நிலவும் மழையும்- 4

குதிரேமுக் உடுப்பி சாலையில், பத்ரையின் கரையில்

குதிரேமுக் பயணம் உடலை ஓயச்செய்திருந்தது. நாங்கள் எந்த அளவுக்கு துல்லியமாக திட்டமிட்டிருந்தோம் என்றால் மாலை மூன்றுமணிக்கே கீழிறங்கி, குளித்து உடைமாற்றி ஐந்து மணிக்கு கிளம்பி, நூறுகிலோமீட்டர் காரோட்டி உடுப்பிக்குச் சென்று அங்கே ஒரு விடுதியில் தங்குவது என்று. அங்கே அறைகளும் முன்பதிவுசெய்திருந்தோம்.

ஆனால் மலையேற்றம் முடிந்து வந்துசேரவே எட்டுமணி ஆகிவிட்டது. மேற்கொண்டு அறையில் இருந்து உணவுக்கூடம் வரை நடப்பதேகூட பலருக்கு மலையேற்றம் என்று தோன்றும் நிலை. உண்மையில் மோனநிலை என்றால் அதுதான். உலகில் எதுவுமே முக்கியமல்ல. தரையோடு தரையாக படிந்துவிடுவதே பேரின்பம் என்று தோன்றும் தருணம்

குதிரெமுக் உச்சியில் ஒரு படுகை

ஆகவே மறுநாள் காலையில் கிளம்பி நேராக உடுப்பி சென்றோம். தக்காணப்பீடபூமியில் இருந்து சுழன்று சுழன்று இறங்கிக்கொண்டிருந்தோம். பசுமை நிறைந்த மரங்கள் இருபுறமும். கானியலாளர் சொல்லும் ஒரு செய்தி, காடு கார்பன் டையாக்ஸைடும் புகையும் எழும் சாலைக்கு இருபுறமும் மிகையாக கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக்கொள்ளும் தாவரங்களைச் செறியவைத்து புகையை கட்டுப்படுத்துகிறது என்று. ஒரு வடுவைச் சுற்றி தோல் கடினமாவதுபோல.

பசுமையின் வண்ணங்கள். மேலே எழுந்தோறும் ஒளிர்பசுமை. ஒளி குறைவான கானாழத்தில் அடர்பசுமை. கிட்டத்தட்ட நீலம். வழியில் சாலையோரமாக ஒரு சிறிய புதிய கற்கோயிலைப் பார்த்தோம். பழைய கோயில் இருந்த இடத்தில் புதிய கோயிலைக் கட்டியிருக்கிறார்கள். அங்கே கோயில்கொண்டிருந்தவர் முருகன். ஆனால் நாகராஜனின் மேல் வீற்றிருந்தார். நாகபடம் தலைக்குமேல் குடையென எழுந்திருந்தது

முருகனின் இப்படிப்பட்ட சிலை தமிழகத்தில் அரிது. புகழ்பெற்ற குக்கே சுப்ரமணியா ஆலயத்திலும் முருகன் இப்படித்தான் இருக்கிறான். வேலும் மயிலும் உண்டு. கர்நாடகத்தின் முருக வழிபாடு தனித்தன்மை கொண்டது. இப்படிப்பட்ட சிலையை பற்றி நான் எழுதிய மாமலர் [வெண்முரசு] நாவலில் குறிப்பு இருக்கிறது என்றனர். எனக்கு நினைவில்லை.

மழையில் நனைந்த மரங்களின் நடுவே அந்த நாகச்சிலையை பார்த்தபோது அப்பகுதியே ராஜநாகத்தின் ஆட்சியில் இருப்பது என்பது நினைவுக்கு வந்தது. ராஜவெம்பாலை என பழைய மலையாள இலக்கியங்கள் சொல்கின்றன. கிங் கோப்ரா என்பது அதன் மொழியாக்கம். அந்த நாகம்தான் தெய்வங்களுக்குரியது.  தமிழகத்தில் உச்சிமலைகளில் தவிர எங்கும் ராஜநாகம் இல்லை. ஆகவேதான் நம் சிலைகளில் பாம்பு அத்தனை தத்ரூபமாக இல்லை. ராஜநாகம் நாகங்களின் அரசன். நாகராஜன். ராஜநாகம் பிற பாம்புகளை மட்டுமே உண்டு வாழ்வது. அரசனும் அப்படித்தான்.

உடுப்பி அருகே மல்பே கடற்கரையில் கொஞ்சநேரம். ஆனால் அது சரியான நேரம் அல்ல. சரியான பருவமும் அல்ல. மேற்குக்கடற்கரைகளில் மழையில் ஆறுகளில் நீர்பெருக்கெடுத்து குப்பைகளை கொண்டு கடலில் சேர்க்கிறது. கடலில் மிதக்கும் குப்பைகள் அனைத்தும் அப்படியே எழுந்து வந்து கடற்கரை முழுக்க பரவிக்கிடக்கின்றன.

மல்பே கடற்கரையில் ஒரு லெமன்சோடா குடித்துவிட்டு உடனே கிளம்பிவிட்டோம். நேராக ஆகும்பே. பலமுறை சென்ற ஊர். ஆனால் இம்முறை ஆகும்பே என்றதுமே அனைவரும் ஆடகம் கதையை நினைவுகூர்ந்தனர். ராஜநாகக் காப்பகம் அமைந்திருக்கும் ஊர்.

ஆகும்பேயில் வழக்கமான மல்யா விடுதியில் தங்கினோம். மழை பெரிதாக இல்லை. ஆனால் இருட்டி கனிந்து காத்திருந்தது. குளித்துவிட்டுச் நடை கிளம்பியபோது மழை விழத்தொடங்கியது. மழையிருட்டு நிறைந்த சாலையில் நடந்தோம். பக்கவாட்டில் திரும்பி நீர் பெருகிச்சென்ற ஓர் ஓடைவரை சென்றோம்.

பேச்சு பொதுவாகத் தொட்டுச்சென்றது. மழைக்கோட்டுகள் டிராக்குலாவின் லாங் கோட் போல இருந்தன. ஆகவே பேச்சு டிராக்குலாவை நோக்கிச் சென்றது. நான் பிராம் ஸ்டாக்கரின் டிராக்குலாவைப் பற்றிப் பேசி ஒரு கட்டத்தில் டிராக்குலாவாக ஆங்கில வசனம் பேசி ஒரு பதினைந்து நிமிட ஓரங்கநாடகமே நடித்துக் காட்டினேன். அந்தி மயங்கும் வேளையில் அந்த கொலைத்தாகம் உற்சாகமளித்தது

டிராக்குலா கதை சொன்ன இடம்

மல்யா விடுதியில் நண்பர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது ஒரு நண்பர் என் பெயரைச் சொல்ல அங்கே சாப்பிட வந்த ஒரு மலையாள இளைஞர் என்னைப்பற்றி விசாரித்தார். என்னை வாசித்தவர். அவருடைய துணைவியை அறிமுகம் செய்தார். வாசகர்கள் இவ்வாறு எதிர்பாராமல் ஆசிரியரைச் சந்திக்கும்போது பொங்கிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களால் பேசவே முடிவதில்லை.

அவருக்கு கீது மோகன்தாஸ் என்ற பெயர் [அப்பெயரில் ஒரு நடிகை உண்டு என்பதனால் பெயர் மறக்கவிலை] பயண எழுத்தாளர். ஆர்ட்டிக் பயணத்துக்காக ஒரு சர்வதேசக்குழுவால் தேர்வுசெய்யப்பட்டவர். ஆனால் கோவிட்டினால் பயணம் ஒத்திப்போடப்பட்டுள்ளது. பயணக்குறிப்புகள் மாத்ருபூமி யாத்ரா என்னும் இதழிலும் வந்துள்ளதாகச் சொன்னார். என்னுடைய லடாக் பயண அனுபவங்கள் அதில் வெளிவந்தன.

டிராக்குலா கதைகேட்ட பெங்களூர் கிருஷ்ணன்

இரவு எங்கள் வழக்கமான கௌடசாரஸ்வத அந்தணரின் விடுதிக்குச் சென்று சாப்பிட்டோம். கொதிக்கும் சோறு, கர்நாடக சாம்பார். வீட்டுச்சாப்பாட்டின் சுவை. மறுநாள் காலை கிளம்புவதாகச் சொன்னோம். ஆறுமணிக்கே உணவு தயாரிப்பதாக அவரே சொன்னார்.

மல்யா விடுதியில் மழையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். கீழே அவரே ஓர் உணவகம் வைத்திருந்தார். அதில் சங்கநாகின் படம் வரையப்பட்டிருந்தது. மலைநாட்டின் பிரியத்திற்குரிய கதைநாயகன். இன்றும் அவரை அங்கே வழிபாட்டுடன் எண்ணிக்கொள்கிறார்கள்

சங்கநாக் -அனந்தநாக் சகோதரர்கள் கன்னட நடுவாந்தர சினிமாவில் பெரும் பங்களிப்பாற்றியவர்கள். சங்கர்நாக் இளைஞர்களின் உள்ளம்கவர்ந்த நடிகன். சங்கர்நாக். கொங்கணி பேசும் குடும்பத்தவர்  விடுதி உரிமையாளரும் கொங்கணி பேசும் பிராமணர்தான்

உத்தர கன்னடத்தில் ஹொன்னாவரம் அருகே 1954ல் பிறந்தவர் சங்கர்நாக்.கிரிஷ் கர்நாடின் ஒந்தானொந்து காலதல்லி என்னும் சினிமாவில் கதைநாயகனாக 1978ல் அறிமுகமானார். அந்த சினிமா கன்னட நவசினிமாவின் ஒரு செவ்வியல் படைப்பாகக் கருதப்படுகிறது. 1978க்கான சிறந்த சினிமாவுக்கான தேசிய விருதையும், தேசிய திரைப்படவிழாவில் தங்கக்கமலம் விருதையும் பெற்ற படம் இது.

சங்கர் நாக் ஆர்.கே.நாராயணனின் மால்குடி தினங்கள் நாவலின் சின்னத்திரை வடிவை இயக்கி நடித்தார். அந்த படப்பிடிப்பின் நடுவே தாவண்கெரே அருகே ஒரு கார் விபத்தில் மறைந்தார். அப்போது அவருக்கு முப்பத்தாறு வயதுதான்.

அனந்த நாக் மலையாள சினிமாவிலும் நடித்திருக்கிறார். லெனின் ராஜேந்திரனின் சுவாதித்திருநாள் சினிமாவில் அவர்தான் சுவாதித்திருநாளாக நடித்தார். மால்குடி ஊராக அந்த தொலைத்தொடரில் காட்டப்பட்ட பெரும்பகுதி ஆகும்பேயில் படமாக்கப்பட்டது. மல்யா விடுதியில் மால்குடியை ஒரு சுவரில் படமாக வரைந்து வைத்திருக்கிறார்கள்.

கர்நாடகச் சுவை, உணவகம்

காலையில் மழையில் ஊறிய ஆகும்பேயின் புல்நிலம் வழியாக நடந்தோம். ஆகும்பே வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. கட்டிடங்கள் வந்தபடியே உள்ளன. சில ஆண்டுகளுக்குள் பரபரப்பான சுற்றுலாமையமாக ஆகிவிடும். இன்று மழையின்பொருட்டு மட்டுமே அங்கே செல்லவேண்டும். இரவெல்லாம் மழை இடியோசையுடன் கொட்டிக்கொண்டே இருந்தது

பெரியவரின் ஓட்டலில் இட்லி, தோசை, நீர்த்தோசை சாப்பிட்டுவிட்டு கிளம்பி பத்ராவதி சென்றோம். ஹொய்ச்சால கோயில்களில் நாங்கள் தவறவிட்ட முக்கியமான கோயில் அது. தனியாக வேறுவழியில் இருந்தமையால் அதற்காக வழி திரும்ப முடியவில்லை. இம்முறை அதைப்பார்ப்பது என்று முடிவெடுத்திருந்தோம்.

உணவக உரிமையாளர்

துங்கா பத்ரா என்னும் இரு நதிகள் இணைந்து துங்கபத்ராவாக ஓடி கிருஷ்ணா நதியில் கலக்கின்றன. இவ்வாறு இரண்டு இணையாறுகள் கலப்பது இந்தியாவில் வேறு இல்லை என்று சொல்லப்படுகிறது. இதனால்தான் பத்ராவதி ஆலயம் பத்ராவதியின் கரையில் அமைந்துள்ளது என்கிறார்கள்.

துங்கா ஆறு மேற்குமலைத்தொடர்களில் வராகமலையில் கங்காமூலை என்னும் இடத்தில் தோன்றுகிறது. பத்ரா ஆறு குதிரேமுக் மலையிலுள்ள கங்காமூலா என்னும் இடத்தில் தோன்றுகிறது. இவை கூட்லி என்னும் ஊரில் இணைந்து துங்கபத்ராவாகின்றன. ஹம்பி வழியாகச் செல்வது துங்கபத்ராதான்.

பத்ராவதி லக்ஷ்மிநரசிம்மர் ஆலயத்தில் எங்களுக்காக ஷிமோகா ரவி காத்திருந்தார். நாங்கள் வருவதை அர்ச்சகரிடம் சொல்லிவைத்திருந்தார். ஆனாலும் கிருஷ்ணன் வந்த கார் வந்து சேர்வதற்குத் தாமதமாகியது. அவர் உள்ளே நுழைய முடியவில்லை. நடை சாத்திவிட்டனர்.

பத்ராவதியில் உள்ள லட்சுமிநரசிம்மர் ஆலயம் ஹொய்ச்சாலர்களால் 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஹொய்சால ஆலயங்களின் பாணியில் கரியசுண்ணக்கல்லால் கட்டப்பட்டது. மிகநுணுக்கமான சிற்பங்கள், அச்சில் சுழற்றி உருவாக்கி மெருகூட்டப்பட்ட கரிய அடுக்குத்தட்டுத் தூண்கள், கூரையில் சிற்பச்செறிவுகள் என்று ஒரு முதன்மை ஹொய்ச்சால ஆலயத்தின் எல்லா கலையழகும் கொண்டது இந்த ஆலயம்.

ஹொய்ச்சால ஆலயங்களை விரிவாக ஆராய்ந்த ஜெராட் ஃபொகேமா [Gerard Foekema] இந்த ஆலயத்தை பற்றியும் எழுதியிருக்கிறார். இதுவும் திரிகுடாச்சலம் என்னும் மூன்றுகோபுர அமைப்பு கொண்டது. இதன் அடித்தளம் முதல் கோபுர உச்சிவரை நட்சத்திர அமைப்பில் கூரிய மடிப்புகள் உள்ளன. அடித்தளத்தின் மேலுள்ள பீடம் நட்சத்திரமே புல்லிவட்டம் என விரிந்ததுபோல உள்ளது. மேலே ஆலயம் அல்லிவட்டம் போல குவிந்து எழுந்து நிற்கிறது.

கருமையின் மெருகை ஒளியென கசியவிட்டு நின்றிருந்த குளிர்த்தூண்களுக்குமேல் கவிழ்ந்த மலர் என குடைவுக்கூரை கொண்ட முகமண்டபம். உள்ளே மூன்று கருவறைகளும் திறக்கும் மையத்தில் அலங்காரத்தூண்களுடன் மண்டபம். மேலே தெரிந்த சிற்பங்களை அடையாளம் கண்டுகொள்வது ஹொய்ச்சால கோயில்களை அரிய அனுபவமாக ஆக்குகிறது. எத்தனை பார்த்தாலும் தீராத அளவுக்கு சிறுசிறு சிற்பங்கள் கரிய நீரில் இருந்து குமிழிகள் என எழுந்து வந்தபடியே இருக்கும்.

மையக்கருவறையில் லட்சுமியை மடியில் வைத்திருக்கும் நரசிம்மர் அமர்ந்திருந்தார். அவருக்கு அழகிய நரசிம்மர் என்று பெயருண்டு என்று அர்ச்சகர் சொன்னார். அழகியசிங்கர்! மிகக்கனிந்த முகபாவனையுடன் திருமகளை மலர் என சூடியிருக்கிறார். இருபக்க கருவறைகளில் ஒன்றில் கோபாலகிருஷ்ணன். இன்னொரு கருவறையில் நின்றிருக்கும் ஆயுதம்தாங்கிய விஷ்ணு புருஷோத்தமர் எனப்படுகிறார்.

வெளியே ஆலயத்தின் அத்தனை சிற்பங்களும் முகம் உடைக்கப்பட்டு சிதைக்கப்பட்டிருக்கின்றன. ஹொய்ச்சாலப்பேரரசு வீழ்ச்சியடைந்தபின்னரும் ஆலயம் பேணப்பட்டிருக்கிறது. பின்னர் சுல்தானியப்படையெடுப்பில் எல்லா ஹொய்ச்சால ஆலயங்களைப் போலவும் இதுவும் சூறையாடப்பட்டு சிலைகள் உருவச்சிதைப்புக்கு ஆளாயின.

கோயிலைச் சுற்றி வந்து சிற்பங்களை கற்பனையில் முழுமை செய்துகொண்டிருந்தோம். விஷ்ணுவின் வெவ்வேறு தோற்றங்கள். உள்ளங்கையளவே உள்ள வராகமூர்த்தியின் மடியில் இருக்கும் பூதேவி நகைகளை அணிந்திருக்கும் நுட்பத்தை ஹொய்ச்சாலக் கலையில்தான் காணமுடியும். ஹொய்ச்சால கற்சிற்பங்கள் சிற்பத்தின் அழகியல் கொண்டவை அல்ல. அவை பொன்நகைகள் போல. அந்த ஆலயம் மாபெரும் கல்நகை.

பத்ராவதி கோயில் முன் அமர்ந்து கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தோம். மூன்று மணிக்கு பத்ராவதி காட்டுக்குள் ஓர் உலாவுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். மதிய உணவுக்குப்பின் அங்கே சென்றோம்.

ஆனால் அது ஒரு மோசடி. ஆளுக்கு ஐநூறு ரூபாய் கட்டணம். ஆனால் எங்களை ஒரு பஸ்ஸில் ஏற்றி புலிகள் காப்பக எல்லைக்கு வெளியே உருவாக்கப்பட்டிருந்த தேக்குக்காடு வழியாக ஒரு காட்டுப்பங்களா வரை கொண்டு சென்றுவிட்டு திரும்பக் கொண்டுவந்தனர். உண்மையான கானுலா வழியே அது அல்ல.

அந்த வளர்ப்புக்காட்டிலேயே நிறைய புள்ளிமான்கூட்டங்களைப் பார்த்தோம். கீரிபோன்ற மூன்று பெரிய விலங்குகள் எதையோ கடித்து சண்டைபோட்டுக்கொண்டிருந்தன. mongoose என்பது என் எண்ணம். கீரியின் ஏதோ வகை. ஏனென்றால் அவை செத்த விலங்கு எதையோதான் தின்றுகொண்டிருந்தன.

பத்ராவதியில் இருந்து கிளம்பி அரிசிக்கெரே வந்தோம். அரசியின் ஏரி. ஏற்கனவே தங்கியிருந்த ஊர்தான். அந்த விடுதி கொரோனாவால் கைவிடப்பட்டு பரிதாபமாக இருந்தது. ஆகவே இரவில் அலைந்து இன்னொரு விடுதியை கண்டடைய வேண்டியிருந்தது.

மறுநாள் காலையில் எழுந்து டீக்கடை தேடிச்சென்றோம். முற்றிலும் புதிய ஊரில் காலையில் டீக்கடை தேடி நடப்பது எங்கள் பயணங்களில் என்றுமே இனிய அனுபவம். ஏனென்றால் அது அப்படி நடந்த பல நினைவுகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிக்கொண்டே செல்கிறது. எத்தனை ஊர்களில் எத்தனை வண்ணங்களில் எத்தனை மணங்களுடன் விரிந்த காலைகள்!

டீக்கடையில் டீ நன்றாக இருந்தது. அது அந்த பகுதியின் ஒரு மையமாக இருக்கவேண்டும். ஏராளமான கல்பெஞ்சுகள் இருந்தன. டீக்கடை என்பது நமக்கு ஐரோப்பியர்களின் பப் களுக்கு சமானமான ஒரு கலாச்சார மையம். நாங்கள் டீக்கடைகளில் டீ அருந்துவதை ஒரு மதச்சடங்கு போலவே ஈடுபட்டுச் செய்வோம். டீக்கடைகளின் நைந்த தந்தி தாளை நான் விரும்பி படிப்பேன். கன்னட செய்தித்தாள் தந்தி போலிருந்தால் டீ டம்ப்ளருடன் அதை புரட்டி படம் பார்ப்பேன்.

அரிசிக்கெரே ஈஸ்வரன் கோயில் ஏற்கனவே நாங்கள் சென்றதுதான். ஹொய்ச்சால கட்டிடக்கலையின் மிகச்சிறந்த உதாரணங்களில் ஒன்று. கரிய சுண்ணக்கல்லில் செதுக்கப்பட்ட அற்புதமான நுண்சிற்பங்களும் அடுக்குவட்டத் தூண்களும் கொண்டது. உள்ளே சிவன் இருந்தாலும் சுற்றுச்சிற்பங்கள் அனைத்தும் விஷ்ணுவைச் சித்தரிக்கின்றன.

அரிசிக்கெரேயில் இருந்து மதிய உணவுக்கு பெங்களூர் வந்துவிட்டோம். அரங்கசாமியின் இல்லத்தில் எல்லாவகை மாமிசங்களுடனும் ஒரு பெரிய விருந்து. மாலை ஐந்தரை மணிக்கு  ஓசூர் சென்று நாகர்கோயில் ரயிலில் ஏறிக்கொண்டேன்.

மழைப்பயணங்கள் தொடங்கி பதினைந்தாண்டுகளாகப்போகின்றன. எத்தனை மழைகள், எத்தனை புல்வெளிகள். புல் முளைத்து காய்ந்து முளைத்து ஓர் ஆண்டென நிகழ்கிறது. அட்டைகள் தோன்றி குருதி உண்டு பெருகி மறைந்து மீண்டும் தோன்றுகின்றன.பதினைந்து தலைமுறைகள், பதினைந்து முழுமையான வாழ்க்கைகள்.

மழைப்பயணங்களுடன் கோயில்களை இணைக்கலாமா என்று தெரியவில்லை. இரவில் தூங்கும்போது மழையும் புல்லும் அட்டைகளும் காலமே அற்றவை என நின்றிருக்கும் சிற்பமுகங்கள் செறிந்த கோயில்களும் கலந்து ஒற்றைப்படலமாக நினைவுள் சுழித்துக்கொண்டே இருந்தன.

[நிறைவு] 

ஹொய்ச்சாள கலைவெளியில் – 3

முந்தைய கட்டுரைவெண்முரசு, அருண்மொழி- கடிதம்
அடுத்த கட்டுரைஆரம்பக் கல்விக்காக ஓர் இயக்கம்