இருட்கனி, வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

‘வெண்முரசு’ நாவல்தொடரில் 21ஆவது நாவல் ‘இருட்கனி’. கதிரவன் இந்தப் பூமிக்கு வழங்கிய பெருங்கொடைப்பழம் கர்ணன். ஒளியின் துளியே இனிய கனியானது போன்றவன் கர்ணன். பெரும்பலிகளையும் நீங்கா வஞ்சங்களையும் ஆகப்பெரிய கீழ்மைகளையும் கொண்டு ஊழால் வேலியிடப்பட்ட அந்தக் கனி, பிறருக்கு இருளில் இருக்கும் கனியாகத்தான் தெரியும்.

மிகக் குறைந்த ஒளியே இருள். மனிதர்கள் மிகக் குறைந்த ஒளியுடையவர்கள் என்பதால், அவர்களின் பார்வைக்குத் தெரிபவை அனைத்தும் இருள்தான். அவர்கள் இருள் என அறியும் அனைத்துமே ஒளிதான். அவர்கள் அறிந்த கர்ணன் இருளின் துளியே கசப்புக் கனியானது போன்றவன்.

“கனிகளில் இனிய கனி இது. அறமன்றிப் பிறிதிலாது மண்ணில் வாழ்ந்து நிறைந்தவன். உடல்முழுமை கொண்ட அழகன். கனிந்து தன்னை அத்தெய்வத்தின் பலிபீடத்தில் வைத்தவன்”.

கொடிக்குத் தெரியும் தன்னில் மலர்ந்த மலரின் மணம். மரத்துக்குத் தெரியும் தான் விளைவித்த கனியின் இன்சுவை. கதிரவனுக்குத் தெரியும் தன் மகனின் அகவொளி. அந்த ஒளிமகனின் உயிர்ச்சுடர் அகன்ற தருணத்தைப் பற்றி விவரிக்கிறது இந்த ‘இருட்கனி’ நாவல்.

நாட்டார் இலக்கியத்தில் ‘ஒப்பாரி’ என்ற ஒன்று உண்டு. சங்க இலக்கியத்தில் ‘கையறுநிலை’ என்ற ஒரு துறை உண்டு. இந்த இரண்டுக்கும் அகவயமாகப் பெரிய ஒற்றுமை உண்டு.

ஒப்பாரி என்பதை ஒப்பு + ஆரி என்று பிரித்து “ஒப்புச் சொல்லி அழுதல்” என்று பொருள் கொள்ளலாம். ஒப்பாரியைப் பிணைக்கானம், இரங்கற்பா, இழவுப்பாட்டு என்றெல்லாம் கூறுகின்றனர். இறந்தவர்களை நினைந்து நினைந்து, அவர்களின் குணவியல்புகளைப் பாராட்டியும் அவர்களின் இழப்பினை ஈடுசெய்யவே முடியாது என்று குறிப்புணர்த்தியும் அழுது அழுது பாடப்படும் பாடல்களே ஒப்பாரிப்பாடல்கள் ஆகும்.

கையறுநிலை (கை + அறு + நிலை); கை அறுபட்ட நிலை. அன்பு செய்த அரசன் இறந்துவிட, அவனைச் சேர்ந்தோர் அந்த இழப்பை குறித்து மனம் தளர்ந்து இரங்கலாகப் பாடுவது கையறுநிலை.

“வெருவரும் வாளமர் விளிந்தோன் கண்டு

கருவி மாக்கள் கையறவு உரைத்தன்று.

(விளிந்தோன் = இறந்தவன்; கையறவு = துன்பம்)

தங்களைப் பேணிய கரந்தையான் ஒருவன் ஆநிரை மீட்புப் போரில் இறந்ததனால் செய்வது இன்னதென்று அறியாத பாணர் வருந்தியதை உரைக்கின்ற துறையாதலின் கையறுநிலை எனப் பெற்றது. வாளினைக் கொண்டு போர் புரியும் போர்க்களம், அச்சம் வருவதற்குக் காரணமாக உள்ளது. இத்தகு போர்க்களத்தில் ஆநிரை மீட்கப் போரிட்ட கரந்தை மறவன் இறந்துபட்டான். அவன், மறவன் மட்டுமன்று; பாணர், பொருநர் முதலிய இசைக் கலைஞர்களான சுற்றங்களைப் பாதுகாத்த புரவலனும் ஆவான். அவனுடைய இறப்புப் பாண்மக்களைச் செய்வதறியாத நிலைக்குக் கொண்டு சென்றது. சென்ற அந்நிலையை உரைப்பது ‘கையறு நிலை’ என்னும் துறை ஆகும்.

“நாப்புலவர் சொல்மாலை நண்ணார் படைஉழக்கித்

தாப்புலி ஒப்பத் தலைக்கொண்டான் – பூப்புனையும்

நற்குலத்துள் தோன்றிய நல்லிசையாழ்த் தொல்புலவீர்

கல்கொலோ சோர்ந்திலஎம் கண்.

பகைவர் படையைப் புலிபோலக் கலக்கிய வீரன் வீழ்ந்து கிடக்கிறான். அதைக் கண்டும் நம் கண்கள் இற்றும் வீழவில்லை. கண்ணீரும் சோரவில்லை. அவை கல்லோ!”

வேள்பாரியின் நண்பரும் புலவருமான கபிலர், வேள்பாரியின் இறப்பிற்குப் பின் பறம்பு நாட்டின் அழிவைப் பற்றி மனம் வருந்தி இயற்றிய கையறுநிலைப் பாடல் புறநானூற்றின் 118ஆவது பாடலாக இடம்பெற்றுள்ளது.

“அறையும்  பொறையு  மணந்த  தலைய

எண்ணாட்  டிங்க  ளனைய  கொடுங்கரைத்

தெண்ணீர்ச்  சிறுகுளங்  கீள்வது  மாதோ

கூர்வேற்  குவைஇய  மொய்ம்பிற்

றேர்வண்  பாரி  தண்பறம்பு  நாடே. (புறநானூறு : 118)

பாறைகளையும் சிறு குன்றுகளையும் கொண்ட இடமாக, எட்டாம் நாள் நிலவு போல வளைந்த கரையை உடைய தெளிந்த நீர் நிறைந்த சிறிய குளம், கூரிய வேல் ஏந்திய திரண்ட தோள்கள் கொண்டவனும், தேர்களைப் பரிசாகக் கொடுத்தவனுமான பாரியின் குளிர்ந்த பறம்பு மலை நாட்டில் இன்று பாதுகாப்பார் இன்றி உடைந்து கெட்டழிந்து போகின்றது.

இளங்கொடி தன்னுடைய பற்றுக்கோட்டினை இழந்து தவிக்கும் நிலையது. அந்த இளங்கொடி இதுநாள்வரை தனக்குப் பற்றுக்கோடாக இருந்த அந்த ஏணியின், பிடிமானத்தின் வலுவினை மனம்திறந்து எடுத்துரைப்பது போன்றது அது. கர்ணன் எண்ணற்றவர்களுக்குப் பற்றுக்கோடானவன். அவனின் எதிரிகளும் ஒருவகையில் தங்களின் உள்ளத்தில் ஓரத்தில் அவனை விரும்பத்தான் செய்தனர். அந்த அளவுக்குக் கருணையும் பேராண்மையும் கொண்டவன். இந்த நாவல் முழுக்கவே கர்ணனை நினைத்துப் பிறர் தம் மனத்தளவில் ஒப்பாரி வைப்பதாகவே எண்ண முடிகிறது. கர்ணனைச் சார்ந்தவர்களும் கர்ணனுக்கு எதிராக நின்றவர்களும் கையற்று வருந்தும் நிலையைக் காணமுடிகிறது.

போர் நெறிமுறைகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மானுட நெறிகளையும் மீறி கர்ணன் போர்க்களத்தில் வீழ்த்தப்பட்டதனையும் அவனின் மரணத்தையொட்டி அவனைச் சார்ந்தோரின் உள்ளங்களில் நிகழும் அவனைப் பற்றிய நினைவுப் பெருக்கையும் கர்ணனின் நினைவுத் தடம் ஆழமாகப் பதிந்துள்ள இடங்களையும் முழுமையாகச் சொல்ல விழைந்துள்ளார் எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள். இந்த ‘இருட்கனி’ நாவல் முழுக்கவே கர்ணனுக்காகப் பாடப்பட்ட மாபெரும் இரங்கற்பாவோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

பொதுவாகவே பெரும்ஆளுமைகளைப் பற்றிய குறும்படங்களை இயக்கும் இயக்குநர்கள் அந்தக் குறும்படத்தை ஆளுமைகளின் மரணத்திலிருந்தே தொடங்க விரும்புவர். ஆளுமைகளைப் பெரிய வட்டமாக உருவகித்துக்கொண்டால், மரணம் என்பது, அந்த வட்டத்தின் விளிம்பு. அவர்களின் ஆளுமை என்பது, அந்த வட்டத்தின் மையப்புள்ளி. விளிம்பிலிருந்து மையத்தை நோக்கிய நகர்வாகவே அந்தக் குறும்படங்கள் அமையும். இது ஓர் உளவியல்சார்ந்த உத்தி. அந்த ஆளுமையைப் பார்வையாளர்களின் மனத்தில் உறையச் செய்ய இந்த உத்தி பெரிதும் பயன்படும். மகாத்மா காந்தியடிகள், கர்மவீரர் காமராஜர் ஆகியோரைப் பற்றிய குறும்படங்களை இதற்குச் சான்றாகக் காட்டலாம்.

இந்த நாவல் கர்ணனின் களவீழ்ச்சியிலிருந்து தொடங்கி, கர்ணன் எவ்வாறு அந்தப் பதினேழாம் நாள் போரினை எதிர்கொண்டான் என்பதை விரித்துச் சொல்லி, கர்ணனின் ஆகப்பெரிய கொடையாளுமையை நெருங்கிச் சென்று நிறைவு பெறுகிறது. அதனாலாலேயே இந்த நாவலின் நிறைவில் கர்ணன் நம் மனத்தில் பலமடங்கு உருப்பெற்று, நீங்கா இடம்பெற்றுவிடுகிறான்.

ஆம்! அவன்தான் மூத்த பாண்டவன். அவனே பேரறச்செல்வன். அவன்மட்டுமே பெருங்கொடையாளன். தன்னை நோக்கிவந்த அனைத்துக் கீழ்மைகளையும் தன் காலடியில் கிடத்தி, நசுக்கி, தன்னறத்தாலேயே, தற்கொடையாலேயே எழுந்து நின்றவன். இனி, என்றும் எல்லோர் நெஞ்சிலும் நிலைகொள்பவன் அவனே!.

போர்க்களத்தில் ஆயுதம் இழந்தவர்கள், ஊர்திகளை இழந்தவர்கள் பொழுதிடைகோருதல் ஒருமுறைமை. தேர்ச்சக்கரத்தை மீட்பதற்குப் பொழுதிடை கோரவில்லை. தன் வாழ்நாளில் யாரிடமும் எதையும் கோரிப்பெறாதவன் கர்ணன். அதனால்தான் அவன் போர்க்களத்தில் தன் தேர்ச்சக்கரம் பள்ளத்தில் புதைந்தபோதும் பொழுதிடை கோரவில்லை. ஆதலால், கர்ணன் தன் உயிரைக் கொடையாகத்தான் அர்சுணனுக்கு வழங்கினான் என்றே கருதமுடிகிறது.

அர்சுணனிடம்அவன் இறப்பைத் தேரவேண்டும்விழையாது உயிர்துறப்பதில்லை சான்றோர்…” என்று இளைய யாதவர் கூறினார்.

விண்மீன்கள் சுடர வாய்ப்பளித்து சூரியன் தானே விரும்பித் தன் கதிர்களை ஒடுக்கிக்கொள்வதுபோலக் கர்ணன், இனி இவ்வுலகில் அர்சுணனே பெருவில்வீரனாகத் திகழ வேண்டுமென விரும்பி, அவனுக்கு வழிவிட்டுத் தன்னுயிரையும் கொடையாகவே கொடுத்தான்போலும்.

 “சாத்யகி கர்ணனின் அம்புகளால் சிகண்டி எக்கணமும் உயிர்துறப்பார் என்று எதிர்பார்த்தான். திருஷ்டத்யும்னன் தன்னைக் கருதியபடி போரிட சிகண்டி எதையும் எண்ணா படைமடத்துடன் போரிட்டார்.”

என்ற ஒரு குறிப்பு இந்த நாவலில் இடம்பெற்றுள்ளது. அது என்ன ‘படைமடம்’?

புறநானூறின் 142 பாடலில் படைமடம் பற்றிய  செய்தி இடம்பெற்றுள்ளது. இது புலவர் பரணர் வையாவிக் கோப்பெரும் பேகனைப் பற்றிப் பாடிய பாடல்.

“அறுகுளத்து உகுத்தும், அகல்வயல் பொழிந்தும்,

உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும்,

வரையா மரபின் மாரி போலக்,

கடாஅ யானைக் கழற்கால் பேகன்

கொடைமடம் படுதல் அல்லது,

படைமடம் படான் பிறர் படைமயக் குறினே. (புறநானூறு – 142)

வயலிலும் குளத்திலும் களர்நிலத்திலும் வேறுபாடு இன்றி ஒரே தன்மையில் பெய்யும் மழை போன்று, இரவலர் எத்தகுதியினராயினும் வரையாது ஒப்பக் கொடுக்கும் இயல்பினன் பேகன். கொல் யானையும் வீரக்கழலும் உடைய அவன், கொடையின் கண்ணே இவ்வாறு மடமையுடையவன். ஆனால், போரில் தன்னொத்த வீரருடன் பொருபவனேயன்றித் தனக்குத் தகுதியற்றாருடன் பொருதும் மடமையோன் அல்லன்.

ஆம்! சிகண்டிக்குத் தன் அன்னையின் (அம்பையின்) ஆணையைத் தவிர வேறு எதுவும் பெரிதல்லவே. அவன் தன்னையும் கருதாதவன். கர்மமே கண்ணாகியவன். அவனால் தனக்குத் தகுதியுடைய யாருடனும் படைமடத்துடன் பொருதமுடியும்தான்.

அர்சுணனுக்கு இளைய யாதவர் குருஷேத்திரப் போர்க்களத்தில் தேர் ஓட்டுவதாலேயே பதினேழாம் நாள் போரில் கர்ணனுக்குச் சல்லியர் தேர் ஓட்டவேண்டும் என்று முடிவாகிறது. இளைய யாதவருக்குச் சல்லியர் இணையா? என்று உள்ளம் வினா எழுப்பினாலும் ஏதோ ஒரு புள்ளியில் இளைய யாதவரும் சல்லியரும் நெருங்கியமைகிறார்கள். அது எந்த இடம் என்பதை இந்த நாவலில் கண்டடைய முடிகிறது. அது போர்க்களத்தில் சல்லியர் கர்ணனுக்கும் வழங்கும் அறிவுப் பகுதி. அங்கேயே இளைய யாதவரும் சல்லியரும் விலகி அமையும் புள்ளியையும் காணமுடிகிறது. இளைய யாதவர் எதிர்காலத்தில் நின்று அர்சுணனுக்கு அறவுரைகளை வழங்குகினார். ஆனால், சல்லியரோ இறந்தகாலத்தில் நின்று கர்ணனுக்கு அறவுரைகளை வழங்குகிறார். ஆம், அவர்கள் விலகி நிற்பது இந்தக் கால வேறுபாட்டில்தான்.

சல்லியர் கர்ணனிடம், நான் இங்குச் சொல்வன அனைத்தும் என் வாழ்நாளில் அறிந்தவை. தந்தையர் மைந்தரிடம் நூலில் கற்றவற்றை, பிறர் சொல்லி அறிந்தவற்றைச் சொல்வதில்லை. பட்டு உணர்ந்தவையே அவர்களிடம் சொற்களாகின்றன. இவை தந்தைசொல் என உளம்கொள்! நான் இவற்றை என்னுள் இருந்தே அறிந்திருக்கிறேன். நான் கொண்ட நடிப்புகள், நான் பூண்ட மாற்றுருக்கள், நான் வெளிப்பட்ட தருணங்கள் வழியாக நான் உணர்ந்தமைந்த மெய்மைகள் இவை. இவற்றைக் குருதிகொடுத்து அறிந்திருக்கிறேன்’’ என்றார்.

கர்ணனின் பிறப்பு முதல் இறப்பு வரை அவனைப் பின்தொடர்வது ‘சூதன்’ என்ற இளிவரற்சொல்தான்.

சிவதர் சுப்ரதரிடம், வாழ்ந்தநாள் வரை அரசரைச் சூதர் என்றீர்கள். இப்போது அரசியைச் சூதப்பெண் என்று சிறுமை செய்கிறீர்களா?” என்றார்.

ஒருவகையில் அந்தச் சிறுமையைப் புறத்தள்ளும் வகையில்தான் கர்ணனின் முதல் மனைவியும் பட்டத்தரசி அல்லாதவருமான அரசி விருஷாலியின் உடன்கட்டை ஏறும் சடங்கு நிகழ்கிறது. அதை நிகழவிடாமல் தன்  சூழ்ச்சிச் சொல்லால் தடுக்க நினைத்தார் சகுனி.

கர்ணனின் இளைய மகனும் அங்கநாட்டு இளவரசனுமான பிரசேனனிடம் சகுனி,

எண்ணி நோக்குக! இந்தச் சிதை வெறும் எரி அல்ல. இது ஓர் அரியணை. தேவர்களுக்குரிய பொன்னால் உருவாக்கப்படுவது. இதை அரசியிடம் சொல்க! அவர் அங்கநாட்டு அரியணையிலேயே அமரத் துணியாதவர். தேவர்கள் வாழ்த்தும் இந்த விண்ணக அரியணையில் அவர் அமர விரும்பமாட்டார்

என்றார். இதனை ஏற்ற பிரசேனன் சென்று தன் அன்னையின் விருப்பத்தை அறிந்துவந்து, தன் அன்னையின் முடிவுடன் தன்னுடைய முடிவினையும் இணைத்து, சகுனியிடம் அறிவிக்கிறான்.  அதற்குச் சகுனி மறுப்புத் தெரிவித்த போது,

“பிரசேனன் கூர்ந்த விழிகளுடன், எந்தை ஷத்ரியர் என்றால் அன்னையும் ஷத்ரியரே. அவருடைய உள்ளத்தமர்ந்த அரசி அவரே. உடன் சிதையிலும் அமரட்டும்என்றான். இங்கே அதற்கு ஒப்புதல் இல்லை…” என்றார் சகுனி. ஏன்?” என்று பிரசேனன் கேட்டான். ஏனென்றால் அங்கரும் ஷத்ரியர் அல்ல, அவர் துணைவியும் ஷத்ரியர் அல்லஎன்று சகுனி சொன்னார். அவர் ஷத்ரியர் என நான் உரைக்கிறேன். அதை மறுக்கும் எவரும் அங்கநாட்டுடன் போரிடலாம். அன்றி தனிப்போரில் என்னை எதிர்க்கலாம். எதிர்ப்பவரை வென்று நிறுவுகிறோம், எந்தையும் எங்கள் குடியும் ஷத்ரியர்கள் என்று. நூல்கள் கூறும் நெறி அதுவே.சிறுவன் எனத் தெரிந்தவனில் வந்த மாற்றம் சகுனியைப் பதறச்செய்தது. அவன் ஒருகணத்தில் கர்ணன் என ஆகிவிட்டதுபோல் தோன்றியது.”

ஆம்! கர்ணன் தன் மரணத்துக்குப் பின்னால் தன் இளைய மகனின் வடிவில் எழுந்து வந்து, தன்னை ஷத்ரியன் என்று நிறுவிச்சென்றதாகவே, நிலைநாட்டிச் சென்றதாகவே உணரமுடிகிறது.

மகாபாரதத்தில் பெரும்பாதி சிறியதும் பெரியதுமான போர்க்களங்கள்தான். ‘வெண்முரசு’ நாவல்தொடரிலும் செம்பாதி அவையே நிறைந்துள்ளன. நாம் நேரில் பார்த்திராத போர்க்களத்தை எத்தனை விதமாக உரைத்தாலும் நம்மால் புரிந்துகொள்ள முடியாதுதான். இதுபற்றிச் சுப்ரதர் சிவதரிடம் கூறும் ஒரு வரியையே நான் இங்கு எடுத்தாள விரும்புகிறேன்.

சுப்ரதர், சிவதரிடம் “நான் எத்தனை சொன்னாலும் போரை நேரில் காணாத உமக்கு அது புரியாது. அதைப் பெருங்காவிய ஆசிரியர் ஒருவர் எழுதிக் காட்டலாகும்” என்றார்.

இந்தக் கூற்று உண்மைதான். ஆனால், போர்க்களக்காட்சியை வாசகருக்குத் தன் எழுத்தால் மனக்காட்சியாக்கியுள்ளார் எழுத்தாளர். ‘பெருங்காவிய ஆசிரியர் ஒருவர் எழுதிக்காட்ட முடியும்’ என்ற அந்த வரியை எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் மெய்ப்பித்துள்ளார். ‘இக்காலத்துப் பெருங்காவிய ஆசிரியர் இவரே!’ என்பேன்.

முனைவர் . சரவணன், மதுரை

‘திசைதேர்வெள்ளம்’ வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

கார்கடல் வாசிப்பு முனைவர் ப சரவணன்

‘எழுதழல்’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன் 

கிராதம் முனைவர்  முனைவர் ப சரவணன் மதுரை

சொல்வளர்காடு – முனைவர் ப சரவணன் மதுரை

‘செந்நா வேங்கை’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன், மதுரை  

‘இமைக்கணம்’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன்

பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்,

‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்

காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை  

‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை

‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்

வண்ணக்கடல் வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

முதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன்

முந்தைய கட்டுரைநிலவும் மழையும்- 3
அடுத்த கட்டுரைதன்னறமும் செயலும் – கடிதங்கள்