“(பிரிட்டிஷ்) ஆட்சி இங்கே மூன்றுவகையில் தலித் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கியது. ஒன்று அது நிலப்பிரபுத்துவத்தை ஒழித்து ஆரம்பகட்ட முதலாளித்துவத்தை உருவாக்கியது”
தமிழில் நீங்களும் மற்றும் பலரும் பயன்படுத்தும் இரு சொற்களைப் பற்றிய குழப்பங்கள்…
முதலாளித்துவம் என்று இங்கு நீங்கள் குறிப்பது உண்மையில் தனிச்சொத்துரிமை (Private property) என்பதையே என்று கருதுகிறேன்.
முதலாளித்துவம் (Capitalism) என்பது வேறு – அதில் சொத்துரிமை முக்கியமான அம்சம் தான், ஆனால் அதை விட முக்கியமாக பணச்சக்தி குவிதல், முதலீடு, ரிஸ்க் என்று உள்ளன. சொல்லப்போனால் அதீதமான பெருமுதலாளித்துவமானது பரவலான தனிச்சொத்துரிமையையே அழித்துவிடும் (excessive concentration of capital is against broadbased private property rights) என்று ஒரு கருத்துத்தரப்பு உண்டு.
பிரிட்டிஷ் ஆட்சியில் முதல்முறையாக தலித்கள் நிலத்தை உரிமை கொள்ளத்தொடங்கினர். அந்த இயக்கம் இன்றுவரை தொடர்கிறது. ஆனாலும் இது முதலாளித்துவம் அல்ல, தனிச்சொத்துரிமை தான். பிரிட்டிஷ் அரசும் இந்திய அரசும் அவர்களை முதலீடு செய்து பணம் ஈட்டும் வணிகர்களாக கருதவில்லை. இந்த வேற்றுமையின் முக்கியத்தை புரிந்துகொண்டு சொற்களை தேர்ந்தெடுப்பது அவசியம் என நினைக்கிறேன்.
அதுபோலவே, இன்று தமிழ் அரசியல் சமூக உரையாடல்களில் ‘வலதுசாரி’ என்ற சொல் தவறாக பயன்படுத்தப்படுகிறது. ‘மனிதர்களுக்குள் உள்ள ஏற்றத்தாழ்வுகள் அடிப்படையாக இயற்கையிலேயே அமைந்தவை’ என்பதே வலதுசாரித்தனம். அதன் விளைவாக பேசப்படும் நிறவாதம், இனவாதம் எல்லாம் கூட வலதுசாரித்தனம் தான். அந்த ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்வது அரசாங்கத்தின் வேலை அல்ல என்பது பொருளியல் வலதுசாரித்தனம்.
ஆனால் இன்று அதற்கு சற்றும் தொடர்பற்ற மதவாதம், பெரும்பான்மைவாதம் எல்லாம் வலதுசாரி என்ற சொல்லால் சுட்டப்படுகிறது. இது விவாதங்களை எளிய பைனரி நோக்கி செலுத்துகிறது, நுண்மைகளை கருத்தில் கொள்வதில்லை.
அன்புடன்
மது
***
அன்புள்ள மது
நாம் இலக்கியவிவாதத்தில் சொற்களை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன். இலக்கியவிமர்சனம் தனக்கான அழகியல்கலைச்சொற்களை உருவாக்கிக் கொள்ளும், அதற்கான வரையறைகள் இருக்கும். உதாரணம், யதார்த்தவாதம் [ரியலிஸம்] நவீனத்துவம் [மாடர்னிசம்]
பிற கலைச்சொற்களை இலக்கியம் அறிவியல், வரலாறு, சமூகவியல், பொருளியல், அரசியல் உள்ளிட்ட பிறதுறைகளில் இருந்தே எடுத்துக் கொள்கிறது. ஆனால் அந்தந்த துறைகளில் அச்சொற்கள் எப்படி மிகக்கறாராக வரையறை செய்யப்படுகின்றனவோ அப்படி அச்சொற்களை எடுத்துக்கொள்வதில்லை. அந்தத துறைகளில் அச்சொற்களின் மேல் நிகழும் விவாதங்களையும் கருத்தில்கொள்வதில்லை. அச்சொற்கள் பொது விவாதத்தளத்திற்கு வந்தபின் பொதுவான அர்த்தத்தில்தான் அச்சொற்களை இலக்கியம் கையாள்கிறது
ஆகவே மொழியியலில் அல்லது மானுடவியலில் உள்ள ஒரு கலைச்சொல்லை இலக்கியத்தில் பார்த்ததுமே அதை அந்த அறிவுத்துறையின் விவாதங்களுடன் தொடர்புபடுத்திக்கொண்டு இலக்கியத்திற்குள் கொண்டுவரலாகாது. இலக்கியக் கலைச்சொற்களுக்கான அகராதியிலேயே இச்சொற்களுக்கு ஒரு நிலையான பொருள் அளிக்கப்பட்டுள்ளது. அதுவே இங்கே பொருள்கொள்ளப்படுகிறது
இலக்கியச் சொல்லாடலில் நிலப்பிரபுத்துவம் என்றால் என்ன? நிலத்தை அடிப்படை உற்பத்தி அலகாகக் கொண்டிருந்த பழைய காலகட்டம். நிலவுடைமையே சமூக அதிகாரத்தை தீர்மானித்தது. அனைவரும் வெவ்வேறு வகையில் நிலத்துடன் தொடர்புகொண்டு வாழ்ந்தனர். அதற்கான அறங்களும் விழுமியங்களும் வாழ்க்கைமுறைகளும் இருந்தன.
நிலம் அந்த இடத்தை இழந்து முதல் [காப்பிடல்] சமூக அதிகாரத்தை தீர்மானிக்கும் காலகட்டமே முதலாளித்துவம் எனப்படுகிறது. முதலாளித்துவம் அதற்கான விழுமியங்கள் கொண்டது. மனிதனை உழைப்பின் வழியாக மதிப்பிட்டது. ஒரேவகையான உழைப்பவனாகவும் நுகர்பவனாகவும் மனிதனை ஆக்கும்பொருட்டு அது பொதுக்கல்வி போன்றவற்றை உருவாக்கியது. செய்தித்தொடர்பு, போக்குவரத்து ஆகியவை உருவாயின. வணிகம் முதன்மைப்பட்டது. வணிகத்தின்பொருட்டு புதுநிலங்கள் கண்டடையப்பட்டன. உலகம் ஒற்றை வணிகப்பரப்பாக ஆகியது.
காலனியாதிக்கக் காலகட்டம் ஆரம்பகட்ட முதலாளித்துவம் என்றும் சென்ற நூறாண்டுகள் முதலாளித்துவத்தின் முதிர்வுக்காலகட்டம் என்றும் கருதப்படுகின்றன. பெருமுதல் உருவாகி வந்தது காலனியாதிக்கம் வழியாக. அந்த பெருமுதல் நாடு,நிலம் போன்ற பிடிமானங்களை இழந்து ஒரு உலகப்பொதுச் சக்தியாக ஆகியிருப்பது இன்றைய முதலாளித்துவ முதிர்வுக்காலகட்டத்தில்.
இலக்கியம் சமூகத்தின் சில பண்புக்கூறுகளைச் சுட்டிக்காட்ட நிலப்பிரபுத்துவம் முதலாளித்துவம் போன்ற கலைச்சொற்களைக் கையாள்கிறது. நிலப்பிரபுத்துவம் உறுதியான மாறாத அமைப்புக்களை உருவாக்கும். அவற்றை நிலைநிறுத்த அனைவரும் கடைப்பிடிக்கவேண்டிய ஆசாரங்களை உருவாக்கும். நம்பிக்கைகளின்படி நிலைகொள்ளும்.ஆகவே வட்டாரத்தன்மை கொண்டிருக்கும்
முதலாளித்துவம் முதலீட்டைச் சார்ந்தது. உற்பத்தி வினியோகம் ஆகியவற்றைச் சார்ந்தது. ஆகவே அதன் நெறிகள் உற்பத்தி வணிகம் ஆகியவற்றை ஒட்டியவையாக அமையும்.
நீங்கள் குழப்பிக்கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். தனிச்சொத்துரிமை என்பது நிலப்பிரபுத்துவம் முதலாளித்துவம் இரண்டுக்கும் பொதுவானது. ஆதிப்பழங்குடிகளிலும் பொதுவுடைமை அமைப்பிலும் மட்டுமே அது இருக்காது.
தனிச்சொத்துரிமையில் இருந்து நிலவுடைமை உருவாகியது. நிலவுடைமை உருவாக்கிய நிதியில் இருந்து முதல் உருவாகியது. முதல் முதலாளித்துவமாக மாறியது
ஜெ