வெண்முரசு, கலிஃபோர்னியா

வணக்கத்துக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

விஷ்ணுபுரம் இலக்கிய வாசகர் வட்ட சார்பில்  Roseville, California -வில்  8/1/2021 அன்று  தங்களின் வெண்முரசு பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது. உங்களது எழுத்துக்களுக்கு மிகவும் பரீட்சியம் இல்லாத சாதாரண தமிழ் ஆர்வலனான  என் பார்வை இதோ.

இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான இதிகாசமாக கருதப்படும் மகாபாரதத்தை படித்தும், பார்த்தும், அதன் ஆழத்தையும், அது கூறும் வாழ்க்கைத் தத்துவங்களையும்  வியந்திருக்கிறேன். அந்த காப்பியம் இன்று நவீன வாசகர்களுக்காக மறு ஆக்கம் செய்யப்பட்டு, ஒரு நவீன இலக்கியவாதியின் பார்வையில் புது போர்வை போர்த்தி வெண்முரசாக வெளிவந்துள்ளது அறிந்து மகிழ்ந்தேன். இந்த நாவல் வரிசையின் பிரமாண்டத்தை இந்த ஆவணப்படத்தின் மூலம் உணர முடிந்தது. மெய் மறக்க வைக்கும் பாடல், பின்னணி இசையுடன் எடுக்கப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படம் வெண்முரசை படிக்க வேண்டும், அதன் பிரமாண்டத்தை உணர வேண்டும் என்ற ஆவலை தூண்டும் விதமாக இருந்தது.

தமிழ்த்தாய் வாழ்த்தில் தொடங்கி, திரு.அண்ணாதுரை அவர்களின் முன்னுரை, எழுத்தாளர் மறைந்த திரு.கி.ராஜநாராயணன் அவர்களுக்கு  நினைவு அஞ்சலி, செல்வி. அமிர்தாவின் அறிமுக உரை என திரையிடல்  தொடங்கியது.  பின், கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” பாடல் திரு. ராஜன் சோமசுந்தரத்தின் இசையில் மெய்சிலிர்க்க வைத்தது. பின் அனைவரும் வெண்முரசை கொண்டாடும் இந்த ஆவணப் படத்தை பார்த்து மகிழ்ந்தோம்.

இலக்கிய ஆர்வலர்கள் பலர் இந்த திரையிடலுக்கு வந்திருந்தார்கள். சிறு வயது முதல் 80 வயது இளைஞி வரை இப்படத்தை பார்த்து மகிழ்ந்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள். அவர்களில் சிலர், இந்த நாவலை முழுவதுமாக முதலிலிருந்து படிக்க முடியாவிட்டாலும், எந்த ஒரு அத்தியாயத்திலும் தொடங்கலாம், ஒவ்வொரு  கதை மாந்தரையும் தனியாக படித்து உணரலாம் என்றனர். இந்த கருத்து என்னை போன்ற வாசகர்களுக்கு ஒரு உந்துதலாக இருக்கும் என நினைக்கிறேன். மகாபாரதத்தில் எனக்கு பிடித்த கதாபாத்திரத்தில் தொடங்கி  இந்த நாவலை வாசிக்க விழைகிறேன்.

இந்த திரையிடலுக்கு பின் பணியாற்றிய திரு.அண்ணாதுரை மற்றும் நண்பர்களுக்கு நன்றி.

நிகழ்ச்சியில் இளைய தலைமுறையினர் சிலரையும் கண்டேன். இது போன்ற இலக்கிய அறிமுக நிகழ்வுகள் நம் தமிழ் இலக்கியங்களை அவை கூறும்  நம் கலாச்சாரத்தை, தமிழின் செறிவை  அடுத்த தலைமுறையினரும்  உணரச்செய்யும். தங்களின் எழுத்துக்களுக்கு என் வணக்கம்.
வாழ்க தமிழ்!

நன்றி!
ரம்யா பாலகிருஷ்ணன்

முந்தைய கட்டுரைவரலாறு என்னும் மொழி : ஸ்டாலின் ராஜாங்கம்
அடுத்த கட்டுரைஆரம்பக் கல்விக்கு ஓர் இயக்கம்- கடிதம்