தத்துவம் இன்று…

ஆசிரியருக்கு வணக்கம்,

இலக்கியவாதிகள் வாசிப்பு, படைப்பு ஆகிய தளங்களில் செயல்படுகிறார்கள். ஆன்மீகவாதிகள் சொற்பொழிவுகள் மற்றும் தினசரி பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார்கள். வரலாற்று ஆய்வாளர்கள் கூட தொடர்ந்து தங்களது களங்களில் ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள்.

இந்த தத்துவவாதிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இன்றைய காலகட்டத்தில் அவர்களின் தேவை ‌இருக்கிறதா? இருப்பின் எத்தகையானது?

ஷோப்பனோவர்

இன்று ஒரு இளைஞர் தத்துவம் பயில விரும்பினால், அவருக்கு நீங்கள் என்ன அறிவுரைகளை கூறுவீர்கள்?இந்தியாவில் தத்துவம் பயில்வதற்கான சிறந்த வழிமுறை எது? (குருகுலம் vs பல்கலைக்கழகம்)இவ்வளவு வாசித்து எழுதிய பிறகும், தங்களை ஏன் தத்துவ துறையின் மாணவனாக மட்டுமே கருதி கொள்கிறீர்கள்?

இந்த கேள்விகள் அனைத்தும் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா-வின் “இந்திய தத்துவம் ஓர் அறிமுகம்” நூலை வாசிக்கையில் தோன்றிவை, தவறு இருப்பின் மன்னிக்கவும்.

நன்றி

நவீன் சங்கு

டாக்கிங்ஸ்

அன்புள்ள நவீன் சங்கு,

சாதாரணமாக நீங்கள் கேட்டிருந்தாலும்கூட இது ஒரு முக்கியமான கேள்வி. தத்துவம் என்று பொதுவாகச் சொல்லப்படும் ஒருவகை சிந்தனைமுறை இன்று என்னவாக இருக்கிறது என்பதை இக்கேள்விக்கு விடையாக யோசிக்கலாம்.

முதல் கேள்வி, தத்துவம் என்றால் என்ன? வாழ்க்கை, இயற்கை, பிரபஞ்சம் ஆகியவற்றைப் பற்றிய அடிப்படை வினாக்களும் விடைகளும் அவற்றை பற்றிய விவாதங்களும் தத்துவம் என அழைக்கப்பட்டன. நெடுங்காலம் தத்துவமே ஒரே மெய்காண்முறையாக இருந்தது.

ஃபூக்கோ

இன்று நாம் கணிதம், அறிவியல், பொருளியல், அரசியல், அழகியல் என வெவ்வேறு தளங்களில் விவாதிக்கும் அனைத்தும் தொல்காலத்தில் தத்துவத்தின் பேசுபொருட்களாகவே இருந்தன.

அத்துடன், தத்துவமும் மதமும் பிரிக்கமுடியாதபடி ஒன்றாக இருந்தன. தத்துவம், [Philosophy] இறையியல்  [Theology], அறவியல் [Ethics], மெய்யியல் [Spritiualism] மறைஞானம் [Mysiticism] என்றெல்லாம் நாம் இன்று பிரித்துக் கொள்கிறோம். கிரேக்க தத்துவம் என்பது கிரேக்கமதத்தின் பகுதியாகவே இருந்தது.பதினேழாம் நூற்றாண்டுவரைக்கும் கூட தத்துவவாதிகள் அறிவியலாளர்களாகவும் மதத்தலைவர்களாகவும் இருந்தனர்.

தெரிதா

பின்னர் தத்துவம் மதத்தில் இருந்து பிரிந்தது. கீழைநாடுகளைப் பொறுத்தவரை மதத்தின் பகுதியாகவே தத்துவம் இன்றும் உள்ளது. தத்துவம், இறையியல், மெய்யியல் என்னும் பிரிவினை இந்து,பௌத்த,சமண மதங்களில் இப்போதும்கூட இயல்வதல்ல.

‘தூய’ தத்துவம் என்பது ஐரோப்பிய வரலாற்றிலேயே இரண்டு நூற்றாண்டுகள்தான் இருந்திருக்கிறது என்று தோன்றுகிறது. பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில்தான் மதம்,அறிவியல் ஆகிவற்றிலிருந்து தங்களைப் பிரித்துக்கொண்டு தத்துவத்தை மட்டுமே கையாண்ட தத்துவ ஞானிகள் தோன்றினர். உதாரணம், ஷோப்பனோவர்.

சர்த்ர்

நேற்று தத்துவம் எடுத்துப் பேசிய அனைத்தும் வெவ்வேறு அறிவுத்துறைகளாக மாறி, மிகமிக விரிவாக இன்று பேசப்படுகின்றன. ஒவ்வொரு துறைக்கான கலைச்சொற்களும், தனித்த தர்க்கமுறைகளும், அவற்றுக்கான அறிவுத்தொகையும் உருவாகிவிட்டது. இன்று ஒருவர் ஒன்றுக்குமேற்பட்ட அறிவுத்துறைகளில் முதன்மைக் கல்வி பெறுவது மிகமிகக் கடினம், அனேகமாக இயல்வதே அல்ல.

பிளேட்டோ பேசிய இலட்சிய அரசு என்பது இன்று அரசியல்கோட்பாடாக பேசப்படும். அரிஸ்டாட்டில் பேசிய உயிர்களின் பகுப்புமுறை நவீன உயிரியலிலும் தாவரவியலிலும் பேசப்படும். நூறாண்டுகளுக்கு முன்புவரை தத்துவத்தால் மட்டுமே கையாளப்பட்ட  ‘அறிதல் என்றால் என்ன?’,  ‘உண்மை என்றால் என்ன?’ போன்ற வினாக்கள் இன்று நரம்பியலால் விவாதிக்கப்படுகின்றன. உளவியல் இன்று பேசிக்கொண்டிருப்பவை எல்லாமே நேற்று தத்துவத்தில் விவாதிக்கப்பட்ட பிரச்சினைகள்தான்.

ஹாக்கிங்ஸ்

அப்படியானால் தத்துவத்தின் வரையறை இன்று என்னவாக உள்ளது? இன்று தத்துவத்தை இப்படி வகுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு அறிவுத்துறைகளிலும் உள்ள அடிப்படையான கொள்கைகள், அவற்றின் தர்க்கங்களின் ஒட்டுமொத்தத் தொகுப்பை இன்று தத்துவம் என்று கொள்ளலாம்.

அவ்வகையில் பார்த்தால் இன்று வெவ்வேறு அறிவுத்துறைகள் சார்ந்து அடிப்படையான வினாக்களை எழுப்பி விவாதிப்பவர்கள் அனைவரையுமே தத்துவவாதிகள் என்று கொள்ளலாம்.  இப்படி வரையறை செய்யலாம். ஓர் அறிவுத்துறையின்  உள்விவாதங்களில் ஈடுபடுபவர்கள், அதில் கண்டடைதல்களை நிகழ்த்துபவர்கள் துறைசார் அறிஞர்கள். அதன்வழியாக வாழ்க்கை, பிரபஞ்சம் பற்றிய அடிப்படை வினாக்களை எழுப்பி கண்டடைதல்களை பொதுவாக முன்வைப்பவர்கள், விவாதிப்பவர்கள் தத்துவவாதிகள்.

ரஸல்

அவ்வண்ணம் ஏராளமான அறிஞர்கள் இன்று தத்துவவாதிகளாகவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களை நாம் துறைசார் அறிஞர்களாகவே எண்ணுகிறோம். அதுதான் சிக்கல். ஜாரேட் டையமண்ட் நிலவியல்- சமூகவியல் அறிஞர் மட்டுமல்ல. அவர் தத்துவவாதியும்கூடத்தான். ழாக் தெரிதா மொழியியலாளர் மட்டுமல்ல, தத்துவவாதியும் கூடத்தான்.

எண்ணிப்பாருங்கள், நம் சிந்தனையை பாதித்த எத்தனை பெயர்கள் நினைவில் எழுகின்றன என்று. மிஷேல் ஃபூக்கோ [சமூகவியல்] நாம் சாம்ஸ்கி [மொழியியல்] ரிச்சர்ட் டாக்கின்ஸ் [உயிரியல்] ரிச்சர்ட் ஃபெய்ன்மான் [இயற்பியல்] ஆலிவர் சாக்ஸ் [நரம்பியல்] விலயன்னூர் ராமச்சந்திரன் [பழக்கவியல்], யுவால் நோவா ஹராரி [சமூகவியல்]. இவர்கள் அனைவருமே நேற்றுவரை தத்துவம் கையாண்ட அடிப்படைகளை விவாதிப்பவர்கள். உதாரணமாக, ஸ்டீவன் ஹாக்கிங்ஸின் காலத்தின் சுருக்கமான வரலாறு இயற்பியலுக்குள் வரும் நூல். ஆனால் தத்துவத்தின் வினாக்களை மட்டும்தானே அது கையாள்கிறது?

கென் வில்பர்

‘தூயதத்துவம்’ என ஒன்று இன்று செயல்படுகிறதா? அது என்றுமிருக்கும். வெவ்வேறு துறைசார் அறிதல்களை தொகுத்து அடிப்படைக் கேள்விகளுக்கான விடைதேடுவதில் அது ஈடுபட்டிருக்கும்.ஆனால் அப்படி ஒரு பொதுவான தத்துவஞானி இன்று உருவாவது மிகமிகக் கடினம். ஏனென்றால் அத்தனை துறைஞானங்களையும் ஒன்றெனத் தொகுக்கும் பொது அளவுகோல், பொதுத்தருக்கம் என ஏதும் இல்லை.

அப்படி ஒரு பொதுஅளவுகோல், பொதுத்தர்க்கத்தை உருவாக்கவேண்டிய கட்டாயம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே உருவாகிவிட்டது. ஏ.என்.வைட்ஹெட், பர்ட்ரண்ட் ரஸ்ஸல், விட்கென்ஸ்டீன் என பலர் அதற்காக முயன்றனர். அந்த அடிப்படைக்கட்டமைப்பாக கணிதம் இருக்கலாம் என்னும் எண்ணம் இருந்தது. ஏனென்றால் கணிதமே தூய தர்க்கம். பின்னர் அந்த அடிப்படை கட்டமைப்பு மொழி என கொள்ளப்பட்டது, ஏனென்றால் எந்த கருத்தும் அறுதியாக மொழிதான்.  ஆனால் அவ்வாறு ஒருங்கிணைக்க முடியவில்லை. ஒருங்கிணைந்த தத்துவத்திற்கான தேடலில் கடைசிப்பெயராக கென் வில்பரைக் குறிப்பிடுகிறார்கள்.

Slavoj Žižek

இன்று நாம் தேடினால் முக்கியமான பல தத்துவவாதிகளை கல்வித்துறையினர் சுட்டிக்காட்டுகிறார்கள். உதாரணமாக சிசெக் [Slavoj Žižek] எல்லா பட்டியலிலும் இருக்கும் பெயர். உளவியலின் அடித்தளத்துடன் பண்பாட்டு விமர்சனங்களை முன்வைக்கும் சிசெக் சீண்டும் கருத்துக்களை கூறி விவாதங்களை உருவாக்குவதன் வழியாக பரவலாக அறியப்பட்டிருக்கிறார். ஜூடித் பட்லர், ஜான் மெக்டொவெல் போன்ற ஒரு பத்து பெயர்களை பொதுவாக வாசிப்பவர்கள் பட்டியலிடலாம்.

சென்ற நூற்றாண்டில் உலகமெங்கும் அறியப்பட்ட தத்துவஞானிகள் சிலர் இருந்தனர். இரு உதாரணங்கள் சொல்லவேண்டுமென்றால் பர்ட்ரண்ட் ரஸ்ஸல், ஜீன் பால் சார்த்ர் ஆகிய இருவரையும் குறிப்பிடலாம். இன்று அப்படி உலகம் கேட்கும்படிப் பேசும் தத்துவஞானிகள் என எவருமில்லை.

ஃபெய்ன்மான்

இன்று தத்துவஞானியின் இடம் என ஒன்று உள்ளதா? ஆம், மிக வலுவாக. தத்துவத்தின் இரு கடமைகள் அறிதலும் வழிகாட்டுதலும். மெய்மையை அறிந்து வகுத்து அளிக்க முயல்கிறது அது. முழுமுதல் மெய்மை என ஒன்று இல்லாமலே இருந்தாலும்கூட அந்தந்த காலகட்டத்திற்குரிய மெய்மையை அது அளித்தாகவேண்டும். ஒவ்வொரு காலகட்டத்திற்குரிய அறவியலை தத்துவமே அளிக்கமுடியும்.

என் நோக்கில் தத்துவம் என ஒன்று செயல்படவேண்டும் என்றால் அது அறவியலின் பொருட்டுதான். ஆனால் சென்ற நூற்றாண்டில் புறவயத்தர்க்கவாதிகள் [லாஜிக்கல் பாஸிட்டிவிஸ்டுகள்] தத்துவத்தில் என்றும் இணைந்திருந்த இலட்சியவாதத்தை, மீபொருண்மையை  அடித்து நொறுக்கிவிட்டனர். உலகசிந்தனையில் நிகழ்ந்த பேரழிவு அது, கிட்டத்தட்ட நாகசாகி ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சுக்கு நிகரானது என நான் நினைக்கிறேன். அதன் விளைவுகளில் இருந்து இன்னமும்கூட தத்துவம் கரையேறவில்லை.

இங்கே ஒன்று சொல்லத் தோன்றுகிறது. இலட்சியவாதம் இல்லாத தத்துவம் வெறும் அறிவிப்பயிற்சியாகவே எஞ்சும். ஏதேனும் ஒருவகையில் மீபொருண்மை [மெடஃபிஸிக்ஸ்] இல்லாத தத்துவத்தால் இலட்சியவாதத்தை அடைய முடியாது. மீபொருண்மை என்பது இயற்கையில், வாழ்க்கையில் ஓர் ஒழுங்கை அல்லது இலக்கை அல்லது செய்தியை கண்டடைய முற்படுவதும் வெளிப்படுத்துவதுமாகும். அதற்கு கற்பனையை, உள்ளுணர்வை துணைகொள்வது அது. மீபொருண்மை வெறும் கற்பனை என நிராகரிக்கப்படுகையில் இயற்கையும் வாழ்க்கையும் வெற்றுப்பரப்பாக ஆகிவிடுகின்றன.

சாம்ஸ்கி

புறவயத்தர்க்க்கவாதிகளாலும் பின்னர் அறிவியல்வாதிகளாலும் தாக்கப்பட்டு பின்னடைவுகொண்ட தத்துவம் தன் ’கனவை’ இழந்ததும் அது நடைமுறைத் தர்க்கங்களின் தொகுப்பாகியது. வெறும் பயன்பாட்டுச் சிந்தனையாக ஆகியது. இன்று அதற்கு நெறிவகுக்கும், வழிகாட்டும் தகுதி ஏதும் இல்லை.

தத்துவவாதி என சிசெக் அமர்ந்து பேசும் பல உரையாடல்களை கண்டேன். சில கட்டுரைகளை வாசித்தேன். வெறும் உடைப்பு, சீண்டல். ஆக்கப்பெறுவதென ஏதுமில்லை. ஆகவே அவர் கவனம்பெறுகிறார் என்பதற்கு அப்பால் உலகுக்கு அவர் எதையும் சொல்வதில்லை.

உலகம் வழிகாட்டும் தகைமை கொண்ட, சிந்தனை என்பதற்கு அப்பால் கனவும் கனிவும் கொண்ட தத்துவஞானிகளுக்காகக் காத்திருக்கிறது.

ஜெ

***

பிகு. கல்வித்துறை சார்ந்து தத்துவத்தில் முதுகலை வரை கற்க பல பல்கலைகழகங்களில் வாய்ப்புள்ளது. அஞ்சல்வழிக் கல்வியும் உண்டு. நான்  பார்த்தவரை பாடத்திட்டங்கள் முழுமையானவை.

பொதுவாசகனாக தத்துவம் பயிலவேண்டுமென்றால் ஆங்கிலத்தில் மிக எளிமையான அறிமுகம் முதல் பல நிலைகளிலாக நூல்கள் உள்ளன. தமிழிலேயே மேலைத்தத்துவம் கற்கவும் அறிமுக நூல்கள் உள்ளன.

இந்திய தத்துவம் என்பது ஆன்மிக- மதமரபுகளைச் சார்ந்ததே. அவற்றைக் கற்பிக்கும் வெவ்வேறு அமைப்புகள் உள்ளன. அவை மரபார்ந்தவை. ஆகவே பக்தி, ஆசாரம் ஆகியவற்றுடன் இணைத்தே தத்துவத்தை முன்வைக்கின்றன. அனைத்து தத்துவங்களையும் பயில்வதற்கான நவீன அமைப்பு என ஏதுமில்லை. இங்கே அதற்கான மாணவர்கள் உண்டா எனவும் தெரியவில்லை.

ஒரு சிறுநினைவு. ஒர் இளைஞர் தத்துவம் பற்றி ஒரு கேள்வி கேட்டிருந்தார். நான் பதில் சொல்லியிருந்தேன். இணைப்புகளும் அளித்திருந்தேன். அவர் இன்னொரு கேள்வி அனுப்பியிருந்தார். நான் முந்தைய பதிலையும், இணைப்புகளையும் சுட்டிக்காட்டினேன். அவர் சொன்னார். “அது ரொம்ப நீளமா இருந்திச்சு. நெறைய லிங்க்ஸ் இருந்திச்சு. அதனாலே படிக்கலை”

இந்த மனநிலை தத்துவக் கல்விக்கு முற்றிலும் எதிரானது. தத்துவக்கல்வி என்பது தொடர்ச்சியான விரிவான வாசிப்பின் விளைவாக உருவாவது. மாபெரும் வாசகனே தத்துவத்தை தொட்டுப்பார்க்கவே முடியும்.

கீழைத் தத்துவம்- எளிதாக
தத்துவம் பயில
தத்துவம் மேற்கும் கிழக்கும்
இந்திய தத்துவம்
கீழை மேலை நாடுகளின் மெய்ப்பொருளியல் வரலாறு : தொகுதி 2
அத்வைத தத்துவம்- டாக்டர் ராதாகிருஷ்ணன்
பின்நவீனத்துவம் -விளையாட்டுக்கையேடு
தத்துவத்தைக் கண்காணித்தல்
இலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றி
சோஃபியின் உலகம்- கிறிஸ்டி
புறவயத்தர்க்கவாதமும் மெய்மையும்
விவாதங்களின் எல்லை…
குரு நித்யா எழுதிய கடிதம்
முந்தைய கட்டுரையானை முந்திவிட்டது
அடுத்த கட்டுரைநகைச்சுவை -கடிதங்கள்