கம்பராமாயணம் வாசிக்க…

கம்பன் சிலை தேரழுந்தூர்
கம்பன் மொழி
கம்பன் எழுதாதவை
கம்பன் நிகழாத களங்கள்
கம்பன் கண்ட மயில்

அன்புள்ள ஜெ

நண்பர்கள் இணைந்து கம்பராமாயணம் வாசிக்க தொடங்கியுள்ளோம். நேற்று இருமணிநேரம் ஒதுக்கி கூட்டுவாசிப்பை மேற்கொண்டோம். சில இடங்களில் பொருள் விளக்க பகுதிகளில் பாடலில் பயின்று வரும் அணியை குறிப்பிட்டிருந்தார்கள். உங்களுக்கு தெரியும், இங்கு இலக்கியம் வாசிக்க வருபவர்கள் பெரும்பான்மையினர் தற்செயலாக அப்போக்கில் நுழைந்தவர்கள். பள்ளியில் மதிப்பெண்ணுக்காக மட்டுமே படித்த இலக்கண பகுதிகள் நினைவில் இருப்பதும் இல்லை.

இந்நிலையில் முறையாக நம்முடைய இலக்கண அமைப்புகளை பயிலாத இலக்கிய வாசகன் கம்பராமாயணம் போன்ற இலக்கண பொருந்திய மரபான காவியங்களை வாசிக்கையில் எவற்றை இழக்க கூடும்? அல்லது அப்படி கற்க அவசியமெல்லாம் இல்லையா?. இன்னொன்று அப்படி அவன் இலக்கண முறையை கற்க வேண்டும் எனில் எங்கெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?. ஏனெனில் நம் சூழலில் இப்படி கற்கையில் வெறும் மொழிப்புலமையாளனாக மட்டுமே மாறிவிடும் நிலையும் உள்ளதல்லவா

அன்புடன்

சக்திவேல்

***

அன்புள்ள சக்திவேல்,

கம்பராமாயணத்தை பயில இன்று தேவையாக இருப்பது முதலில் கவிதைச்சுவை உணரும் பயிற்சி மட்டுமே. நவீனக்கவிதையின் வழியாக அதை அடைந்தவர்கள் மிக எளிதாக கம்பராமாயண அழகியலுக்குள் செல்லமுடியும். அதன்பின் சொற்சுவையும், அணிகளின் அழகும் பயிலப்பயில தானாகவே அமையும்.

எந்தக்கவிதையும் வாசகனிடம் விரியவேண்டும். அனுபவமாகவும் அறிதலாகவும். அதற்கு தேவை கற்பனை, வாழ்க்கையனுபவங்களுடன் கவிதையைத் தொடுத்துக்கொள்ளும் உளப்பாங்கு. அது நவீன இலக்கிய வாசகனிடம் நவீன அழகியல் வழியாக உருவாகி வரக்கூடியதுதான்.

நேர்மாறாக, மரபார்ந்த முறையில் இலக்கணம் பற்று கம்பராமாயணத்துக்குள் நுழைபவர்கள் மிகமிகச் சம்பிரதாயமான ஒரு வாசிப்புக்குள் செல்கிறார்கள். அவர்களால் கம்பராமாயணத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்று ‘பொருள்கொள்ள’ மட்டுமே முடிகிறது அவர்களால் எவ்வகையிலும் கவிதையை விரித்துக்கொள்ள முடிவதில்லை. நவீன வாசகனுக்கு அவ்வாசிப்பு போல சலிப்பூட்டுவது வேறில்லை.

இன்று கம்பராமாயணத்தை வாசிக்க அறிஞனின் துணை தேவையில்லை. நல்ல அகராதிகளும் கலைக்களஞ்சியங்களும் உள்ளன. ஆகவே நீங்கள் வாசிக்கும் கூட்டுவாசிப்பு முறையே உகந்தது. வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரைஈழத்திலிருந்து ஒரு நேர்காணல்.
அடுத்த கட்டுரைவெற்றி – கடிதம்