சுவாமி ரமணகிரி- ஒரு முழுமை

சுவாமி ரமணகிரி- டேவிட் கோட்மான்

அன்புள்ள ஜெ

வணக்கம்

உங்கள் வாசகர்களில் நிறையபர் தீவிரமான சாதகர்கள். அவர்களுக்கு இந்த இடம் உதவியாக அமையலாம். குட்லாடம்பட்டி ஸ்வாமி ரமணகிரி ஆஸ்ரமம் திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் வழியில் ,வாடிப்பட்டி அருகே ,தங்க நாற்கர சாலையின் இடதுபுறம், சிறுமலை இரு கரம் கொண்டு அரவணைத்ததைப்போன்ற செழுமையான மலைச்சரிவில், சிவனின் தலையில் கங்காதேவியை போல ரமணகிரியாரின்  சிரசில் குட்லாடம்பட்டி அருவி அமைந்துள்ள அடர்ந்த காட்டில் உள்ளது.

15 ஆண்டுகளுக்கு முன்பே இந்த இடத்தைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். என்னுடைய நண்பர்கள் பலர் சென்று வந்துள்ளனர். ஒரு நண்பர் இந்த ஆசிரமத்திலேயே சில மாதங்கள் தங்கியிருந்தார். எத்தனையோ முறை இவ்வழியாக மதுரை சென்றபோதும் செல்லும் வாய்ப்பு அமையவில்லை.

அலெக்ஸண்டர் வெஸ்டின் என்ற இயற்பெயரைக் கொண்ட சுவாமிகள் ஸ்வீடன் ராஜ குடும்பத்தை சார்ந்தவர். நாவலாக எழுத தக்க அளவு திருப்பங்களை கொண்ட வாழ்வு அவருடையது.

1921 ல் பிறந்த ஸ்வாமிகளின் இளமைக்காலம் பற்றி நிறைய தொன்மக் கதைகள் கூறப்படுகிறது. பெருவிபத்து ஒன்றில் இருந்து அதிசயத்தக்க அளவில் உயிர் பிழைத்து இருக்கிறார். அது சார்ந்த கேள்விகள் அவருக்கு தொடர்ந்து இருந்திருக்கின்றன. இரண்டாம் உலகப்போரில் பங்கு பெற்றிருக்கிறார். ஒரு போரில் நேரடியாக பங்கு பெறுவது என்பது எத்தனை கேள்விகளை எழுப்ப வல்லது!

அதன்பின்பு இந்தியா வந்து பனாரஸ் பல்கலைக் கழகத்தில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் கீழ் வேதங்கள், சமஸ்கிருதம் பயின்றிருக்கிறார். நேரு, இந்திரா  உள்ளிட்ட உயர் மட்டங்களோடு தொடர்பு இருந்திருக்கிறது.

ஹடயோக சாதனையில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். இமயமலை முழுவதும் தேடலோடு அலைந்திருக்கிறார். எந்தப் புள்ளியில் தென்னகம் நோக்கி திரும்பினார் என்பது குறித்தும் பல்வேறு கதைகள் நம்பிக்கைகள் உலவுகின்றன. ரமண மகரிஷியை அறிந்த யாரோ ஒருவரின் மூலமோ, அல்லது எதிர்பாராத ஒரு சூழ்நிலையிலோ தென்னகம் வந்திருக்கிறார்.ரமணரை சந்தித்திருக்கிறார். ரமணரோடு சுவாமிகள் இருக்கும் பதிவுகள் கிடைக்கின்றன.

இவ்வளவு நீண்ட பின்னணி கொண்ட சாதகர் ஒருவருக்கு ரமணரை போன்ற ஞானதீபத்தின் அருகாமை எவ்வளவு உதவியாக இருந்திருக்கும் என்று சொல்லவேண்டியதில்லை. இடையில் உடல் நலம் கெட்டு இருக்கிறது. அதற்கு சிகிச்சை பெற வேண்டி மதுரை மற்றும் பெருந்துறையில் உள்ள மருத்துவமனைகளுக்கு வந்து சென்றிருக்கிறார்.

திண்டுக்கல் மதுரை சாலையில் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி என்ற சிறுமலை அடிவாரத்தில் கூரை வேய்ந்த மண் வீட்டில்தான் முக்தி பெறுவது வரை வாழ்ந்திருக்கிறார்.இப்போது ரமணகிரி ஆசிரமம் என்று அழைக்கப்படும் அந்த இடம் அடர்ந்த மாந்தோப்பு இல்லை மாங்காடு என்றே சொல்லலாம். 10 ஏக்கருக்கு மேல் நெருக்கமாக அமைந்த மாமரங்கள் மிக மிகக் குறைவான கட்டிடங்கள். சுவாமிகள் தனது கையாலேயே நட்டுவளர்த்த அரசமரம் மற்றும் அதன் அடியில் ஒரு பிள்ளையார் ஆலயம்.

தாடகை நாச்சியம்மன் அருவிக்கு நேரெதிரில் இந்த ஆசிரமம் அமைந்துள்ளது ஆசிரமத்தின் ஓர் எல்லையில் அருவிநீர்  ஓடுகிறது. சிவனுக்கு கங்கை போல் சுவாமிக்கு இந்த அருவி.

சுவாமி முக்தி அடைந்த பொழுது தலையில் ரத்தக் கசிவு இருந்ததாகக் கூறப்படுகிறது. சுவாமிகளின் பூதவுடல் ஆசிரமத்திலேயே சமாதி வைக்கப்பட்டு சிவலிங்க பிரதிஷ்டை செய்யப்பட்டு ஸ்ரீ ரமண லிங்கேஸ்வரராக வழிபடப்பட்டு வருகிறது.

எனக்கு தொடர்ச்சியாக ரமணானுபவ நாட்டமும் தேடலும் ஆர்வமும் இருப்பதால் இந்த ஆசிரம வளாகத்தில் சுவாமிகளின் சன்னிதியில் ரமணானுபவ நீட்சியை உணர முடிந்தது.

நாங்கள் சென்றிருந்த பொழுது அங்கே  ரமேஷ் சுவாமிகள் நீண்ட மௌனத்தில் இருந்தார். அவரின் அருகிருப்பு இதமாக இருந்தது.

பவுர்ணமி நாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன. மூன்று நாட்கள் வரை தங்க அனுமதிக்கிறார்கள். முன் அனுமதி பெற்று வரவேண்டும்.

ரமண மகரிஷி தனது கையாலேயே தேங்காய் ஓட்டில் செதுக்கி ரமணகிரியாருக்கு வழங்கிய பிச்சைப் பாத்திரம் இன்னமும் இங்கே பாதுகாக்கப்பட்டு வருகிறது. ரமணகிரியாரின் போதனைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்றை இன்னொரு பதிவில் விரிவாக எழுத வேண்டும்.

சுவாமிகள் வாழ்ந்த சிறு குடிலை பார்த்தேன். அவர்கள் கையால் நட்டு வளர்த்திய அரசமரத்தருகே சிறிது நேரம் நின்றிருந்தேன்.

அவர்கள் சமாதியில் அமர்ந்து விட்டு எழுந்து வர முடியவில்லை. ஆசிரமத்தின் மற்ற இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு கிளம்பும் முன் மீண்டும் ஒருமுறை சமாதியில் சென்று அமர்ந்திருந்தேன்.

சாமிகள் குழந்தையாக இருந்த பொழுது குடும்பத்தோடு எடுத்த புகைப்படங்கள், இளமைக்காலப் படங்கள் ,தீவிர யோகசாதனை காலகட்டத்தில் எடுத்த ஆசனங்களில் அமர்ந்திருக்கும் படங்கள் இடுந்தன. ரமணரைச் சந்தித்தபின் நிறைவிலும் கனிவிலும்  அவருள் எரிந்த நெருப்பு குளிர்ந்ததின் அடையாளமாக கண்கள் மலர்ந்திருக்க, தலையை லேசாக ஒரு பக்கம் சாய்ந்தவாறு கருணையோடு சாமிகள் இருக்கும் படமும் ஆலயச்சுவர்களில் கண்ணாடி சட்டமிட்டு அருள்பாலித்து வருகிறது.

ஸ்ரீ ரமணகிரியாரின் குளிர்ந்த நெருப்பு என்ற சொல் அங்கே சுவர்களில் பொறிக்கப்பட்டிருந்தது.அவர் கண்ட தரிசனம் அது.பெரும்பாறையில் சுரந்திருக்கும் ஈரம்.எரிமலையின் குளிர் அது.மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடர்.

ஓம் நமசிவாய….

கதிர்முருகன்

[email protected]

மு.கதிர் முருகன்

கோவை

முந்தைய கட்டுரைதேசமற்றவர்கள் – கடிதம்
அடுத்த கட்டுரைவரலாறு என்னும் மொழி : ஸ்டாலின் ராஜாங்கம்