வாசகர் கடிதங்கள்

அன்பான ஜெயமோகன்,

 

ஆயிரங்கால் மண்டபத்தில் ஆரம்பித்த உங்கள் எழுத்துக்களுடனான என் உறவு இன்று பரந்து விரிந்து பலப்பட்டு நிற்கிறது. உங்கள் அனைத்து நூல்களையும் வாசிக்கும் பேறு பெற்றேன். ஆரம்பத்தில் உங்கள் எழுத்தை புரிந்து கொள்ள ஏற்பட்ட மறுவாசிப்பு இன்று அதை விட்டு வெளிவர விருப்பமில்லாமல்  ஏற்படுகிறது. உங்கள் எழுத்தின் கனம் தாங்காமல் நிலை குலைந்ததும் பின் தொடரும் நிழலில் நிகழ்ந்ததுண்டு. மனமெல்லாம் காடாக வளர்ந்து பெருகி மண்டிக் கிடந்ததுண்டு. வாசிப்பில் இருக்கும் பக்குவம் எனக்கு எழுத்தில் வராது. அதனால் விஷ்ணுபுரம் பற்றி என் மனவெள்ள ஓட்டத்தை எங்கனம் விளக்குவது என்று தெரியவில்லை. எனக்கு இலக்கிய நவீனதுவத்தின் ‘முன்’ ‘பின்’ தெரியாது. அனைத்து புத்தகங்களையும் வாசிப்பேன். ஆனால் இப்போது அது முடியவில்லை. உங்கள் எழுத்தை வாசிக்கும் போது எழுத்தோடு ஏற்படும் என் மன ஒத்திசைவு மிக நல்ல இலக்கியம் என அறியப் படுகிற எழுத்தை வாசிக்கும் போது கூட ஏற்படுவதில்லை. அதனால் உங்கள் எழுத்தையும் கட்டுரையும் எதிர்பார்த்து, படித்தபடியே நாட்கள் நகருகிறது. உங்களை நான் சில வருடங்களுக்கு முன் சென்னை புத்தக கண்காட்சியில் யதேச்சையாய் சந்தித்தேன். பின் தொடரும் நிழலின் குரலால் பாதிக்கப் பட்ட சமயம். எனக்கு இலக்கியமாக பேசவோ, விமர்சிக்கவோ, விவாதிக்கவோ வராது. இத்தகைய கனமான, தாங்க முடியாத எழுத்து எதற்கு என்றேன். விளையாட்டாக ‘சும்மா உங்களை படிக்க வைக்கத்தான் என்று சொல்லிவிட்டு சென்றீர்கள்’. என்னை போன்றவனிடம் சொல்லக் கூடிய சரியான பதில் தான். ஏழாம் உலகத்தில் கையொப்பம் பெற்று சென்றேன். என்னைப் போன்ற எத்தனையோ பேர் உங்கள் எழுத்தில் நிறைந்தபடி வாழ்கிறோம். உங்கள் நாவலின் கடைசி பக்கத்தில் ஏற்படும் உங்கள் மீதான துவேசத்தை எங்கனம் விளக்குவது. தாள்கள் நீளாதா என ஏங்கும்படியாகிறது.  அதனால் நிறைய எழுதுங்கள். நான் ஒரு கணிப்பொறி துறையில் பணி புரிகிறேன். என் கணிப்பொறியில் jeyamohan.in திறந்தே இருக்கும். எழுத தெரியாத காரணத்தினால் இத்தனை நாள் நான் உங்களுக்கு மடல் அனுப்பத் தயங்கியபடியே இருந்து இன்று அதில் மீண்டு இதை எழுதுகிறேன் உங்கள் பதிலையும் நட்பையும் எதிர்கொண்டு.

தனசேகர்

அன்புள்ள தனசேகர்

உங்கள் கடிதம். சற்று அலைச்சல் ஆகையால் கடிதம் போட தாமதமாகியது. மன்னிக்கவும். பல வருடங்களுக்கு முன்பு போரும் அமைதியும் வாசித்தபோது நடாஷா, ஆன்டிரூவை துறந்து அனடோலை காதலிக்கும் காட்சியில் ஒரு தேவதைச்சிலையை உடைக்கும் ஆசிரியன் மேல் கடும் துவேஷம் எனக்கு எழுந்தது. ஆனால் அந்த வெறுப்பு மானுட உண்மைகள் மீதுதான் என்று பின்னர் புரிந்தது. அவ்வுண்மைகளின் குரலாக அந்த கணத்தில் ஆசிரியன் உருமாறிவிட்டிருக்கிறான். பின் தொடரும் நிழலின் குரல் எனக்கும் ஒரு பெரும் மனச்சோர்வை அளித்த நாவல்.

நாவல்கள் வழியாக நாம் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வதில்லை. நாம் ஒரு பெரும் சமூகமாக ஆகி அதற்குள் நிகழும் உரையாடலில் இணைகிறோம். சிறிய இலட்சியங்களில் நம்பிக்கையிழப்பையும் பெரிய இலட்சியங்களில் நம்பிக்கையையும் ஒரே சமயம் நல்ல நாவல் உருவாக்கும் என்று சொல்லலாம்.

ஜெ

அன்புள்ள ஜெயன்

நவீனத்தமிழிலக்கிய விமரிசனம் நூலை இப்போதுதான் படித்து முடித்தேன். சற்று தாமதமாக. ஏனென்றால் நான் இது ஒரு வரண்ட இலக்கிய வரலாறு என்ற தவறான புரிதலில் இருந்தேன். ஆனால் வாசிக்கத்தொடங்கியதுமே அது என்னை உள்ளே இழுத்துக்கொன்டது. எழுத்து வாசிப்பு குறித்த பெரும்பாலான அடிப்படைக் கேள்விகள் அறிவுடனும் விவேகத்துடனும் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நூல் ஒரு ரத்தினம். இதை என் நண்பர்களுக்கு நான் பரிந்துரை செய்கிறேன்.

இலக்கியம் மதத்துடன் இருந்த உறவை இழந்தது மக்கள் மனத்தில் அதற்கு இருந்த முக்கியத்துவம் குறைவதற்குக் காரணமாகியது என்று  சொல்லியிருப்பது ஓர் உண்மை. ஆனால் நம் குழந்தைகளின் புத்தகத்தேர்வில் நாம் எப்படி தலையிட முடியும் என்பதைப்பற்றி எனக்கு ஐயமாகவே இருக்கிறது. அவர்கள் தவறு செய்தாலும் அந்த சுதந்திரம் அவர்களுக்கு இருக்கிறதல்லவா”?

அன்புடன்
ஆர்.அபிலாஷ்
அன்புள்ள அபிலாஷ்

நன்றி

நீங்கள் சொன்ன அந்த எண்ணம் காரணமாகவோ என்னவோ நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் நூல் அது யாருக்கு மிகவும் பயன்படுமோ அவர்களால் அதிகமும் வாசிக்கப்படவில்லை. என்னளவில் அப்படி ஒரு நூல் இல்லை என்று இனிமேல் சொல்ல முடியாது, அதுவே போதுமானது.

நான் நம் குழந்தைகளின் ரசனையில் தலையிட வேண்டும் என்று சொல்லவில்லை. அது சாத்தியமே இல்லை. அவர்களை நாம் வழிநடத்தக் கூட முடியாது. ஆனால் அவர்களிடம் உரையாடலாம். ஒரு வயதில் அவர்கள் அதை எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு நூல்கள் கிடைக்கும்படிச் செய்யலாம்.
ஜெ

 

கடிதங்கள்

முந்தைய கட்டுரைஅஞ்சலி: எஸ்.சுகந்திசுப்ரமணியன்
அடுத்த கட்டுரைகிருத்திகா:அஞ்சலி