பிரதமன், கடிதங்கள்

பிரதமன் வாங்க

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

நவம்பர் மாத விடுமுறை முடிந்து டிசம்பர் 3 ஆம் தேதி அடுத்த பருவத்திற்காக கல்லூரி மீண்டும் திறந்தது. நான் பணி புரியும் கல்லூரி, பொள்ளாச்சி திரு மகாலிங்கம் அவர்களின்  சக்தி குழுமத்தின் ஒரு அங்கமென்பதால் படிக்கும் 6000 மாணவர்களுக்கும் மாதா மாதம் ஓம் சக்தி இதழ் கொடுக்கப்படும். கல்லூரி திறந்த அன்று நான் வகுப்பிலிருக்கும்போது அனைவருக்கும் தீபாவளி மலர் கொடுக்கப்பட்டது அதில் உங்களின் பிரதமன் இருந்ததால் அனைவரையும் அதை வாசிக்கச்சொன்னேன். பொதுவாகவே  துவக்கத்தில் சில வகுப்புக்கள் பாடமெடுப்பதில்லை. எனவே பிரதமனை வாசித்து அவரவருக்கு தோன்றுவதை சொல்லவும் சொன்னேன்.

கேரளா ’கொழிஞ்சாம்பாறா’வைச் சேர்ந்த ஹாஜிரா வாசிக்கவே மதுரமாயிருக்கிறதென்றாள்.

ஒருத்திக்கு தேங்காய் துருவும் ஒலி புறாக்கள் குறுகுவது போலிருப்பது மிகவும் பிடித்திருந்தது. பொள்ளாச்சி தென்னை நகரம் என்பதால் நிறைய தேங்காயைக்குறித்து வரும் பகுதிகளைப்பற்றி  எல்லாருமாய் பேசிக்கொண்டோம்.

இரண்டாவது பென்ச் வெற்றிவேல் எழுந்து  ’’அந்த ஆசான் எல்லாத்தையும் கணக்கு பண்ணினாரு அந்த பொண்ண மட்டும் ஏன் கணக்கு பண்ணாம விட்டுட்டாரு? ’’ என்றதும் பெண்கள் பக்கம் ஒரே சிரிப்பலைகள். எனக்கும் வகுப்பிலிருந்த 52 மாணவர்களுக்கும் அந்த ஒரு மணி நேரம் வாழ்வில் மறக்கமுடியாததாகிவிட்டது. எப்போதுமே நான் மாணவர்களுக்கு மிக அணுக்கமான ஆசிரியை . இம்முறை பிரதமன் என்னை அவர்களுடன் இன்னும் நெருக்கமாக்கிவிட்டது. நன்றி

அன்புடன்

லோகமாதேவி

***

அன்புள்ள ஜெ

சிறுகதைகளை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் வெண்முரசு எழுதியதைத்தான் சாதனை என்கிறார்கள்.எனக்கு இந்தச் சிறுகதைகளும் மாபெரும் சாதனை என்றுதான் தோன்றுகிறது. எத்தனை களங்களில் என்னென்ன வகையான கதைகள். கதைகளை வாசிக்க வாசிக்க உலகம் விரிந்துகொண்டே செல்வதாக தோன்றுகிறது.

சிறுகதை என்பது ஒரு தருணம் திறந்துகொள்வது என்பார்கள். அப்படிப்பர்த்தால் உங்களுடைய கதைகளில்தான் அப்படி அற்புதமான திறப்புக்கணங்கள் உள்ளன. பிரதமன் அதில் முக்கியமானது. அந்த இனிப்பு எழும் தருணம் எத்தனை வாசித்தாலும் தீராத ஒரு பெரிய மர்மம். மனசுக்குள் இனிப்பு எழும் தருணம் அது.

ராஜேஸ்வரி சிவக்குமார்

***

ஜெயமோகன் நூல்கள் வாங்க

 

முந்தைய கட்டுரைஇருத்தலியல் நாவல்கள், கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅஞ்சலி:காயல்பட்டிணம் கேஎஸ் முகம்மது சுஐபு