திருமந்திரம், குர்ஆன் -விவாதம்

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 84: இறைவன் மிகப் பெரியவன்

அன்பு ஜெ அவர்களுக்கு வணக்கம்.

திரு.ஆறுமுகத் தமிழன் அவர்கள்,திருமந்திரம் குறித்து தமிழ்இந்து நாளிதழில் எழுதிய கட்டுரையின் தொடக்கம் பற்றி, இதில் விமர்சிக்கப்பட்டுள்ளது.திருமந்திரத் திரிபும் சைவர் கடமையும்

எனக்கும் கூட கேள்வி என்னவென்றால், திருமந்திரத்திற்கு, தக்குபீர் முழக்கத்தின் பெருமையை பேசிவிட்டுத்தான் தொடரவேண்டுமா?

இந்த அளவிற்கு தங்களின் சுயமதவெறுப்பை வெளிப்படுத்தி யாருக்கு நிருபிக்க விரும்புகிறார்கள்?

இந்த போக்கு வன்மையான எதிர்மறையை உருவாக்காதா?

அன்புடன்,

எம்.எஸ்.ராஜேந்திரன்,

திருவண்ணாமலை.

***

அன்புள்ள ராஜேந்திரன்

இந்த வகையான விவாதங்களில் ஆர்வமிழந்துவிட்டேன். இவை அம்மெய்நூல்களை அறிய, உணர எவ்வகையிலும் உதவுவதில்லை. இவ்விவாதங்களினூடாக நாம் மெய்யறிவிலிருந்து சழக்கறிவுக்குச் செல்கிறோம். ஆகவே இவ்விவாதத்தை முன்னெடுக்கும்பொருட்டு அல்ல, இவற்றைத் தவிர்க்கும் பொருட்டு இதை எழுதுகிறேன்.

கரு.ஆறுமுகத்தமிழன் திருமந்திரத்தைப் பற்றி எழுதிய தமிழ்ஹிந்து கட்டுரைகள் இளையதலைமுறையினரிடம் அதைக்கொண்டு சென்று சேர்க்க பெரிதும் வழிகோலியவை. அதை ஒரு மரபான சைவ உரையாளர், தன்னுடைய பழைய தமிழில், பழைய மொழிபுமுறையில் செய்திருக்க முடியாது. அது திருமந்திரம் காலந்தோறும் பிறந்தெழுவதையே எனக்குக் காட்டியது. எனக்கு நிறைவளித்த நிகழ்வு அது.

அது ஓர் அறிமுகம். அறுதியான உரையோ வகுத்துரைப்போ அல்ல. அறிமுகத்திற்குப்பின் திருமந்திரம் வாசகரில் வளரும். அவர் அதை அறிய ஊழ் வகுக்கப்பட்டவர் என்றால் தனக்கான வழியை, தன் ஆசிரியர்களைக் கண்டடைந்து விடுபடுவார். அது ஒரு வழியறிவிப்பு மட்டுமே.

அத்தகைய அறிமுகங்களுக்கு தமிழ்ச்சூழலில் பல எதிர்விசைகள் உள்ளன. முதன்மையானது தமிழ் இளையவாசகர்கள் நடுவே நிறுவன மதங்களின் சடங்குகள் நம்பிக்கைகள் மற்றும் ஆசாரங்கள் மேல் உள்ள கசப்பு.அது இங்குள்ள பழமைவாதிகளின் மூர்க்கத்தில் இருந்து உருவானது. கண்கூடான ஒரு விசை அந்தப் பழமைவாதிகளின் சழக்குப்பேச்சும் கண்மூடித்தனமும். அதற்கு எதிரான விசை இளையோரிடமுள்ள விலக்கம். அது நவீனக்கல்வியால் உருவானது.

மதத்தினுள் அமைந்த எந்த தத்துவத்தையும் இங்கே அறிமுகம் செய்வதென்றால் முதலில் இந்த இரு எதிர்விசைகளையும் ஒருவர் எதிர்கொண்டாகவேண்டும். சைவசித்தாந்தமோ வேதாந்தமோ முதலில் ஆசாரவாதம் மற்றும் பழமைவாதம் ஆகியவற்றிலிருந்து எவ்வாறு வேறுபட்டிருக்கிறது என்றும், எவ்வாறு எதிர்த்துச் செல்கிறது என்றும் விளக்கவேண்டும். ஆசாரவாதம் பழமைவாதம் இரண்டையும் எதிர்க்கும் ஆன்மிகப்பயணம் அவற்றினூடாக நிகழமுடியும் என்று சொல்லியாகவேண்டும். இல்லையேல் இளையதலைமுறை அதை எவ்வகையிலும் செவிகொள்ளாது.

ஏனென்றால் பழமைவாதமும் ஆசாரவாதமும் சென்றகாலகட்டத்திற்குரிய அறவியல் மற்றும் ஒழுக்கவியல் கொண்டவை. அவற்றை இன்றைய நவீன அறவியல்கொண்ட ஓர் இளைஞன் ஒவ்வாமையுடனேயே அணுகுவான். அணுகியாகவேண்டும். ஆசாரவாதம் மானுடசமத்துவத்திற்கு, தனிமனிதனின் அகவிடுதலைக்கு எதிரானதாகவே இங்கே சென்ற சிலநூறாண்டுகளில் திரண்டுள்ளது. மதம் என்பது அந்த ஆசாரவாதம் மட்டும் அல்ல என்றும், அதன் தத்துவசாரமானது ஆசாரவாதத்தை எதிர்த்து மீறிச்செல்வது என்றும் அது எந்த நவீன அறவியலுக்கும் உகந்ததே என்றும் சொல்லியாகவேண்டும்.

அத்துடன் சைவசித்தாந்தத்தின் மையமும் சரி, திருமூலரின் தரிசனமும் சரி ஒருவகை சமரச வழியாகவும், மேலும் தூயவடிவில் மதம்கடந்த மெய்க்கொள்கையாகவும்தான் இங்கே கடந்தகாலங்களில் முன்வைக்கப்பட்டிருக்கிறது. மதச்சழக்குகளுக்கு அப்பாற்பட்ட ஒருமைத்தரிசனமாகவே விளக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அதைப்பேசியவர்கள் பலரும் இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களின் ஒருமைப்பார்வையுடன் ஒப்பிட்டு அதைப்பேசியிருக்கிறார்கள். குன்றக்குடி அடிகளார் முதல் கிருபானந்த வாரியார் வரை அப்படிப் பேசி நான் கேட்டிருக்கிறேன்.அது பெருமைபேசுதல் அல்ல. மெய்மை என்பது மதம்கடந்தது என்று காட்டுவதற்கான முயற்சி மட்டுமே.

ஆறுமுகத்தமிழன் திருமந்திரத்தை பிறமதநூல்களுடன் இணைக்கவோ ஒப்பிடவோ இல்லை. அதைப்புரிந்துகொள்ள பிறமதங்களின் தரிசனங்களை துணைக்கழைக்கிறார். அதைச் செய்தேயாகவேண்டும். நான் பேசியிருந்தாலும் பைபிளை தவிர்த்து பேசியிருக்கவே மாட்டேன். நான் மேலும் சென்று இன்றைய சிந்தனையை வடிவமைத்திருக்கும் ஷோப்பனோவர் முதல் ஹ்யூம்,லோக் வரையிலான மேலைத்தத்துவஞானிகளையும் துணைக்கழைப்பேன். ஒப்பிட்டு விவாதிப்பேன். எங்கேனும் திருமூலரைவிட அவர்கள் மேலும் துல்லியமாகச் சொல்லியிருந்தால் அதை கட்டாயம் குறிப்பிடுவேன்.

ஏனென்றால் இன்றைய சிந்தனை இந்த மேலைநாட்டுச் சிந்தனையாளர்களால் உருவாக்கப்பட்டது. இன்றைய இளைஞனின் உள்ளம் இவர்களால் ஆனது, அவன் இவர்களை அறியவில்லை என்றாலும். திருமந்திரம் அந்த மேலைநாட்டுத் தத்துவசிந்தனைகளின் அடிப்படையிலான பரிசீலனையில் எவ்வண்ணம் மதிப்பு கொள்கிறது, எவ்வண்ணம் மேலெழுகிறது, எவ்வண்ணம் பின்தங்கியிருக்கிறது என்று பேசுவதொன்றே அதை மதிப்பிடுவதற்கான வழியாகும்.

அவ்வாறன்றி திருமந்திரத்தின் பெருமையை அந்நூலுக்குள்ளேயே நின்று, சைவசித்தாந்தத்தை மட்டுமே துணைக்கொண்டு ஆராய்தல் குறுக்கலாகவே ஆகும். அந்நூலைச் சொல்பிளந்து பொருள் கொள்ளுதல், முதல்நூல்களுடன் இணைத்துக்கொள்ளுதல், ஆசாரவாத விளக்கமளித்தல் என்ற வழக்கமான வழியில் பேசிக்கொண்டிருந்தால் அது முதியோருக்கான முதுமைப் பிலாக்காணமாகவே எஞ்சும். அதனால் எந்தப் பயனும் இல்லை.

குர்ஆனையோ பைபிளையோ ஒரு திருமந்திர விவாதத்தில் சுட்டியதுமே சீற்றம் கொள்பவர் எவர்? அவர்கள் தீர்மானமான மத அடையாளத்தை திருமந்திரத்திற்கு அளிக்க நினைப்பவர்கள். மதங்களை முழுமுற்றாக வேறுபடுத்தி நோக்குபவர்கள். மாற்றுமதத்தின் ஒரு சொல்கூட செவிகொள்ள விரும்பாதவர்கள். அவ்வகையோர் என்றும் உள்ளனர். அவர்களையே அடிப்படைவாதிகள் என்கிறோம். இருதரப்பிலும் அத்தகையோர் உண்டு. திருமந்திரத்துடன் நாரே தக்பீர் கோஷத்தை இணைத்தமைக்காக ஆறுமுகத் தமிழனை கண்டிக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் இருப்பார்கள்.

ஆறுமுகத்தமிழன் முன்வைக்க நினைப்பது திருமந்திரத்தின் மதம்கடந்த தன்மையை. திருமந்திரம் மதத்தில் இருக்கிறது, மதத்தில் முகிழ்த்திருக்கிறது, ஆனால் மதம்கடந்த பெருந்தரிசனம் ஒன்று அதிலுள்ளது. மானுடர் அனைவருக்கும் உரியது அது. அதை அவ்வண்ணம் முன்வைக்க அதை மதத்தின் அடிப்படைகளில் இருந்து பிரித்து உரைத்தே ஆகவேண்டும். அதைச் செய்யும் அறிஞர்களும் ஞானிகளும் உண்டு.

மெய்த்தரிசனத்தை விட மதமே முதன்மையானது, மதத்தைக் காப்பதே மெய்யறிதலை விட முக்கியமானது என்று எண்ணுவோர் அதை எதிர்க்கலாம். அந்தத் தரப்பும் என்றும் இங்கே உள்ளது.

திருமந்திர விவாதங்களிலேயே மூன்று தரப்புகள் உள்ளன. ஒரு தரப்பு அதை நால்வேதங்களுடன் இணைத்து அணுகுவது. இன்னொரு தரப்பு தொன்மையான சைவமரபு சார்ந்து அதை புரிந்துகொள்வது. அவர்கள் சைவமரபை வேதமரபுக்கு மாற்றானதாக விளக்குவார்கள்.மூன்றாம் தரப்பு சைவத்திலிருந்தும் அதை விடுவித்து தூயமெய்யறிதல் மட்டுமென முன்வைப்பது.மூன்று தரப்பும் என்றுமிருக்கும். அவரவர் விளக்கங்களை முன்வைப்பார்கள். அவற்றை சழக்கென ஆக்கிக்கொள்பவர்கள் திருமந்திரத்தை இழக்கிறார்கள்.

*

இந்த விவாதத்தை ஒட்டி ஒன்றைச் சொல்லியாகவேண்டும். இந்துமெய்ஞான மரபுகள் அனைத்திலுமே உள்ள ஓர் அம்சம் மெய்த்தரிசனத்தை மதம்கடந்த ஒன்றாக முன்வைப்பது. நம்பிக்கைகள், வழிபாடுகள், சடங்குகள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட தூய அறிதலாக அதை விளக்குவார்கள். பல குருநிலைகளில் இதைக் காணலாம்.

ஏனென்றால் அந்த மெய்த்தரிசனம் முன்வைக்கப்பட்டதுமே மதத்தால் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும். அதையொட்டியே நம்பிக்கைகளும் வழிபாடுகளும் சடங்குகளும் உருவாகியிருக்கும். காலப்போக்கில் அந்த நம்பிக்கைகளும் வழிபாடுகளும் சடங்குகளும் அந்த மெய்த்தரிசனத்தை மறைப்பவையாக மாறியிருக்கும். அவற்றிலிருந்து அந்த மெய்த்தரிசனத்தை விடுவிக்காமல் அதை அணுகவே முடியாது. ஆகவே ஆசிரியர்கள் அதைச் செய்கிறார்கள்.

அந்த மெய்த்தரிசனம் ஒரு மதத்தின் களத்தில் முளைத்து, அம்மதத்தின் உருவகங்ளையும் சொற்களையும் பயன்படுத்திக்கொண்டாலும்கூட அந்த மதத்தில் இருந்தும் அதைப் பிரித்துக்கொள்ளவேண்டியிருக்கும். ஏனென்றால் அந்த உருவகங்களும் சொற்களும் அந்தமதத்தின் அன்றாடப்புழக்கத்தில் இருப்பவை. ஆகவே எளிய நடைமுறைப்பொருள் கொண்டவை. அந்த எளிய பொருட்கோடலைக் கொண்டு அந்த மெய்த்தரிசனத்தை நாம் சென்றடைய முடியாது. அச்சொற்களும் படிமங்களும் பெரிய தடைகளும் ஆகும்.

மதநீக்கம் நிகழ்வது இதன்பொருட்டே. இது வேதாந்தம், சைவசித்தாந்தம் என்னும் இரு ஞானவழிகளிலும் தவிர்க்கவே முடியாத ஒன்று. ஏனென்றால் அவை தூயஅறிவை முன்வைப்பவை. இந்த கடந்தநிலையை எளிய மதநம்பிக்கையாளர்களுக்கு புரியவைக்க முடியாது. ஆகவே ஒருபக்கம் அந்த மெய்த்தரிசனங்கள் மதத்தின் பகுதியாகவும் இருக்கும். மறுபக்கம் மதம் கடந்தவையாகவும் விளக்கப்படும். இந்த முரணியக்கத்தை நாம் புரிந்துகொண்டாலொழிய வள்ளலாரையோ, விவேகாந்தரையோ, நாராயணகுருவையோ நித்யசைதன்ய யதியையோ அணுக முடியாது.

இந்த தூயஅறிதல் முறைமைக்கு இரு தரப்பில் இருந்து இன்று திரிபுகள் வருகின்றன. ஒருசாரார் உடனே இதை அரசியலாக ஆக்குகின்றனர். மெய்மைசார்ந்து மதத்திற்குள் இருக்கும் மாறுபட்ட தரப்புகளை எல்லாம் தனித்தனி மதப்பிரிவுகளாக எண்ணிக்கொள்கிறார்கள். சிலர் சைவம் தனிமதம் என்கின்றனர். வைணவம் தனிமதம் என்னும் குரல்கள் ஒலிக்கின்றன. சைவத்திற்குள்ளேயே தனிமதங்களை உருவாக்குகின்றனர். அதற்கு அயல்மதத்து நிதி வருகிறது.

இன்னொரு சாரார் மெய்யியலில் நிகழும் மதநீக்கமே இந்துமதத்தை, சைவத்தை அழிக்கும் முயற்சி என்று எகிறுகிறார்கள். ராமகிருஷ்ண மடத்தில் ஏசுவின் படம் இருப்பதைச் சுட்டிக்காட்டி கொந்தளிக்கும் பேச்சுக்கள் சமூகவலைத்தளங்களில் நிகழ்கின்றன. இவர்கள் மதத்தை அரசியலுக்கான அடையாளவெளியாக, மக்களை திரட்டி அரசியலியக்கமாக ஆக்குவதற்கு உதவும் மேடையாக மட்டுமே அணுகுபவர்கள். தங்கள் அரசியலின்பொருட்டு எந்த மெய்ஞானியையும் இழிவுசெய்ய தயங்காதவர்கள்.

இன்றைய அரசியல்சூழலில் இந்த இரு துருவங்களும் மிகப்பெரிய ஆற்றல்கொண்டிருக்கின்றன. மெய்யியல், தத்துவ விவாதங்களில் பாமரர்களின் குரல் இத்தகைய அழுத்தத்தை அளிப்பது இதற்குமுன் வரலாற்றில் என்றுமே நிகழ்ந்ததில்லை.

இந்த விவாதங்களை முழுமையாக ஒதுக்கிவிட்டு தன் வழியில் சென்றாலொழிய இங்கே பல்லாயிரமாண்டுகளாக நிகழ்ந்துவந்த மெய்ஞான உசாவல்கள் முன்னகர முடியாது. இன்று மதம் அரசியலாகிவிட்டிருக்கிறது. அரசியலை தவிர்க்காவிட்டால் மதத்திலுள்ள ஆன்மிகம் அகன்றுவிடும், வெற்றுக் குழுஅரசியலே எஞ்சும். மதத்தையும் தவிர்க்காவிட்டால் மெய்த்தரிசனம் சிந்தைக்கு அணுகாது.

மெய்நாட்டத்தின் வழிகள் இரண்டு துருவங்களில் நிகழ்பவை.ஒருவழி, தன் தரப்பை பிரித்து வகுத்து ஒதுக்கிக் கொண்டே செல்லும். சைவம், அதற்குள் வேதாந்தம், அதற்குள் அத்வைதம் என்று எல்லைக்குள் எல்லையிட்டு முன்செல்லும். வேறுபாடுகளை, மறுப்புகளை சமரசமே செய்துகொள்ளாது. இன்னொன்று, எல்லா வேறுபாடுகளையும் களைந்து களைந்து ஒரு பொதுமைத்தரிசனத்தை முன்வைக்கும். ஒரே சமயம் இவ்விரண்டையுமே தன் இயக்கவியலாகக் கொண்ட மெய்ஞான வழிகளும் உண்டு. அத்வைதம் அத்தகையது.

இப்படித்தான் இங்கே பல்லாயிரமாண்டுகளாக ஞானப்பயணம் நடந்துள்ளது. அதை அரசியலாளர்களுக்கும் மதஅடிப்படைவாதிகளுக்கும்  புரியவைத்து, அவர்களின் அதிகார அரசியலுக்கு இணையும்படி நிகழ்த்தவேண்டும் என்பதில்லை. ஞானப்பயணத்தில் இருப்பவர்களிடம் ‘இந்து ஒற்றுமை முக்கியம்’ என்று சொல்வதும் சரி ‘இந்து மதநீக்கம் பிழையானது’ என்று சொல்வதும் சரி ஆக்ரமிப்பும் வன்முறையும் மட்டுமே.

இந்த விவாதத்தில் இறுதியாக நான் சொல்லவிருப்பது இதுவே.நான் சார்ந்துள்ள நாராயண குருகுலத்துப் பிரார்த்தனைகளில் கலந்துகொண்டிருப்பவர்களுக்கு தெரியும், அங்கே பைபிளும் குர்ஆனும் ஒருவரியாவது என்றும் ஓதப்படும். பிஸ்மில்லாஹி ஒலிக்காத நாளே இல்லை. இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் நித்யாவின் மாணவர்களாக இருந்துள்ளனர். அவருடைய வழித்தோன்றல்களாக நீடிக்கின்றனர்.

-ஜெ

திருமந்திரம்- இறுதியாக…
திருமந்திரம் பற்றி…
திருமந்திரம் கற்பது
திருமந்திரம் ஒரு கடிதம்
திருமூலரும் வேதாந்தமும்
சவரக்கத்திமுனைப் பாதை
ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை: சைவசித்தாந்த முன்னோடி
மலரிலிருந்து மணத்துக்கு…
மந்திர மாம்பழம்
முந்தைய கட்டுரைவருகை, ஓர் ஓவியப்புனைவு. – கடலூர் சீனு
அடுத்த கட்டுரைவெண்முரசுநாள் உரை- கடிதங்கள்