இளம் வாசகிக்கு…

அன்புமிக்க ஜெ,

வணக்கம். கல்லூரி நாட்களுக்குப் பிறகு கடந்த இரண்டு வருடங்களாகவே தீவிர வாசிப்பில் ஆழ்ந்துள்ளேன். இரண்டு வருடங்களாக உங்கள் தளத்தினை வாசித்து வந்தாலும் 6 மாத காலமாகத்தான் உங்கள் படைப்புகளை வாசிக்க ஆரம்பித்துள்ளேன். இரவு, அறம், வெண்முரசில் 2 நாவல்கள், காடு, கொற்றவை, தளத்தில் வரும் சிறுகதைகள் என்று உங்கள் படைப்புகள் சிலவற்றை வாசித்து உள்ளேன். உங்கள் படைப்புகளை வாசிக்க ஆரம்பித்த பிறகு என்னால் மற்ற படைப்புகளை வாசிக்க தோன்றுவதில்லை. மீண்டும் மீண்டும் உங்கள் படைப்புகளை மட்டுமே மனம் தேடுகிறது.

ஆனால் நான் வாசிக்க ஆரம்பித்த ஆரம்ப காலங்களில் பல்வேறு ஆசிரியர்களை, இலக்கியங்களை, சில உலக இலக்கியங்களை கூட தேடித் தேடி வாசித்து வந்தேன். ஆனால் உங்களை கண்டடைந்த பிறகு எனக்கு வேறு வாசிக்க தோன்றுவதில்லை. என்னுடைய போக்கு சரிதானா? உங்கள் படைப்புகளே இன்னும் நான் வாசிக்க வேண்டியது நிறைய உள்ளது, அதை எல்லாம் வாசித்து விட்டு மற்ற இலக்கியங்களை நோக்கி செல்லலாமா? வழி கூறுங்களேன்.

என்னை வளர்த்து கொள்ளவே உங்களுக்கு தொடர்ந்து கடிதம் எழுத முடிவு கொண்டுள்ளேன். நான் வாழந்து வரும் சூழலில் இலக்கியம் படிப்பவர்கள் யாரும் இல்லை. என்னால் இலக்கியத்தை பற்றி பேசுவதற்கும், விவாதிக்கவும் நண்பர்கள் இல்லை. நான் எனக்குத் தெரிந்த சில குழந்தைகளுக்கு  கதை சொல்லி மட்டுமே என்னை செயல்படுத்தி வருகிறேன். உங்கள் தளத்தில் அறிவிக்கும் இணைய தள கூடுகைகளிலும் இப்பொழுது கலந்து கொள்கிறேன். நான்  அறிவியக்க சூழலில் தொடர்ந்து முன்னேறி வருவதற்கு தகுந்த வழிமுறைகளையும் கூறுங்களேன். பிழையாக எழுதி இருந்தால் மன்னிக்கவும்.

மதுபாலா

***

அன்புள்ள மதுபாலா,

ஓர் ஆசிரியரில் முழுமையாக ஈடுபட்டு வாசிப்பதென்பதொன்றும் பிழையில்லை, உண்மையில் அதுவே இயல்பான நிலை. அவரை கடந்துசெல்லலாமே ஒழிய விட்டுச்செல்ல வேண்டியதில்லை. அந்த ஆசிரியரை முழுமையாக வாசிக்க அவருடைய எழுத்தின் தளத்தைச் சேர்ந்த பிறவற்றையும் வாசிக்கலாம். ஏதோ ஒரு கட்டத்தில் இயல்பாக நீங்கள் பிறவற்றையும் வாசிக்க ஆரம்பிப்பீர்கள். ஆகவே அதைப்பற்றிய சஞ்சலம் தேவையில்லை.

பொதுவாக இருவகை வாசிப்புகள் உண்டு. ஓர் ஆசிரியருக்கு தன்னை ஒப்புக்கொடுத்து வாசிப்பது ஒருவழி. அறிவார்ந்து முரண்பட்டும் விவாதித்தும் வாசிப்பது இன்னொரு வழி. முதல்வழியே அழகியல், மெய்யியல் ஆகிய இரண்டுக்கும் உகந்தது என்பது என் எண்ணம். நான் அப்படித்தான் வாசித்தேன். டால்ஸ்டாயாக இருந்தாலும் சரி, நித்ய சைதன்ய யதியாக இருந்தாலும் சரி, என் வழி முழுதளிப்பதும் வெறிகொண்டு வாசித்து அவர்களில் மூழ்கிக்கிடப்பதும்தான்.

அது அவர்களை மிகமிக அணுக்கமாக உணரச்செய்கிறது. அவர்களுள் நாமே நுழைந்துகொள்ளச் செய்கிறது. அவர்கள் அடைந்த அனைத்தையும் நாம் அடைய அதுவே நல்ல வழி.

முரண்பட்டு விவாதித்து அறிவது தத்துவத்திலும் அறிவியலிலும் பிற தர்க்கவழி அறிதல்முறைகளிலும் உகந்ததாக இருக்கலாம். ஆனாலும் அங்கே முரண்பட்டு எதிர்நிற்கும் அடிப்படைகளை அறிந்து அதற்கான தர்க்க ஆற்றலை அடையும் வரை அடிபணியும் கல்வியே உகந்தது. இல்லையேல் வெற்றாணவம் திரையென ஆகி எதையும் கற்க முடியாதவராக ஆக்கிவிடும்.

பொதுவாகப் பெண்களின் வழி முழுமையாக தன்னளிப்பதே. அது ஒரு பலவீனம் அல்ல. அது மிகப்பெரிய ஆற்றல். தெரியவேண்டிய அனைத்தையும் மிச்சமில்லாமல் தெரிந்துகொள்ள முடியும். அனைத்தையும் சுருக்கி உள்வாங்கிக் கொள்ளவும் முடியும்.

நம் சூழலில் இலக்கியவாசகர் ஒரு தனிப்பயணி மட்டுமே. ஏனென்றால் இங்கே வாழும் பத்துகோடிப்பேரில் ஒருலட்சபேர் எதையாவது வாசிப்பவர் இருந்தால்கூட ஆச்சரியம்தான். ஆகவே நாமே நமக்கான களங்களைக் கண்டடைய வேண்டியிருக்கிறது. நாமே நட்புச்சுற்றங்களை உருவாக்க வேண்டியிருக்கிறது. இலக்கிய வாசிப்புக்கு இலக்கிய உரையாடல் இன்றியமையாதது. ஆகவே இலக்கியத்திற்கான அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கலாம். குழுமங்கள் உதவியானவை. விஷ்ணுபுரம் குழுமமேகூட.

இலக்கியம் ஓர் அகவாழ்க்கை. அதில் முன்னேற்றம் என்பது இல்லை. அதில் திகழ்வதே முக்கியமானது. அது வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே. தீவிரமான சிறு பகுதி. புறவாழ்க்கையை அதற்குரிய விதிகளின் படி அமைத்துக் கொள்ளவேண்டும். அது இலக்கிய வாசிப்பு மற்றும் கற்பனையுடன் முரண்பட்டு உரசக்கூடாது. இலக்கிய வாசிப்பில் தொடர்ந்து இருந்து கொண்டிருப்பதொன்றே நாம் செய்யக்கூடுவது.

அவ்வாறு நெடுநாட்கள் தொடர்ந்து வாசிப்பவர்கள் தங்களை அறியாமலேயே அகத்தே கூர்கொண்டபடி இருப்பார்கள். அதைத்தான் நாம் முன்னேறுவது என்று சொல்கிறோம்.

சில நெறிகளை நான் அடிக்கடிச் சொல்வதுண்டு

அ. ஒவ்வொரு நாளும் வாசிக்கவேண்டும். உளநிலை சரியாக அமைந்தால் மட்டுமே வாசிப்பது என இருக்கக் கூடாது

ஆ. வாசிப்பதற்கு ஒரே நேரம் ஒரே இடம் ஒதுக்கிக்கொள்வது நல்லது.

இ. இலக்கியம் வாசிக்கையிலேயே பிற துறை சார்ந்த ஒரு நூலையும் சேர்த்து வாசிப்பது நல்லது. அது ஓர் இளைப்பாறல். இலக்கியத்தை அதனுடன் இணைந்த தத்துவம், வரலாறு, பண்பாட்டாய்வு நூல்களுடன் சேர்த்து வாசிப்பது அவசியம்.

ஈ. வாசிப்பவற்றைப் பற்றி குறிப்புகள் எடுத்துக்கொள்வது அவசியம். நூல்களின் உள்ளடக்கம், அவற்றின்மீது உங்கள் மதிப்பீடு ஆகியவை.

ஈ. நூல்களை தெரிவுசெய்யும்போது முதலில் சுவை சார்ந்து தெரிவுசெய்வோம். காலப்போக்கில் நூல்களின் வழியாக நாம் தேடும் வாழ்க்கை வினாக்கள், தத்துவச்சிக்கல்கள் திரண்டு வரும். அதனடிப்படையில் தெரிவுசெய்வோம்.

உ. நூல்களைப் பற்றி உரிய சூழலில் விவாதிப்பது நல்லது. ஆனால் ஒருபோதும் இலக்கியம் மீது மதிப்பில்லாதவர்களிடம் விவாதிக்கலாகாது.

ஜெ

***

முந்தைய கட்டுரைநாவலும் மறைபிரதியும் – பி.கே.பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரைதலித்துக்கள், கேரள கம்யூனிசம் – கடிதங்கள்