வரவிருக்கும் எழுத்து
அன்புள்ள ஜெ
வரவிருக்கும் எழுத்து பற்றிய கட்டுரையைக் கண்டேன். மிக முக்கியமான ஒன்றைச் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். தமிழில் உருவாகவேண்டிய எழுத்து என்றால் அது இத்தகையதுதான். அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் வணிகத்தையும் பற்றி கலைநுட்பத்துடன் எழுதப்படும் எழுத்து. அவற்றை அந்தந்த துறைகளின் தகவல்களை மட்டுமே முவைத்து எழுதுவதுதான் இங்கே அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் நம் கல்வி முறை அப்படி. நாம் தகவல்களையே அறிவு என நினைப்பவர்கள். தகவல்கள் வழியாக கொள்கைகளையும் பார்வைகளையும் அறிந்தவர்கள் அல்ல. அதையெல்லாம் முன்வைக்கும் எழுத்து இங்கே ஏராளமாக வரவேண்டும்
தகவல்களை முன்வைத்து அதன்வழியாக கொள்கைகளை எளிமையாக சொன்னாலே அதற்கு இலக்கியமதிப்பு உருவாகிவிடுகிறது. அதை பிரபஞ்ச்நாடகமாக ஆக்கிக் காட்டினால் அது இலக்கியமேதான். லோகமாதேவி எழுதிய கட்டுரைகள் சில அப்படிப்பட்டவை. சீமைக்கருவேலம் பற்றிய கட்டுரை என் பார்வையையே மாற்றியது. அவர் ஓர் உரையாடலில் தேசியக் களைக்கொள்கை பற்றிச் சொல்கிறார். களைகளும் பாதுகாக்கப்படவேண்டிய தேசியச்செல்வங்களே என்கிறார். அதெல்லாம் பெரிய திறப்பு.
தமிழில் இத்தகைய அறிவியலெழுத்து என்.ராமதுரை, தியடோர் பாஸ்கரன் போன்றவர்களால் எழுதப்பட்டது. அது முக்கியமான ஒரு கிளையாக வளரவேண்டும்.
சி.எஸ்.ராஜேந்திரன்
***
அன்புள்ள ஜெ
உருவாகவேண்டிய எழுத்தைப் பற்றிய கடிதம் கண்டேன். மிகத்தெளிவாக எழுதியிருந்தீர்கள். இங்கே உருவாகவேண்டிய எழுத்து அதுதான். இலக்கியத்திலேயே ஒரு மாறுதல் வந்திருப்பதைக் காணலாம். ந.பிச்சமூர்த்தி தலைமுறை எழுத்தாளர்கள் பறவைகள், மரங்களின் பெயர்களைச் சொல்லி எழுதுவார்கள். சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் எழுத்தில் பறவை, மரங்கள் எதையும் பெயர் சொல்லமாட்டார்கள். ஒரு பறவை என்றுதான் சொல்வார்கள். அல்லது பச்சையாக தழைத்த மரம் என்பார்கள். அடுத்து உருவான இன்றைய தலைமுறை பறவைகளின் பெயர்களை தெரிந்து வைத்திருக்கிறது. நான் என் மாணவர்களுடன் டூர் செல்லும்போது பிள்ளைகள் டிராங்கோ, ராபின் என இயல்பாக அடையாளம் சொல்வார்கள். அந்த தலைமுறைக்கான எழுத்து இங்கே உருவாகியாகவேண்டும்
ராஜி பார்த்தசாரதி
***