வெண்முரசுநாள் உரை- கடிதங்கள்

வணக்கம் ஜெ

குரு பூர்ணிமை அன்று மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி.

யங்கின் ரெட் புக் படிக்க போவதாக சொல்லியிருந்தேன், தொடங்கிவிட்டேன். அத்துடன் சேர்த்தே உபநிஷத்துகளை படிக்கிறேன்(யங் உபநிஷத்திலிருந்து பல மேற்கோள்களை உபயோக்கிறார்). முன்னர் ஏக்நாத் ஈஸ்வரனின் உபநிஷத்துகள் நூலை வாசித்திருந்தேன். குரு நித்யா அவர்களின் உரைநூல்களுக்கு செல்லும் முன் ஒரு ஒட்டுமொத்த முன்னுரையாக எஸ்.ராதாகிருஷ்ணனின் நூலை மெல்ல மெல்ல படித்துவருகிறேன். சொல்வளர்காடினை கதைஒழுக்குடன் வாசித்ததால் அதன் தத்துவ கூர்மையை இந்நூல் வழியே நினைவில் மீட்டிவருகிறேன்.

ரெட் புக்கில் யங்கின் ஒரு வரி, “Every path you take, every step you make, is to the one point, that is, the center.”  இதை மேற்கோளாக கொண்டு இவ்வோவியத்தை வரைந்தேன். இன்று உங்கள் உரையிலும் ஒன்றாகுதல், மைத்ரேயம் பற்றி பேசினீர்கள்.

முன்பு ஹெர்மீஸ் டிரிஸ்மெகிஸ்டஸின் தத்துவத்தை படிக்க துவங்குகையில் அது வேதாந்தத்துடன் ஒத்துப்போகும் இடங்கள் பல என உணர்ந்து அதை மேற்கொண்டு படிக்கவில்லை. இன்று உங்கள் உரைக்கு பின் அனைத்து தேடல்களும் தத்துவ பாதைகளும் சமன்வயப்பட்டு ஒரு புள்ளியிலேயே சென்றடையும் என உணர்ந்தேன், அது என்னுள் நிறைந்துவிட்டது; மனதினுள் ஒரு வரி மட்டும் மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டேயிருந்தது: ஃபாஸ்டில் வரும் வரி- Eternal mind’s eternal recreation.

மிக்க நன்றி ஜெ.

ஸ்ரீராம்

அன்புள்ள ஜெ

குருபூர்ணிமை அன்று நிலவில் உங்கள் உரையை கேட்டது நிறைவூட்டுவதாக இருந்தது. எனக்கு சடங்குகளில் நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால் இன்றைக்கு நாற்பது வயதில் எனக்கு நினைவிலிருப்பவை எல்லாமே சடங்குகளாக நடந்தவைதான். சடங்கு என்ன செய்கிறதென்றால் ஒரு நிகழ்ச்சியை அன்றாடவாழ்க்கையில் இருந்து பிரித்துவிடுகிறது. சாதாரண சம்பவம் அல்ல என்று காட்டிவிடுகிறது. ஆகவே உடனே அதற்கு ஒரு முக்கியத்துவமும் குறியீட்டு அர்த்தமும் வந்துவிடுகிறது. அந்த பேச்சை சாதாரணமாகக்கூட நிகழ்த்திவிட முடியும். ஆனால் மேலே இருந்த நிலவு எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. காலம்கடந்து நிற்கும் ஒரு நிகழ்வில் இருக்கிறோம் என்று தோன்றச்செய்துவிட்டது.

ஜெயராமன்

முந்தைய கட்டுரைதிருமந்திரம், குர்ஆன் -விவாதம்
அடுத்த கட்டுரைகவிஞர் இசை, பேட்டி