நாட்டார் தெய்வங்கள் – கடிதம்

நாட்டார்த் தெய்வங்கள் விலக்கமும் ஏற்பும்

அன்புள்ள ஜெ,

விருதுநகரிலிருந்து சாத்தூர் செல்லும் நான்குவழிச் சாலையில் ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலைக்கு  அடுத்த சிறிய “பிரதம மந்திரி கிராமிய சாலைத் திட்டத்தின்” ஒற்றைக் கிராமியச் சாலையில் திரும்பினால் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் ”கோவில் புலிகுத்தி” இருக்கிறது. ஊரின் பெயரே “கோவில் புலிகுத்தி” தான்.  எங்கள் குலதெய்வம்.

வண்ணமயமான பெரிய கோபுரம், அதன் முகப்பில் ஸ்ரீ வாலகுருநாத சுவாமி அங்காள ஈஸ்வரி அம்மன் என்ற பெயர்ப்பலகையுடன் மைய தெய்வமாக இருவரும் குடிகொண்டுள்ளனர்.

பொதுவாக குலதெய்வம் கோவிலுக்கு குடும்பத்துடன் செல்வது ஓர் அனுபவம் என்றால் தனியாகச் செல்வது தனிஅனுபவம், பூசாரிகளின் “எதிர்பார்ப்பு” குறைவாக இருக்கும். நாமும் குடும்பத்திற்கு முன் சிறிது மேலானவனாக பொறுப்போடு காட்டிக்கொள்ளத் தேவையில்லை.

அன்று குடும்பத்தின் தொலைநோக்கு நன்மையெனக் கருதி அவர்களை சிலபல தற்காலத் தொந்தரவுக்கு ஆளாக்கிவிட்டு தலைநிறைய பாரத்துடன், சரி கோவிலுக்குத்தான் சென்று வருவோமே என்று வண்டியைத் திருப்பினேன். முதல்நாள் “நாட்டார்த் தெய்வங்கள் விலக்கமும் ஏற்பும்” உங்கள் தளத்தில் வாசித்திருந்தேன்.

இந்தக் கோவிலின் சிறப்பு இது பல சாதிகளுக்கு குலதெய்வம் என்பதுதான். நாடார்கள், ஆசாரிகள், பிள்ளைகள், அய்யர்களின் ஒருபிரிவினர் மற்றும் சில சாதிகளுக்கு இது குலதெய்வம். கோவில் சுற்றுக்குள் குடியிருக்கும் விநாயகர், முருகன், பைரவர் போன்ற தெய்வங்கள் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு சமூகத்திற்கு குலதெய்வமாக இருக்கிறது.

மையத்தெய்வமாக அமர்ந்திருக்கும் ஸ்ரீ வாலகுருநாத சுவாமி, எல்லோரையும் ஒருங்கிணைத்து எல்லோருக்கும் முன்பாக பூஜையும், படையலையும் பெறுகிறார். காவல் தெய்வமாக மதில்சுவரின் வெளியே கோவிலின் வலதிடது பக்கமாக “புலிக்குத்தி கார்மேக சாமி”யும், “சங்கிலிக் கருப்பசாமி”யும்.

வாலகுருநாத சாமி

நிறைய சாதிகளின் குலதெய்வமாக இந்தக் கோவில் தொகுதி (அப்படிச் சொல்லலாமா) இருந்தாலும், புலிகுத்தி கார்மேக சாமிக்கு வருகை மற்றும் செல்வாக்கு அதிகம். அது நாடார்களின் குலதெய்வமாக இருப்பதும் அவர்களின் செல்வாக்கும் காரணமாக இருக்கலாம். அவர்களே சமீபத்தில் முழுக்கோவிலையும் எடுத்துக் கட்டி சீரும் சிறப்புமாக கும்பாபிஷேகமும் செய்துமுடித்தார்கள்.

கதைப்படி புலிகுத்தி கருப்பர் அந்தப் பகுதியில் பலகாலம் தொந்தரவு செய்துவந்த புலியைக் கொன்று அந்தப் போராட்டத்தில் உயிரிழந்தார். அவர் சந்நிதி கோவிலின் வெளியே வலது மூலையில் கோவிலின் மதில் சுவரைத் தொடாமல் இருக்கிறது.

ஏற்கனவே கொஞ்சம் குற்றவுணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்த எனக்கு கோவிலில் நுழைந்தவுடன் மனம் பொங்க ஆரம்பித்திருந்தது. உள்ளே கருவறையில் வாலகுருநாத சாமிக்கும், அங்காள பரமேஸ்வரிக்கும் விரிவான அபிஷேக அலங்காரம் நடந்து கொண்டிருந்தது.

பூணுல் அணிந்த அய்யர் அல்லாத குடும்பம் (ஆசாரியாக இருக்கலாம்) மிக விரிவாக பூஜை ஏற்பாடுகள் செய்து கொண்டு வந்திருந்தனர். இரண்டு பெண்கள், ஒருவர் வயதில் குறைந்தவர் என்பது பிறகு கவனித்தேன். பன்னீர், பஞ்சாமிர்தம் அபிஷேகம், புத்தாடை, மாலை, சந்தான அலங்காரம் என்று நீண்டுகொண்டே சென்றது.

கோவிலின் உள்அறைக்குச் சென்றதிலிருந்தே கேவ ஆரம்பித்துவிட்டேன். என்னை அறியாத ஏதோ, உடம்பு முழுவதும், பரபரப்பாக, தலையிலிருந்து உடல் வழியாக, நிறைந்து,  கண்வழியாக வழிந்து, கரைந்து சென்று கொண்டிருந்தது. அவ்வப்போது விசும்பல்கள். காரணமறியாத, காரணமறிய முடியாத காரணங்கள். பலநிமிடங்கள் அப்படியே கழிந்தது.

பூஜை முடியும் நேரத்தில் ஒரு வயதான தம்பதி கோவிலுக்குள் நுழைந்தனர். பார்த்தவுடன் பெரிய பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர் போன்ற தோற்றம் மற்றும் உடல்மொழி கொண்டிருந்தனர்.

பூஜை முடிந்தவுடன் அவர் “நீங்கள் எண்ணிவந்திருக்கும் காரியம் எல்லாம் நல்லபடியாக சிறப்பாக முடியும்” என்று நல் வார்த்தை சொன்னார்.

அந்த வார்த்தை பூஜை செய்த குடும்பத்திற்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்தது. நன்றிசார் நன்றிசார் என்று சொல்லி ஊர் தொழில் பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர்.

குலப்பூசகர் சாமிக்கு ஆராதனை செய்து பிரசாதம் வழங்கினார். என் பர்ஸிலிருந்தது நூறு ரூபாய் தட்டில் கொடுத்து பூசிக்கொண்டு, புலிகுத்தி சாமிக்கு ஆராதனை செய்யுங்கள் என்றேன்.

பூசகரோடு புலிகுத்தி சாமிக்கு ஆராதனை செய்து வரும் வழியில் வேறொரு பூசகர் கருப்பசாமி கோவிலுக்கு முன், கோவிலுக்கு வெளியே சேவல் அறுத்து கத்தியைத் துடைத்துக் கொண்டிருந்தார். சேவல் துடித்துக் கொண்டிருந்தது.

மறுபடியும் உள்ளே சென்று கொடிமரத்தின் கீழ் சிறிதுநேரம் அமர்ந்திருந்தேன். பெரியவரும் அவர் மனைவியும் அருகில் அமர்ந்தனர்.

அப்போது பெரியவர் மறுபடியும் சொன்னார்.

“நல்ல சிறப்பாக நீங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும், துடியான சாமியாக்கும் இது” என்றார்.

சட்டென்று நான் “நான் எதுவுமே கேட்கலையே என்றேன்.”

திரும்பி சற்றுநேரம் கூர்ந்து பார்த்தார். நான் திரும்பிக்கொண்டேன்.

முகம் சிறுத்து, மூக்கு சிவந்துவிட்டது. மனைவியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு எழுந்து சென்றுவிட்டார்.

பிரகாரத்திலிருந்து வெளியே வரும்போது அமர்ந்திருக்கும் அந்த ஊர் கோவில் சார்ந்தவர்களுக்கு சில்லறையாக இருந்த பணம் எல்லாம் எடுத்து பிரித்துக் கொடுத்தேன்.

மிச்சம் இருந்த சில்லறை நாணயங்களையும் ஒருவருக்கு அளித்துவிட்டு காருக்கு அருகில் செல்லும் போது கோவிலின் உள்ளேயிருந்து வயது நிரம்பிய பெரியம்மா ஒருவர் வந்தார்.

“அய்யா நான் இம்புட்டு நேரம் உள்ளே இருந்தேன், எனக்கும் குடுத்துட்டுப் போங்க” என்றார்.

உண்மையிலேயே என்னிடம் சில்லறை இல்லை.

இரண்டு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே பர்சின் உள்பையில் இருந்தது. சில்லறையாக இருந்த அனைத்தையும் முன்பே கொடுத்து விட்டிருந்தேன்.

அவர் விடவில்லை, நானும் காரில், கொண்டுசென்ற பைகளில் என எங்கேனும் கொஞ்சமாவது இருக்குமா என்று தேடி சில்லறைகள் சில எடுத்துக் கொடுத்தேன். வாங்க மறுத்துவிட்டார்.

அப்போதிருந்த மனநிலையில் நூறு ரூபாய் இருந்தாலும் கொடுத்து விட்டிருப்பேன்.

இறுதியில் இரண்டாயிரம் இருக்கும் உள் மடிப்பைக் கொஞ்சம் மறைத்துவிட்டு பர்சைத் திறந்து காட்டியவுடன் ஒரு சலிப்போடு திரும்பிச் சென்றார்.

வழியிலெல்லாம் அவர் திரும்பிச் சென்ற காட்சியும் அந்த சலிப்பும் கண் முன்னாடியே நின்றுகொண்டிருந்தது.

அன்று அலைந்த அலைச்சலும் தூக்கமின்மையும் சேர்ந்து இரவில் காய்ச்சல் பிடித்துக் கொண்டது. ஹோமியோபதி மாத்திரை எடுத்துக் கொண்டு படுத்தால் விதவிதமான, கலவையான எண்ணங்கள். கோர்வையில்லாத கனவுகள்.

சட்டென ஒரு கணம் தோன்றியது. அந்த “மதிப்பு மிக்கதென மறைத்து வைக்கப்பட்டதைத் தேடித்தானே அந்த அம்மா வந்தார்கள்” என. உடம்பெல்லாம் சிலிர்த்துவிட்டது. பாதம் முதல் கண்கள் வரை கொப்பளித்து வியர்த்துவிட்டது. சிறிது நேரத்தில் காய்ச்சலும் இறங்கிவிட்டது.

அடுத்த முறையாவது கோவிலுக்குச் சென்றால் “பர்சைக்” காலி செய்துவிட்டு வரமுடியுமா என்று முயற்சி செய்யவேண்டும்.

அன்புடன்,

சி. பழனிவேல் ராஜா

***

அமேசான் தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்  மின்நூல் வாங்க

தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் நூல் வாங்க

ஜெயமோகன் நூல்கள்

வடிவமைப்பு, கீதா செந்தில்குமார்
முந்தைய கட்டுரைஇடதுசாரிகளும் வலதுசாரிகளும்
அடுத்த கட்டுரைஇமையம் பற்றிய உரை, கடிதம்