மௌன வாசகர்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

இது உங்களுக்கு நான் எழுதும் இரண்டாவது கடிதம். கடந்த பத்து வருடங்களாக உங்கள் படைப்புகளின் தீவிர வாசகன் நான். என்னுடை கேள்வியே  இந்த தீவிர வாசகன் என்கிற சொல்லை நான் பயன்படுத்த எனக்கு தகுதி இருக்கிறதா என்று தான். நான் இது வரை எந்த இலக்கிய கூட்டத்திலும் கலந்து கொண்டதில்லை. சென்னையிலும் பாண்டிச்சேரியிலும் உங்களின் உரை ஏதாவது நிகழ்ந்தால் கூட்டத்தின் கடைசி இருக்கையில் அமர்ந்து கேட்டு விட்டு சென்று விடுவேன். கூட்டம் முடிந்து உங்களை சூழும் வாசகர்கள் மத்தியிலும் கடைசியாக நின்றுகொண்டு உங்களை பார்த்துக்கொண்டே இருப்பேன் இருப்பேன். அருகில் வந்து உங்களிடம் பேசவோ அறிமுக படுத்திக்கொள்ளவோ என்றுமே முயன்றதில்லை.

ஒரு முறை 2016ல் ஈரோடு வாசகர் சந்திப்பில் கலந்து கொண்டு உங்களை சந்தித்திருக்கிறேன். அங்கும் வெறும் பார்வையாளனாக மட்டுமே இரண்டு நாட்கள் இருந்தேன். அதன் பிறகு உங்களின் உரை நிகழ்வுகள் தவிர மற்ற உரையாடல் கூட்டம் எதிலும் கலந்துகொள்வதில்லை என்று முடிவு செய்துவிட்டேன். ஏன் என்றால் உங்களிடம் உரையாடடக்கூடிய வேறு நல்ல வாசகனுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று தான்.

இப்படி வெறும் மௌன வாசகனகவே இருப்பதில் ஏதாவது தவறு இருக்கிறதா? வாசிப்பு என்பது குறிப்பிட்ட தனி நபர் அகம் சார்ந்த தேர்வுகளால் ஆனது என்று நம்புகிறேன். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் ஒரு நாளைக்கு குறைந்தது பத்து பக்கங்களாவது வாசிக்காமல் இருந்ததே கிடையாது. கடந்த சில நாட்களாக இந்த கேள்வி என் மனதில் எழுகிறது. ஒரு தீவிர வாசகன் தான் படித்ததை பிறருடன் பகிர்ந்து கொண்டு விவாதிக்க வேண்டுமா அல்லது ஒரு மௌன வாசகனாகவே இருக்கலாமா. இந்த கேள்வியில் ஏதாவது பிழை இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.

உங்களின் மௌன வாசகன்

ப சந்திரசேகர்

***

அன்புள்ள சந்திரசேகர்,

எனக்கு ஒரு நாளைக்கு சாதாரணமாக இருபது வாசகர் கடிதங்கள் வருகின்றன. அவற்றில் பத்தேனும் புதிய வாசகர்கள். நாள்தோறும் நான்கு வாசகர் கடிதங்கள் பிரசுரமாகின்றன. ஆனால் என் வாசகர்கள் என நான் அறிந்தவர்களிலேயே பத்திலொருவரே எழுதுகிறார். எஞ்சியவர்கள் எழுதுவதில்லை.

எழுதுவதும் எழுதாமலிருப்பதும் தனிப்பட்ட தெரிவு. சில ஆசிரியர்களை நாம் வாசித்து கடந்துசெல்வோம். சிலரிடமே நாம் நிரந்தரமாக ஓர் உரையாடலில் இருக்கிறோம். என் வாசகர்களில் பலர் என்னிடம் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதற்கு நான் தொடர்ந்து உரையாடுவதும், என் எழுத்து தொடர் வினாக்களை எழுப்புவதும் காரணம். அந்த உரையாடல் நிகழ்ந்து கொண்டிருந்தால் போதும்.

ஆனால் நீங்கள் வாசித்தவற்றை தொகுத்துக்கொள்ள, உங்களுடைய சொந்தச்சிந்தனையாக ஆக்கிக்கொள்ள, நீங்கள் ஏதேனும் வகையில் அவற்றை வெளிப்படுத்தியே ஆகவேண்டும். அதற்குத்தான் குழுவிவாதங்கள், நட்புச்சூழல் விவாதங்கள் தேவையாகின்றன. எழுதிக்கொள்ளலாம். அதுவும் சிறந்த வழிமுறையே,

ஜெ

***

முந்தைய கட்டுரைசமரசம் உலாவும் இடம்?
அடுத்த கட்டுரைவெண்முரசில் மிளிரும் மானுடம்-மணி வேலுப்பிள்ளை