இருட்கனி வரவு

அன்புள்ள ஜெ,

இருட்கனி செம்பதிப்பு உங்கள் கையெழுத்துடன் கூரியரில் வந்து சேர்ந்தது. நன்றி! (இருட்கனி வந்து சேர்ந்தார் என்றுதான் சொல்ல வேண்டும் இல்லையா ?)

நூலைக் கையில் எடுத்ததும் என் இரு பெண்களிடமும் தனித்தனியே காட்டி, அட்டையிலிருப்பது யார் என்று கேட்டேன். இளையவள் உடனே கர்ணன் என்று சொன்னாள். மூத்தவள் சற்று நேரம் யோசித்தபின் கர்ணன்தானே என்று கேட்டாள். இருவரும், கர்ணனின் ஒளிவீசும் மார்புக்கவசத்தைக் கொண்டே அடையாளம் கண்டதாகக் கூறினர். மனைவிடம் காட்டினேன். கர்ணன்தானே என்று கேட்டு உறுதிசெய்துகொண்டபின், முதலில் அது துரியோதனன் என்று நினைத்ததாகவும், பின்பு கவசத்தைக்கொண்டே அது கர்ணன் என்று ஊகித்ததாகவும் கூறினாள்!

அர்ஜுனன், கண்ணன், கர்ணன் இவர்களை வைத்து ஒரு சிறுகதையோடு ஆரம்பிக்கும் நாவல், இறுதிவரை கர்ணன் எவ்வாறு பிறருக்காகக் கனிந்து கொடையளித்துக்கொண்டே இருக்கிறான் என்று நேரடியாகவும், மறைமுகமாகவும்  நுட்பமாக விவரித்துக்கொண்டே செல்கிறது. குழந்தையில் படகை உதைத்துத் தன்னை விடுவித்துக்கொள்வதன்மூலம் தாயின் வாழ்வைத் திருப்பி அளிப்பதில் தொடங்கும் கர்ணனின் கொடை, சிதையில் மனைவிக்குச்  சத்திரிய அரசி என்ற அந்தஸ்த்தை ஈட்டிக்கொள்ள உதவுவது வரை தொடர்கிறது. கொடிய யுத்தம்கூட அவனிடம் பிறர் உயிர்க்கொடை பெறுவதற்காகவே நடைபெறுவது போல் உள்ளது.

எவரிடமும் எதையும் பெரும் அவசியம் இல்லாதவன். தந்தையின் கொடைகூட அவருக்கே திரும்பிச்செல்கிறது. தானத்தின் பலன்களும் கொடையளிக்கப்படுகின்றன. அனைத்தையும் கொடையளித்தபின் கர்ணன் போர்க்களம் புகும் காட்சி:

// “கர்ணன் மீது விண்ணிலிருந்து பொன்னிற ஒளி ஒன்று இறங்கியிருந்தது. அவன் அணிந்திருந்த கவசங்களும் அணிகளும் விழிமலைக்கும்படி மின் கொண்டிருந்தன. அவன் புரவியின் கடிவாள மணிகளும் சேணத்தின் பித்தளை வளையங்களும் அது அணிந்திருந்த வெள்ளி அணிகளும்கூட பொற்சுடர் பெற்றிருந்தன. புரவியின் கால்கள் நிலம் தொடுவதுபோல் தோன்றவில்லை. அவை காற்றைத் துழாவி சென்றுகொண்டிருந்தன. முகில் ஊர்வது போல் அவன் படைகளின் நடுவே சென்றான்.” //

தந்தையை நோக்கும் விருஷசேனன் ஆச்சரியப்படுகிறான்:

//”தேவதேவனுக்கு அளிக்கப்பட்ட மணிக்குண்டலங்களும் கதிர்க்கவசமும் மீண்டு வந்துவிட்டனவா? இப்படை வீரர்கள் எதை பார்க்கிறார்கள்?”//

எந்த அணியம் இல்லாவிடினும் அவனைச் சூழ்ந்து ஒளிர்வது அறத்தின் கடமையல்லவா?

எவரிடமும் எதையும் பெரும் அவசியம் இல்லாத பெருங்கொடையாளியும் மைந்தர்களிடம் பெற்றே ஆகவேண்டும். நூலிலிருந்து:

//“நீங்கள் இப்புவியிலிருந்து எதையும் கொள்ளவில்லை, தந்தையே. ஆனால் எங்களிடமிருந்து நீங்கள் அவ்வண்ணம் ஒழிய முடியாது. நாங்கள் அளிப்பதை நீங்கள் மறுக்கவே இயலாது” என்றான் விருஷசேனன். “உங்களுடன் சேர்ந்து போருக்கெழுவோம். உங்களுக்காக உயிர்கொடுப்போம். நாம் வென்று மீண்டு நாடாண்டால் உங்களுக்கு அன்னமும் நீரும் அளிப்போம். உங்களுக்கு கொடுக்கும் நிலையில் இருப்பவர் நாங்கள் மட்டுமே. எந்த தந்தையும் மைந்தரிடமிருந்து கொள்ளமாட்டேன் என்று சொல்ல இயலாது. அது தெய்வ ஆணை!” என்ற விருஷசேனன் புன்னகைத்து “கொள்க, தந்தையே!” என்றான். கர்ணன் விழிகளில் நீர் வழிய சிரித்தபடி இரு கைகளையும் விரித்தான். விருஷசேனன் எழுந்து அவனை தழுவிக்கொண்டான். மைந்தர்கள் அனைவரும் சேர்ந்து தந்தையை தழுவிக்கொண்டார்கள்.//

யுத்தகளத்தின் நடுவில் உரைக்கப்பட்ட கீதையைப்போல, சிதைக்களத்தில் சூதர்கள் பாடல்கள் வழியாகக்  கர்ணனின் வீரமும், அறமும், கொடையும், கனிவும் நிரம்பிய வாழ்வைப் பாடும் இருட்கனிக்காக நன்றி!

அன்புடன்,

S பாலகிருஷ்ணன், சென்னை

முந்தைய கட்டுரைதொழில், இலக்கியம்
அடுத்த கட்டுரைபுனைவும் தொன்மமும் மாடத்தியும் – கடிதங்கள்