குக்கூவில் சில நாட்கள்…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் குக்கூ காட்டுப்பள்ளியால் ஜுலை 20 முதல் 24ம் தேதி வரை நடத்தப்பட்ட “Niyathi-Tools for transformation” நிகழ்வில் கலந்துகொண்டேன். அதைப்பற்றிய எனது அனுபவ பகிர்தலே இந்த கடிதம். குக்கூ காட்டுப்பள்ளி, அதன் மனிதர்கள், அவர்கள் ஆற்றும் செயல்கள் அனைத்து குறித்தும் தங்களின் இணையதளம் வாயிலாகவே அறிந்துகொண்டிருந்தேன். அவர்களின் தயாரிப்புகள் மற்றும் புத்தகங்களை வாங்கி பயன்பெற்றிருக்கிறேன். காந்தி மீயூசியத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட ‘கல்லெழும் விதை’ நிகழ்வில்தான் அவர்கள் அனைவரையும் அருகமர்ந்து பார்த்தேன்.

‘நியதி’ நிகழ்வில் 18 முதல் 25 வரையுள்ள வயதினரே கலந்துகொள்ள முடியும் என கண்டும், ஏதோ ஒருஉந்துதலில் விண்ணப்பித்தேன். அழைப்பும் விடுக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டையிலிருந்து 4 கி.மீ. வடக்கே சென்றால் புளியனூர் கிராமம் அதன் அருகில் ஜவ்வாதுமலையடிவாரத்தில் குக்கூ காட்டுப்பள்ளி  அமைந்துள்ளது. அந்நிலத்திற்கு 20ஆம் தேதி மதியம் 12 மணிக்குசென்று சேர்ந்தேன்.

அகன்று திறந்திருந்த அதன் வாயிலுக்கு உள்ளிருந்து ஓடி வந்தது ஒரு நாய்க்குட்டி- சக்தி (நாங்கள் இட்டபெயர்). அது வாலை ஆட்டியபடியே என்னை மேலும் கீழும் கூர்ந்து பார்த்துவிட்டு உள்ளே வரவேற்று அழைத்துச்சென்றது. மரங்களும், செடிகளும், மலர்களும் சூழ குழந்தைமை மனங்கள் வரைந்த ஓவியங்களை போன்று ஆங்காங்கே முளைத்திருந்தன வாழிடங்கள். அவை உறுத்தலின்றி அந்த சூழலுடன் இயைந்து அதன்பகுதியாகவே இருந்தன. எங்கு திரும்பினும் பட்டாம்பூச்சிகளின் வர்ணஜாலம், அந்த நிலத்திற்கு பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் ஓடைஎழுப்பும் வெண்கல கழுத்து மணிச்சத்தம், மலைமேல் மோதி திரும்பி வரும் தென்றலின் தீண்டல், கணத்திற்குள்மாறும் காலநிலை.  எந்நேரமும் குதியாட்டம் போட்டுக்கொண்டிருக்கும் குழந்தைகள், ஒரு கரிய நாய், இருசெவலை நாய்குட்டிகள், சாம்பல் வெள்ளை பூனை, பல வண்ண புறாக்கள், அகவும் தோகை மயில்கள், சாணம்மொழுககப்பட்ட தரைகள், உதிர்ந்து கிடக்கும் பழங்கள், அடுக்கி வைக்கப்பட்ட உருளைக்கற்கள், ஊன்றிநிறுத்தப்பட்ட கல் தூண்கள், இரவில் மிளிரும் நட்சத்திர கூட்டம், ஊர்சுற்றி அலையும் மின்மினிகள், ஓயாமல்ரீங்கரிக்கும் வண்டுகள் அதனுடன் இயைந்து  அதன் பகுதியாகவே வாழும் மனிதர்கள்  என ஒற்றைபெருநிலையான சூழல் எனவே அதன் தீவிரம் நம்மையும்  அதற்குள் கரைத்துவிடுகிறது.

அங்கு குப்பைகளே இல்லையா எனக்கேட்டால், நாம் அந்த நிலத்திற்கு வெளியே கொட்டிக்கொண்டிருக்கும் அனைத்து குப்பைகளும் அங்கும் இருக்கிறது. ஆனால், அவையெல்லாம் அழகும், நேர்த்தியும் கொண்ட பொம்மைகளாகவும், கலை பொருட்களாகவும், பயன்பாட்டு பொருட்களாகவும் உருமாறியபடியே உள்ளன. அங்கே செல்லும்/சென்ற இன்னொரு மனம் இவற்றையெல்லாம் பார்த்து உணர தவறலாம். ஆனால், அதற்கான அகக்கண்களை எனக்கு அளித்தது நீங்களும், உங்கள் எழுத்துகளும்தான். அதற்கு நன்றிகள் கோடி. அந்த நிலத்தில் பல விதமான மனிதர்களும் வாழ்கிறார்கள், பலர் வந்து கூடி கலைகிறார்கள். இருப்பினும், அனைவரும் ஒற்றை ஆன்மாவாக பிணைந்து தங்கள் நோக்கத்தினை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அங்கு நாம் கலை, இலக்கியம், சினிமா, தத்துவம், அறிவியல், தொழில், மருத்துவம், விவசாயம் என மானுட சிந்தனைகள் எதைப்பற்றி வேண்டுமானாலும் விவாதிக்கலாம். அதற்கான எல்லா வாசல்களும் அங்கே திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை அனைத்தையும் தாண்டி அவர்கள் முதன்மையாக முன்வைப்பது அர்ப்பணிப்பையும், செயலையுமே. தங்களையே அர்ப்பணித்து ஒரு மாபெரும் லட்சியத்திற்காக செயலாற்றிக் கொண்டிருக்கும் சாட்சி மனிதர்களைத்தான் அந்நிலத்தில் சந்தித்தோம்.

அவர்கள் அங்கே நிகழ்த்திக் கொண்டிருப்பது மானுடத்திற்கு மட்டுமான கனவு அல்ல. ஒட்டு மொத்த உயிர்களின் நல்வாழ்வுக்கான கனவு. அந்த நிலத்திற்கு இனம், மொழி, நாடு என்ற எந்த அடையாளமும் கிடையாது. அதனாலேயே அதன் ஆற்றலும் அளப்பரியது. நான் அவர்களின் பெயர்களையும், ஆற்றும் செயல்களையும் பட்டியலிட விரும்பவில்லை. ஏனெனில் அந்த நிலமும், மனிதர்களும்நம் கண் முன்னே சாட்சியாக நின்றுகொண்டிருக்கிறார்கள். தேடல் உள்ளவர்கள் அவர்களை தேடி கண்டடைவார்கள். அந்த நிலத்திற்கு சென்று உணர்ந்து வருவார்கள். அந்த நிலம் நிச்சயமாக அவர்களுக்குள்ளும் அதன் விதையை விதைக்கும். அவர்களும் முளைத்தெழுவார்கள்.

நான் இதுநாள் வரை என்னவென்று தெரியாத ஒன்றை தேடி எங்கெங்கெல்லாமோ அலைந்திருக்கிறேன். எங்குசென்று வந்தாலும் நிறைவின்மை மட்டுமே எஞ்சியது. குக்கூ காட்டுப்பள்ளியில் நுழைந்த அக்கணமே, இதுநாள்வரை நான் தேடிக்கொண்டிருந்த நிலம் இதுதான் என்றும், இந்நிலம் காந்தியும், நித்ய சைதன்ய யதியும் கலந்தகலவை என்பதையும் உணர்ந்துகொண்டேன். அங்கு இருந்த ஒவ்வொரு கணமும் மொட்டின் மலர்தலைப்போல நிகழ்ந்து கொண்டிருந்தேன். பசித்து அழுது உருகிக்கொண்டிருக்கும் என்னை, மடியில் ஏந்தி மார்போடு அணைத்து பாலூட்டும் அன்னையென அந்நிலத்தை உணர்ந்தேன்.

குருபூர்ணிமா நாளன்று, என்னை கைப்பிடித்து அந்நிலத்திற்கு அழைத்துச்சென்று இறக்கிவிட்ட தந்தையென உங்களை உணர்ந்தேன். என்வாழ்வில் இதுநாள் வரை நடந்ததனைத்தும் அந்த நிலத்திற்கு சென்று சேர்வதற்காகவே என்று உறுதியா கநம்பினேன். ஐந்து நாட்கள் நடந்த இந்நிகழ்வுக்கு  முன்வரைவு, திட்டங்கள் என எதுவும் இருக்கவில்லை. இயற்கை எப்படி அதன் போக்கில் நிகழ்கிறதோ, அவ்வாறே  இந்நிகழ்வும் நடந்து முடிந்தது. இன்று எண்ணுகையில் நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்படும் நிகழ்ச்சி ஒன்றைவிட பலமடங்கு ஒத்திசைவோடும், நேர்த்தியோடும் இந்நிகழ்வு இருந்திருப்பது வியப்பையளிக்கிறது.

இந்நிகழ்வில் என்னவெல்லாம் நிகழ்ந்தது மற்றும் கற்றுக்கொண்டோம் என்று கேட்டால் என்னால் வகுத்து கூறிவிடமுடியாது. ஒரு சொல் எப்படி செயலாக மாறியது என்று கண்முன்னே சொல்லியும், செய்தும் காட்டினார்கள். நாங்களும் சிலவற்றை செய்து பார்த்தோம் அவற்றை கருப்பட்டி கடலை மிட்டாய், ராட்டையில் நூல் கோர்தல், மூலிகை சேகரித்து மருந்து காய்ச்சுதல் என்று பட்டியலிடலாம் ஆனால் நான் ஒவ்வொரு நாள் காலையிலும் சமையல் கூடத்திற்கு அருகிலிருந்த அத்தி மரத்திலிருந்து விழுந்து கிடக்கும் ஐம்பது பழங்களையாவது பொறுக்கி எடுத்து வைப்பேன், குரு பூர்ணிமா நாள் விடியலில் ஒரு பழம் கூடதரையில் விழுந்திருக்கவில்லை

இந்த கற்றலை நான் எப்படி வகுப்பது. அங்கு நிகழ்ந்ததை இப்படி சொல்லலாம், அந்நிலத்தில் அவர்களுடன் எங்களை இருக்க அனுமதித்தார்கள், கற்றல் தானாகவே நிகழ்ந்தது. நாங்கள் அந்த நிலத்தில் எங்கு இருந்தாலும், என்ன செய்துகொண்டிருந்தாலும் குறைந்தது இரு குழந்தைகள் மற்றும் ஒரு நாயின் அருகாமையை உணர்ந்தபடியே தான் இருந்தோம். காட்டிற்குள் நடந்து செல்கையில், பாதையில் கிடந் தநத்தையை நாங்கள் அனைவரும் பார்த்துவிட்டு கடந்து செல்ல அதை கையில் எடுத்து பாதையை கடத்தி விட்டசலோ பாப்பா, காற்றை கையில் பிடித்து எறிந்து விளையாடும் ஜூபி பாப்பா, எங்கு சென்றாலும் எஙகளுக்கு வழிகாட்டியாக முன்னால் சென்ற நாய் ஜோர்டான்.  அவர்கள் தந்த இன்பம்  சொல்லில் அடங்காதவை. நான் அவற்றையே அதிஉன்னதமான கற்றலாக நினைகிறேன்.

அனைத்தையும் தாண்டி அந்நிலத்திலிருந்தவர்கள் எங்களிடம் முன்வைத்தது ஒன்றைத்தான், “இயற்கையோடு முரண்படாமல் அதன்முன் பணிந்து உங்களை அதற்கு ஒப்படைத்து செயலாற்றுங்கள். இப்பிரபஞ்சம் உங்களுக்கான அனைத்தையும் கரம் சேர்க்கும்”. இதையே ‘எல்லாம் செயல் கூடும்’ என்ற பிரார்த்தனையாகவும் அவர்கள் முன்வைக்கிறார்கள். அங்குள்ள அனைவரும் அந்நிலம் இன்னும் பத்து வருடத்தில் உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சுட்டிக்காட்டப்படும் ஒன்றாக மாறி நிற்கும் என்று தீர்க்கமாக நம்பி செயலாற்றுகிறார்கள். நானும் பரிபூரணமாக அதை நம்புகிறேன். அந்நிலத்தின் கனவு அளவுக்கு பிரமாண்டமானதே அது சந்திக்கும் நெருக்கடிகளும். அந்த நிலத்தை உருவாக்கஅனைவரும் தங்கள் உயிராற்றலை செலவு செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது.

சஞ்சீவிமலையை தூக்கிய அனுமனாக இருக்க முடியவில்லை என்றாலும், ராமன் இலங்கைக்கு செல்ல பாறைகளைகடலில் போட்டு பாலம் அமைத்து தந்த வானரங்களில் ஒன்றாக இருக்கவேண்டும் என்றுமுடிவெடுத்துக்கொண்டேன். எனவே, நான் எனது பங்களிப்பாக என்னுடைய மாத வருமானத்திலிருந்து ஒரு சிறுபகுதியை அந்நிலத்திற்கு அளிக்க முடிவெடுத்துள்ளேன். ஏனென்றால் நானும் அந்நிலத்தின் ஒரு பகுதியே.

இறுதியாக ஒரு நிகழ்வை சொல்லி முடிக்கிறேன், குரு பூர்ணிமா நாளில் நாங்கள் சுமார் முப்பது நபர்கள்புல்தரையில் பாய்விரித்து வட்டமிட்டு அமர்ந்திருக்க நடுவிலிருந்து அவலும், பழங்களும் பரிமாறப்பட்டது. தட்டுடன் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து ஜவ்வாது மலைக்கு பின்னால்  விரிந்திருந்த கருநீல வானின் தாரைகூட்டங்களையும் அதன் நடுவில் வீற்றிருந்த முழுநிலவையும் ரசித்தபடி  நிலாச்சோறு உண்டுகொண்டிருந்தோம். அப்போது ஒரு குரல் “மலையின் விளிம்பில் விளக்கு எரிகிறதே!” என்று கேட்க, மற்றொரு குரல் “அங்குமனிதர்களே இல்லையே, எப்படி விளக்கு வந்தது?” என்று வினவிய வேளையில் அந்த விளக்கொளி மெல்லமேலேறியது. அனைவரும் அகன்ற விழிகளில் அதையே கூர்ந்து நோக்கி கொண்டிருக்க, அவ்வொளி இன்னும்சற்று மேலே சென்று  ஐந்து கைககளை விரிந்து ஒளியே உடலென ஆகி குழ்ந்தையைப்போல கண்கள்சிமிட்டியது. அப்போது பின்னாலிருந்து  வந்த கணத்த குரல் “It’s a rising star” என கூற, சிறிது நேரம் அக்குரல் காற்றில்கரையாமல் அங்கேயே உறைந்து நின்றது. அங்கிருந்த அனைவரும் முகம்மலர, தலையசைத்து, பெருமூச்செறிந்து அக்குரல் எங்கிருந்து வந்ததென ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

பணிவன்புடன்,

வேலாயுதம் பெரியசாமி

பின்குறிப்பு: ‘நியதி’ நிகழ்வில் கலந்துகொண்டு வீடு திரும்பிய சகோதரி அபர்ணா காயத்ரி அவர்கள் வரைந்த ஓவியத்திற்குநண்பர் இழ செழியன் கொடுத்த பாரதியாரின் வரிகள் மிக பொருத்தமாக குக்கூ காட்டுப்பள்ளியை அடையாளம் காட்டக்கூடியது. “முப்பது கோடி முகமுடையாள் எனினும் சிந்தனை ஒன்றுடையாள்”

இந்த ஓவியம் குக்கூ காட்டுப்பள்ளியின் ‘விஜய் நோயல் கார்கி’ என்ற ஓவியரின் காபி தூள் பயன்படுத்தி வரையும் நுட்பத்தை பயன்படுத்தி வரையப்பட்டுள்ளது. புகைப்படஙகங்கள் எடுத்து, அதனை எனக்கு அனுப்பிவைத்த காந்திகிராம் மோகன்  மற்றும் நோயல் கார்கிஅண்ணா அவர்களுக்கும் நன்றி.

முந்தைய கட்டுரைபிரயாகையின் துருவன் – இரம்யா
அடுத்த கட்டுரைலாலேட்டனோ இக்காவோ?