கேரள கம்யூனிசமும் தலித்துக்களும்
அன்புள்ள ஜெ
கேரள கம்யூனிசமும் தலித்துக்களும் ஓர் அருமையான குறிப்பு. அதிலிருந்த சமநிலையும் அக்கறையும் ஆச்சரியப்படச் செய்தது. இங்கே அரசியல்பேசும் அனைவருமே ஒரு சிறிய நண்பர்குழுவில் அரட்டை அடிப்பவர்களின் மனநிலையிலேயே இருக்கிறார்கள். ஆகவே தங்களுக்கான அடையாளத்துக்காகவே அரசியல் பேசுகிறார்கள். எனவே மிகமிகத் தீவிரமாக தொண்டைபுடைக்க ஏதாவது ஒரு தரப்பை எடுத்துப் பேசுகிறார்கள். கொந்தளிக்கிறார்கள், வசைபாடுகிறார்கள். இந்த மனநிலையால் காணப்படாமல் போவது உண்மை என்ன என்பதுதான். அதைச்சொல்ல சில நடுநிலையான குரல்கள் இருப்பது நல்லவிஷயம்.
கேரளத்தில் இடதுசாரி அரசுகள் தலித்துக்களுக்குச் செய்தவை என்ன என்று பட்டியலிட்டிருந்தீர்கள். அவற்றைச் செய்த முன்னோடிகளான இ.எம்.எஸ், கௌரியம்மா, அச்சுதமேனன் ஆகியோரை குறிப்பிட்டிருந்தீர்கள். வரலாற்றில் இதையெல்லாம் குறிப்பிடாவிட்டால் அப்படியே வரலாறு மறைந்துபோய்விடும். கம்யூனிஸ்டுகள் தங்கள் பணிகளை தாங்களே சொல்வதில்லை. ஆகவே அவை மறைந்துவிடுகின்றன. மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என்று சொல்லமுடியாது. மக்கள் அன்றாட வாழ்க்கையைத்தான் ஞாபகம் வைத்திருப்பார்கள். ஆகவே இவற்றைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.
எஸ். முத்துக்குமரன்
***
அன்புள்ள ஜெ,
கேரளக் கம்யூனிசம் பற்றிய கட்டுரையில் ஒரு விஷயத்தை கூர்ந்து கவனித்தேன். இன்றைக்கு தலித்துக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் சலுகைகள் மட்டும் போதாது. அந்த தேவையை அவர்கள் கடந்துவிட்டனர். கல்வியில் இட ஒதுக்கீடு என்பது ஒரு தொடக்கம். அரசுவேலைகள் குறைந்துவிட்டன. இன்றைக்கு எந்தச் சாதி வியாபாரத்தில் முன்னுக்கு வருகிறதோ அதுதான் வாழும். தலித் மக்களுக்கு எங்கேயுமே வியாபார வாய்ப்பே இல்லை. ஆகவேதான் மிகப்பெரிய தேக்கநிலை. அந்த வாய்ப்பை அரசு வழங்க முடியாது. அதை வென்றெடுக்க வேண்டும். அதற்கு வாக்கரசியலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சமூக அதிகாரம் என்பது பேரம்பேசி பெறுவதாக ஆகிவிட்டிருக்கிறது.
அ.பாரி
***