கடலைமொழிகள்

”ரொம்ப நல்லா எல்லாம் பண்ணிட்டிருந்தேன் . அதுக்குள்ள முழிப்பு வந்திட்டுது”

https://www.peanuts.com/

சார்ல்ஸ் ஷூல்ஸ் [Charles M. Schulz] வரைந்த  பீனட்ஸ் [நிலக்கடலைகள்] என்னும் காமிக்ஸ் பட்டை இந்து நாளிதழில் முன்பு வெளியாகிக்கொண்டிருந்தது. தமிழ்ச்சூழலில் அதன் நுணுக்கமான பகடிகளைப் புரிந்துகொள்வது கடினம், அமெரிக்க வாழ்க்கை சார்ந்தவை அவை. ஆனால் நீண்ட காலம் கழித்தும் அவற்றின் பல வரிகள் நினைவில் நிற்பதை பிற்பாடு உணர்ந்தேன்.

பகடி என்றால் கேலி அல்ல. மெல்லிய தன்னுரைத்தல்கள். சிறிய இடக்குகள். கொஞ்சம் உளச்சோர்வும் தனிமையிரக்கமும் கொண்டவனாகிய சார்லி பிரவுன் அதன் நாயகன். அவனுடைய நாய் ஸ்னூப்பி ஓர் அறிவுஜீவி. ஒருமுறை அது வானைப்பார்த்தபடி சிந்தனைத் தெறிப்பொன்றை அடைகிறது. “முற்றிலும் அர்த்தமில்லாதவனாக உணரும்போது என் இருப்பு நியாயப்படுத்தப்படுவதாக உணர்கிறேன்” நான் அடிக்கடி புன்னகையுடன் நினைவுகூரும் வரி அது.

ஷூல்ஸ்

”நான் உன்னை வெறுக்கலை. நீ என்னை வெறுக்கிறதா நினைக்கலை. இதைப்பத்தித்தான் நெறைய யோசிச்சிட்டிருக்கேன்”
”வாழ்க்கையோட ரகசியம் இதான். ஒரு கவலையை இன்னொரு கவலையாலே  தள்ளிவைச்சுகிடறது”
”அடாடா, தூங்கறது எப்டீன்னே மறந்திட்டுதே”

”எந்த பிரச்சினையும் நாம அப்டியே ஓடிப்போயிட முடியாத அளவுக்கு பெரிசோ சிக்கலானதோ கெடையாது”

”காலையிலே எந்திரிக்கிறத விட நல்லா ஒரு நாளை தொடங்குறதுக்கு வேற வழிகள் கண்டிப்பா இருக்கணும்”

”என்னோட அடுத்த வித்தையை செய்யாமலேயே உங்களுக்கு கண்டிப்பா ஏமாற்றத்தை குடுக்கறேன்”

”எனக்கு எதிரிங்க இல்ல. ஆனா நண்பர்களுக்கு என்னைய புடிக்கலை”
முந்தைய கட்டுரைசோழர்களும் மாமாங்கமும்
அடுத்த கட்டுரை‘தீயின் எடை’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன்,