம் தனித்துவந்து வான் நோக்கி நின்றால்போதும், துருவன் அதைத் தெளியச்செய்வான் என்றார்.” என்று துருவனை அறத்தின் செல்வனாக தருமன் நமக்குக் காட்டுகிறார்.

பத்ரர் கூறும்போது “அலையடிக்கும் நெஞ்சுக்கு துருவன் நிலையை அளிப்பான் என்பார்கள். ஆனால் அலையடிக்கும் நெஞ்சு கண்களை அலையடிக்கச் செய்கிறது. எதையும் நிலையாக பார்க்கவிடாமலாக்குகிறது.” என்று துருவனை மறைக்கும் கண்ணைப்பற்றிச் சொல்கிறார். துருவனைப் பார்க்கத் தேவையான நிலையை நமக்குச் சொல்கிறார்.

அவமானங்களுக்கு ஆட்பட்டு உக்கிரமான நிலையை அடைந்த துருபதன் துருவனை நினைத்துக் கொள்ளும் தருணம் ஒன்று சொல்லப்பட்டுள்ளது. தெளம்ரர் சொன்ன வரிகளாக “துருவனை தனிமையின் ஒளிப்புள்ளி என்று சொல்வேன். இத்தனை பெரிய இருள் சூழ்ந்திருக்கையில்தான் அந்தத் தனிமையின் ஒளியின் அழுத்தம் கூடுகிறது. தனித்திருப்பதன் குளிர். சொல்லின்மையின் எடை.” நினைவுகூர்கிறார். ”வானில் தனித்திருப்பது எப்படிப்பட்டது? தெரியவில்லை. ஆனால் மண்ணில் தனித்திருப்பதைக் கொண்டு அதைப்புரிந்துகொள்ளமுடியும்.” என்று தன் தனிமையை துருவனால் நிறைத்துக் கொள்கிறார்.

நாவலின் இடையில் மதுக்கோப்பையை ஏந்திய கிழவர் கூறும்போது “திசைகளில் முதன்மையானது வடதிசை. மானுடன் முதலில் வகுத்த திசை அதுவே. அங்கேதான் விண்ணின் மாறாத மையப்புள்ளியாக துருவன் நிலைகொள்கிறான். வடதிசையை ஆள்பவர் எங்கள் தெய்வம் குபேரனே. வணிகர்களே, ஒன்றை அறிந்துகொள்ளுங்கள். என்றும் மாறாத நிலைபேறுள்ளவர் இருவரே. துருவனும் அவன் திசையை ஆளும் குபேரனும்.” என்கிறார்.

யாதவஅரசி அஸ்தினாபுரியின் பேரரசியாக இருப்பதை ஒப்பு நோக்கும் இடத்தில் இவ்வாறு சொல்லப்படுகிறது ”அவர்கள் பேரரசி என்ற பெயரைத்தான் அறிகிறார்கள். அதனுடன் இணைந்துள்ள பெரும் புராணக்கதைகளை அறிகிறார்கள். அந்த அரசி ஒரு யாதவப்பெண் என்பதை அவர்களால் எண்ணிப்பார்க்கக்கூட முடிவதில்லை. அதில் வியப்பதற்கென்ன உள்ளது என்று குலப்பாடகர் களமர் சொன்னார். மண்ணில் பிறந்த துருவன் விண்ணுக்கு மையமாக அமைந்திருப்பதையும்தான் காண்கிறோமே” என்று குந்தி துருவனின் சிறப்புக்கு ஒப்பு நோக்கப்படுகிறார்.

விதுரர் அலைக்கழிந்தவராக இருக்கும் தருணத்தின் போது துருவனை நோக்குகிறார். ”விழிகளை விலக்கவே முடியவில்லை. ஆவல், அச்சம், அமைதியின்மை ஏதுமற்ற நிலைப்பு. தான் மட்டுமே தன்னுள் நிறைந்திருப்பதன் முழுமையான தனிமை.” என்று நினைத்துக் கொள்கிறார்.

இங்ஙனம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருளில், ஒவ்வொருவரின் நினைவாக, நிலைகொள்ள முடியாத உணர்ச்சிகளை போக்குபவனாக, நிலை பெயராதவனாக துருவன் நின்று நாவலில் ஒளிர்கிறான்.

”நிலைபெயராதவன்” என்ற சொல் எனக்கு கண்ணனை நினைவுபடுத்தியது ஜெ. தன் நிலைபெயராமையை கணந்தோறும் உணர்ந்தவன் அவனே தான். ஒளிரும் புன்னகை ஒன்றாலேயே யாவற்றையும் எதிர்கொள்கிறவன். விதுரரைக் கடிந்து கொள்ளும்போதும் அந்தப் புன்னகை இருக்கிறது. போருக்கான திட்டங்களை வகுக்கும் போதும் அந்தப் புன்னகை இருக்கிறது. அர்ஜூனன் அந்தப் புன்னகையை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நோக்கிக் கொண்டிருக்கிறான். கண்ணனின் மேலான உச்ச கட்ட வெறுப்பிலிருந்து அவனை அந்தப் புன்னகை வழியாகத்தான் விதுரர் கண்டடைகிறார். ”அவன் புன்னகையை கண்முன் கோட்டைச்சுவரை நிறைத்து வரையப்பட்ட பேரோவியம் போல கண்டார். ஒளிமிக்க உதயம் போல. அல்லது அலையடிக்கும் ஆழ்தடாகம் போல. உள்ளிழுத்து மூழ்கடித்துவிடும் புன்னகை.” என்று அந்தப் புன்னகையை தரிசிக்கிறார்.

கர்ணன் அந்தப் புன்னகையை தரிசிக்கும் போது திகைக்கிறான். “இல்லாமலிருக்கக் கற்றவன் என்று எண்ணம் தோன்றியதுமே சித்தம் பல்லாயிரம் காதம், பல்லாயிரம் ஆண்டுக்காலம் கடந்து பின்னால் விரைந்தோடி அந்த விழிச்சந்திப்பை மீண்டும் அடைந்து திகைத்து நின்றது. யாதவனின் விழிகளின் ஆழத்தில் ஒரு புன்னகை இருந்தது. இருண்ட குளிர்ச்சுனையின் அடியில் கிடக்கும் நாணயம்போல. என்ன சொல்கிறான்? எதையும் சொல்லவில்லை. சொல்லுமளவுக்கு நெருங்கவில்லை. ஒரு சொல்லுக்கு அப்பால்தான் நின்றிருக்கிறான். எதையோ அறிந்திருக்கிறான். எதை? இங்கிருக்கும் எவரும் அறியாத ஒன்றை. நிகழும் கணத்தில் நின்று நிகழவிருக்கும் கணத்தை கண்டவனின் விழியொளி.“ என்று கர்ணன் வியப்படையும் அந்தப் புன்னகை நம்மை திகைக்கச் செய்கிறது. கர்ணன் ஐந்தாவது கிளியை அம்பெய்ய முடியவில்லையெனினும் பல அவச்சொல்லுக்கு அப்பால் ஒரு முது சூதனின் வாழ்த்தொலி எழுகிறது. ”கர்ணன் திரும்பி அப்பால் தெரிந்த இளைய யாதவனின் முகத்தை பார்த்தான். அந்தப்புன்னகை அங்கிருந்தது. அறிந்தது. அன்னையின் கனிவென குளிர்ந்தது.” என்ற வரிகளில் அந்தப் புன்னகை கலங்கச் செய்கிறது.

இறுதியாக கேசினி அன்னையை வணங்கி வெளிவந்தபின்பு திரெளபதி தன்னை மீறி அழுகிறாள். அந்த அழுகையிலேயே அவள் மணத் தன்னேற்பில் எடுக்கப்போகும் இறுதி முடிவு விளங்கி விடுகிறது. அதன்பின் கண்ணனின் கண்களல்லாமல் அவனின் மயிற்பீலியே அவளைச் சந்திக்கிறது. மனத்தன்னேற்பில் கண்ணன் கிந்தூரத்தை எடுக்கும் போது அவள் அடைந்த ஒரு அலைபாய்தல், நிலைகொள்ளாமையுங்கூட மேலும் அவள் முடிவு என்ன என்பதை உறுதிபடுத்தியது. ஐந்தாவது கிளியான கேசினி முன்பு கண்களை மூடி ஏதோ முடிவெடுத்தவனாக கிருஷ்ணன் தன் கிந்தூரத்தை வைத்துவிட்டு அமர்ந்து கொள்கிறான். முதன்முறையாக திரெளபதியின் விழிகள் அர்ஜுனனின் விழிகளை சந்தித்தபோதே அன்னை கணிந்து கங்கையாக மாறுவதற்கான பிரயாகை உருவாகப் போவது புரிந்து விட்டது.

“நிலைகொள்ளலும் அலைபாய்தலும் இரு பக்கங்களாக அமைந்ததே முழுமை என்று உணர்க. செயலின்மையும் செயலூக்கமும் ஒன்றை ஒன்று நிறைப்பதே லீலை” என்ற வரிகள் வந்து முன் நின்று துருவனையும்-கங்கையையும்; கண்ணனையும்-திரெளபதியையும் ஒப்பு நோக்கச் செய்தது. ”அவளுக்குள் நின்றிருக்கிறது நிலைமாறாத வடமீன் என்றறிக” என்று கங்கைக்கு சொன்ன வரிகளை நினைவு கூர்ந்தேன்.

ஆறுகள் ஒன்றோடொன்று கலக்கும் புள்ளியை பிரயாகை அல்லது ஆற்றுச்சந்தி என்கிறோம். அப்படி பாகீரதி, அலக்நந்தா, மந்தாகினி, பிந்தர், தெளலிகங்கை ஆகிய ஆறுகளுடன் கலந்து முறையே தேவ, ருத்ர, கர்ண, விஷ்ணு, நந்த் ஆகிய பஞ்சபிரயாகைகளைத் தோற்றுவித்து கங்கையாக மண்ணை செழிப்புரச் செய்யும் அன்னையைப் பற்றிய புனைவையல்லவா பிரயாகை நாவலாக வடித்திருக்கிறீர்கள். பல யுகங்கடந்து நிலைபெயராமை நிகழாமை என்றுணர்ந்த துருவன் பரம்பொருளிடம் தன் இருப்பை உணரச் செய்ய மன்றாடுகிறான். அதன் பொருட்டு கொந்தளிப்பையும் பாய்ச்சலையும் துள்ளலையும் அலைகளையும் ஒளிர்தலையும் கொண்டவளாக பிறப்பெடுத்தவளே கங்கை.

“நூறு மகாயுகங்கள் நீ உன் காமத்தில் அலையடிப்பாய். கர்மத்தில் சுழல்வாய். கருணையில் கனிவாய். கன்னியும் அன்னையுமாய் முடிவிலாது நடிப்பாய். உன் சுழற்சி முடிவுறும்போது மீண்டும் ஒரு துளியாக மீண்டு பாற்கடலில் உன்னை அழிப்பாய். ஓம் அவ்வாறே ஆகுக” என்று கூறி ஆசியளித்த விஷ்ணுவிடம் ”என்னை இழந்துகொண்டே செல்லும் அப்பெரும்பயணத்தின் இறுதியில் எப்படி நான் இங்கு மீள்வேன்?”  என்று கங்கை அன்னை வினவுகிறாள்.

“அவன் பெயர் துருவன். அழியாதவன். பெருவெளி நிலைமாறினும் தான் மாறாதவன். எப்போதும் உன்னை நோக்கிக்கொண்டிருப்பவன் அவன். நீ அவனை நோக்கிக்கொண்டிரு. நிலைகொள்ளாமையே நீ. உன் நிலைபேறென அவனைக் கொள்!” என்ற வரிகளின் வழி துருவனை முதலில் சந்திக்கிறாள் கங்கை. அவனை வணங்கி  “மூத்தோனே, என் சஞ்சலங்களில் துணைநிற்பாயாக. என் வழிகளில் நான் திகைக்கும்போதெல்லாம் உன் விழி வந்து என்னைத் தொடுவதாக.” என்று கூறி பஞ்சபிரயாகையோடிணைந்து கங்கையாகிறாள்.

கன்னியாக துள்ளலுடன் இருந்த திரெளபதி ஐவரை மணந்து கொற்றவையாக மாறும் ஒரு தருணத்தில் துருவனின் காட்சியோடு தான் அத்தியாயம் முடிகிறது. என்றும் நிலை கொள்ளாதவளாக அமையப் பெறும் திரெளபதிக்கு துருவனாக அமையப் பெறப் போவது கண்ணனாகவே இருக்க முடியும் என்று எண்ணிக் கொண்டேன். பிரயாகை நாவலின் ஒப்பற்ற நாயகியாக கங்கை-திரெளபதி –ம் கதையின் நாயகனாக நிலைபெயராதவனாகிய துருவன்-கண்ணன் -ம் அமையப் பெறுகிறார்கள்.

என் வரையில், நான் காணும் துருவனில் அமையப் பெறுவது நீங்கள் தான். உங்கள் சொற்கள் தான். துருவனைக் காணும்போதெல்லாம் உங்களின் சொற்கள் என் முன் வந்து நிற்கிறது. நாவல் எழுதி முடித்த பின்னர் அதிலிருந்து நான் வெளிவந்து விடுவேன் என்றும் “அது நானல்ல” என்று நீங்கள் சொல்வதையும் என்னால் இன்று முழுதுணர முடிகிறது ஜெ. ஏனென்றால் நான் துருவனில் தரிசிப்பது வெண்முரசு எழுதும்போது இருந்த ஜெ –வை தான். நான் உரையாடி சிலாகித்திருப்பது அவருடன் தான். நீங்கள் எழுதிக் கொண்டிருந்தபோதும், நான் இப்போது படித்துக் கொண்டிருக்கும்போதும், இனி எப்போதும், தன் நிலைபெயராமையை உணர்ந்து கொண்டு நிலைபெயராமல் தானே துருவன் அமர்ந்து கொண்டிருந்திருப்பான். காலமே அற்றவனும் பிறிதென ஏதுமற்றவனும் பிரம்மமே பற்றுக்கோளாகக் கொள்பவனும், மாயையும் அளப்பவனுமாகிய அவனை வணங்குகிறேன். ஓம்! அவ்வாறே ஆகுக!

பிரேமையுடன்

இரம்யா.

***

முந்தைய கட்டுரைஎழுத்தாளன் என்னும் நிமிர்வு
அடுத்த கட்டுரைகுக்கூவில் சில நாட்கள்…