புறப்பாடு, கடிதம்

அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் விஷ்ணுபுரம் வாசித்துவிட்டு தங்களுக்கு அனுப்பிய கடிதத்தை இன்று உங்கள் தளத்தில் பிரசுரித்து உள்ளீர்கள். அதைக் கண்டவுடன் கட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் அதையும் தாண்டிய ஒரு பொறுப்புணர்ச்சி தானாக உள்ளிருந்து எழுந்துள்ளது. வாசிப்பை மேலும் செம்மைப் படுத்தவும் அவ்வகையில் சிந்தனையை கூர்மைப் படுத்தவும் ஓயாது உழைக்க வேண்டும் என்பதைப்பற்றிய பொறுப்பு.

உங்கள் எழுத்தை வாசித்தல் என்னும் இன்பச் செயலின் ஊடாகவே அக்காரியம் தடையின்றி நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தன்மீட்சியும் புறப்பாடும் படித்த பின்பு உங்களை மேலும் அறிந்து கொள்ளும் பேரு எனக்கு கிடைத்தது. காவி உடை அணிந்து கொண்டு நீங்கள் ஆற்றிய அந்த மூன்றாவது புறப்பாடை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன்  இக்கடிதத்தை முடித்துக்கொள்கிறேன்.

ஊக்கத்திற்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றிகள்

அன்புடன்,

விஜய் கிருஷ்ணா

***

அன்புள்ள விஜய்கிருஷ்ணா

நான் காவி உடை அணியவில்லை. காவி அணிவதற்கு சில முறைமைகள் உண்டு. அவை எனக்கு நிகழவில்லை. நான் அணிந்திருந்தது அழுக்கு உடைதான். ஆனால் சாமியார் என அறியப்பட்டேன்.

அந்த அனுபவங்களை எழுதலாமா என்ற ஐயம் எனக்கு உண்டு. எழுதவேண்டுமென்றால் அவற்றை நான் முதலில் நன்றாக அறிந்திருக்கவேண்டும். ஐயமறச் சொல்லவேண்டும். அதனால் பிறருக்கும் பயன் இருக்கவேண்டும்

ஜெ

***

முந்தைய கட்டுரைசிஷ்டி கவிதைகள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகேளாச்சங்கீதம்- கடிதங்கள்