சர்பட்டா என்னும் சொல்

அன்புள்ள ஜெ

சர்பட்டா பரம்பரை என்ற பெயரை இணையத்தில் பலரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சார் பட்டா என்று பிரித்து நான்கு பட்டாக்கத்திகள் என்ற சொல்லில் இருந்து வந்தது என்று படக்குழுவினர் சொல்கிறார்கள். இல்லை, சர் பட்டாபிராமன் என்ற ஒரு பிராமணரின் மாணவர்கள்தான் அப்படி அழைக்கப்பட்டார்கள், அவர் பெயர் மறைக்கப்பட்டுவிட்டது என்று சொல்கிறார்கள். சர்பட்டா எப்படி சார் பட்டாக்கத்தி ஆகும் என்று தெரியவில்லை. வரலாற்றில் இந்தப் பெயர் இருக்கிறதா?

அஸ்வின்

***

அன்புள்ள அஸ்வின்,

உங்கள் அபிலாஷை தெரிகிறது. அது எவரோ பகடியாக கிளப்பிவிட எவரோ ஆதங்கத்தில் நம்ப விரும்புவது. கடந்துவாருங்கள்.

வெள்ளையானைக்கான ஆய்வில் நான் எடுத்துவைத்த குறிப்புகளில் ஒன்று சென்னையின் குத்துச்சண்டை மரபு. மல்யுத்தம்தான் இந்திய மரபு. குத்துச்சண்டைக்கு இந்திய மரபு இல்லை. அது ஐரோப்பியவரவு. வெள்ளையர் வருவதற்கு முன்னரே சென்னையில் குத்துச்சண்டையை முன்னெடுத்தவர்கள் ஆர்மீனியர்கள். ஆர்மீனிய வாள்வீச்சுக்கலையும் அன்று புகழ்பெற்றிருந்தது. அக்கால சர்க்கஸ்களிலும் ஆர்மீனியர்கள் நிறைய இருந்தனர்.

சென்னைக் கோட்டையை ஒட்டி ஆர்மீனியர்கள் குடியிருந்தனர். ஆர்மீனிய தெருவும் அங்கே ஆர்மீனிய தேவாலயமும் உள்ளது. இந்தியாவிலேயே பழைய தேவாலயங்களில் ஒன்று அது. ஆர்மீனிய வம்சாவளியினரும் சென்னையில் உள்ளனர். வெள்ளையர் வருகைக்குப்பின் ஆர்மீனியர்கள் வலுக்குறைந்து குறுங்குழுவாயினர்.

குத்துச்சண்டை அவர்களிடமிருந்து சென்னையின் துறைமுகங்களுக்கு குடிவந்த தலித் பூர்வகுடிகளுக்குப் பரவியது. தலித் மக்கள் போர்க்கலை பயில அனுமதிக்கப்படாதிருந்த காலம். ஆகவே அவர்கள் அதை விரும்பிக் கற்றுக்கொண்டனர். குத்துச்சண்டை கோஷ்டிகளும் போட்டிகளும் உருவாயின.

ஆர்மீனிய மொழியிலும் ஐரோப்பிய மொழிகளிலும் புழங்கிய ஸ்கார்பெட்டா [Scarpetta] என்ற சொல் பூட்ஸ், காலடி, காலடிவைத்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது. குறிப்பாகச் சொல்லப்போனால் ஸ்டெப்ஸ். அதிலிருந்து சர்பட்டா என்ற சொல் வந்திருக்கிறது என்பதே என் ஊகம்.

பழைய பம்பாய் சர்க்கஸ்களிலும் எனக்கு ஆர்வமுண்டு. சில கதைகளும் எழுதியிருக்கிறேன். அவற்றிலும் ஆர்மீனியர்களின் பங்களிப்பு உண்டு. சர்க்கஸில் ஸ்டெப்ஸ் வைத்து போடும் சண்டைக்கு சர்ப்பட்டா என்ற பெயர் உண்டு. கோமாளியும் சர்ப்பட்டா போடுவதுண்டு. சர்ப்பட்டா செல்லப்பன் என்ற பழைய கோமாளி நடிகர் ஒருவர் புகழ்பெற்றவர்

சர்பட்டா என்பது காலடிகளை வைத்து ஆடும் குத்துச்சண்டை முறையாக இருக்கலாம்.

ஜெ

***

முந்தைய கட்டுரைதேசமற்றவர்கள்
அடுத்த கட்டுரைநிலவும் மழையும்-1