பின்தொடரும் நிழலின் குரல் – கடிதங்கள்

பின் தொடரும் நிழலின் குரல் வாங்க

ஜெ,

இந்த புத்தகத்தின் பக்கம் 139 இல் வரும் அருணாசலத்தின் குரலாக வரும் பகுதி இன்றைய என் அலுவலக வேலையில் மிக கச்சிதமாக பொருந்தி உள்ளது. உண்மையில் இன்று நிறைய சாப்ட்வேர் கம்பெனியின் நடு நிலை ஊழியர்களின் நிலை இதுதான் அவர்கள் வெறும் ஒரு அதிகார பாவனைதான் மேற்கொள்ள முடியுமே தவிர அதிகாரங்கள் இருப்பதில்லை. ஆனால் இது ஒரு மாயவலை இதில் சிக்கி வெளி வரமுடியாமல் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். தொடக்க காலங்களில் நல்ல உபயோகமான வேலை பார்த்து பின் ஒரு மூன்று வருடங்களில் இந்த middle management வேலையில் உட்கார்ந்து பின் ஒரு விதமான உயர் மட்டம் சொல்லும் சில கணக்கு வழக்குகளை செய்வதும் மற்றும் அவர்கள் எதிர்பார்க்கும் சில விசயங்களை மட்டும் செய்ய ஆரம்பித்து ஒரு பத்து வருடங்களில் இதை தவிர வேறு எதுவும் தெரியாதவர்களாய் ஆகிவிடுகிறார்கள்.

அன்புடன்
-திருமலை

அன்புள்ள ஜெ

பின்தொடரும் நிழலின் குரல் நாவலை இன்றுதான் வாசித்து முடித்தேன். மூன்று மாதமாகிறது வாசித்து முடிக்க. என் வாழ்க்கையில் மறுபரிசீலனையும் கொந்தளிப்பும் தனிமையும் துக்கமும் நிறைந்த மூன்று மாதங்கள் இவை. இந்நாவல் என்னைப்போன்ற ஒருவருக்கு என்ன கொடுக்கிறதென்பது மற்றவர்களுக்குப் புரியாது. அவர்களால் என் மனநிலைக்குள்ளேயே வரமுடியாது.

நான் பல ஆண்டுக்காலம் தொழிற்சங்க அரசியலில் இருந்தவன். இடதுசாரி. இடதுசாரியாக இருப்பதென்பது ஒரு போலியான மிதப்பை அளிக்கிறது. நான் ரொம்ப நல்லவன், நான் போராளி, எனக்கு இந்த உலகம் இயங்கும் விதம் தெரியும், எனக்கு மற்றவர்களை திருத்தி வழிநடத்தும் பொறுப்பு இருக்கிறது, நான் தியாகி … இந்தவகையான நம்பிக்கைகள்தான் இடதுசாரியாக இருப்பதன் அடிப்படை. இந்த நம்பிக்கையால் வரும் ஒரு வகையான போலியான தன்னம்பிக்கையோ திமிரோதான் இடதுசாரிகளை செயல்படவைக்கிறது. மனதுக்குள் எப்போதும் ஒரு தென்றல் அடித்துக்கொண்டிருக்கும். எவரையும் எதிர்த்துப்பேசலாம், எவருக்கும் ஆலோசனையும் அறிவுரையும் சொல்லலாம் என்று தோன்றும்,

அந்த மாயை கலையும். கலையக்கலைய இன்னும் கெட்டியாகப்பிடித்துக்கொள்வோம். முற்றிலும் கலைந்தபிறகுதான் ஃபேஸ்புக்கில் கத்த ஆரம்பிப்பதெல்லாம். ஏனென்றால் அதில் இழப்பு இல்லை. பாவனைதான். இடதுசாரியாக இருப்பதாக நம்பிக்கொள்ளலாம். ஆனால் எதையும் செய்யவேண்டியதுமில்லை. ஆனால் களத்திலே செயல்பட நிறைய நம்பிக்கை தேவை.அந்நம்பிக்கையை இடதுசாரி தத்துவம் தருவதில்லை. அதை தருவது கட்சி என்ற இறுக்கமான குழு. அங்கே கூட்டமாக இருப்பதன் தைரியமும் மகிழ்ச்சியும். ஆனால் என்ன ஆகிறதென்றால் எங்கோ ஓரிடத்தில் அந்தக் கட்சியே பெரிய சுமையாக ஆகிவிடுகிறது. பாறாங்கல் மாதிரி நரம்புகளை உடைக்கிறது, கொஞ்சம் கொஞ்சமாக கட்சியுடன் முரண்பட ஆரம்பிக்கிறோம். முரண்படும்போதுதான் கட்சி எவ்வளவு கொடூரமானது என்று தெரிகிறது. ஒரு கட்டத்தில் எல்லா நட்பும் அப்படியே பகைமையாக ஆகிவிடுகிறது. நஞ்சு அலையடிக்கிறது. அதன் நடுவே நின்றிருக்கிறோம்.

அந்த வெறுமை பயங்கரமானது. கே.கே.எம். வீரபத்ரபிள்ளை, அருணாச்சலம் எல்லாருமே அந்த வெறுமையில் நின்றிருக்கிறார்கள். ஒவ்வொருவகையில் அவர்கள் அதிலிருந்து மீள்கிறார்கள். நான் இந்நாவலை அப்படித்தான் வாசித்தேன்.

ஆர்.எம்

***

பின் தொடரும் நிழலின் குரல் -கடிதங்கள்

பெருந்துயர் நோக்கி – பின் தொடரும் நிழலின் குரல் குறித்து

பின் தொடரும் நிழலின் குரல்- கடிதம்

பின் தொடரும் நிழலின் அறம்

மகத்துவத்தின் கண்ணீர்- பின் தொடரும் நிழலின் குரல்

பின் தொடரும் நிழலின் குரல் – அறம்

பின் தொடரும் நிழலின் குரல் -இலட்சியவாதத்தால் கைவிடப்படுதல்

பின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்

காடு, பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம்:கடிதங்கள்

பின் தொடரும் நிழலின் குரல் -கடிதம்

ஓர் இலக்கு, ஒரு கனவு -பின் தொடரும் நிழலின் குரல்

முந்தைய கட்டுரைபோரும் கண்ணனும்
அடுத்த கட்டுரைகல்வி இரு உரைகள், கடிதம்