நிறைநிலவு கிளர்த்தும் நினைவுகள் அநேகம். இரு வருடங்களுக்கு முன் சித்திரை முழுநிலவு தொடங்கி பங்குனி முழுநிலவு வரை ஆண்டின் ஒவ்வொரு முழுநிலவும் ஒவ்வொரு இடத்தில், பலவேறு தேசங்களில் காண நேர்ந்தது. கங்கையின் மடியில், நீலக்கடல் அலைகளில், நகர நெரிசல்களுக்கு மேலே, அடர் மரங்களுக்கு இடையே, மணல் வெளியில் எனப் பல சித்திரங்கள் நிறைந்தது மனது. முழுநிலவினால் ஆனதோர் ஆரம் ஒன்றைத் தொடுத்துக் கொண்ட ஆண்டு. சென்ற ஆண்டு வெண்முரசு முழுமையடைந்த நாளில் வியாச பூர்ணிமை என்றும் அறியப்படும் குரு பூர்ணிமை வெண்முரசு தினமாக மலர்ந்தது. அந்த நினைவு வெண்முரசின் வெண்ணிலவுக் கணங்களை கோர்த்துப் பார்க்கும் எண்ணத்தை அளித்தது.
வெண்முரசை மீண்டும் இதற்கென வாசிப்பதன் முன்னரே முதலில் மனதில் எழுந்த வரி சித்திரை முழுநிலவு குறித்தது. வெண்முரசு துவங்கியதிலிருந்து எங்கிருப்பினும் சித்திரை முழுநிலவன்று வெண்முரசில் இடம்பெறும் இவ்வரிகள் நினைவில் எழுந்து அந்நாள் முழுவதும் உடனிருக்கும்.
“அது சித்திரை மாதம் முழுநிலவு நாள். இனி என்றென்றும் ஞானம் விளையும் தருணமாகவே அது எண்ணப்படும் என்றார் பைலர். இந்த நாளில் பேராசிரியரின் பாதங்களைப் பணிந்து அவரளித்த ஞானத்திற்கு கைமாறாக தங்களை முழுதளிக்க வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்தனர். “இச்சொல் இங்கு வாழவேண்டும். இது இந்நிலத்தின் விதைக்களஞ்சியம்” என்றார் ஜைமினி.”
முதற்கனலில் வியாசவனத்தில் நிகழும் ஒரு சித்திரை முழுநிலவில் வியாசரின் மாணவர்கள் ஒன்று கூடி சொல்லும் வரி இது. மீண்டும் இமைக்கணத்தில் இத்தருணம் வரும்.
இன்றைக்கு ஒரு தலைமுறை முன்னர் வரை கூட பௌர்ணமியையும் அமாவாசையையும் வெவ்வேறு திதிகளையுமே வாழ்வின் முக்கிய தினங்களின் நினைவையொட்டி கூறி வந்திருக்கிறோம். அன்றாட மாற்றங்களோடு அகலாது உடன் வரும் விண்ணின் விழி. வெண்முரசு என்னும் காவியத்தின் ஒளியில் அதைக் காணும்பொழுது, நிலவு எந்த அளவுக்கு நமது வாழ்வின் முக்கிய தருணங்களை அடையாளப்படுத்தி வந்திருக்கிறது என்பதை நினைவூட்டுகிறது.
நிறைநிலவுநிகழ் மங்கலங்கள்
உதாரணமாக மங்கல நிகழ்வுகளாகிய மணநிகழ்வுகள் (பாண்டவர்-திரௌபதி மணமங்கலம் – பங்குனி முழுநிலவு, அரிஷ்டநேமியின் நிறைவுறா மணமங்கலம்), சுயம்வரங்கள்(தமயந்தியின் மணத்தன்னேற்பு -ஆவணி முழுநிலவு), அரச உரிமை அறிவிப்புகள் (புரூரவஸ் மைந்தன் ஆயுஸ் முடிசூட்டல், அஸ்தினபுரியின் இளவரசுப் பட்டம் குறித்த அறிவிப்பு), குருநிலைகளில் மாணவர்களின் வித்தையை பரிசோதிக்கும் பயிற்சிகள்(அக்னிவேசரின் குருகுலத்தில் நிகழும் பயிற்சிமுதிர்வு நிகழ்வுகள்) நிறைநிலவு நாட்களில் நிகழ்ந்திருக்கின்றன. இம்மாபெரும் காவியத்தின் முதற்கனலை ஏற்றும் காசி இளவரசிகளின் சுயம்வரம் வைகாசி மாதம் முழுநிலவு நாளில் நடக்கிறது. சுபத்திரையின் சுயம்வரமும் அதேபோல ஒரு வைகாசி முழுநிலவில் திட்டமிடப்படுகிறது.
போர் போன்ற ஷாத்திரம் கோரும் நிகழ்வுகளோ முழுநிலவுக்குப் பின்னர் நிகழ்கின்றன. மாபெரும் குருஷேத்திரப் போர் முழுநிலவுக்கு அடுத்த நாளில் துவங்கப்படுகிறது. ஆடிமாதம் தேய்பிறை முதல்நாள் கலி முழு வடிவுகொண்டு எழும் பொழுது என சகதேவன் துரியனுக்கு போருக்கான நாள் குறித்துத் தருகிறான்.
கல்வியின் நிறையொளி
ஆசிரியர் அளிக்கும் படைக்கலப் பயிற்சிகள் நிறைவடைந்து கச்சையும் குண்டலமும் அணியும் தருணமே ஒரு க்ஷத்ரியன் வீரன் என்னும் அடையாளத்தை முதலில் அணிகிறான். குருகுலத்து இளவரசர்களுக்கு சிராவண மாதம் முழுநிலவு (ஆவணி முழுநிலவு) நாளில் கச்சையும் குண்டலமும் அணிவித்து படைக்கலம் தொட்டுக்கொடுக்கும் சடங்கு நிகழ்கிறது. விண்ணேகிய பெருங்குருநாதர்கள் மண்ணை நோக்கி இளையோரை வாழ்த்தும் நாள் என்று வாழ்த்துகிறார்கள். பகற்பொழுதில் முழுநிலவு உதிப்பது தீர்க்கசியாமர் யாழ்தொட்ட நாளில் நிகழ்ந்த ஒரு அரிய நிகழ்வாக மக்கள் நினைவில் இருக்கிறது. முழுநிலவு நாளில் வேதச் சொல்லாய்வு போன்ற நிகழ்வுகள் நிகழ்வதை சொல்வளர்காட்டில் அறியலாம்.
குறிப்பாக சித்திரை முழுநிலவும் ஆஷாட மாதத்து முழுநிலவான குரு பூர்ணிமையும் பல முக்கிய நிகழ்வுகளின் சாட்சிகள்.
சித்திரை பூர்ணிமை
இந்திரப்பிரஸ்தத்தின் சுடர் ஏற்றும் விழா சித்திரை முழுநிலவில் நிகழ்கிறது. மண்ணில் இதுவரை எழுந்திராத ஒரு மாபெரும் நகரத்தை உருவாக்கி அதற்கு ஒளியேற்றும் நாளுக்கு சித்திரை முழுநிலவைத் தேர்கிறார்கள். “இருள்நிலவுப்பகுதியும் ஒளிர்நிலவுப்பகுதியும் நீண்டவை. முழுநிலவோ ஒரே ஒரு நாளுக்குமட்டும்தான்” என்ற வரிக்கு ஒப்ப மாபெரும் மனித உழைப்பில் வளர்ந்து அதன் உச்ச தருணம் அந்த முழுநிலவின் சுடரேற்று விழா. அதன் பின்னர் கைவிடப்பட்டு இந்திரப்பிரஸ்தம் ஒளியிழக்கும் தேய்பிறைக்காலமும் வருகிறது.
சித்திரை முழுநிலவின் சிறப்பு மீண்டும் மீண்டும் வெண்முரசில் வருகிறது. எட்டு மங்கலங்களும் நிறைந்த சித்திரை முழுநிலவு நன்னாள் என்கின்றனர் நிமித்திகர். அரிஷ்டநேமியை ஏற்றி அழைத்துச் செல்லும் மங்கலக்குறிகள் நிறைந்த சுப்ரதீபம் எனும் யானை சித்திரை முழுநிலவு நாளில் மண் நிகழ்கிறது. சித்திரை முழுநிலவு நாளை ஆசிரியரிடமிருந்து மாணவர்கள் இறுதிச் சொல்லை பெற்றுக்கொள்ள உகந்தது என கர்ணனுக்கு உரைக்கிறார் பரசுராமர். சித்திரை மாத முழுநிலவு கந்தர்வர்களுக்கு உரியது என்பதால் இல்லங்களிலோ தெய்வங்கள் பதிட்டை செய்யப்பட்ட காடுகளிலோ அன்றி வேறெங்கும் மானுடர் நடமாடலாகாது என்றும் பிறநிலங்கள் அனைத்திலும் கந்தர்வர்கள் களியாட்டு நிகழுமென்றும் மூதாதையர் சொல்கிறார்கள். தனது நிஷாத அடையாளங்களாகிய கலி மற்றும் காக வழிபாட்டை துறந்து இந்திரனை முதற்தெய்வமாக அறிவிக்கும் பொருட்டு கிரிப்பிரஸ்தத்தின் மீது சித்திரை மாதம் முழுநிலவு நாளில் இந்திரனின் பெருஞ்சிலையை நளன் நிறுவுகிறான்.
நிலவென்னும் அமுதம்
மலைவெளிகளில் முழுநிலவு சித்தத்தை அழியச் செய்யும் அனுபவம். நிழல் ஒளி விளையாட்டில் இருளின் வெவ்வேறு அடுக்குகள் நிலவின் ஒளியில் வெவ்வேறு கருமையின் அடர்த்தியில் வெண்பூச்சு கொண்டு துலங்குவது மானுடன் வரைய முடியாத ஓவியம். ஓரிரவு துங்கநாத் மலையின் அடிவாரத்தில் கூடாரத்தின் பாதுகாப்பில் அமர்ந்து கொண்டு துங்கநாத் சிகர நுனியில் சற்றே படர்ந்திருந்த பனிவிரிப்பு மெல்ல மெல்ல நிலவொளியில் விரிந்து மலர்வதை இரவு முழுவதும் அவ்வப்போது கண்விழித்து பார்த்திருந்த இரவு நினைவில் வருகிறது. அதுபோன்ற ஒரு பனிமலையின் நிறைநிலவுப்பொழுதை அர்ஜுனனை கருக்கொண்ட நிறைவயிறோடு குந்தி அனுபவிக்கிறாள். அவள் சதசிருங்க நாட்களில் நந்ததேவி அருகே இருக்கும் சரத்வான் ஆசிரமத்தில் நள்ளிரவில் ஒரு அழைப்பை உணரும் காட்சி. ஒளியில் அவள் கரைந்து போகும் உணர்வின் உச்சத்தில், அவ்வெண்ணிற ஒளியே உடலெடுத்து வந்தது போல ஒரு வெண்ணிறச் சிறுத்தைப்புலியை எதிரில் கண்டு மயங்கிவிடுவாள். அது ஒரு ஃபால்குன மாதத்து(பங்குனி) பௌர்ணமி. அந்த அத்தியாயமே இமயத்தின் மடியில் உலவித்திரியும் கனவைக் கிளர்த்தும் பகுதி.
“கதவைத்திறந்து பனிவெளிக்குள் இறங்கினாள். தரையெங்கும் வெண்பனி விரிந்திருந்தாலும் காற்றில் பறந்து உதிர்ந்துகொண்டிருந்த பனித்துகள்கள் முழுமையாக நிலைத்திருந்தன. அதிதூய காற்றுவெளி அசைவில்லாது நின்றது. வானம் மேகமற்று விரிந்திருக்க மேற்குச்சரிவில் முழுநிலவு இளஞ்செந்நிற வட்டமாக நின்றிருந்தது. அதைச்சுற்றி வானத்தின் ஒளிவட்டம் விரிந்திருந்தது…
கண்கள்தான் தெளிந்து வருகின்றனவா இல்லை ஒளி கூடுகிறதா என்று குந்தி வியந்துகொண்டாள். இல்லை ஒளி அதிகரிப்பது உண்மைதான். நிலவொளி ஒரு குறிப்பிட்டகோணத்தில் விழும்போது அங்கிருந்த பனிச்சரிவுகள் அதை முழுமையாக எதிரொளிக்கின்றன போலும். ஒளி மேலும் கூடியபோது அப்பகுதியே வெண்ணிறமான கண்கூசாத ஒளியலைகளாக மாறியது. ஒளியாலான மலைகள், ஒளியாலான சரிவுகள், ஒளியாலான வானம். தன் உடலும் அமர்ந்திருந்த பாறையும் எல்லாம் ஒளியாக இருப்பதை உணர்ந்தாள். ஒளியில் மிதந்து கிடப்பதைப்போல, ஒளியில் தன் உடல் கரைந்து மறைவதுபோல அறிந்தாள்.”
முழுநிலவுநாட்களில் பனிமலைச்சிகரங்களில் விண்ணவர்கள் வந்து இறங்குவதாக ஒரு நம்பிக்கை. சரத்வான் நந்ததேவியை சூழ்ந்த பனிச்சிகரங்களை பற்றி இவ்விதம் குறிப்பிடுகிறார். பால்ஹிகர் தான் வாழும் பனிச்சிகரங்களில் பொழியும் முழுநிலவில் இருந்தே தனது உயிராற்றலை பெற்றுக் கொள்வதாக கூறுகிறார். பால் பொழிவு போலிருக்கும் வெண்ணிற பொழுதுகளில் ஒவ்வொரு முழுநிலவு நாளிலும் அந்த அமுதை அருந்தியவராய் இறப்பை பல ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக சொல்கிறார். “கீழிருப்பவர்கள் உண்ணுவதும் உயிர்ப்பதும் நஞ்சு. ஆகவே நாள்தோறும் அவர்கள் நலிகிறார்கள்.” – இது ஒவ்வொருமுறையும் மலைமக்களின் உடற்திறனை காணும் போது உண்மையென்றே தோன்றுகிறது.
நிறைநிலவின் நறுமணம்
உலகெங்கும் நிலவுக்கும் உணர்வுகளுக்கும் உள்ள தொடர்பு பண்டைய காலம் தொட்டே ஏதோ ஒரு விதத்தில் அறியப்பட்டிருக்கிறது. நிறைநிலவில் வான் மீது பித்தெழும் அலைகடலென உளம் பொங்குவதை உணர்ந்திருக்கலாம். முழுவெண்திகிரி உணர்வுகளை கட்டின்றி பெருக்கும் காட்சிகளை நீர்க்கோலத்தின் கரவுக்காட்டிலும் நீலத்தின் கன்னியிடமும் காணலாம். தன்னிருப்பைக் கரைத்து விடும் பிரேமையின் ஒளி நிலவொளியில் மேலும் சுடர்கொள்கிறது.
நிறைநிலவில் நீலம் பித்தின் நிலம், பிரிவற்ற காதலின் நிலம், மண்மேல் ஒவ்வொன்றும் மலர்ந்திருக்கும் நிலம். வசந்த கால இரவில் எழும் முழுநிலவு ஆயிரம் சுனைகளில் ஆம்பலைத் தழுவுவது அபாரமான படிமம். மண்ணில் உயிர்கொண்டு வந்ததனைத்தையும் அணைக்கும் ஒற்றைப் பேரருள், பல நூறு கோபியருடன் திகழும் நீலனின் பிருந்தாவனத்து ராசலீலை என முழுநிலவில் மலர்கிறது.
நிலவணிந்த நீலக்கடம்பு நிலவன்றி ஓரணியும் சுமையாகும் உணர்வு நிலையைப் பேசுகிறது. நிலவொளி போல் உடைந்து சிதறி வெளியெங்கும் நிறைந்திடத் துடிக்கும் சித்தம். பரவெளியில் கலந்திடத் துடிக்கும் சிறுதுளி.
“பனியீரம் நனைந்த முழுநிலவு. அது தொட்டு வருடி சொட்டி வடியும் இலைப்பாளங்கள். ஒளிகொண்ட ஓடைகள். வெள்ளித்தகடான சுனைகள். மணியாகி சுடர் எழுந்த கூழாங்கற்கள். மண்ணில் வழிந்தோடிய பெருமோனம்.”
முழுமையை அடைதல்
அருகநெறியினருக்கும் முழுநிலவு மிக முக்கிய தினமாக இருப்பதை வெண்முரசில் வரும் பல கதைகளில் அறியலாம். கஜ்ஜயந்தபுரியை ஆண்ட ரைவதகர், அருகர்களின் முதல்தாதை ரிஷபரின் கதையை வணிகர்கள் வாயிலாக அறிகிறார். ரிஷபர் அயோத்தியை ஆண்ட இக்ஷ்வாகு குலத்தைச் சேர்ந்தவர். இருபத்தியெட்டு ஆண்டுகாலம் அருந்தவம் இயற்றி சௌராஷ்டிர மண்ணில் அமைந்த பாலிதானம் என்னும் குன்றில் ரிஷபர் சித்திரை முழுநிலவு நாளில் மெய்மையை அடைகிறார்.
ஆண்டில் ஒருமுறை சித்திரை முழுநிலவு நாளில் யாதவர்கள் மந்தரமலைக்கு நோன்பு கொண்டு செல்லும் வழக்கமிருக்கிறது. மந்தரமலை எனும் சொல் விடுத்த அழைப்பை ஏற்று அரசு துறந்து செல்கிறார் ரைவதகர். அருகநெறியினருக்கு அவர்களின் பனிரெண்டாவது தீர்த்தங்கரரான வசுபூஜ்யரின் பதிட்டை மந்தர மலையில் இருக்கிறது. வசுபூஜ்யர் ஆஷாட மாதத்தின் முழுநிலவு நாளில் மந்தரமலையில் விண்ணுலகை அடைந்தவர். ரைவதகர் அங்கே சென்று மலையுச்சியில் முழுமையில் நிறைகிறார். பின்னர் அருக நெறியினராக பன்னிரெண்டு ஆண்டுகாலம் கஜ்ஜயந்தநாட்டின் ஊர்களில் அலைகிறார். வைகாசி முழுநிலவில் ரைவத மலையேறி வடக்கிருந்து உயிர்துறக்கிறார். சௌராஷ்டிர நிலத்து யாதவர்கள் அந்த நாளில் விழவெடுத்து வணங்குகிறார்கள். அகிம்சையின் முதல் விதை ஒரு சமூகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு சௌராஷ்ட்ரத்தில் தொடங்குவதைக் காண்டீபத்தின் இப்பகுதியில் காணலாம். சௌராஷ்டிரத்தின் மக்கள் அருகநெறியை ஏற்று ரைவதகர் விண்நிறைந்த சித்திரை முழுநிலவு நாளில் படைக்கலங்கள் அம்மண்ணில் தேவையில்லை என முடிவெடுக்கிறார்கள்.
முழுமையில் அமர்தல்
நமது இந்திய மரபில் குரு பௌர்ணமி மகா வியாசரின் தினமாகப் போற்றப்படுகிறது. குருக்ஷேத்ரப் போருக்குப் பின் அக்குருதிக் களத்திலிருந்து விலகும் பொருட்டு வியாசர் இப்பாரத நிலமெங்கும் அலைகிறார். அறுதியாக குமரிமுனை வந்தடைந்து தன்னுள் அலைமோதும் அத்தனை சொற்களும் விலக, எஞ்சி நின்ற “மா” என்னும் முதற் சொல்லை அடைகிறார். அந்த நாளே ஆடிமாதம் முழுநிலவு என்று வியாச பூர்ணிமையாக வணங்கப்படுகிறது.
“அன்று பரதகண்டத்தின் எட்டு எல்லைகளிலும், அத்தனை குருநிலைகளிலும் எங்கள் ஆசிரியனின் அழியாச் சொல் ஓதப்படுகிறது. அதில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் குருபூர்ணிமை நிறைநாள். அன்று தொல்மலைகள் எட்டிலும் சென்று அழியாப் பெருங்காவியத்தை முற்றோதுவது எங்கள் வழக்கம்” என்று இமைக்கணக்காடு (நைமிசாரண்ய ) குருநிலையை சேர்ந்த, வியாசர் மாணவர்களில் உக்ரசிரவஸ் என்னும் சூததேவரின் மாணவனாகிய சீர்ஷன் தென்திசை பாண்டியன் அவையில் சொல்கிறான்.
ஆடி மாதம் தட்சிணாயணத்தில் வரும் முதல் பௌர்ணமி குரு பூர்ணிமை. உத்தராயணத்தில், இப்புவி ஆண்தன்மை வாய்ந்ததாகத் திகழ்வதாகவும், தட்சிணாயனத்தில் பெண்தன்மை நிரம்பியதாக, உள்வாங்கும் தன்மை கொண்டதாக விளங்குவதாகவும் சொல்லப்படுகிறது. எனவே இந்த தட்சிணாயனத்தில் வரும் ஆஷாட மாதத்து முழுநிலவு நாளில் அனைத்தையும் கடந்த சிவம், ஞான தாகம் கொண்டு தன்னை நாடி வந்த சப்த ரிஷிகள் மேல் கருணை கொண்டு ஞானம் அருளிய நாளாகவும் வணங்கப்படுகிறது. இவ்வுலகின் எதுவும் சென்று தொடமுடியாத பேரிருப்பு கருணை கொண்டு ஆசிரியராக, குருவாக அமர்ந்த முழுநிலவு. அறிதலின் பாதைக்கான உறுதியை மேற்கொள்ளவும், அதிலே மனம் அமைந்திருக்கவும், குருவின் அருள் பெறவும் சிறந்த நேரம்.
குரு எனும் வார்த்தைக்கு “இருளை அகற்றுபவர்” என்று பொருள். தேடுதலில் இருப்பவரின் அக இருளை நீக்கி, ஒளியை உணர வழி செய்பவர். இந்திய மரபில் குருபௌர்ணமி அன்று, தேடுதலில் இருப்பவர்கள் தம் நன்றியை வியாசன் முதலாகிய ஆசிரிய நிரைக்கு, தத்தமது குருவிற்கு வெளிப்படுத்தி ஆசி பெறும் நாள். துறவின் முதல் சங்கல்பத்திற்கும், யோக சாதனைகளில் ஈடுபடவும், ஊழ்கத்தில் அமரவும் குருபௌர்ணமி உகந்த நாள்.
ஜனமேஜயனின் சர்ப்பசத்ர வேள்வியில் வியாச காவியநிறைவை ஒட்டி உளம் எழ, ஆஷாடமாதம் முழுநிலவு காவியம் முழுமைகொண்ட நாள் என்பதால் வியாசபூர்ணிமை என்றும், இக்காவியத்தை நூல்தொட்டு பயில்வோர் ஒவ்வொருவரும் குருபூர்ணிமை என்றும் கொண்டாடவேண்டும் என அறிவிக்கிறான். வியாசனின் பாதங்களைத் தொட்டு எழுதப்பட்ட வெண்முரசு என்னும் காவியம் நிறைவுற்ற நாளும் இதுவே. “வியாசன் முதல் நித்யா வரையிலான ஆசிரியர்களை நினைத்துக்கொள்ளும் நாள்” என்ற ஆசிரியரின் சொல்திகழ வெண்முரசு தினத்தில் அருள் கனிந்த ஆசிரிய நிரையை வணங்குகிறோம்.
குருபூர்ணிமைக்கு வெண்முரசின் வாழ்த்து: “மெய்மை அறிந்தோர் சொல்லும் வார்த்தையில் கலைமகள் வந்தமரும் நன்னாள். மந்திரங்கள் உயிர் கொள்ளும் தருணம்.”
ஓம் அவ்வாறே ஆகுக!