காந்தி, இரு ஐயங்கள்

இன்றைய காந்தி வாங்க

அன்பிற்கினிய ஜெ

வணக்கம், உங்களின் இன்றைய காந்தி மற்றும் உரையாடும் காந்தி புத்தகத்தின் வழியாக எனக்கு காந்தியின் அறிமுகமும் அவரின் மேல் இருந்த வெறுப்பும் விலகியது. நீங்கள் காந்தி பற்றி ஆற்றிய  உரைகள் அனைத்தையும் you tube ல் பார்த்திருக்கிறேன். நீங்கள் அவரை பல கோணங்களில் அணுகுவது எனக்கு இன்னும் அவரை மேலும் உள்வாங்கவும் படிக்கவும் ஊக்கம் அளிக்கிறது. உங்கள் புத்தகங்களை தொடர்ந்து சத்திய சோதனை, தென்னாப்பிரிக்காவில் காந்தி, Hindu swaraj,நவகாளி யாத்திரை ,the life of Mahatma Gandhi by Louie Fisher ,காந்தியின் கடைசி 200 நாட்கள் புத்தகங்களையும் வாசித்திக்கிறேன். இன்னும் சில புத்தகங்களை படிக்கவும் விரிவாக காந்தியை அறியவும் முயன்று கொண்டு இருக்கிறேன். finally I found my hero and role model to lead my life.நன்றி.

இரு கேள்விகள்:

  • காந்தியின் கடைசி 200 நாட்கள் புத்தகத்தில் ஒரு நிகழ்வு.காந்தி பேத்தி மனுவுக்கு எலும்பு முறிவு ஏற்படுகிறது. சிகிச்சை ஏதும் வேண்டாம், ராம நாமம் சொன்னால் குணமாகிவிடும் என்கிறார். மிக சிறந்த நடைமுறைவாதி,பிரமாண்ட போராட்டங்களை முன்னெடுத்துவர், அவர் எப்படி அந்த இடத்துக்கு வந்தார்? அவர் வயது காரணமாக இருக்க வாய்ப்பில்லை.என் தர்க்கம் இங்கே ஏற்க மறுக்கிறது.
  • காந்திக்கு இந்து சடங்குகளில் மேல் நம்பிக்கை இருந்ததா? அவர் மார்ச் சால்ட் தொடங்குவதற்கு முன்பு சில பூஜைகளை செய்ததாக படித்த நினைவு.You tube காணொலியிலும் பார்த்தேன். என் புரிதல்களில் தவறு இருந்தால் மன்னிக்கவும். உங்களின் விரிவான பதிலை எதிர்நோக்குகிறேன்.

அன்புடன்

மணிகண்டன்

கலிபோர்னியா

***

அன்புள்ள மணிகண்டன்,

நான் நினைவிலிருந்து சொல்கிறேன். காந்தியின் மருத்துவம் சார்ந்த கொள்கைகள் வெவ்வேறு வகையாக பரிணாமம் அடைந்தவை. அவை சீரான மருத்துவ ஆய்வுகள் என்று சொல்லமுடியாது. அவற்றை மருத்துவ நோக்கில் எவ்வகையிலும் கருத்தில்கொள்ள முடியாது. அவை ஒரு மேதையின் கிறுக்குத்தனங்கள் என்று மட்டுமே கொள்ளத்தக்கவை. அல்லது அவருடைய அகத்தை அறிய உதவும் குறியீட்டுச் செயல்பாடுகள். காந்தி அதே குழந்தைத்தனத்துடனும் கிறுக்குத்தனத்துடனும் வானியல் உட்பட எல்லாவற்றிலும் ஆர்வம் செலுத்தியிருக்கிறர்.

காந்தியின் மருத்துவச் சோதனைகளில் இருந்து நாம் அறியவேண்டியவை இரண்டே. ஓர் அறிவுவாதி தன் உடலை கவனித்தபடியே இருக்கவேண்டும் என அவர் நம்பினார். வலியை பொறுத்துக் கொண்டு நோயை தாங்கிக்கொள்ளுதல் நோயை வெல்லும் வழிகளில் ஒன்று என நினைத்தார். அவருடைய பொதுவான வழியே ’சகிப்புப் போராட்டம்’ என்பதுதான். அவையிரண்டும் பழைய சமண மரபின் அடிப்படைகள்கூட. வைணவத்திலும் அவை கடைப்பிடிக்கப்பட்டன.

நாம் உடலை கவனிப்பதில்லை. அதை முழுக்கமுழுக்க மருத்துவருக்கு விட்டுவிடுகிறோம். விளைவாக நம் வாழ்க்கை முறைக்கும் நோய்களுக்குமான உறவை அறிய முடிவதில்லை. நம் உடலுக்கே உரிய தனித்தன்மைகளை அறியமுடிவதில்லை. உடல் நம்முடன் இணைந்தும் விலகியும் செயல்படுவதன் விதிகளை அறியமுடிவதில்லை.

பெரும்பாலும் வலி மற்றும் சாவு பற்றிய அச்சத்தால் நாம் மிகைசிகிச்சை எடுத்துக்கொள்கிறோம். நோயைக் குணப்படுத்திக்கொள்ளும் விழைவு நம் உடலுக்கே உண்டு. குணப்படுத்திக் கொண்டதென்றால் அந்த முறையை உடலே கற்றுக்கொள்ளும். அதை நினைவாக வைத்திருக்கும். நோயை எதிர்க்கும் ஆற்றலையும் பெறும். அச்சத்தால் நாம் அந்த வாய்ப்பை வழங்குவதில்லை.

காந்தி மருத்துவம் பற்றிச் சொன்னவற்றில் இவையிரண்டு கூறுகளும் முக்கியமானவை. ஆனால் அவர் சேற்றுச்சிகிச்சை, நீர்ச்சிகிச்சை என பலவகைகளில் முயன்று பார்ப்பது சீரான வகையில் இல்லை. உடனடித்தேவை என்றால் நவீன மருத்துவ உதவியையும் நாடியிருக்கிறார். தன் உற்றாரிடம் அவர் ஒரு உணர்வுரீதியான கட்டாயத்தைச் செலுத்தி தன் சிகிச்சைமுறைகளை பரிசோதனை செய்ததும் நல்ல விஷயம் அல்ல.

மனுவிடம் அவர் சகித்துக்கொள்வதனூடாக நோயை வெல்வதைத்தான் சொல்லியிருப்பார். அவ்வாறு பல ஆசிரமவாசிகளிடம் நோயை கவனித்தபடி, பிரார்த்தனை செய்தபடி சகித்துக் கொண்டிருக்கும்படிச் சொல்லியிருக்கிறார். நோயை பிரார்த்தனையால் எதிர்கொள்வது ஒருவகை ஆன்மிகப்பயிற்சி என்று அவர் சொன்னதுண்டு. உண்மையில் இப்போதும் பல குருகுலங்களில் இந்த வழி உண்டு. நித்யா குருகுலத்திலேயே சுவாமி தன்மயா [டாக்டர் தம்பான்] இந்த வழியை நம்புபவர். எனக்கும் சொல்லியிருக்கிறார்.

காந்தி சடங்குகளைச் செய்தவர் அல்ல. அவ்வகையில் ஓர் ஐரோப்பியரின் வாழ்க்கை கொண்டவர் அவர். ஆனால் சடங்குகளில் முற்றிலும் நம்பிக்கை இல்லாதவர் அல்ல. ஆன்மிக விஷயங்களிலும் அவருக்குக் குழப்பங்கள் இருந்தன. அவர் யோகப்பயிற்சிகள் செய்தவர். பின்னாளிலும் அவற்றைத் தொடர்ந்தவர். அதில் அவருக்கு ஆசிரியர்கள் இருந்தனர். அதை நூலில் விவரித்திருப்பேன்.

ஆன்மிக வழியில் பக்தி மற்றும் சடங்குகளை முற்றாகத் தவிர்ப்பவர்கள் இருவகையினர். ஒன்று, அத்வைதிகள். இரண்டு, தூய யோகம் பயில்பவர்கள். காந்தி இரண்டு தரப்பையும் சார்ந்தவர் அல்ல. அவர் பக்தியை வழியாகக் கொண்டவர். ஆனால் பஜனை, பிரார்த்தனை இரண்டையும் செய்தவர். யோகபயிற்சிகள் சிலவற்றில் நம்பிக்கை இருந்தது. ஆனால் முழுமையாக அதில் ஈடுபடவில்லை. சில மறைஞானச் சடங்குகளை செய்திருக்கிறார். தனக்கே உரிய வகையில் அவற்றையெல்லாம் கலந்துகொண்டார். சோதனைகள் செய்துபார்த்தார்.

அவருடன் யோகப்பயிற்சி மற்றும் சடங்குகளில் நம்பிக்கை கொண்டவர்கள் இருந்தனர். காந்தி அத்தகைய சடங்குகளை அல்லது மறைஞானப் பயிற்சிகளைச் செய்து கொண்டிருக்க வாய்ப்புண்டு.

ஜெ

எனது இன்றைய காந்தி –கடிதம்

இன்றைய காந்தி -சுதீரன் சண்முகதாஸ்

இன்றைய காந்தி-கடிதம்

இன்றைய காந்தி ஒரு விமர்சனம்

இன்றைய காந்தி -கடிதம்

முந்தைய கட்டுரைஅத்தர் – கடிதம்
அடுத்த கட்டுரைபிரான்ஸிஸ் கிருபா, கடிதங்கள்