கார்கடலில்…

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

கார்கடல்-16. கர்ணனும் துரியோதனனும் காதலனும் காதலியுமாகத் தோன்றுகின்றனர். கலிக்கு முற்றளித்த துரியோதனன், ஆண் என பானுமதியின் கண்களில் பெருங்காதலைத் தோற்றுவித்த துரியோதனன் அல்ல இவன். இக்கணத்தில் கர்ணன் முன் பெண்ணாகிறான். பெருந்தந்தை என்று எவரையும் சொல்வதும் கூட அபத்தம் என்றே தோன்றுகிறது, ஆண் அன்னை என்று ஆகிறான், அதிலென்ன பெருந்தந்தை என்று எண்ணம் எழுகிறது. “என் பிள்ளையை மட்டும் கரித்துக்கொட்டுகிறாள். அவள் குழந்தைகளும்தான் இங்கு வந்து விளையாடுகிறார்கள்.”

நான் அவர்கள் குழந்தைகளை ஒன்றும் செய்யவில்லை என் இளையோரைக் கொல்ல அவனால் எப்படி இயன்றது?

ஒரு பெண் அன்னை ஆகிறபோது பெரும்பாலும் தன் குழந்தைகளுக்கு மட்டுமே அன்னை ஆகிறாள், ஆனால் ஒரு ஆண் அன்னை என்று ஆவது அரிது என்றபோதும் அவ்வாறு ஆகிறபோது அனைவர்க்கும் அன்னையாக பேரன்னையாக ஆகிவிடும் சாத்தியம் அதிகம் உள்ளது. அங்கு பேரன்னை பெருந்தந்தை என்பவை வெறும் சொல் வேறுபாடுமட்டுமே என்று எண்ணுகிறேன்.

பெண்ணாகி மீண்டபின் நாணுகிறான். கர்ணனிடம் மட்டுமே அவன் அவ்வாறு ஆகமுடியும். பேரன்பில், பக்தியில், தன்னைப் பொருட்டல்ல என்று எண்ணும் அளவில் ஒன்றை நேசிக்கையில் எந்த ஆணும் பெண்ணாகிவிடுகிறான் என்று கருதுகிறேன்.

அன்புடன்

விக்ரம்

கோவை

***

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

விழிமயக்கா என்று அறியவில்லை ‘கார்ப்பெருங்கடல்’ என்று கண்டேன். கார்கடலின் 15-ஆம் அத்தியாயத்தை வாசித்து முடித்துவிட்டு முதல் அத்தியாயம் முதல் நினைவில் கொண்டு தொகுத்துக்கொள்ள முயன்றேன். ஆமை அல்லது நாகம், வேழம், செம்பருந்து. நாகர், அசுரர், வைதீகஞ்சார்ந்தவர். மேற்கே ஆப்கனிஸ்தான் கிழக்கே மியான்மரின் அரக்கன் யோமா மலைத்தொடர், வடக்கு-தெற்காக பாயும் ஐராவதி நதி, ஒரு பெரும் பரப்பை மனம் கற்பித்துக் கொண்டது. பருந்து நாகத்தையும் யானையும் உண்டு தன்வயப்படுத்தி விண் எட்டுகிறது, உண்மையில் அத்தனை உயரத்தை முன்னிரண்டும் எட்டுவது என்பது பருந்துடன் இணைந்து அதுவென்று ஆகிவிடுவதன் மூலமே சாத்தியம். முன்பொருநாள் எகிப்தியவியல் அறிஞரான ஒரு கருப்பு மனிதர் பேசுவதை YouTube-இல் கேட்டிருந்தேன். பைபிளின் அடிப்படையான பல பண்டைய எகிப்திய சமயத்தில், பண்பாட்டில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டவை என்று விளக்கிக் கொண்டு இருந்தார். நெல்சன் மண்டேலாவிற்கு பண்டைய ஆப்ரிக்க பண்பாட்டைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை, தெரிந்திருந்தால் இந்தியாவின் மகாத்மா காந்தியின் அஹிம்சை கொள்கை அவருக்கு வியப்பளித்திருக்காது, ஏனெனில் உலகில் அஹிம்சை கொள்கையை முன்னமே கொண்டிருந்தவர் நாம் என்று கூறினார். எவ்வாறோ எவையும் தன்வயப்படுத்திக் கொண்டவற்றின் வாயிலாக வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

கர்ணனின் பொற்தேர் பற்றி துச்சாதனன் விமர்சிக்கிறான், களத்தில் மறைவு அற்று துலங்கக் கூடியது என்கிறான். அது அவன் எதிர்வினை என்றும் அவனது ஆணவத்தை தான் அறிவேன் என்றும் துரியோதனன் கூறுகிறான். உண்மையில் இன்று அவன் கதிரோனாகவே எழுகிறான். யாவற்றின் மையம் எனத் துலங்குவது அதன் இயல்பு. மறைந்து கொள்ளும் அவசியம் ஒருபோதும் இல்லை கதிரோனுக்கு. மேகங்கள் மறைப்பதும், பலரும் கொள்ளும் கருத்துக்களும், விருப்பு-வெறுப்புளும், யாவைக்கும் ஒருசம்பந்தமும் இல்லாமல் உயர்ந்து எழுவது கதிர். இங்கு கர்ணன் அவ்வாறே எழுகிறான் என்று கருதுகிறேன். கர்ணனை சூழ்ந்த சிறுமைகளும் அவன் உள்ளத்தில் கொண்ட சிறுமைகளும் ஒன்றுமில்லை என எழுவான், உயர்ந்து தகித்து, கடமை முடித்து மோனமும் ஊழ்கமும் அருளும் ஞானச் செங்கதிர் போல் கார்கடலில் சரிவான் என்று கருதுகிறேன்.

இன்னொன்றும் சொல்லவேண்டும், காலையில் தற்செயலாக – வாங்கி வைத்து இதுவரை வாசிக்கத் துவங்காமல் இருக்கும் பகவான் தஸ்தயேவ்ஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’ கையில் எடுத்தேன். அதன் கீழ்காணும் வரிகள் – வெண்முரசு – ஆசிரியர் – குறுநகை. நாஸ்தென்காவிடம் கதை நாயகன் கூறுகிறான்,

“…..எல்லா ஆசைகளும் அப்பாற்பட்டவன் அவன். ஏனெனில் யாவும் கிடைக்கப் பெற்றுள்ளான். அவன் வேண்டியமட்டும் கரைத்துவிட்டுச் சலிப்படைப்பவன், தானே தனக்கு வேண்டியதைப் படைத்தளிக்கும் கலைஞனாக இருக்கிறான். தன் மனத்துள் எழும் புதுப்புது மோகங்களுக்கு ஏற்ப மணிக்கு மணி தனக்கு அவன் புதுப்புது உலகங்களை அல்லவா சிருஷ்டித்துக்கொள்கிறான்! இந்த மாயக்கற்பனை உண்மையில் மாயையென நினைக்க முடியாதபடி அவ்வளவு சுலபமாகவும் இயற்கையாகவும் அதைப் படைத்துக்கொள்ள முடிகிறதே!”

அன்புடன்

விக்ரம்

கோவை

***

முந்தைய கட்டுரைநிலவும் மழையும்-1
அடுத்த கட்டுரைஇளையராஜாவின் பின்னணியிசை