வானுயர்ந்த கோபுரங்களை முதலில் கண்ட கணம் வியக்கும் சராசரி மனம், அடுத்த கணமே அதன் சரிவை கற்பனை செய்யும்.
எதில் வரும்? விஷ்ணுபுரத்திலா? அல்லது தாஸ்தாவெஸ்கி சொன்னதா? திடுக்கிடச் செய்யும் உண்மை. நேர் எதிர் நிலையும் சராசரி மானுட உள்ளத்தில் உண்டு என நினைக்கிறேன். ஹம்பி கலைவெளி, கொனார்க் பேராலயம் என சிதைவுகளை கண்ட போதெல்லாம் மனம் அவற்றின் முழுமையை கற்பனை செய்து தவித்தது.
பின்னர் தேடியபோது ஹம்பி கோபுரங்கள், கொனார்க் விமானம் எல்லாம் முழுதாக இருந்தால் எப்படி இருக்கும் என இணையத்தில் பல வரைகலை படங்கள் கண்டேன். அத்தனைக்குப் பிறகும் கொனார்க் கோயில் விமானத்தின் உண்மை உரு கற்பனை செய்ய இயலாத பிரம்மாண்டம் என்றே அகத்தில் நிறைந்து கிடக்கிறது.
கொனார்க்கில் கண்காட்சி அரங்கில், அந்தப் பேராலயம் சரிந்ததன் பின்னுள்ள வரலாறு, கதைகள் இவற்றை சித்தரித்துக் காட்டும் காணொளி ஒன்று கண்டேன். அதில் ஒரு கதை. வழக்கம் போல சிற்பிக்கும் அரசனுக்குமான மோதலை மையம் கொண்ட கதை. அந்தக் கோயிலை கட்டும் ராஜா அதற்கு சொன்ன கெடு தேதி நெருங்கி விட்டது. அந்தக் கோயில் பணியின் இறுதி நிலை என்பது, கோயில் விமானத்தின் உச்சியில் நிகழ்த்த வேண்டிய ‘பூட்டு’ எனும் நிலை. சரியாக பூட்டா விட்டால், கற்கள் அடுக்கிய விகிதத்தின் பாரம் தாளாமல் விமானம் சில ஆண்டுகளில் சரிந்து விடும்.
இதுவரை அந்த சிற்பி கட்டியிராத பிரம்மாண்டம். ஆகவே ‘இறுதிப் பூட்டு’ எனும் கணக்கு அவருக்கு கண்ணாமூச்சி காட்டிக்கொண்டே இருக்க, நாள் நெருங்க நெருங்க அரசனின் கோபத்துக்கு சக சிற்பிக்கள் அஞ்சத் துவங்க, தலைமைசிற்பியின் வாரிசான அவரது ஒரே மகன் தனக்கு அதை பூட்டும் கணக்கு தெரியும் அதை செய்து முடிக்கிறேன் என முன்வருகிறான். குறிப்பிட்ட நாளுக்குள் அதை செய்தும் காட்டுகிறான்.
கும்பாபிஷேக விழாவில் ராஜா சிற்பிகளை பரிசு மழையில் முழுக்காட்டுகிறான். எல்லோரும் மகிழ்ந்திருக்க, தலைமைசிற்பியின் தனது மகன் தனது கலை எனும் பெருமிதத்தில் இருக்கையில்தான் அரசன் இறக்குகிறான் இடியை. இத்தகு கலை மேன்மைக்கு இணையான ஒன்று இனி எழக் கூடாது. இது ஒன்று மட்டுமே இருக்க வேண்டும், அதன் பொருட்டு சிற்பிகள் அனைவரையும் தலை கொய்ய உத்தரவிடுகிறான். தலைமைசிற்பியின் மகன் மட்டும், விமானம் ஏறி அங்கிருந்து குதித்து சாக ராஜா வசம் உத்தரவு வாங்கி, விமானம் ஏறுகிறான். விமான உச்சியில் அவன் அமைத்த பூட்டில் ஒரு சின்னஞ்சிறு புள்ளியில் கால் கட்டை விரல் கொண்டு அழுத்துகிறான். எங்கோ ஒரு மெல்லிய விரிசல் ஒலி எழ, திருப்தியுடன் அங்கிருந்து விழுந்து சாகிறான். (விஷ்ணுபுரம் நாவலில் மகா சிற்பி ப்ரசேனரை, விஷ்ணுபுர கோயில் ராஜகோபுரத்துக்கு இதை செய்ய வைக்கவே சித்தன் முயலுவான்). அவன் அம்மா என் கண் முன்னால் என் மகன் விழுந்து உடல் சிதறி இறந்ததை நான் கண்டதைப் போல, உன் கண் முன்னால் இந்த கோயில் உடைந்து சிதறுவதை நீ பார்ப்பாய், என அரசனுக்கு சாபம் போட்டு விடுகிறாள். அவள் சபித்த கோயில்தான் இப்போது நாம் காணும் கொனார்க் இருக்கும் நிலை.
மொத்தக் கதையிலும் சுவாரஸ்யம் ‘ப்ரும்மாண்டத்தைக் கட்டிவைக்கும் சின்னஞ்சிறு புள்ளி’ எனும் வினோத எதிரிடை நிலை. இந்த எதிரிடை தன்மை எப்போதும் என்னுள்ளே ஒரு மூலையில் கிடந்து உறுத்தி, எதையோ கிளறிவிட்டுக்கொண்டே இருக்கும். அதற்கு துணை நிற்கும் வண்ணம் சமீபத்தில் இசையின் கவிதை ஒன்று கண்டேன்.
சின்னஞ்சிறியது.
நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஓவியம் ஒன்று
ஏலத்திற்கு வந்தது.
பிரம்மாண்ட அரண்மனையின் விண்முட்டும் கோபுரம்
அதன் உச்சியில் ஒரு சிறுபுறா
வாங்கி வந்து
வரவேற்பறையில் மாட்டி வைத்தேன்.
ஒவ்வொரு நாளும்
அந்தப்புறா இருக்கிறதாவென
தவறாமல் பார்த்துக் கொள்வேன்
எனக்குத் தெரியும்
அது எழுந்து பறந்துவிட்டால்
அவ்வளவு பெரிய பிரம்மாண்டம்
சடசடவென சரிந்துவிடும்.
இசை.
கவிதை வாசித்து முடித்த கணமே, பிடி விட்டு சிறகெழுந்து பறக்கும் பறவையால் சரியும் பிரம்மாண்டம் ஒன்றின் சித்திரம் மனதில் விரிந்து விடுகிறது. அந்தப் புறா எழுந்து பறந்துவிடாதிருக்க கவி உள்ளம் கொள்ளும் தவிப்பும் அக் கணமே நம்மை வந்து தீண்டி விடுகிறது.
புறாவின் சிறகு போல அத்தனை மெல்லியது, அது விரிந்து பறந்து விட்டால், நியதி கொண்டு சுழலும் வலிய கோள்கள் யாவும் சிதறி ஓடி விடுமா? புறாவின் கால் விரல்கள் போல அத்தனை சிறியது, அதுதான் நமதிந்த பிரபஞ்ச பிரம்மாண்டத்தை சிதறிவிடாது பற்றிப் பிடித்திருக்கிறதா?
எதிரிடையின் விசித்திரம் அளிக்கும் வினோத அனுபவம் ஒன்றை வாசிப்பின்பம் என வழங்கும் வசீகரக் கவிதை.