சமரசம் உலாவும் இடம்?

மயான காண்டம் அரிச்சந்திர நாடகத்தில் முக்கியமான ஓர் அங்கம். அது நாடகத்தன்மையுடன் அரங்கில் நிகழும் என்பது ஒரு காரணம். அங்கே வாழ்க்கை பற்றிய தத்துவ விளக்கங்களை முன்வைக்கலாம் என்பது இன்னொரு காரணம். இந்தியா முழுக்கவே நாடகங்களில் மயானதத்துவம் இடம்பெறுகிறது. பல புராணக்கதைகளில் மயானத் தருணம் இடம்பெறுகிறது. தமிழகத்தில் பட்டினத்தார் நாடகத்திலும் கேரளத்தில் ஆதிசங்கரர் நாடகத்திலும் மயானம் உண்டு.

மயானம் என்றாலே நினைவுக்கு வருவது ரம்பையின் காதல் படத்தில் 1956ல் வெளிவந்த சமரசம் உலாவும் இடமே. இந்தப்பாடலை நான் பலமுறை கேட்டிருந்தாலும் 1981ல் காசியில் அரிச்சந்திர கட்டத்திலேயே ஒரு பண்டாரம் பாடிக்கேட்டது அபூர்வமான அனுபவம். நள்ளிரவு. எரியும் சிதைகளைச் சுற்றி வெட்டியான்களும் பண்டாரங்களும் அமர்ந்திருக்க இதைக் கேட்டேன். எத்தனை தொன்மையான சிதைவெளிச்சம் என எண்ணிக்கொண்டேன்

சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
ஜாதியில் மேலோர் என்றும்
தாழ்ந்தவர் தீயோரென்றும்
பேதமில்லாது எல்லோரும்
முடிவில் சேர்ந்திடும் காடு
தொல்லையின்றினே தூங்கிடும் வீடு
உலகினிலே இது தான்
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
ஆண்டி எங்கே அரசனும் எங்கே
அறிஞன் எங்கே அசடனும் எங்கே 
ஆவி போன பின் கூடுவார் இங்கே
ஆகையினால் இது தான்
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
உண்மையிலே இது தான்
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே  
இசை டி.ஆர்.பாப்பா
பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன்
எழுதியவர் மருதகாசி 

டி.ஆர்.பாப்பா

சீர்காழி கோசிந்தராஜன்

மருதகாசி
மலையாளத்தின் மிக ஆரம்பகாலப் படம் ஹரிச்சந்திரா. அதில் இடம்பெற்ற பாடல் இது. மயான காண்ட தத்துவம்

ஆத்ம வித்யாலயமே
அவனியில் ஆத்மவித்யாலயமே

ஆழிநிலயில்லா ஜீவிதமெல்லாம்
ஆறடி மண்ணில் நீறியொடுங்ஙும்

திலகம் சார்த்தி சீகியும் அழகாய்
பலநாள் போற்றிய புண்ணிய சிரசே
உலகம் வெல்லாம் உழறிய நீயோ
விலபிடியாதொரு தலயோடாயி

இல்லா ஜாதிகள் பேதவிசாரம்
இவிடே புக்கவர் ஒரு கை சாரம்
மன்னவனாட்டே யாசகனாட்டே
வந்நிடும் ஒடுவில் ஈ வன்சித நடுவில்

இசை பிரதர் லட்சுமணன் 

எழுதியவர் திருநயினார்க்குறிச்சி மாதவன் நாயர்

பாடியவர் கமுகற புருஷோத்தமன் நாயர்

நடித்தவர் திக்குறிச்சி சுகுமாரன் நாயர்.

திருநயினார்க்குறிச்சி மாதவன் நாயர்

திக்குறிச்சி சுகுமாரன் நாயர்

கமுகற புருஷோத்தமன் நாயர்

ஆத்மக் கலைக்கூடமே இவ்வுலகின்
ஆத்மக்கலைக்கூடமே

அச்சுநிலை இல்லா வாழ்க்கையெல்லாம்
ஆறடி மண்ணில் எரிந்து அடங்கும்

திலகம் போட்டு சீவி அழகாய்
பலநாள் பேணிய புனித தலையே
உலகம் வெல்ல ஓடியலைந்த நீ
விலையேதுமில்லா மண்டையோடாக ஆனாய்

இல்லை சாதிகள் பேதமெனும் எண்ணம்
இங்கு வந்தவர் ஒரு கைப்பிடிச் சாம்பல்
மன்னவனாகட்டும் யாசகனாகட்டும்
வந்திடுவான் இந்த பெரிய சிதை நடுவே

ஆனால் எனக்கு புரியாத ஒன்றுண்டு. சமரசம் உலாவும் இடமும் ஆத்மவித்யாலயமுமான அந்தச் சுடுகாடு எங்கிருக்கிறது? சுடுகாட்டில்தானே சாதியே வாழ்கிறது? ஏழை பணக்காரன் வேறுபாடு துல்லியமாகத் தெரிவதும் அங்கேதானே?

முந்தைய கட்டுரைசரித்திரக்கதைகள், கடிதங்கள்
அடுத்த கட்டுரைமௌன வாசகர்