காவியங்களை வாசித்தல்

சொல்முகம் வாங்க
பளிங்கறை பிம்பங்கள்

கலேவலா – தமிழ் விக்கி

டியர் ஜெ.மோ,

நலமா?

ஒரு வாரமாக உங்கள் சொல்முகம் வாசித்துக் கொண்டிருக்கிறேன். பொதுவாகப் புனைவுகளை வேகமாக வாசித்துவிட முடியும். அபுனைவுகளின் பக்கங்களை அவ்வளவு எளிதில் புரட்டிக்கொண்டு செல்ல முடியாது. இது என் வாசிப்பனுபவம்.

நவீன எழுத்தாளர்கள் பொதுவாக மரபு அறியாதவர்கள் என்றும் புலவர் வகையறாக்கள் மட்டுமே சங்க இலக்கியத்தைப் போற்றிக் கொண்டாடுபவர்கள் என்றும் ஒரு புரிதல் வாசகர்களிடம் இருக்கிறது. புலவர்கள் நவீனத்தை இன்னும் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் உங்களைப் போன்றவர்கள் அதில் ஆழம் கண்டு எழுதும்போது ஏற்படும் மகிழ்ச்சி எப்படிப்பட்டது என்பதை உணரத்தான் முடியும். உணர்த்துவது எளிதல்ல.

குறிப்பாக மணிமேகலை – சீத்தலை சாத்தனாரின் பளிக்கறை படிமம்!

“அந்தப் பளிக்கறை தமிழிலக்கியத்தின் மிக முக்கியமான படிமங்களில் ஒன்று , ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே என்றும் இருக்கும் பளிங்கு அறையல்லவா? இதைத்தான் சுற்றி சுற்றி வந்து இன்றுவரை இலக்கிய உலகம் ஆண் பெண் உறவாக தடவி தடவிப் பார்த்து…”

(நான் தமிழிலக்கியம் படித்தவள் ஜெ.மோ. )மணிமேகலையின் தர்க்க ஞானமும் அறிவுத்திறனும் சமூகவெளியில் காணாமல் போனதற்கான காரணங்களை இன்றும் தேடிக்கொண்டிருக்கிறேன். ஒரு பெண்ணாக அவள் வாழ்க்கையின் முடிவுகளை அவளுக்கு எடுக்கும் உரிமையை அவளைப் பெற்ற மாதவி மறுத்திருப்பதைக் கண்டு எல்லா பெண்களுக்கும்

அம்மாக்கள் எதோ ஒருவகையில் அவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள், மகளாக இருந்தப்போது இருந்த மாதவி, மணிமேகலையின் அம்மாவாக இருந்தப்போது இருந்த மாதவி. இருவரும் எவ்வளவு வித்தியாசப்படுகிறார்கள். இதற்கு வயது அனுபவம் மட்டுமல்ல காரணம், பெண்ணின் வாழ்க்கை முடிவுகளை எடுக்கும் உரிமை தனக்கிருப்பதாக அம்மாக்கள் நினைக்கும் நினைப்பும் தான் வினையாற்றுகிறது என்று நினைக்கிறேன்.

எதோ ஒருவகையில் இன்றுவரை அம்மாக்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்! வாழ்க்கையில் பெண்களின் உலகத்தில் அம்மாக்களைப் புரிந்து கொள்ள முடிவதிலலை.! என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். அப்போதும் பளிக்கறை படிமத்தின் பிரமாண்டத்தை… இன்னும் எழுதி எழுதி தீர்க்க முடியாத அந்தப் பக்கங்களை  வாசித்தும் உங்கள் அளவுக்கு அதை உணராமல் கடந்து சென்றிருக்கிறேன். உங்கள் சொல்முகம் மும்பையின் மழைக்கால மின்னலாய்… எனக்குள்..பளிச்சென அதை  உணர்த்தியது.

நன்றி ஜெ.மோ.

அன்புடன்,

புதியமாதவி,

மும்பை

அன்புள்ள புதியமாதவி,

ஐம்பெருங்காப்பியங்களில் சீவசிந்தாமணி, மணிமேகலை ஆகிய இரண்டும் நம்மால் சரியாக வாசிக்கப்படாத காப்பியங்கள். அவை ஏன் அவ்வாறு கடந்துசெல்லப்பட்டன என்பதற்கான காரணங்களை நாம் எளிமைப்படுத்திக் கொள்ளாமல் யோசிக்கவேண்டும்.

இங்கே அதிகமாக வாசிக்கப்பட்ட காவியங்கள் சிலப்பதிகாரமும் கம்பராமாயணமும். அவையிரண்டும் காவியச்சுவையில் மணிமேகலைக்கும் சீவகசிந்தாமணிக்கும் மேலானவை என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் அவை அவ்வண்ணம் வாசிக்கப்பட காவியச்சுவை மட்டுமே காரணம் அல்ல.

சிலப்பதிகாரம், கம்பராமாயணம் இரண்டுமே நாடகத்தன்மை கொண்டவை. உணர்ச்சிகரமானவை. மொழிச்சுவையும் அணியழகும் இயைந்தவை. ஆகவே அவை இயல்பாக ரசிக்கப்படுகின்றன. எந்த மேடையிலும் இவ்விரு பெருங்காப்பியங்களின் தருணங்களை அழகுறச் சொல்லி பாமரரையும் உளஎழுச்சி கொள்ளச் செய்ய முடியும். அப்பாடல்களை எவரும் மகிழும்படி நிகழ்த்திக்காட்டவும் முடியும்.

மாறாக, மணிமேகலை, சீவகசிந்தாமணி இரண்டுமே குறியீட்டு ,உருவக அழகுகள் கொண்டவை. தத்துவார்த்த ஆழம் கொண்டவை. நாடகீயத்தருணங்களும் உணர்ச்சிகரமான வெளிப்பாடுகளும் அனேகமாக இல்லாதவை. அவற்றை மேடைகளில் நிகழ்த்தி மக்களை உணர்வெழுச்சியும் நிறைவும் கொள்ளச் செய்ய முடியாது. அவை ஓரளவுக்கு அறிவுப்பயிற்சியும் ரசனையும் கொண்டவர்களுக்கு மட்டுமே உரியவை.

கம்பராமாயணம் முன்வைக்கும் தத்துவம் பின்னாளில் இங்கே ஆழமாக வேரூன்றிய பக்திஇயக்கத்தின் சாராம்சமாக அமைவது. ஆகவே கம்பராமாயணத்தின் உணர்வுகள், உருவகங்கள், கருத்துக்கள் இயல்பாகவே நமக்கு அறிமுகமானவையாக உள்ளன. அவை நேரடியாகவே நம் ஆழுள்ளத்துடன் உரையாடுகின்றன.ஆகவே இயல்பாக ஏற்பை அடைந்தது

சிலப்பதிகாரம் சற்று வேறுபட்ட வகையில் ஏற்பை அடைந்த நூல். அது சமண அல்லது பௌத்த காவியம். ஆனால் சமயப்பொறை கொண்டது. திருமாலையும் கொற்றவையையும் பாடுவது. ஆகவே அது இருபதாம் நூற்றாண்டுக்கு உகந்த மதம்கடந்த ஆன்மிகத்தை முன்வைப்பதாக வாசிக்கப்பட்டது.

அத்துடன் அதில் உள்ள மூவேந்தர் வாழ்த்து. தமிழ்நில அடையாளம் உட்பட்ட தமிழ்ப்பண்பாட்டை வரையறை செய்யும் பாடல்கள் அதை அன்று உருவாகிவந்த தமிழியநோக்குக்கு அணுக்கமானவையாக ஆக்கின. அது தமிழியக்கத்தின் முதன்மைநூல் என வாசிக்கப்பட்டது

மணிமேகலை, சீவகசிந்தாமணி இரண்டுமே அத்தகைய வாசிப்புகளைப் பெறவில்லை. அவை முன்வைக்கும் மதமும் ஆன்மிகமும் இங்கே இருந்து சுருங்கி அகன்றுவிட்டிருந்தன. நவீனச்சூழலுக்குரிய பண்பாட்டு அரசியல் கூறுகள் அவற்றில் இல்லை. அவை சமண,பௌத்த நூல்களாகவே நின்றன.

மணிமேகலை, சீவகசிந்தாமணி இரண்டும் மரபான காவியவாசிப்பு முறைமைப்படி வாசிக்கப்பட்டன. அணிகளை ரசிப்பது, முன்வைக்கப்படும் விழுமியங்களை ஆராய்வது, உணர்ச்சிகரத் தருணங்களை வளர்த்தெடுத்துக்கொள்வது ஆகிய மூன்றுமே மரபான காவியவாசிப்புக்குரிய வழிகள்.

ஆனால் காவியங்களுக்கு நவீன வாசிப்புமுறை ஒன்று ஐரோப்பிய இலக்கியவிமர்சனம் வழியாக திரண்டு வந்திருக்கிறது. காவியங்களை குறியீடுகளாக, பண்பாட்டு நுண்பொருட்களின் தொகைகளாக வாசிப்பது அது. காவியத்தின் அணிகள் வர்ணனைகளை மட்டுமல்ல இயல்பான நிகழ்வுகளையும்கூட அவ்வண்ணம் வாசிப்பது.

ஏனென்றால் ஒரு காவியம் எழுதப்பட்டபோது நேர்ப்பொருள் அளிக்கும்படி எழுதப்பட்ட நிகழ்வு கூட எவ்வகையிலோ குறியீடுதான். அதற்கு ஒரு குறியீட்டுப்பொருள் இருப்பதனால்தான் அது காவியத்தில் இடம்பெற்றிருக்கிறது, காலப்போக்கில் குறியீட்டுப்பொருள் பெற்றுமிருக்கிறது என கருதுவது.

அவ்வாறான வாசிப்பு நாம் ஏற்கனவே வாசித்துக் கடந்துசென்ற காவியங்களை முற்றிலும் புதிய பொருளில் வாசிக்க வைக்கும். காவியங்கள் மிகப்பெரிய அளவில் விரிவடையும். காவியங்களினூடாக நாம் ஒரு பண்பாட்டை முழுமையாக வாசித்தெடுக்க முடியும்

உதாரணமாக, ஒரு காட்சி. சிலப்பதிகாரத்தில் கவுந்தி பூம்புகாரிலிருந்து கண்ணகி கோவலுடன் மதுரைக்குச் செல்லும் வழியில் ஒரு குடிகாரன் தன் தோழியுடன் எதிரே வருகிறான். இந்த இருவரும் யார் என்று கேட்கிறான். கவுந்தி என் மக்கள் என்கிறாள். இருவரும் உங்கள் மக்கள் என்றால் உடன்பிறந்தார் நடுவே திருமணம் நடந்திருக்கிறது என்று அர்த்தமா என அவன் கேட்கிறான். கவுந்தி அவர்களைச் சாபம் போட்டு நரியாக ஆக்க அவர்கள் ஊளையிட்டபடி காட்டுக்குள் ஓடிச்செல்கிறார்கள்.

இந்தக் காட்சி ஒரு காவியத்தில் ஏன் இடம்பெறுகிறது? இது கதையில் எந்த விசேஷமான பங்கும் ஆற்றவில்லை. ஆனால் தமிழ்ப்பண்பாட்டுப் பரிணாமத்தின் பின்னணியில் வைத்து இதைப்பார்த்தால் மிகப்பெரிய ஒரு மாற்றத்தின் கதையை இது காட்டுகிறது.

சங்ககாலம் என்பது கள்ளும் ஊனுணவும் பெருகியிருந்த காலகட்டம். அதன் தொடக்கத்தில் ஒருவகையான பழங்குடித்தன்மையுடன் கள்ளுண்டு களியாடுவது பாராட்டப்படுகிறது. பாணர்கள் மன்னர்களுக்கு நிகராக மதிக்கப்படுகிறார்கள்.

ஆனால் சங்ககாலத்தின் இறுதியில் பாணனும் விறலியும் இழிவாக பாங்கனும் பரத்தையருமாக குறிப்பிடப்படுகிறார்கள்.தொன்மையான தமிழ்ப் பழங்குடிப் பண்பாட்டின் வாழ்க்கைமுறை திரிந்து களியாட்டவாழ்க்கையாக மாறியிருப்பதை கலித்தொகை காட்டுகிறது. அதன்மேல் கண்டனத்தை பல கலிப்பாடல்கள் சுட்டுகின்றன.

சங்கம் மருவியகாலம் என்பது சமண,பௌத்தப் பெருமதங்கள் தமிழ்மண்ணில் வேரூன்றிய காலகட்டம். சங்ககாலத் தமிழ்நாட்டின் பழங்குடித்தன்மைகொண்ட வாழ்க்கைமுறை சமண பௌத்த மதங்களால் கடுமையாக மறுக்கப்பட்டது. சமண,பௌத்த மதங்களின் அறவியலும் ஒழுக்கவியலும் முன்வைக்கப்பட்டன.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் அறவியல் என்பது சங்ககால அறவியலை சமண, பௌத்த மதங்களின் நோக்கில் மறுவரையறை செய்வதாகும். அதில் குடியும் ஊனுணவும் பரத்தமையும் பெரும் பாவமாகச் சொல்லப்பட்டன என்பதை நாம் குறளிலேயே காண்கிறோம்.

சிலப்பதிகாரத்தின் அறவியலும் குறளுடையதே. கவுந்தி அதன் வடிவம். அங்கே அவள்முன் களிமகனும் பரத்தையுமாக வந்து நின்றிருப்பவர்கள் சங்ககாலத்தின் பாணனும் விறலியும்தான். அவர்களை நரிகளாக்கி காட்டுக்குள் ஊளையிடும்படி துரத்துகிறது சமணம். அது ஒரு பெரிய குறியீட்டுச்செயல். தமிழ்ப்பண்பாட்டில் நடந்த ஒரு பெரிய மாற்றத்தின் சித்தரிப்பு.

இத்தகைய நவீன வாசிப்பு மணிமேகலை, சீவகசிந்தாமணி இரண்டுக்கும் அளிக்கப்பட்டிருக்கவேண்டும். அதன்வழியாக அக்காவியங்கள் மீண்டெழுந்திருக்கும். ஆனால் இங்கே மரபிலக்கியம் வாசிப்பவர்களுக்கு நவீன அழகியல்கொள்கைகள் அறிமுகமில்லை. நவீன வாசகர்கள் மரபிலக்கியம் வாசிப்பதில்லை.

[மணிமேகலை பற்றி அ.மார்க்ஸ் போன்றவர்கள் புதிய கோணத்தில் சில எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இலக்கிய ரசனை என்பதே இல்லை. இலக்கியப்பிரதியில் சமகால அரசியலை கண்டடைவது மட்டுமே அவர்களின் வாசிப்பு]

மணிமேகலையின் கதாபாத்திரம் தமிழிலக்கியத்தில் தனித்தன்மை வாய்ந்தது. அவள் துறவி மட்டுமல்ல, அன்னையும்கூட. உலகுக்கு உணவூட்டும் பேரன்னை. மொத்த தமிழிலக்கியமும் இதுவரை உருவாக்கிய பெண் கதைமாந்தர்களிலேயே மிகப்பெரிய ஆளுமை மணிமேகலைதான். தன்னுள் இருந்து தன் தெய்வத்தை எடுத்து உலகுபுரந்தவள்.

ஆனால் இங்கே கண்ணகிதான் முன்வைக்கப்பட்டாள். கண்ணகி தமிழ்ச்சூழலை பாதித்ததுடன் ஒப்பிட்டால் மணிமேகலை அறியப்படாத ஆளுமையேதான். ஏன்? அதை ஆராய நான் முன்பு சொன்ன காவிய வாசிப்பு முறைமை அவசியமானது.

சிலப்பதிகாரம்- மணிமேகலை காலகட்டத்திற்குப்பிறகு வருவது சோழர்காலம். அது இங்கே தமிழ்நிலத்தின் முதல் பேரரசை உருவாக்கியது. பேரரசுகள் நன்கு வகுக்கப்பட்ட உறுதியான அடித்தளம் மீது நிலைகொள்பவை. பேரரசுகளுக்கு அடித்தளக் கற்களாக பெருமதங்கள், திட்டவட்டமான ஒழுக்கவியல், இறுக்கமான சமூகக்கட்டமைப்பு ஆகியவை இருக்கும். சோழர்காலத்தில் அவை உருவாயின.

அவற்றை உருவாக்கும்பொருட்டு இயல்பாகவே காவியங்கள் உருவாகி வந்தன. முதன்மையானது கம்பராமாயணம். அக்காவியங்கள் மற்றும் புராணங்களிலுள்ள பெண்களைப் பாருங்கள். அந்தப் பெண்கள் எல்லா வகையிலும் மணிமேகலைக்கு எதிரானவர்கள். அவர்கள் குடும்பத்தை கட்டிக்காக்கும், சமுக அமைப்பை நிலைநிறுத்தும் குலமகள்கள். கண்ணகி அந்த குலமகளுக்கான அடையாளம். கம்பனின் சீதை கண்ணகியின் மாபெரும் வடிவம்.

சிற்பங்களில் வரும் உமை அந்த குலமகளின் தெய்வீகத் தோற்றம். ஆடும் அரனுடன் ஆடுபவள். அவன் கொஞ்சும் சிறுமியென மடியில் அமர்ந்தவள். அவனருகே மைந்தருடன் அமைந்தவள். உலகம்புரக்கும் பேரன்னையாக இருந்தாலும் குலமகள். எத்தனை மகத்தான கல், செம்பு, ஐம்பொன் சிற்பங்கள். அவை உருவாக்கிய ஆழுள்ளச் செல்வாக்கு என்ன என்று எண்ணிப்பாருங்கள்.

அந்தவரையறை உருவானதுமே மணிமேகலைக்கான இடம் தமிழுள்ளத்தில் இல்லாமலாகியது. மணிமேகலைக்கு துணைவனே இல்லை. தேவைப்படவில்லை. அவளால் தன்னுள்ளேயே நிறைவும் முழுமையும் கொள்ள முடிகிறது. மணிமேகலை காதல்கொள்ளவில்லை. மானுட உணர்வெழுச்சிகள் எதையுமே அடையவில்லை. மணிமேகலையின் நாட்டம் தத்துவத்தில்தான். அத்தகைய விடுதலைகொண்ட பெண் குறித்த அந்த உருவகமே தமிழ் உளவியலில் இல்லை.

ஆனால் மணிமேகலையை புதிய காவிய இயல் கண்டடையக்கூடும்.   அதைத்தான் நான் அறிமுகம் செய்ய முயல்கிறேன்.

ஜெ

பௌத்தம் கடிதங்கள்

பளிங்கறை – கடிதங்கள்

சீவகசிந்தாமணி, உரையாடல்

சீவகசிந்தாமணி- கடிதம்

முந்தைய கட்டுரைநுரையின் ஒளி
அடுத்த கட்டுரைகண்ணனும் காந்தியும் – கடிதம்