நிலவும் மழையும்-1
குளிரில் அதிகாலையில் எழுவதற்கு ஆன்மிகவல்லமை தேவைப்படுகிறது. ஆனால் ஆன்மிகவல்லமை பெறுவதற்கே அதை நிபந்தனையாக வைத்திருக்கிறார்கள். என்னால் புரிந்துகொள்ள முடியாத விஷயம் இது. காலையிலேயே மலாலி நீர்வீழ்ச்சிக்குச் செல்ல திட்டம். ஆகவே பலரும் பலவாறாக அழைத்து காலையில் எழுந்தோம். நல்லவேளையாக வெந்நீர் கிடைத்தது. குளிருக்கு வெந்நீர்குளியல் என்பது ஒரு மாபெரும் இன்பம்.
காலையுணவு அங்கேயே ஏற்பாடாகியிருந்தது. முந்தையநாள் சிக்கன் எல்லாம் செய்திருந்தார். நான் பழங்கள்தான் சாப்பிட்டேன். மறுநாள் இட்லி இருந்தது. கர்நாடக இட்லி. நண்பர்களில் ஒருவரான அருள் காலில் ஒரு சிறு உடைசலால் பாதியிலேயே பயணத்தை முடித்துவிட்டு ஊர் திரும்பவேண்டியிருந்தது. அவரை கொண்டுசென்று பஸ் ஏற்றிவிட்டு வந்தனர்.
முந்தையநாள் மாலையில் மலாலி நீர்வீழ்ச்சிக்கு சென்றுவிடலாம் என்று எண்ணியிருந்தோம். ஆனால் கர்நாடகத்தின் மலைநாட்டில் கூகிள் வரைபடம் சொல்லும் பயணத்தொலைவு மற்றும் நேரத்திற்கும் அனுபவத்திற்கும் சம்பந்தமில்லை. அது ரங்கராட்டினத்தில் சுழன்றுகொண்டிருப்பதுபோன்ற ஓர் அனுபவம். ஆகவே மாலையில்தான் வந்துசேர்ந்தோம். அருவியை பூட்டிவிட்டார்கள்.
மலாலி அருவி கர்நாடகத்தின் புஷ்பகிரி சரணாலயத்திற்குள் அமைந்துள்ளது. குடகு மாவட்டத்தில் உள்ள சோம்வார்பேட் தாலுகாவில் உள்ள இந்த சரணாலயம் புலிகள் காப்பகமும் கூட. மழைக்காடுகளில் மட்டுமே வாழும் அரிய பறவைகளைக் காண இங்கே ஆண்டுதோறும் ஆய்வாளர்களும் பயணிகளும் வருகிறார்கள். குமாரபர்வதம் என்னும் உச்சிமலைமுடி இங்குள்ளது. இந்த காட்டின் மறுபக்கம் மிக அருகே புகழ்பெற்ற குக்கே சுப்ரமணியா ஆலயம் அமைந்துள்ளது.
நிறைய மரணங்கள் நிகழ்ந்த இடம் மலாலி அருவி. எல்லாருடைய பேச்சிலும் அந்த குறிப்பு வந்துகொண்டிருந்தது. எட்டுமணிக்குத்தான் கேட் திறந்து உள்ளே விட்டார்கள். படிகளில் இறங்கி கீழே சென்று மலைப்பள்ளத்திற்குள் கொட்டும் அருவியைப் பார்க்கவேண்டும்.
ஏறத்தாழ இருநூறு அடி ஆழத்தில் அருவி பெருகிப்பொழிந்துகொண்டிருந்தது. குளிப்பதை எல்லாம் கற்பனையே செய்யமுடியாது. சாதாரணமாகவே உக்கிரதெய்வம் . மழைக்காலத்தில் சன்னதம் கொண்டிருந்தது. ஓலம், உலைந்து உலைந்து வெண்கூந்தல் சுழற்றும் வெறி. அதைச்சுற்றி அதற்கென்று மட்டும் ஒரு மழை.
மழைபொழிந்துகொண்டிருக்க படிகளில் இறங்கிச் சென்றோம். மழை நின்று சாரலாகியது. முகில்கள் விலகி ஒளி எழுந்தபோது அருவியின் ஒளி கண்கூசச் செய்தது. அருவியை அணுகியபோது அருவிச்சாரலின் மழை மீண்டும் பொழியலாயிற்று.
பேருருக் கொண்ட தெய்வமருகே நின்றிருக்கும் பூசகன் போல ஒரு தனிமரம் அருவியை ஒட்டி நின்று நீர்ப்பொழிவில் நனைந்துகொண்டிருந்தது. ஆண்டெல்லாம் அருவியின் அருளைப் பெறுவது. கைகூப்பி பணிந்து நிற்பதுபோலத் தோன்றியது அது.
காவிரியின் துணையாறான நேத்ராவதி [கண்ணுடையாள்] ஆற்றில் சென்று சேரும் குமாரதாரா [இளமையொழுக்கு] என்னும் ஆற்றில் நிகழ்கிறது இந்த பேரருவி. மலையுச்சியில் இருந்து நேராக மலைப்பிளவின் பெரும்பள்ளத்தில் விழுகிறது. அதைச்சூழ்ந்து செங்குத்தாக எழுந்த மலைவிளிம்புகளில் திரைபோல தொங்கியது மழைக்காடு. படிகளில் நின்றபடி எதிரே எழுந்த காட்டிலுள்ள கல்வாழைகள், காட்டுஈச்சைகள் போன்ற மரங்களை பார்ப்பது ஒரு வகை ஊழ்கம்.
இறங்குவது எளிது, ஏறுவது கடினம். மூச்சு வெடிக்கத்தான் மேலே வரவேண்டும் அருகே அருவியின் ஓசை கேட்டுக்கொண்டிருந்தாலும் மேலே நின்றால் அங்கே அருவி இருப்பதையே ஊகிக்க முடியாது.
அன்று மாலை குதிரேமுக் மலைச்சிகரம் அருகே பெல்லா தங்குமிடத்தை சென்றடைந்தோம் . வசதியான இடம். மழைக்குரிய சூழல். மழையில்லாதபோது வெக்கை தாளமுடியாது என நினைக்கிறேன். சூழ்ந்திருக்கும் காட்டின் குளிர் இரவில் வந்து அழுத்தவும்கூடும்.
நாங்கள் மறுநாள் காலை ஆறுமணிக்கே குதிரேமுக் மலைப்பயணத்தை தொடங்கவேண்டும் என்று விடுதிக்காரர் சொன்னார். அதற்குரிய ஏற்பாடுகளையும் ஆணையிடும் குரலில் விளக்கினார். பொதுவாக மலையில் வழிகாட்டிகள் தங்களை ராணுவ காப்டன்களாக எண்ணிக்கொள்கிறார்கள். அதற்கு மலையேற்றக்காரர்களும் ஒரு காரணம், அமெச்சூர் மலையேற்றக்காரர்கள் மலையில் ஏறிய பிறகே மலையேறுவதற்கு என்னென்ன தேவை என உணர்கிறார்கள்.
முன்னரே படுத்துக்கொண்டோம். அருவி வரை இறங்கி ஏறியமையால் உடனே தூங்கமுடிந்தது. காலை நான்கரை மணிக்கே எழுப்பிவிட்டார் கிருஷ்ணன். பல்தேய்த்து தயாரானோம். நான் ஷூக்களை கொண்டுவரவில்லை. மற்றவர்கள் ஷூக்கள் வைத்திருந்தனர். நான் கோவையில் வாங்கிய பிளாஸ்டிக் செருப்புதான் வைத்திருந்தேன்.
ஷூக்கள் மழையில் நனைந்தால் செத்த பெருச்சாளியை காலில் கட்டிக்கொண்ட அனுபவத்தை அளிக்கின்றன என்பது என் அனுபவம். ஆகவேதான் பிளாஸ்டிக் செருப்பை வாங்கினேன். ஆனால் அது பிடிமானம் நிற்குமா என்னும் ஐயம் இருந்தது. மழைக்கோட்டு வைத்திருந்தேன்.
காலையுணவை கனமாக உண்டபின் ஜீப்புகளில் கிளம்பினோம். வனத்துறையில் பதிவுசெய்து அனுமதி பெற்றிருந்தோம். மலைக்குமேல் முதல் முகாமிலிருந்து நேராக ஒன்பது கிலோமீட்டர் ஏறிச்சென்றால் குதிரேமுக் மலைமுடி. ஒன்பது கிலோமீட்டர் இறங்கி வரவேண்டும். செல்வதற்கு ஐந்துமணிநேரம், திரும்பிவர நான்கு மணிநேரம் என்பது கணக்கு.
ஆனால் பின்னர் சுபாவின் கைக்கடிகாரக் கணக்கு மொத்தமாக இருபத்தொன்று கிலோமீட்டர் காட்டியது. ஏறிச்சென்றபோது இருநூற்றொன்று கிலோமீட்டர் தோன்றியது. ஒவ்வொரு அடியாக எண்ணி எண்ணி வைக்கவேண்டியிருந்தது. எண்ண எண்ண அடி பெருகியது.
செல்வதற்கு ஒற்றையடிப்பாதைதான். அதுவும் பல இடங்களில் நீர்வழிந்து இறங்கிய தடம். உருளைக்கற்கள் மேல் கால்வைத்து செல்லவேண்டும். சீரான ஏற்றம், அவ்வப்போது கிட்டத்தட்ட செங்குத்தான சரிவுகளில் பாறைகள்மேல் தொற்றி ஏறவேண்டும். வழியில் காட்டாறுகளுக்கு குறுக்கே கயிறுகட்டியிருந்தார்கள். அவற்றை பற்றிக்கொண்டு கடந்துசெல்லவேண்டும்
நாங்கள் சென்றவற்றிலேயே கடுமையான மலைப்பயணம் இதுவே. மழை பொழிந்துகொண்டிருந்தது. கற்கள் உருண்டன, பாதையில் செஞ்சேறு வழுக்கியது. நெஞ்சு உடைய நுரையீரல் விம்மியது. வழியெங்கும் குருதி உறிஞ்சும் அட்டைகள்.
ஆனால் எந்த மலையேற்றமும் மெல்லமெல்லச் சென்றால் எளிதுதான். சிறிய சிறிய அடிகளாக வைக்கவேண்டும். முடிந்தபோதெல்லாம் ஓய்வெடுத்துக்கொள்ளவேண்டும். சீரான வேகத்திலேயே சென்றுகொண்டிருக்கவேண்டும். முக்கியமாக இன்னும் எத்தனை தொலைவு என்று கணக்குபோடக்கூடாது. மலையேறுவதன் அசௌகரியங்களையும் கஷ்டங்களையும் பற்றிப் பேசக்கூடாது.
அத்தனை கஷ்டங்களுக்கும் வெகுமதி இருந்தது. நான் என் வாழ்நாளில் பார்த்ததிலேயே அழகான இடங்களில் ஒன்று குதிரேமுக் மலையின் புல்வெளிப்பள்ளத்தாக்குகள். பச்சைமென்மை, பச்சை நெகிழ்வு, பச்சைக்குமிழ்வு, பச்சை அலைகள். மேலே முகில்கள் உருவாக்கிய நிழல்வடிவங்கள் பச்சைமேல் அலையலையென கடந்துசெல்ல புல்வெளிப்பரப்பு நீர்வெளியென ததும்பிக்கொண்டிருந்தது.
நோக்கநோக்க நெஞ்சுநிறைக்கும் அனுபவம் அது. அதை சொற்களாக ஆக்குந்தோறும் குறைகிறது. நான் எங்களுடன் வந்த ஜோசஃபைனிடம் சொன்னேன். மலையேற்றம் எதை அளிக்கிறது? நாம் நம் எல்லைகளை அறிந்து கடந்து செல்கிறோம். நம் எல்லைகளை சற்றேனும் மீறாமல் எந்த புதிய அறிதலும் நிகழ்வதில்லை. அறிவின், உணர்வின், உடலின் எல்லைகளை மீறாமல் நாம் நம்மை முன்னகர்த்திக்கொள்வதில்லை. வாசிப்பிலும் சரி, கலைகளிலும் சரி, பயணங்களிலும் சரி நாம் அதுவரை சென்றடைந்தவற்றில் இருந்து ஒரு அடியாவது முன்னகர்ந்திருக்கவேண்டும்.
6,207 அடி உயரமான குதிரேமுக் சிகரம் கர்நாடகத்தின் மூன்றாவது மலையுச்சி. வன அலுவலகத்தில் இருந்து ஒண்டிமரா என்னும் இடம். அங்கிருந்து நேராக குதிரேமுக் மலைமுடி. தொடங்கும்போது எளிதென தோன்றும். குதிரைமுகம் கொண்ட மலையை அங்கிருந்தேகூட பார்க்கமுடியும். அணுகிச்செல்லவேண்டும் என்றால் மலையேறவேண்டும்.
குதிரேமுக் என்பது குதிரைமுகம் கொண்ட மலைச்சிகரம். அதை அண்மையில் காண இன்னொரு மலைச்சிகரத்தில் ஏறுவதே இந்த மலையேற்றம். ஆனால் மேலே சென்றால் அதைக் காணமுடியாது என்று கூறிவிட்டனர். மழைமுகில்களால் மலைமுடிகள் மூடப்பட்டிருக்கும் காலம் இது. மலைப்பாறைகளின் உச்சிகள் இவை. ஓரிரு அடி ஆழமே மண் இருக்கும். ஆகவேதான் புல்வெளிகள்.
மலையின் மடிப்புகளில் சோலைக்காடுகள் இருக்கும். குட்டைமரங்களால் ஆனவை அவை. கைப்பள்ளத்தில் பச்சைநுரையை அள்ளி வைத்திருப்பதுபோல. இங்கே வெயில் குறைவாகவே அடிக்கும், முகில்மூடியிருப்பதனால். ஆகவே புல்வெளியும் சரி மரங்களும்சரி அடர்பசுமை நிறமானவை. மழைக்காடுகளிலேயே இலைகள் பச்சை செறிந்தவை. சூரிய ஒளி அரிதானது. ஒவ்வொரு சொட்டும் அமுதாக மாற்றப்படவேண்டியது. ஆகவேதான் பசுமை.
மலைமடிப்புகளில் எல்லாம் நீரோடைகள், காட்டாறுகள், அருவிகள் சென்றுகொண்டிருந்தன. எங்கும் நீரோசை. புல்வெளிகள் நீரை தக்கவைத்து வெளிவிடும் மென்பஞ்சு போன்றவை. ஊறிய நீர் மடிப்புகளில் இறங்கி பெருகி சென்று ஓடையாகி ஆறாகி கீழிறங்கி கடல்நாடுகிறது.
நான் பிளாஸ்டிக் செருப்பு போட்டுவந்தது எவ்வளவு நல்லது என்று தெரிந்தது. மற்றவர்களின் பூட்ஸுகள் நனைந்து ஊறிவிட்டன. மிகப்பிழையான மலையேற்றம் எங்களுடையது. எல்லாவகையிலும் கற்றுக்குட்டிகள். உண்மையில் நல்ல கம்பூட்டுகள் தேவை. இந்தப்புல்வெளியில் பலவகைப் பாம்புகள் உண்டு. ராஜநாகமே உண்டு. அறியாமையே ஒருவகை ஆற்றல்தான்.
குதிரைமுக உச்சிநோக்கிய மலையேற்றத்தில் சுவாரசியமான அம்சம் பாறைகளை கவனிப்பது. பலவகையான தாதுக்கள் கொண்ட பாறைகள். பெரும்பாலானவை செந்நிறமான இரும்புத்தாதுப்பாறைகள். மஞ்சள்நிறமான கந்தகப்பாறைகள் பொன் என மின்னின. வெள்ளிபோல மின்னிய ஈயப்பாறைகளும் உண்டு. அரிய செல்வம் எவரும் தீண்டாமல் கொட்டிக்கிடப்பதுபோல உளமயக்கு உருவாகியது.
குதிரேமுக் இரும்பு அகழ்வு நாற்பதாண்டுகளுக்கு முன்பு தொடங்கிய அரசுத்திட்டம். குதிரேமுக் சூழியல் போராளிகளால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. போராட்டத்தில் எழுத்தாளர் சிவராம காரந்த் முன்னின்றார். ஆனால் திட்டம் முன்னால் சென்றது. பின்னர் கடுமையான மழை முதலிய காரணங்களால் அது லாபகரமாக இல்லை என கைவிடப்பட்டது.
ஐந்தரை மணிநேரத்தில் உச்சிக்குச் சென்றோம். மதியம் ஒரு மணிக்கு மேல் உச்சியை அடைய அனுமதிப்பதில்லை என உடன்வந்த வழிகாட்டி சொன்னார். ஏனென்றால் ஐந்துமணிக்குள் காட்டுக்குள் எவருமில்லாமல் மூடிவிடவேண்டும். இது புலிகள் உலாவும் வெளி. நாங்கள் கெஞ்சிகூத்தாடி, நான்குமணிநேரத்தில் இறங்கிவிடுவோம் என வாக்களித்து மேலே சென்றோம்
மலையுச்சி ஒரு ஹெலிகாப்டர் போல பறந்துகொண்டிருப்பதாகத் தோன்றியது. காற்று சுழற்றி வீசி அப்படி எண்ணவைத்தது. எங்களுடன் வந்த அழகுவேல் கையில் வைத்திருந்த அலுமினிய ஊன்றுகோலின் துளைகளில் காற்று செல்ல அது புல்லாங்குழல்போல பாடிக்கொண்டிருந்தது.
உச்சி எப்போதுமே வெறுமையானது. மேலே செல்ல இடமில்லாதது. தனிமையானது, வானால் ஏற்றுக்கொள்ளப்படாதது, மண்ணால் கைவிடப்பட்டது. ஆனாலும் உச்சி நம் எல்லையை காட்டுகிறது. உச்சி ஒரு வெற்றி. சிலகணங்களே நீடிப்பதென்றாலும் ஒரு கொண்டாட்டம்.
நாங்கள் இறங்கி வர ஆறுமணிநேரமாகியது. வழியில் மழைபெய்து பாதையே ஓடையென்றாகிவிட்டது. நான்கரைமணிக்கே கண் விளங்காமல் இருள் பரவிவிட்டது. தட்டுத்தடுமாறி வந்து சேர்ந்தோம். வழிகாட்டிகள் சலித்துக்கொண்டனர். காட்டிலாகாவினர் அபராதம் போடுவதாக மிரட்டினர். எல்லா இடங்களிலும் மொழிதெரியாமை பெரிய பாதுகாப்பாக இருந்தது. அவர்கள் என்ன சொன்னாலும் எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. போய்த்தொலை என்று சொல்லாமல் அவர்களுக்கும் வேறுவழியிலை.
ஏழரை மணிக்கு விடுதியை வந்தடைந்தோம். கொதிக்கக்கொதிக்க வெந்நீரில் நீராடியபோது உடல் மெல்ல இயல்படைந்தது. தசைகள் நெகிழ்ந்தன. ஆனால் காலில் அட்டைகள் கடித்த இடத்திலிருந்து குருதி வழிந்தோடியது. பாறப்புறத்தின் நாவல் போல ‘நிணமணிஞ்ஞ கால்பாடுகள்’
இரவு படுத்ததுமே தூங்கிவிட்டேன். ஒரு சொல் மிச்சமில்லாமல் வான்நோக்கி விசிறிவிட்டு மீண்டு வந்திருந்தேன்.
மேலும்