ஞானி, கடிதங்கள்

ஞானி நூல் வாங்க

அன்புடையீர்,

வணக்கம்

ஞானி நூல்- வரலாற்று ஆவணம் தங்கள் பதிவு பல்வேறு தகவல்களைப் பேசுகின்றது. அய்யா தாங்கள் கூறிவதைத்தான் சொல்லிக் கொண்டே இருப்பார். தங்களின் பெரும் படைப்புகளை இறுதிவரைக் கொண்டாடினார்.

“ஞானி என் பார்வைகளை ஏற்றுக்கொண்டவர் அல்ல. எல்லா இடங்களிலும் என் பார்வையை திட்டவட்டமாக மறுத்தார். ஆனால் என்னைத் தமிழின் முதன்மையான படைப்பாளியாக நினைத்தார். நான் என் பெரிய படைப்புக்களை எழுதிய பின்னர் அல்ல. எழுதத் தொடங்கியபோதே அவர் என்னை அவ்வண்ணம் கணித்தார். அதை திட்டவட்டமாகச் சொல்லிக்கொண்டே இருந்தார்.”

– இருவரது பார்வையும் சரியாக இருக்கின்றது. எங்களது மகிழ்வைத் தெரிவித்துக்கொள்கின்றோம்

நன்றி

அன்புடன்

மீனா

***

அன்புள்ள மீனா

நான் ஞானியுடனான சந்திப்புகளின்போது உங்களை கண்டிருக்கிறேன். நாம் விரிவாகப்பேசியதில்லை. உங்கள் வாழ்த்து மகிழ்ச்சியை அளிக்கிறது. நீங்கள் ஞானியின் கண்களாக செயல்பட்டதை அறிவேன். அவருக்கு பலர் வாசித்துக் காட்டியிருந்தாலும் நீங்கள் வாசிப்பதே அணுக்கமானது என்று சொல்வார். நலமாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

ஜெ

***

அன்புள்ள ஜெ

நான் மார்க்ஸியச் செயல்பாடுகளில் இருபதாண்டுக்காலமாக இருந்தவன். இப்போது கொஞ்சம் ஓய்வு. உடல்நிலைதான் காரணம். ஞானியை அறிவேன். அவர் உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். நான் மார்க்ஸிய அமைப்புகளில் இருந்தாலும்கூட தமிழகத்தில் சென்ற ஐம்பதாண்டுகளில் நடந்த மார்க்ஸிய விவாதங்கள் என்னென்ன என்பதை ஞானி நூல் வழியாக ஒரே வீச்சில் வாசிக்க முடிந்த போதுதான் தெளிவையே அடைந்தேன். ஞானியின் இடமென்ன என்றும் தெரிந்தது. நன்றி.

ஒரே மூச்சில் ஒரு விறுவிறுப்பான நாவல்போல வாசிக்கவேண்டிய படைப்பு. உற்சாகமான நகைச்சுவையும் சித்தரிப்புகளும் கொண்டது. எதிர்காலத்தில் இதில் சொல்லப்பட்டுள்ள பல நிகழ்வுகள் மேடைகளில் துணுக்குகள், கதைகளாக உலவுமென நினைக்கிறேன்.

ஆ. பன்னீர்செல்வம்

***

அன்புள்ள ஜெமோ

ஞானி இறந்தபின் எழுதப்பட்ட மேலோட்டமான குறிப்புகளையும் அற்ப வம்புகளையும் பார்த்து கசந்துபோயிருந்த எனக்கு ஞானி நூல் ஒரு பெரிய அனுபவமாக அமைந்தது. நான் சில ரிசர்வேஷன்களால் அதை முன்பு படிக்கவில்லை. மார்க்ஸிய எதிர்ப்பாக எழுதியிருக்கிறீர்கள் என்று எதையும் வாசிக்காமலேயே சொல்லிச் சொல்லி நிறுவினர் சிலர். வாசித்தபோது சென்ற ஐம்பது அறுபது ஆண்டுகால மார்க்ஸிய விவாதங்களின் ஆவணம் என்ற எண்ணம் வந்தது.

அதோடு இது ஒரு சுவாரசியமான நாவல். இதில் ஞானி மட்டுமல்ல எஸ்.என்.நாகராசனும் முக்கியமான கதாபாத்திரம். ஒரே மூச்சில் வாசிக்கமுடிந்தது

ஜி.கந்தசாமி

***

ஞானி

முந்தைய கட்டுரைதஸ்தயேவ்ஸ்கி, நற்றுணை கலந்துரையாடல்
அடுத்த கட்டுரைஇரு பேட்டிகள், முன்னோட்டம்