சுவாரசியமான ஓர் உவமையுடன் ஆரம்பிக்கிறது அருண்மொழியின் ’நுரை’ என்னும் கட்டுரை. வீட்டுக்கு வெள்ளையடிக்கிறார்கள். அத்தனை குப்பைகளையும் ஓட்டை உடைசல்களையும் அள்ளி வெளியே போடுகிறார்கள். வீட்டில் ஒளி வருகிறது, அழகாகிறது. உறவுகளின் நட்பின் கொண்டாட்டம். ஆனால் ஓர் உடைசல் எஞ்சியிருக்கிறது. விடாமல் வந்து அமர்ந்துவிடுகிறது.
இதில் வரும் அருண்மொழியின் அத்தை விஜயா நான் அருண்மொழியைக் காதல் திருமணம் செய்துகொண்டபோது பிணக்குகளை தீர்க்க மிக உதவியாக இருந்தவர். அருண்மொழியின் உளமுணர்ந்த தோழியும் அன்னையுமாக அன்று அவரை உணர்ந்தேன். வெந்நீர் மட்டுமே வைக்கத்தெரிந்த அருண்மொழிக்குச் சமையலும் அவர்தான் கற்றுத்தந்தார்.
உயர்நிலைப்பள்ளி ஆசிரியையாக இருந்தார். பேச்சு, கையசைவு, சிரிப்பு எல்லாவற்றிலும் அருண்மொழியின் சாயல் உண்டு. பெண்கள் அத்தையின் சாயலில் அமைவது மிக ஆச்சரியமானது. அவர் சற்று குண்டு. ’உன் அத்தை குண்டு, அதனால் நீயும் குண்டாக ஆவாய்’ என்று அன்று அருண்மொழியிடம் அன்று சொன்னேன். கடுமையாகக் கோபித்துக்கொண்டாள், ஆனால் கலைஞன் குரல் காலத்தின் குரல் அல்லவா?
விஜயா அவர்களுக்கு ஆசிரியைக்குரிய உரத்த குரல் உண்டு, அது அருண்மொழிக்கு வரவில்லை. ஆனால் அந்தத் தன்னம்பிக்கை, நிமிர்வு, அபாரமான நகைச்சுவை உணர்வு இவளுக்கும் உண்டு. விஜயா இருக்குமிடத்தில் எப்போதும் வெடிச்சிரிப்பு இருக்கும். அவர் கணவர் திரு வடிவேலும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்.டிரில் மாஸ்டர் மாதிரி இருப்பார். அவருடைய உடன்பிறந்தவர்கள் அனைவருமே போலீஸில் இருந்தனர். அவரும் எஸ்.ஐ. வேலைக்கு முயன்று முடியாமல் ஆசிரியரானவர். ஆனால் மானசீகமாக எஸ்.ஐதான். சபாரிதான் பிடித்த ஆடை.
அவர்கள் இருவரும் சரியான இணை. இருவருமே சிரிக்கத் தெரிந்தவர்கள். வடிவேல் நகைச்சுவைகள் ஒரு நூல் அளவுக்கு நினைவிலுள்ளன. திரு வடிவேல் அவர்கள் இருபதாண்டுகளுக்கு முன்பு வயிற்றுப் புற்றுநோயால் இறந்தார். மூன்றாண்டுகளுக்கு முன்பு அருண்மொழியின் விஜயா அத்தையும் நீண்ட புற்றுநோய் சிகிழ்ச்சைக்குப்பின் மறைந்தார். துயர்மிக்க நினைவுகள்தான். ஆனால் அருண்மொழி குதூகலமான நினைவுகளாக எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டிருக்கிறாள்.
புனைவின் மாயம் கலந்த நினைவுப்பதிவு. தி.ஜானகிராமனுக்கு அழிவில்லை என்று அந்த உரையாடல்கள் காட்டின.