ஒன் பை டூ- மீண்டும்

ஒன்றின் கீழ் இரண்டு

ஜெ

ஒன் பை டு படம் வந்து இத்தனை காலம் சென்று, இன்னும் பார்க்காதவர்களை பார்க்கத் தூண்டும் ரிவ்யு.

நாவல் போலவே பல்வேறு அடுக்குகள் என அமைந்த திரைக்கதை.ஒரு துப்பறியும் த்ரில்லர் கதை. ஒரு சைகாலஜிகல் த்ரில்லர் கதை. ஒரு காதல் கதை. ஒரு விடாக்கண்டன் கொடாக்கண்டன் கதை. அத்தனையும் சரிவிகித கலவையில் அமைந்த எமோஷனல் டிராமா.

என் புள்ளைய என்னய மீறி தொட விட மாட்டேன் என்று சொல்லும் அப்பா, அங்கே துவங்கும் இழுபறி, ஒரு பெரிய உணர்ச்சிக் கொந்தளிப்பான பல்வேறு பாத்திரங்களுடே ஆன பயணித்திருக்கும். பிறகு,சரி இப்போ என்னை அரஸ்ட் பண்ணிக்கோ என்று அந்த அப்பா பணியும் இறுதி காட்சியை நெருங்கும் போது, ஹய்யோ என்றொரு பெருமூச்சு எழுந்தது.

எனக்குப் பிடித்த லோகிததாஸ்  திரைக்கதைகளில் ஒன்று போல ஒரு பிரமாதமான உணர்ச்சிகரமான சுழற்றி அடிப்பு அனுபவம்.

Mx player இல் இலவசமாக காணக் கிடைக்கிறது. தளத்தில் லிங்க் கொடுங்க. உங்க வாசகர்கள் கிட்ட இந்த திரைக்கதை  அனுபவம் முழுசா போய் சேரட்டும்

கடலூர் சீனு

அன்புள்ள சீனு,

ஒவ்வொரு திரைப்படம் வெற்றியடையும்போதும் எழுத்தாளர்களில் சிலர் ஒரு குமுறலை முன்வைப்பார்கள். சினிமாவுக்கு கிடைக்கும் இந்தக் கவனமும் கொண்டாட்டமும் பத்து சதவீதமாவது இலக்கியத்திற்குக் கிடைக்காதா என்ன? வாய்ப்பில்லை. ஏனென்றால் சினிமா ஒரு கூட்டுக்கொண்டாட்டம். இலக்கியம் ஓர் அந்தரங்க ரசனையுலகம். மிக அரிதாகவே இலக்கியப்படைப்புகள் கூட்டாகக் கொண்டாடப்படுகின்றன. அதுகூட ஒரு சிறு ரசனைவட்டத்திற்குள்தான்.

ஆம், மேல்நாட்டில் அப்படி சிலசமயம் இலக்கியப்படைப்புக்கள் கூட்டுக்கொண்டாட்டத்திற்கு ஆளாகின்றன. ஆனால் அந்தக் கொண்டாட்டம் பெரும்பாலும் பெரும்பதிப்பாளர்களால் உருவாக்கப்படுவது. வணிக,அரசியல், சமூகக் காரணங்களால் செயற்கையாக நிலைநிறுத்தப்படுவது. பெரும்பாலும் அக்காரணங்கள் இலக்கியத்திற்குப் புறம்பானவையாகவே இருக்கும். இலக்கியம் ரசனைவட்டங்களில் இருந்து ரசனை வட்டங்களுக்கு மெல்லமெல்லத்தான் பரவுகிறது.

சினிமாக்கள் மிக எளிதாக மறக்கவும்படுகின்றன என்பதை நாம் கவனிப்பதில்லை. இலக்கியப்படைப்புக்கள் இயல்பாக நூறாண்டுக்காலத்தை கடந்துசெல்ல மிகப்பெரும்பாலான சினிமாக்கள் ஓராண்டுக்குள்ளேயே மறக்கப்படுகின்றன. அரிதாக பத்தாண்டுகளைக் கடந்துசெல்கின்றன. நினைவுகூரப்படுபவை கூட ஒரு கடந்தகால நினைவாகவே மீட்டப்படுகின்றன. சமகால ரசனையுடன் மீண்டும் பார்க்கப்படுவதில்லை.

சினிமாவிலும் ‘காலம்கடந்த’ கிளாஸிக்குகள் உண்டு. ஆனால் அவைகூட சினிமாவைப் பயில்பவர்களால் ரசிக்கப்படும் அளவுக்கு பொதுவான சினிமாரசனையாளர்களால் பார்க்கப்படுவதில்லை. ஓடிடி தளங்களை ஆய்வுசெய்யும் நிபுணர்கள் சொல்வது பத்தாயிரத்தில் ஒருவர்கூட ஓரிரு ஆண்டுகளுக்கு முந்தைய சினிமாக்களை தேடிப்பார்ப்பதில்லை என்றுதான். ஆகவேதான் அவர்கள் பெரும்பொருட்செலவில் புதிய சினிமாக்களை வெளியிட்டுக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. ஒரு சினிமா ரசிகன் ஐம்பதாண்டுக்காலம் நாளும் பார்க்கவேண்டிய நல்ல படங்கள் அமேசானில் இருக்கும். ஆனால் அவன் புதிய சினிமாவை மட்டுமே தேடுவான்.

பல காரணங்கள். முக்கியமாக தொழில்நுட்பம். இலக்கியத்திற்கு தொழில்நுட்பம் முக்கியமல்ல. ஏட்டில் அல்லது மின்திரையில் வாசித்தாலும் வாசிப்பனுபவம் நிகழ்வது கற்பனையில்தான். சினிமா தொழில்நுட்பத்தை சார்ந்துள்ளது. இன்று கருப்புவெள்ளை படங்களை பார்ப்பவர் பல்லாயிரத்தில் ஒரு ரசிகர் மட்டுமே என்கின்றன கணக்குகள். ஸ்கோப் அல்லாத படங்களையே அனேகமாக எந்த சினிமாரசிகரும் இன்று பார்ப்பதில்லை.

அடுத்த காரணம், சினிமா ஒரு கூட்டுக் கொண்டாட்டம் என்பதே. இன்று கொண்டாடப்படுவதைச் சேர்ந்து ரசிப்பதே அனைவருக்கும் பிடித்திருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாளும் பேச்சாக இருந்த கேம் ஆஃப் த்ரொன்ஸ் இன்று மறக்கப்பட்டுவிட்டது. ஒரு கொண்டாட்டத்தை இன்னொன்று மறைக்கிறது. நேற்றை இன்று முற்றாக மூடிவிடுகிறது. ஆகவே சினிமாக்கள் மறக்கப்படுகின்றன. சினிமாக்காரர்களின் சொந்த நரகம் அவர்களின் சினிமாக்கள் அவர்களின் கண்முன்னால் முற்றாக மறக்கப்படுவது. அவ்வாறு மறக்கப்பட்ட படங்களின் மறக்கப்பட்ட ஆளுமைகளை சினிமாவில் அனேகமாக தினமும் சந்திக்கிறேன்.

ஆனால் சில படங்கள் மீண்டெழுகின்றன. பெரும்பாலும் தேர்ந்தவிமர்சகர்களால் சுட்டிக்காட்டப்பட்டு, அதைப் பார்ப்பதற்கான வழிகள் விளக்கப்படும்போது. தமிழில் அவ்வாறு மீண்டெழுந்த படங்கள் என்றால் கன்னத்தில் முத்தமிட்டால், இருவர், ஹேராம் ஆகியவற்றைச் சுட்டலாம்.

மலையாளத்தில் நான் எழுதிய படம் ஒன் பை டூ. அன்றைய இளம்நாயகனாகிய ஃபகத் ஃபாசில் நடித்த படம். ஆனால் கதைநாயகன் அன்று புதுமுகமாக இருந்த முரளி கோபி. ஃபகத் ஃபாஸிலுக்காக வந்த கூட்டம் ஏமாற்றமடைந்ததனால் படம் அன்று சரியாக ஓடவில்லை. தொடக்க விசையால் தப்பித்தது.

அத்தோடு அது சிக்கலான கதையமைப்பு கொண்ட படம். நானே ஒரு சோதனை முயற்சியாக அதை செறிவாக எழுதினேன். அதை  இயக்குநர் மேலும் செறிவாக்கினார். திரையரங்கில் அமர்ந்து பார்த்தவர்களுக்கு அது ஒரு மூளைச்சுழலாக இருந்தது. சிலர் பாராட்டினர், பெரும்பாலானவர்கள் சிக்கலாக இருக்கிறது என்றனர்.விமர்சனங்களும் இரண்டுவகையாகவே இருந்தன.

ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப்பின் முக்கியமான மலையாள திரைவிமர்சகர் ஒருவர் மலையாளத்தின் மிகச்சிறந்த திகில்சினிமாக்கள் பத்தில் நான்காவதாக ஒன் பை டூவை சொல்லியிருந்தார். அதை பார்ப்பதற்கான வழிகளையும் எழுதியிருந்தார். அதன்பின் ஒன் பை டூ தொடர்ந்து பார்க்கப்படுகிறது. ஓடிடி தளம் அதற்கு உகந்தது. நிறுத்தி நிறுத்தி பார்க்கலாம். ஒருநாள் கழித்துக்கூட பார்க்கலாம்.  இன்று அதைப்பற்றி நிறைய பேசப்படுகிறது

இப்போது அதைப்போல ஒரு திரைக்கதை வேண்டும் என பலர் கேட்கிறார்கள். எனக்கு ஆர்வமில்லை. நான் கற்றுக்கொண்டது இதுதான். ஒரு கதை மருத்துவமனைகளில் நகர்வதை மக்கள் விரும்புவதில்லை. மருத்துவமனை எதிர்மறைத்தன்மை கொண்டது. உளவியல்சிக்கல்கள் கொண்ட படங்கள் அரங்கிலும் அழுத்தத்தை உருவாக்குகின்றன. ஒன் பை டூ ஓடிய அரங்கில் நெளிந்துகொண்டே இருந்தனர் பார்வையாளர்கள்.

அத்துடன் உளவியல் சிக்கல்களை துப்பறிவதன் உளவியல்சிக்கல் என்பதெல்லாம் வணிகசினிமாவுக்கு கொஞ்சம் அதீதம். நான் சினிமாவுக்காக அத்தகைய கவனத்தை அளிக்க விரும்பவில்லை. சினிமா எளிதான பொழுதுபோக்கு. அதற்கு எளிமையான விஷயங்களே போதும்.

யூடியூபில் ஒன் பை டூவின் தமிழ் விமர்சனம் பார்த்தேன். யாரென்று தெரியவில்லை. ஆனால் கொஞ்சம் உற்சாகமாகவே இருந்தது.  அது காலத்தை கடந்துவந்திருக்கிறது.

ஜெ

முந்தைய கட்டுரைமுகம் விருது விழா
அடுத்த கட்டுரைஜோனாதன் லிவிங்ஸ்டன் ஸீகல்