காடு அமேசானில் வாங்க
காடு வாங்க
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
என்னை ஒரு ஆரம்ப நிலை இலக்கிய வாசகன் என்றே அறிமுகம் செய்துகொள்ள விரும்புகிறேன்.காடு வாசித்து முடித்த உடனே அதற்கு வந்த வாசகர் கடிதங்களையும் விமர்சனங்களையும் படித்தேன். எனக்கான இலக்கிய வாசிப்பு பயிற்சிக்காகவே அதை செய்தேன்.பல விதமான மானுட மனங்கள் எப்படி ஒரே படைப்பை பல்வேறு விதமாக உள் வாங்கியுள்ளது என்று பார்க்க வியப்பாக இருந்தது.
என்னுடைய வாசிப்பு அனுபவத்தையும் இங்கே பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டேன். “வாசகன் விமர்சகனாக ஆவது எப்படி?” என்றகட்டுரை இந்த கடிதத்தை எழுத உந்துதலாக இருந்தது
முதலில் கிரிதரன் கதாப்பாத்திரம். காடு,நீலி என்று கனவுகளில் திளைத்துக்கொண்டிருப்பவனை நிஜ வாழ்க்கை எப்படி எல்லாம் புரட்டி போடுகிறது என்ற உண்மை கசக்கவே செய்தது. ஆனால் அது தான் உண்மை. ஒரு கவிஞனாகவோ எழுத்தாளனாகவோ மாறியிருக்க வேண்டிய கிரி வாழ்க்கையில் தோல்வி அடைகிறான். காடு சொர்கம் என்றால் நகரம் அவனுக்கு நரகமாக மாறி விட்டது.
நீலி வாழும் இடம் தெரிந்து இரவு முழுக்க காட்டுக்குள் கிரி செய்யும் பயணம் அந்த பயணத்தின் போது இயற்கையின் மடியில் அவன் அடைந்த தரிசனம் அற்புதமாக இருந்தது. “அந்த தரிசனமே போதுமே, கண்டிப்பாக அவளை கண்டு தான் ஆக வேண்டுமா?” என்ற கேள்வி எழுப்பிய தருணம். கிரியின் மாமா இறந்த போது அவனை சுற்றி நடந்த காட்சிகள் என் தந்தையின் மரணத்தின் போது எனக்கு நிகழ்ந்ததை அப்படியே பிரதிபலித்தன.
குட்டப்பனையும் நீலியையும் காட்டில் இருந்து பிரித்து பார்க்க இயலாது. நீலி தினமும் நம் கண் முன்னே தோன்றும் ஒரு அழகிய பட்டாம்பூச்சி போல. அவளது அகம் பெரிதும் பிடி படவில்லை எனக்கு. ஒரு வேளை அவளுடைய கதாபாத்திர வடிவமைப்பே அது தானோ? அந்த பட்டாம்பூச்சி ரசித்து மகிழ்வதற்கே தவிர ஆராய்வதற்கு அல்லவோ?
நான் கொஞ்சம் மெய் ஞான தேடல் உள்ளவன் என்பதாலோ என்னவோ , குரிசு மற்றும் அய்யர் மீது தனி கவனம் சென்றது. அவர்கள் இருவரும் வெவ்வேறு வழிகளில் சென்றிருந்தாலும் இறுதியில் அடைந்த தரிசனம் ஒன்றே என்று தோன்றியது.
முன்னுக்கும் பின்னுக்கும் செல்லும் கதையோட்டம் கால மாற்றத்தின் நிதர்சனங்களை கண் முன்னே கொண்டு வருகின்றது. நம் நிஜ வாழ்க்கையில் நாம் என்றுமே அடைய முடியாத தரிசனம் இதுவே. அதை வாழ்ந்து பார்த்து மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும். இலக்கியம் தரும் மிக முக்கியமான அனுபவம் இது என்று தோன்றுகிறது.
வாசிக்கும்போது சில கற்பனை இடர்கள் எனக்கு இருந்தன. சில நிலக்காட்சிகளை வாசிக்கும்போது நான் முன்னரே கண்ட நில காட்சிகள் வந்து மனதில் அமர்ந்து கொண்டன. புதிய கற்பனையில் விரிந்த மனதை அவை கொஞ்சம் சுருங்க வைத்ததாக உணர்ந்தேன். இது எனக்கு மட்டுமே இருக்கும் பிரச்சனையா? அல்லது தேர்ந்த வாசகர்களுக்கும் இது உள்ளதா? என்பதை உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது பதில் கொடுத்து உதவ வேண்டும்.
நன்றி,
ரா.ஆனந் குமார்
அன்புள்ள ஆனந்த்குமார்,
புனைவை வாசிக்கும் எவருக்கும் ஒரே வழிதான். அறிந்தவற்றின் துளிகொண்டு அறியாதவற்றை கற்பனையால் பெருக்கிக்கொள்வது. அது உணர்வுகள், வாழ்வனுபவங்கள் மட்டுமல்ல நிலக்காட்சிகளிலும் கூடத்தான். அறிந்த சிறிய காடு அறியாப்பெருங்காடாக ஆகிறது வாசிப்பில்.
ஜெ