ஏரகன்

குக்கே சுப்ரமணியா கோயில், ஏரகத்துக் குகன்

வணக்கம் ஐயா!

Google இல் ஏரகன் என்ற பெயரிற்கு அர்த்தம் தேடும் போது உங்களுடைய கதை ஒன்றை வாசித்தேன், நன்றாக இருந்தது. அதிலிருந்து தான் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியையும் பெற்றுக் கொண்டேன்.

என்னுடைய சிறிய சந்தேகம் என்ன வென்றால் முருகனுக்கு ஏரகன் என்ற மறுபெயர் உண்டா ஐயா?

தெய்வேந்திரன் ஏரகன்

***

அன்புள்ள தெய்வேந்திரன்,

ஏரகன் என்றால் முருகனின் பெயர்தான். ஏரகநாடு என்றால் இன்றைய உடுப்பி. ஏரகத்துறை என பழைய நூல்களில் சொல்லப்படுகிறது. அது முருகனுக்கு உரியது எனப்படுகிறது. திருவேரகம் என்றும் சொல்லப்படுவதுண்டு. அதிலிருந்து ஏரகன் என்னும் சொல் முருகனுக்குரியதாகியது.

உடுப்பி பகுதியிலுள்ள குக்கே சுப்ரமணியா ஆலயம் தென்னகத்தின் மிகமுக்கியமான முருகன் கோயில். ஆய்வாளர்கள் தமிழகத்தின் எந்த முருகன் கோயிலை விடவும் தொன்மையானது என்று சொல்கிறார்கள். அங்கே ஓடும் ஆற்றுக்கே குமாரதாரா என்றுதான் பெயர். மலையடிவாரத்தில் அமைந்த அற்புதமான ஊர். அங்கே ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் பேருக்கு உணவு அளிக்கப்படுவதனால் அன்னதான க்ஷேத்ரம் என்றும் பெயருண்டு.

பரசுராமர் உருவாக்கிய ஏழு முருகன் கோயில்களில் குக்கே சுப்ரமணியா கோயிலே தென்னாட்டில் உள்ள ஒரே கோயில் என்கிறார்கள் அங்குள்ளோர். முக்கியமான விஷயம் என்னவென்றால் அது நாகங்களுக்கான கோயில். அந்த ஊரின் அதிபன் நாகதேவனாகிய வாசுகி. வாசுகிமேல் நின்ற கோலத்தில்தான் முருகன் தோற்றமளிக்கிறார். உடுப்பி முழுக்க முருகன் நாகத்தின்மேல் நிற்பவனாகவே தோன்றுகிறான்.

தமிழ்நாட்டிலும் முருகனுடன் எப்போதுமே நாகம் உண்டு, ஆனால் நமது முருக வழிபாட்டில் மயில்தான் முக்கியம். நாகம் பேசப்படுவதில்லை. நாகம் ஏன் முருகனுடன் இருக்கிறது என்பதற்கு குக்கே சுப்ரமணியா சென்றால் விடை கிடைக்கும். அங்கே முருகன் நாகமைந்தன் எனப்படுகிறான்.

திருமுருகாற்றுப்படை ‘ஏரகத்துறைதலுமுரியன் என்று முருகனைச் சொல்கிறது என வையாபுரிப்பிள்ளை அகராதி சொல்கிறது. [ஆவினன்குடி அணைதலுமுரியன்; அதுவன்றி ஏரகத்துறைதலுமுரியன்] கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலைதான் ஏரகம் என்று இங்கே சொல்லப்படுவதுண்டு.

புகழ்பெற்ற இரட்டுறமொழிதல் பாடலிலும் முருகன் ஏரகத்தான் என்று சொல்லப்பட்டதுண்டு.

வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்

இங்கு ஆர் சுமப்பார் இச்சரக்கை? – மங்காத

சீரகத்தைத் தந்திரேல் வேண்டேன் பெருங்காயம்

ஏரகத்துச் செட்டியாரே.

[வெம்மை மிக்க இந்த உடல் இறந்து உலர்ந்தால் இதனுள் உள்ள உள்ள உயிரால் என்ன பயன்? இந்த வெறும் சரக்கை யார் சுமப்பார்? மங்காத சீரான அகத்தை தந்தீர் என்றால் இந்த பெரும் உடலை நான் விரும்ப மாட்டேன், ஏரகத் தலத்து உறையும் முருகா]

ஜெ

முந்தைய கட்டுரைஆலயம், கடிதங்கள்
அடுத்த கட்டுரைநீலம்- குரலில்