விசும்பு சிறுகதை தொகுப்பை தொடர்ந்து தன்மீட்சி வாசித்தேன். ஒரு முழு மானுடவாழ்க்கையை அர்த்த பூர்வமாக ஆக்கிக் கொள்ள, செயலுக்கத்துடன் வாழ போதுமான, இல்லை அதற்கு மேலான ‘சம்பவங்கள்’ தன்மீட்சியில் உள்ளன. முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், இப்படி ஒரு பொக்கிஷத்தை தமிழ் இலக்கியத்திற்கு அளித்ததற்கு.
ஒரு கேள்வி. பதில் யாராலும் சொல்ல முடியாது என்று தெரியும். இருந்தாலும் உங்களது அபிப்பிராயத்தை தெரிந்து கொள்ள ஆவல். மரணம். ஆம், மரணத்தை நீங்கள் எப்படி வரையறுத்துள்ளீர்கள். நாத்திகன் என்பதால் நிச்சயமாக மரணத்திற்கு அப்பால் ஒரு ஜீவிதம் இல்லை என்பது உங்கள் எண்ணமாக இருக்கும். இருந்தும் உங்கள் எழுத்துக்களில் அறிய ஆவல். என்னால் சரியாக இந்த கேள்வியை கேட்க முடியவில்லை, மரணத்தை போல தான் சரியாக விளக்கிக் கொள்ள முடியவில்லை.
தன்மீட்சியில் மரணத்தை மனிதன் எப்படி எதிர்கொள்ள வேண்டும், மரணத்தை இலக்கியம் எப்படி வரையறுத்தது போன்ற கடிதங்களும் அதற்கு உங்கள் பதிலும் எதிர்பார்த்தேன். ஆனால் இல்லை. ஜெ மனதில் மரணம் என்றால் என்ன? உங்கள் பதிலை கேட்க ஆவலுடன் இருக்கிறேன்.
தருண் வாசுதேவ்
***
அன்புள்ள தருண்
சாவு என்பது வாழ்வின் பகுதி அல்ல. தன்மீட்சி வாழ்க்கை பற்றிய கட்டுரைகள் கொண்டது. ஆகவே அதில் சாவு பற்றிய கேள்வி ஏதும் இல்லை. இங்கே நம்மை நிகழ்த்திக்கொள்வது எப்படி என்பது மட்டுமே அதில் பேசப்பட்டுள்ளது.
இங்கே வாழ்க்கையை சிறப்புற நிகழ்த்திக்கொண்டோம் என்றால் சாவு நமக்கு ஒரு பிரச்சினையே அல்ல. அது இயல்பான முடிவு. இங்கே வாழ்க்கையை நிகழ்த்தி நிறைவுறாதபோதுதான் சாவுக்குப்பின் அதன் நீட்சி என்ன என்னும் ஐயங்கள் எழுகின்றன. எதுவானாலும் அதை வாழ்க்கை பற்றிய விவாதங்களுக்குள் எவ்வகையிலும் வைக்க முடியாது. அது முற்றிலும் வேறொன்று.
ஜெ