அன்பின் ஜெ
முதலில் வணக்கம். நீங்கள் ஜப்பான் வந்தபோது உங்களை சந்தித்து உரையாடியிருக்கிறேன். வெண்முரசு வாயிலாக பலமுறை. உங்களுக்கு எழுதுவது இதுவே முதல். பலமுறை எழுத வேண்டும் என நினைப்பேன், என் மனதில் தோன்றும் கேள்வியை யாரவது ஒருவர் கேட்டு இருப்பார் வாசித்தவுடன் எழுதாமல் விட்டு விடுவேன்.
இன்று https://www.jeyamohan.in/149040/ வாசித்த போது இன்னும் சில கேள்விகள் எழுந்தது, ஒரு தொடக்கமாக இந்த மெயிலை எழுதிக் கொன்டு இருக்கிறேன்.
நானும் இவர் சொன்னதை போல ஒரு கஷ்டம் வரும் போது கடவுளை கூடுதலாக வழிபட்டு இருக்கிறேன் ஆனால் கடவுள் என்பவர் வேண்டுவன கொடுப்பவர் மட்டுமல்ல என்றொரு எண்ணம் எப்போதும் உண்டு.
ஞானத்தை அறிவதற்கு பக்தி ஒரு கருவி என்றால் இத்தேடலில் கடவுள் என்பவர் யார்? கடவுளின் சமூக வரலாறு என்ன? அதெப்படி உலகத்தின் எல்லா மக்களுக்கும் கடவுள் என்று ஒருவர் தேவைப்பட்டிருக்கிறார். உலகமே ஒரு பெரும் ஒத்திசைவென்று கொண்டால் கடவுள் அதை நிகழ்த்துபவரா? இல்லை அந்த ஒத்திசைவின் பிரம்மாண்டம் புரியாததால் மனிதன் அதற்கு வைத்த பெயர் கடவுளா? நிச்சயம் வெறும் வேண்டுவன கொடுப்பவர் அல்ல, பின் மனிதனுக்கு கடவுளின் தேவை என்ன?
தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன். மனதுக்குள் பல உரையாடல்கள் நடந்து கொண்டிருக்கின்றன சற்று அடங்கியபின் எழுதுவதாக எண்ணம்.
நன்றி
முத்து
***
அன்புள்ள முத்து,
நீங்கள் கேட்டிருப்பதெல்லாம் ஆழ்ந்த தத்துவ -ஆன்மிகக் கேள்விகள். அவற்றுக்கான பதில்களை வெறுமே மூளையை உழப்பிக்கொண்டு கண்டடைய முடியாது. அதற்கு இரு வழிகள் உள்ளன. அவற்றைப்பற்றிய தொல்ஞானத்தை முறையாக அறிய முயல்வது. இரண்டு அறிந்தவற்றை அனுபவமாக ஆக்குவதற்குரிய பயிற்சிகள், பழக்கங்களில் ஈடுபடுவது. கல்வியும் ஊழ்கமும்.
அவ்வாறு நீங்களே உங்களுக்கென அறிவதுதான் கடவுள். ஒருவரின் அறிதல் இன்னொருவருக்குரிய பதிலாக இருக்கமுடியாது. ஒருவர் அறிந்தமுறை இன்னொருவருக்கான வழிகாட்டலாக மட்டுமே இருக்கமுடியும். ஆகவே கடவுள் பற்றிய பிறருடைய வரையறை, வர்ணனை எதற்கும் எப்பதிலும் இல்லை.
கடவுளை அறிவதன் இரு நிலைகள் நம்மைச் சூழ்ந்து காணப்படுகின்றன. அவை கடவுளின் இருநிலைகள் அல்ல. மனிதனின் இரு நிலைகள். மனிதன் உலகியல் மனிதனாகவும் ஆழத்தில் தூயஅறியும் தன்னிலையாகவும் ஒரேசமயம் இருக்கிறான். இருநிலைகளிலும் அவன் தெய்வத்தை அறிகிறான்.
விழைவில், வறுமையில், நோயில், துயரில் இருக்கையில் உலகியல் மனிதர்கள் ஒரு தெய்வத்தை நாடுகிறார்கள். துணைவர, ஆறுதலளிக்க, வழிகாட்ட அத்தெய்வம் தேவையாகிறது. அவ்வண்ணம் ஒன்றை அவர்கள் கண்டடையவும்கூடும்.
தூயதன்னிருப்பாக மட்டுமே தன்னை உணர்கையில் தன்னைச் சூழ்ந்திருக்கும் ஒரு மாபெரும் பிரபஞ்ச உணர்வாக அவர்கள் தெய்வத்தை உணர்கிறார்கள். ஒரு மலையுச்சியில், உலகியல் கவலை ஏதுமில்லாமல், தன்னை மறந்து நீங்கள் வெட்டவெளி நோக்கி நின்றிருக்கிறீர்கள் என்று கொள்வோம். அப்போது ஓர் மாபெரும் உணர்வாக அடையும் தெய்வத்தின் இருப்பு அது.
முதல்தெய்வத்திடம் வேண்டிக் கொள்வீர்கள். பேரம்பேசுவீர்கள். கோபம் கொள்வீர்கள். அடைக்கலம் புகுவீர்கள். இரண்டாம் தெய்வத்திடம் அவற்றையெல்லாம் செய்ய மாட்டீர்கள். வெறுமே உடனிருப்பீர்கள். முதல் தெய்வத்திடம் நீ தெய்வம் நான் பக்தன் என்பீர்கள். இரண்டாம் தெய்வத்திடம் ’நானே நீ’ என்பீர்கள்.
இரண்டும் ஒன்று. இரண்டாக்குவது நாம்.
ஜெ
***