சிந்தாமணி,கடிதம்

சீவகசிந்தாமணி, உரையாடல்

அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு,

வணக்கம், நலம்தானே?

சீவக சிந்தாமணி குறித்த உரை கேட்டேன். பல புதிய வாசல்களைத் திறந்து வைக்கும் மிகச் சிறப்பான உரை. நான் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் சீவக சிந்தாமணியில் காந்தருவதத்தை பற்றிய ஓர் உரை நிகழ்த்தி உள்ளேன். இன்னும் அக்காப்பியத்தை முழுமையாகப் படித்ததில்லை. அவ்வப்போது பகுதி பகுதியாகத்தான் படித்துள்ன்.

சிந்தாமணிச்செல்வர் என்று பெயர் பெற்ற நூற்கடல் தி.வே.கோபாலையர் அவர்களின் சிந்தாமணி பற்றிய சொற்பொழிவை ஒரு முறை மயிலாடுதுறையில் கேட்டிருக்கிறேன். முதலில் எனக்குள் எழுந்த முக்கியமான ஓர் ஐயத்தைக் கேட்டுவிடுகிறேன். “நிஜ வாழ்வில் இருப்பதைத்தான் காவியம் பிரதிபலிக்கிறது. அன்றைய பண்பாட்டைக் காட்டும் ஆவணமாகச் சீவக சிந்தாமணியைக் கருதலாம்” என்று உரைத்தீர்கள்.

பதுமுகன் மணந்து உறவும் கொண்ட பெண்ணைச் சீவகன் மணந்தது அக்காலச் சூழலில் தீய ஒழுக்கமாகக் கருதப்படவில்லை என்று கூறினீர்கள். பரத்தையர் பிரிவு சங்ககாலத்தில் இருந்தது. ஆனால் ஒருவர் மணந்து உறவும் கொண்ட ஒரு பெண்ணை வேறொருவர் மணந்ததாகச் சங்கப்பாடல்களில் இல்லை என்றெண்ணுகிறேன். சிந்தாமணி எழுந்த காலக்கட்டத்தில் தோன்றிய இலக்கியங்களில் ஏதேனும் இதுபற்றிக் காட்டப்பட்டிருக்கிறதா? இதுபோன்ற மகளிர் மறுமணம் அன்றைய  பண்பாட்டில் வழக்கத்தில் இருந்ததா என்பதுதான் எனக்கு ஐயமாகும்.

தங்களின் உரைக்குத் தாங்கள் தொடுத்த முன்னுரை மிகவும் சிறப்பாக இருந்தது. சிலம்பையும் சிந்தாமணியையும் ஒப்பிட்டு சிலம்பில் நாடகத்தன்மை உண்டு அது சாமானிய மக்களின் அறத்தைப் பேசியுள்ளது என்று சொன்னது முழுக்க முழுக்க உண்மை. அதேபோல மணிமேகலை சிலம்பு அளவுக்கு மக்களை ஈர்க்காததற்கு அது நேரடியாகத் தத்துவம் பேசியதுதான் காரணமாகும் சிந்தாமணி அமங்கலமாகக் கருதும் சுடுகாட்டில் தொடங்குவது பற்றிய தங்களின் கருத்து முக்கியமானதாகும். நவீனப்பார்வையைக் காட்டுவதாகும். அதுதான் நாட்டார் மரபைக் காட்டுகிறது என்னும் பார்வை புதியது. ஏனெனில் நாட்டார் மரபுக்குச் சுடுகாடு அன்னியமானதன்று என்று எடுத்துக் காட்டினீர்கள்.

சீவகனின் பயணம் ஓர் ஆத்மாவின் பயணம் என்பதும் தங்கள் கூற்றுகளில் முக்கியமான ஒன்று. பல இலக்கியங்கள் இராமாயணம் மகாபாரதம் மற்றும் சங்க இலக்கியங்கள் கூடப் போர்க்களக்காட்சிகளைக் காட்டுகின்றன. ஆனால் எதிலுமே போர் முடிந்தபின் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தது பற்றிப் பேசவே இல்லை; சீவக சிந்தாமணி மட்டுமே அதுபற்றி எழுதியுள்ளது என்பது புதிய செய்தியாகும். தாங்கள் அதை எடுத்துக் காட்டிச் சமணர்கள் மருத்துவ சேவையை முக்கியமானதாகக் கருதினார்கள் என்று காரணமும் உரைத்தது சிறப்பான ஒன்று

.“செய்க பொருளை யாரும் செருவாரைச் செருவிக்கும்” என்பதற்குத் தகுந்த திருக்குறளை எடுத்துக் காட்டியது குறிப்பிடத்தக்க ஒன்று. அதேபோலக் கடலடி அமுது என்பதற்கு உப்பு என்னும் பொருளைக் கூறியதும், கருமணி அழுத்திய என்பதற்குக் கருமணிகள் கோர்த்த தாலி என்னும் பொருள் கொள்ளலும் சிறப்பானவை.

இறுதியில் சீவகசிந்தாமணி என்பது சமணத் துறவிகளுக்காக எழுதப்பட்டது அன்று. அது சமண இல்லறத்தாருக்காக எழுதப்பட்டது என்னும் கூற்று தங்களின் உரைக்கு மகுடம் போன்று அமைந்துவிட்டது. நவீன இலக்கிய வாசகர்கள் சீவக சிந்தாமணியை எவ்வாறு அணுக வேண்டும் என்பதைத் தங்கள் உரை மிகத் தெளிவாக விளக்கியுள்ளது.

வளவ. துரையன்

*

அன்புள்ள வளவதுரையன்

சீவக சிந்தாமணியின் காலகட்டத்தில் அந்நூலில் வரும் நண்பன் திருமணம் செய்யும் காட்சி இயல்பாக இருந்தது என நான் சொல்லவில்லை. அது அரிதான ஒரு காட்சி என்றே சொல்கிறேன். ஆனால் பின்னாளில் நாம் காணும் உடல்சார்ந்த கற்பொழுக்கம் சங்ககாலம் முதல் இல்லை என்பதை சீவகசிந்தாமணி காட்டுகிறது என்றே நினைக்கிறேன். அன்றிருந்த சாதிசார்ந்த ஒழுக்கத்தையும் அதை சமணம் இயல்பாக ஏற்றுக்கொண்டிருந்ததையும் காட்டுகிறது. சீவகசிந்தாமணியையே ஓர் உதாரணமாக கொள்ளலாம் என்றே சொல்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைதத்துவம் இன்று…
அடுத்த கட்டுரைஅனிதா அக்னிஹோத்ரி, கடிதம்