சுவாமி ரமணகிரி- ஒரு முழுமை
தமிழ் ஆன்மிக மறுமலர்ச்சியின் வரலாறு
அன்புள்ள ஜெ
சுவாமி ரமணகிரி அவர்கள் பற்றிய கட்டுரையை வாசித்தேன். திரு கதிர்முருகன் அழகாக எழுதியிருக்கிறார். இதேபோன்ற சித்தபுருஷர்கள் தமிழகமெங்கும் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். சிலருக்கு நினைவுப்பதிவுகள் உள்ளன. சிலர் அப்படியே மறக்கப்பட்டிருக்கிறார்கள். சிலருடைய அடையாளங்களே இல்லை.
இன்றைய இளைஞர்கள் பலருக்கு ஆன்மிக ஈடுபாடு இருக்கிறது. வரலாற்று ஈடுபாடும் இருக்கிறது. அவர்களில் எவராவது தமிழகத்துச் சித்தபுருஷர்களை ஆவணப்படுத்தி அவர்களின் வாழ்க்கைக்குறிப்பை அகரவரிசைப்படி தொகுத்து ஒரு ஞானக்கலைக்களஞ்சியம் உருவாக்கலாம். ஒரு வாழ்நாள் பெரும்பணி. ஆனால் அதைச் செய்பவர் வரலாற்றில் வாழ்வார். குருவருள் உறுதி. சில நண்பர்கள் கூட்டாகச் சேர்ந்தும்கூட அதைச் செய்யலாம்.
ஒரு நூலாகச் செய்வதை விட ஓர் இணையதளமாகச் செய்யலாம். அப்போது செய்யும்பணி உடனடியாக பதிவாகும் வாய்ப்பு உண்டு. அதைப்பார்ப்பவர்கள் மேலதிகத் தகவல்களை அளிப்பார்கள். அவ்வாறு அதை விருத்திசெய்தபடியே செல்லலாம்.
அந்தக் கலைக்களஞ்சியம் தகவல்கள் மட்டுமே அடங்கியதாக இருக்கவேண்டும். அதில் அற்புதங்கள், புகழ்மொழிகள் இருக்கக்கூடாது. ஒருவர்மேல் இன்னொருவர் என்று நாம் அடையாளம் காட்டவும்கூடாது. வாழும் ஆளுமைகளை தவிர்த்துவிடலாம். சிக்கல்கள் வரும். தகவல் அளிப்பதில் ஒரு சீரான டெம்ப்ளேட் இருக்கவேண்டும். கலைக்களஞ்சியம் மாதிரி. விலாசம், மற்ற செய்திகள் இருக்கவேண்டும். ஓர் ஆசிரியர்குழு கூட இருக்கலாம்
அந்த தகவல்களில் இந்து மார்க்கம் என்பது பொதுவான அடையாளமாக இருக்கலாம். அதற்குள் வரும் எல்லா தரப்பு ஞானிகளும் சித்தர்களும் உள்ளடக்கத்தில் இடம்பெறவேண்டும். ஆனால் தெளிவான ஆசிரியர்முடிவு தேவை. அதற்குத்தான் ஆசிரியகுழு தேவை. அதாவது பொய்யான சாமியார்கள், குறிசொல்பவர்கள் போன்றவர்கள் தவிர்க்கப்படவேண்டும். இல்லையேல் வெறும் குப்பைக்குவியலாகவும் ஆகிவிடும்,
மாபெரும் பணி இது. எவராவது செய்யலாம். நான் அதில் ஈடுபடமுடியாதவன். எனக்கு வயது போய்விட்டது. இளைஞர்களுக்குரிய பணி. ஏனென்றால் செவிவழிச்செய்தியை நம்பி எவரையும் சேர்க்கக்கூடாது. ஒருமுறையாவது நேரில்சென்று பார்த்து எழுதவேண்டும்
என்.ஆர்.ஆறுமுகம்
***