பங்கிம் சந்திரர் பிரிட்டிஷ் ஆதரவாளரா?

ஆனந்தமடம் நாவல்

ஆனந்தமடம் வாங்க

அன்புள்ள ஜெ

அவர்களுக்கு வணக்கம்.

அக்னிநதி நாவலை மீண்டும் வாசிக்க வேண்டும் என்று தோன்றியது. இந்நாவல் பெருமழையில் துளித் துளியாய் கரையும் வாசிப்பனுபவத்தை எனக்குத் தருகிறது.

தங்களுடன் பகிரவிரும்பிய செய்தி இந்நாவலில் “ஆனந்த மடம்” புதினம் குறித்து நாவலாசிரியரால் நேரடியாக குற்றம் சாட்டப்படுகிறது. பங்கிம் சந்திர சட்டர்ஜி கி.பி 1770-களில் ஏற்பட்ட கொடிய பஞ்சம், சந்நியாசிகளின் புரட்சி இவற்றை அடிப்படையாக கொண்டு எழுதிய புகழ் பெற்ற நாவலான சந்திரமடம் முஸல்மான்களுக்கு எதிராக மட்டுமே உள்ளது என்கிறது அக்னிநதி.

பக்கிம் சந்திரர் ஆங்கிலேயர்கள் இந்தியாவை வாழ்விப்பதற்காக வந்தவர்கள் என்றும் இந்த உண்மையை புரட்சிகர சந்நியாசிகளும் உணரவில்லை என்றும், ஆங்கிலேயர்களால் தான் இந்துக்களுக்கு விமோசனம், மேன்மை, உயர்வுகள் கிட்டும் என்றும் நம்பியவர் என்கிறது. பக்கிம் சந்திர சட்டர்ஜி கொடிய பஞ்ச நிலைக்கு காரணமான கிழக்கிந்திய கம்பெனியையும் ஆங்கிலேயர்களையும் ஆதரித்துத்தான் அந்நாவலை எழுதினார் என்று விரிவாக அக்னிநதி நாவல் சொல்கிறது.

விக்கிபீடியாவோ சட்டர்ஜி ஆங்கிலேயர்களை போரில் சந்நியாசிகள் வெற்றி கொள்வதாகவும் பிரித்தானியர் அல்லாத ஓர் ஆட்சியையே அவர் விரும்பியதாகவும் சொல்கிறது. அக்னிநதி நாவல் சொல்வதையே எடுத்துகொண்டாலும் இந்நாவல் ஆங்கில அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்கு பிறகே தடை நீக்கப்பட்டுள்ளது. சற்றே குழப்பம்? ஆனந்தமடம் புதினத்தை நீங்களும் சுட்டி காட்டியுள்ளீர்கள். இப்புதினத்தை பற்றி மேலும் அறிந்து கொள்ள ஏனோ ஒரு ஆவல் அது அக்னிநதியால் உண்டானது.

–சக்தி

(குவைத்).

***

அன்புள்ள சக்தி

பங்கிம் சந்திரரைப் பற்றிய இக்கருத்துக்கள் இன்று வெவ்வேறு வகையில் இணையம் முழுக்க கொட்டிக் கிடக்கின்றன. அதற்கான பின்னணியை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்று இந்தியாவில் இந்து மதவாத அரசியல் முன்னிலையில் உள்ளது. அது இந்து மறுமலர்ச்சி, அதன் விளைவான இந்திய தேசிய மலர்ச்சி ஆகிய இரண்டு பேரியக்கங்களையும் தன் மதவாத அரசியலுக்கு உகந்த முறையில் திரித்துப் பயன்படுத்திக் கொள்கிறது.

மறுபக்கம் மதவாத அரசியலை எதிர்க்கிறோம் என நினைக்கும் ஒரு தரப்பினர் மொத்த இந்து மறுமலர்ச்சியையும் இந்திய தேசிய மலர்ச்சியையும் எதிர்த்து, அவை இந்துமதவெறியின் எழுச்சி என்று சொல்லி இழிவுசெய்கிறார்கள். அதாவது இந்து மறுமலர்ச்சி, இந்திய தேசிய எழுச்சி இரண்டையும் பற்றி இந்துமதவாதிகளின் தரப்பையே இங்குள்ள இடதுசாரிகளும் ஏற்று, அதனடிப்படையிலேயே தாங்களும் சிந்தித்து, எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்கள். அதன் வழியாக அவர்களே இந்துத்துவ வரலாற்றெழுத்தை நிலைநாட்ட உதவுகிறார்கள்.

இந்த இந்து- இந்திய எதிர்ப்புக்கு இஸ்லாமிய, கிறிஸ்தவ மதவாதிகளின் ஆதரவு உள்ளது. இதை முற்போக்கு என்னும் பாவனையில் செய்கிறார்கள். ஏனென்றால் இந்த துருவமயமாக்கல் எல்லா அரசியல் தரப்புக்கும் லாபகரமானது. இன்றைய சிந்தனையாளர்கள் செய்யவேண்டியது இந்த துருவப்படுத்தும் அதீதப் பார்வைகளை எதிர்ப்பதைத்தான்.

இன்று ஒட்டுமொத்தக் கருத்துக்களமே திரிபுகள் அரையுண்மைகள் வெறிக்கூச்சல்களால் நிறைந்துள்ளது. உண்மையை மலரிலிருந்து நார் எடுப்பதுபோல மிகமிக கவனமாகத்தான் மீட்டாக வேண்டியிருக்கிறது.

பங்கிம் தன் நாவலை எழுதியது 1882ல். அந்நாவல் அதற்கு நூறாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த துறவிகளின் போராட்டம் பற்றியது. பங்கிம் தன் இளமைப்பருவத்தில் செவிவழியாகக் கேட்ட செய்திகளிலிருந்து அந்நாவலை உருவாக்கியிருக்கிறார். அவர் அந்நாவலை எழுதும் போதிருந்த பொதுவான கருத்துச்சூழல் என்ன, அக்காலகட்டத்தின் வரலாற்றுப் பின்னணி என்ன என்று நாம் பார்க்கவேண்டும்.

ஆனந்த மடம் எழுதப்பட்டு மேலும் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரே 1885 இந்திய தேசிய காங்கிரஸ் உருவானது. இந்திய தேசிய இயக்கம் அதன்பிறகுதான் மெல்ல மெல்ல உருவாகி வந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றும் அக்காலகட்டத்தில் ஆங்கிலேயரை இந்தியாவை ஒருங்கிணைத்து சட்டத்தின் ஆட்சியை அளித்த நவீன யுகத்தவர் என்று பார்க்கும் கோணமே இந்தியாவில் பரவலாக இருந்தது.

இந்தியா என்னும் கலாச்சார தேசியம் பற்றிய பிரக்ஞை இந்தியர்களின் மதநம்பிக்கையின் ஒரு பகுதியாக, மிகச்சிறு வட்டத்திற்குள் மட்டுமே இருந்தது. இந்தியா என்ற அரசியல் தேசியத்தை அன்று எவரும் அறிந்திருக்கவில்லை. இந்திய தேசியக் காங்கிரஸே கூட நல்லாட்சி நடத்திய ஆங்கிலேயரிடம் பேசி இந்தியர்களுக்கு மேலும் அதிக ஆட்சியுரிமைகளும் சட்டப்பாதுகாப்புகளும் பெறும்பொருட்டு ஓர் ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டதுதான்.

கோக்கலே வரைக்கும்கூட காங்கிரஸ் தலைவர்கள் பிரிட்டிஷாரின் நல்ல நோக்கத்தை நம்பியவர்கள், அவர்கள் இல்லையேல் இந்தியா ஒரு தேசமாக நிலைகொள்ளாது என நினைத்தவர்கள். அது ஓரளவு உண்மையும்கூட. ஆங்கிலேயர் அல்லாத இந்திய ஆட்சியாளர்கள் மதவெறியர்களாக, கொள்ளையர்களாக, ஒருவரோடொருவர் பூசலிட்டு மக்களை அழிப்பவர்களாகவே இருந்தனர்.

பிரிட்டிஷாரை ஆக்ரமிப்பாளர்கள், அன்னியர் என முதலில் கருதியவர் திலகர்தான். பின்னர் காந்தி வந்தார், 1918ல். அவர் திலகரின் பார்வையையும் கோக்கலேயின் வழிமுறைகளையும் இணைத்தார். காந்தி பிரிட்டிஷார் ஆக்ரமிப்பாளர்கள், சுரண்டல்காரர்கள் என நினைத்தார். இந்தியாவுக்கு வரும்போதே சுயராஜ்யம் என்னும் கருத்து அவருக்கு இருந்தது. ஆனால் கோக்கலே போல ஜனநாயகத்திலும், சட்டபூர்வ கிளர்ச்சிகளிலும் நம்பிக்கை கொண்டிருந்தார்.

ஆகவே, பின்னர் இங்கே உருவான மனநிலைகளை முன்னரே எழுதப்பட்ட ஒரு நூலிலும், அதன் ஆசிரியரிலும் நேரடியாகத் தேடுவதென்பது அபத்தமானது. பங்கிம் சந்திரர் அக்காலத்தைய அத்தனை இந்திய சிந்தனையாளர்களையும் போல பிரிட்டிஷ் ஆட்சிமேல் நம்பிக்கையும் நல்லெண்ணமும் கொண்டிருந்தார். அவர்களை இந்தியாவின் காவலர்கள் என்றே நினைத்தார். பிரிட்டிஷ் ஆட்சியின் பொருளியல் சுரண்டலை அவர் அறிந்திருக்கவில்லை. வங்கப்பஞ்சத்திற்கும் அச்சுரண்டலுக்கும் இடையேயான தொடர்பையும் உணர்ந்திருக்கவில்லை.

வங்காளத்தின் பொற்காலம் என்பது கிபி 750 முதல் 1120 வரை அங்கே இருந்த பாலா பேரரசின் ஆட்சிக்காலம்தான். இன்றும் வங்கத்து அருங்காட்சியகங்களில் பாலா பேரரசின் பண்பாட்டுச் சின்னங்களே நிறைந்திருக்கின்றன. பாலா பேரரசு பௌத்த மத அடிப்படை கொண்டது. அது ஆப்கானிய சுல்தானியப் படையெடுப்புகளால் அழிக்கப்பட்டது.

அதன்பின் பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் வரை வங்க வரலாறு என்பது மிகக்கொடிய ரத்த வரலாறுதான். சுல்தான்களால் வங்கம் சூறையாடப்பட்டது. அதன் ஆயிரமாண்டுக்காலப் பண்பாடு முற்றாக அழிக்கப்பட்டது. நமக்கு தெற்கே விஜயநகரப் பேரரசு உருவாகி முந்நூறாண்டுகள் நீடித்தமையால் இங்கே பண்பாட்டுச் சின்னங்கள் எஞ்சுகின்றன. வங்கத்தில் அவர்களின் பண்பாட்டுத் தொன்மையின் ஒரு சிறு அடையாளம்கூட எஞ்சவில்லை. முற்றிலும் இடிபாடுகள் மட்டுமே மிஞ்சின.

மற்ற இந்திய நிலப்பகுதிக்கும் வங்கத்திற்கும் மேலும் சில வேறுபாடுகள் உண்டு. வங்கத்தில் ஆரம்பத்திலேயே சுல்தானிய ஆட்சி நிலைபெற்று விட்டது. அவர்கள் பல வலுவான அரசுகளாக நீடிக்கையில் அவர்களுக்கு எதிராக பின்னர் டெல்லியில் ஆட்சிக்கு வந்த முகலாயர்களின் மையஅரசு போரிட்டது. ஆகவே வங்கநிலம் குறைந்தது முந்நூறாண்டுகள் போர்க்களமாகவே இருந்தது.

வங்காளத்தின் இருண்டகாலம் என்றே ஐநூறாண்டுகள் நீடித்த சுல்தானிய ஆட்சிக்காலத்தைச் சொல்லலாம். இந்தியாவில் இன்னொரு சமூகத்திற்கு இத்தனை நீண்ட இருண்டகாலம் இருக்க வாய்ப்பில்லை. உலகவரலாற்றிலேயே அரிது. மேலோட்டமாக வங்கத்தின் வரலாற்றைப் பாருங்கள். சுல்தானிய ஆட்சிமுறையின் மத, இனவெறி ஒருபக்கம். சுல்தான்களும் முகலாயரும் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொண்டமையின் அழிவு இன்னொரு பக்கம்.

அந்த இருண்ட ஆட்சிக்காலத்தில்தான் ஐரோப்பிய ஆதிக்கம் உருவாகியது. பிரிட்டிஷார் ஆண்ட இடங்களில் எல்லாமே சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்பட்டன. புறவயமான பொதுநீதி கொண்டு வரப்பட்டது. இந்தியாவின் முதல் உயர்நீதிமன்றமே கல்கத்தாவில் அமைந்தது என்பதை நாம் மறக்கலாகாது. மதம்சார்ந்த நீதிமுறையால், நவாப்புகளின் ஒடுக்குமுறையால் சலிப்புற்றுப் போயிருந்த வங்க மக்களுக்கு அது எத்தனை நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளித்தது என்பது வரலாறு. நான் முன்பும் எழுதியிருக்கிறேன்.

பிரிட்டிஷ் ஆட்சியின் சுரண்டல் கண்களுக்குத் தென்பட மேலும் பல ஆண்டுகள் ஆயின. மேலைக்கல்வி பெற்ற, விரிந்த வரலாற்றுப் பார்வை கொண்ட காந்தி போன்றவர்கள் வரவேண்டியிருந்தது. அன்றைய மக்களுக்குக் கண்ணுக்குப்பட்டது சுல்தான்களின், நவாபுகளின் கொடிய ஆட்சியில் இருந்து பிரிட்டிஷ் ஆட்சி விடுதலை அளித்தது என்பதே. பங்கிம் சந்திரரின் மனநிலையும் அதுவே. கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் நாவலின் இறுதியில் தொட்டம்மா பாட்டி பிரிட்டிஷார் நம்மவர் என்று சொல்கிறாள். அதே மனநிலை.

ஆனால் ஆனந்தமடம் பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டத்தின் கதை. நாவலை வாசித்தவர்களுக்கு தெரியும். நாவலில் அதற்கு முன்பு இருந்த நவாப் ஆட்சியின் கொடுமைகளுக்கு எதிராக துறவிகளும் துறவிவேடமிட்ட போராளிகளும் உதிரிப்போர்க் குழுக்களாக இருநூறாண்டுகளாகவே போராடி வந்த சித்திரம் உள்ளது. அவர்கள் சாந்தனா என்ற பெயரில் ஒரு கலாச்சார இயக்கமாகவே அன்று மாறியிருந்தனர். வங்கக்கிராமங்கள் முழுக்க இந்த தலைமறைவுப் போர்வீரர்கள் இருந்தனர். அவர்களின் அமைப்பும் இருந்தது. அதில் ஒன்றே ஆனந்தமடம்.

ஆனந்தமடம் நாவலில் நவாபுகளின் அடக்குமுறை பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் அடக்குமுறைக்கு வழிவிடுவதையும், ஆனந்தமடம் போன்ற துறவியர் அமைப்பு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராகத் திரும்புவதையுமே பங்கிம் சித்தரிக்கிறார். நவாப் ஆட்சிக்காலத்தில் இந்து வழிபாட்டுமுறை மற்றும் இந்துக் குடிகள் ஒடுக்கப்படுவதற்கு எதிராக எழுந்த உணர்ச்சியானது மெல்லமெல்ல பாரதம் தளையுண்டிருக்கிறது என்னும் விரிந்த சித்திரமாக மாறுவதையே பங்கிம்சந்திரரின் ஆனந்தமடம் காட்டுகிறது. வந்தேமாதரம் என்னும் புகழ்பெற்ற பாடலின் பொருள் இதுவே.

பங்கிம் சந்திரர் தனிப்பட்ட எழுத்துக்களில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியை வரவேற்றிருக்கிறார். பிரிட்டிஷார் இல்லாவிட்டால் நவாபுகளின் காட்டாட்சியே நீடிக்கும் என கூறியிருக்கிறார். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் அடக்குமுறையாளர்களே என அவருடைய அகம் உணர்ந்திருந்தது. ஆனந்தமடம் நாவல் காட்டுவது அதைத்தான்.

இந்த முரண்பாட்டை பெரும்பாலும் எல்லா எழுத்தாளர்களின் எழுத்துக்களிலும் பார்க்கலாம். அவர்களின் அரசியல் நிலைபாடுகள், அவர்களின் சமூகக்கொள்கைகள் சமகால பொதுச்சிந்தனையைச் சார்ந்தவையாகவும், உலகியல் நோக்கு கொண்டவையாகவும் இருக்கும். அவர்களின் புனைவுலகு அவர்களே அறியாத ஆழத்தை தொட்டு அறிந்து முன்வைக்கும்.

ஆங்கிலேய ஆதிக்க எதிர்ப்பை பங்கிம் சந்திரர் தர்க்கபூர்வமாக கண்டறிந்து முன்வைக்கவில்லை. ஆங்கிலேயர்களை அவர் தவிர்க்க முடியாதவர்களாக எண்ணினார், அவருடைய ஆழுள்ளம்தான் அவர்களை ஆதிக்கக்காரர்களாக அடையாளம் கண்டது. அவ்வகையில் ஆனந்தமடம் அது எழுதப்பட்ட காலத்திற்கு அரைநூற்றாண்டுக்குப் பின்னர் உருவாகவிருந்த உளநிலைகளை முன்னரே சென்று தொட்டுவிட்டது. ஆகவேதான் அது ஒரு கிளாஸிக்.

பின்னாளில் ஆனந்தமடம் இந்தியாவில் உருவாகி வந்த தேசிய எழுச்சியை, ஆங்கிலேய எதிர்ப்பை மிகச்சரியாக பிரதிநிதித்துவப் படுத்தியது. ஆகவேதான் அதை ஆங்கிலேயர் அஞ்சினர், தடைசெய்தனர். வந்தேமாதரம் என்னும் கோஷம் இந்தியாவை அரசியல் மயப்படுத்தியது.

இந்திய வரலாற்றின் தவிர்க்கமுடியாத சில உண்மைகள் உண்டு. இந்தியநிலத்தில் இந்துமதம் ஐநூறாண்டுகளாக ஒடுக்கப்பட்டது. தேக்கநிலை கொண்டு அழியும் தருணத்தில் இருந்தது. அதிலிருந்தே இந்து மறுமலர்ச்சி இயக்கம் தோன்றியது. அன்றிருந்த முகலாய, சுல்தானிய ஆட்சிகளின் கொடுமையான அடக்குமுறைக்கு எதிரான உணர்வுகள் அதில் தவிர்க்கமுடியாமல் இருந்தே தீரும்.

இந்து மறுமலர்ச்சியே கலாச்சார இந்தியா அல்லது பாரதம் என்னும் கருத்துருவை மக்கள் மயமாக்கியது. அதையே நாம் பங்கிம் சந்திரரின் நாவலில் காண்கிறோம். அந்தக் கலாச்சார இந்தியா என்னும் கருத்துருவமே இந்திய மக்களை ஒற்றைப்பெருந்திரள் என கட்டி எழுப்பியது. அதுவே இந்தியா என்னும் அரசியல் தேசியத்தை உருவாக்கியது. அதன் வழியாகவே இந்திய சுதந்திரப் போராட்டம் நிகழ்ந்தது. நவீன இந்தியா உருவாகியது.

இன்றைய பாதிவெந்த ஆய்வாளர்கள் [இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆங்கிலத்தில் நாளிதழ்களில் கட்டுரைகளை எழுதும் பாவனை முற்போக்காளர்கள்] இந்து மறுமலர்ச்சியின் முன்னோடிகளிடம் இருந்த முகலாய, சுல்தானிய ஆட்சிக்கு எதிரான நிலைபாடுகளை இஸ்லாமிய வெறுப்பு என விளக்குகிறார்கள். அந்த முன்னோடிகள் முன்வைத்த கலாச்சார தேசிய உருவகத்தையும் அதன் அடையாளங்களையும் இந்துத்துவ அரசியலின் தொடக்கம் என வர்ணிக்கிறார்கள்.

இதன் வழியாக அந்த தேசிய முன்னோடிகளை மதவெறியர்களாக கட்டமைக்கிறார்கள். அதன்வழியாக இந்தியச் சுதந்திரப் போராட்டமே ஒருவகையான மதவெறிநிகழ்வே என சாதிக்கிறார்கள். அடிப்படையில் அவர்களின் நோக்கம் இந்திய தேசிய இயக்கத்திற்கு எதிராக எழுந்த மத,சாதி வெறிகளை நியாயப்படுத்துவது. பிரிவினைக்கு வழிவகுத்த மதவெறியர்களை தூக்கிப்பிடிப்பதுதான்.

சிலர் மெல்லமெல்ல முகலாய, சுல்தானிய ஆட்சியாளர்களை புனிதப்படுத்த முயல்கிறார்கள். அடுத்த எல்லைக்குச் சென்று இந்தியாவின் மொத்தக் கலாச்சார அடையாளங்களை அழித்த முகலாய, சுல்தானிய ஆட்சியாளர்களை ’அவர்களின் கோணத்தில் பார்த்து’ நியாயப்படுத்த முயல்பவர்களும் உண்டு. இதெல்லாம் ’முற்போக்குப்’ பார்வையில் நிகழ்கிறது. இது வெறும் தற்செயல் அல்ல.

குர்ரதுலைன் ஹைதரின் அக்னிநதி நாவல் அன்றைய சுதந்திரப் போராட்டச் சூழலில் இருந்த விவாதங்களைச் சுட்டிச்செல்கிறது. வந்தேமாதரம் பாடலும் சரி, பங்கிம்சந்திரரின் எழுத்துக்களும் சரி அன்றைய இஸ்லாமியர்களால் முதலில் ஏற்கப்பட்டு மெல்லமெல்ல இஸ்லாமிய தேசியக் கருத்துரு எழத்தொடங்கியபோது வெறுக்கப்பட்டன. அதையே நாவல் குறிப்பிடுகிறது.

ஜெ

***

வந்தேமாதரம்
வரலாற்றாய்வின் வீழ்ச்சி
முந்தைய கட்டுரைகாந்தியப் பொருளியல்: சில எண்ணங்களும் உதாரணங்களும்
அடுத்த கட்டுரைநீலம் குரலில், கடிதங்கள்