குமரி-கடிதங்கள்

குமரித்துறைவி வாங்க

அன்புள்ள ஜெ

குமரித்துறைவி கதையை வாசிக்கும் முன் தளத்தில் நீங்கள் வெளியிட்ட “ஒரு  சொல்” என்னை சோர்வடைய  செய்தது.

அறிமுக வாசகனென்பதனால் ஒவ்வொரு கதை வாசித்த பின்பும், வாசகர் கடிதங்கள் மூலமாகவே கவனிக்க தவறிய நுட்பங்களை அவர்களின் வார்த்தைகள் வழியாக சென்று என்னைப் புதுப்பித்து கொள்வேன். ஆனால் கதையை வாசித்த பிறகு நீங்கள் செய்தது எவ்வளவு பெரிய புண்ணியம் என எண்ணிக்கொண்டேன். இல்லையேல் இப்போதைய மனநிலையில் அவை எனது மனக்களிப்பை வேறு ஒன்றாக்கி இருக்கும். நன்றி ஜெ.

நடந்து இரண்டு மாதமே ஆகிய தங்கையின் திருமணத்தில் இருந்த, என் அக ஓட்டத்தினை உங்கள் எழுத்தின் வழியாக வார்த்தைகளாக கண்டேன். அந்த 10 நாட்களில் என்ன செய்கிறேன் எதற்காக செய்கிறேன் என்று எதுவும் தெரியாமல் ஓடி மட்டுமே கொண்டிருந்த ஓட்டம் அது. தாலி ஏறிய பொழுதின் பின்பும் துக்கமோ மகிழ்ச்சியோ ஏதும் இல்லாத வெற்று மனநிலை.

இன்று குமரித்துறைவி வாசித்து அந்த நாட்களை மனதில் ஓட்டிப் பார்க்கிறேன். அன்றைய மன ஓட்டத்தைப் புரிந்து கொள்ள முயல்கிறேன். அம்மை மீனாட்சி வேணாட்டு மண்ணை விட்டு பல்லக்கில் ஏறிய போதும், பல்லக்கு சரிந்தது அம்மையின் வளையல் வீழ்ந்தபோதும் என்னை அறியாமல் கண்ணீர் வீட்டுக் கொண்டிருந்தேன். புனைவு வாசிப்பில் முதல் முறையாக என்னை மீறிய அழுகை.

பேரானந்த அனுபவம் தந்த உங்களுக்கு நன்றி ஜெ.

கு.ஜெயபாலகணேஷ்

***

அன்புள்ள ஜெ

ஏப்ரல் 10 விடியற்காலை ஒரு கனவு- ஒருவர் என்னிடம் முக்கோணம் ஒன்றையும் வட்டம் ஒன்றையும் தந்து இவற்றை ஒன்றாக்கு என கூறுகிறார். நான் நெடுநேரம் பலவிதமாக முயன்றும் முடியவில்லை. அப்போது சட்டென ஒரு பிம்பம் தோன்றுகிறது. முக்கோணத்தினுள்ளிருந்து வெளியேறப்போகும் வட்டம், அதைச் சுற்றி என்றென்றுமென சுழலும் இரட்டை மீன்கள்.

அச்சித்திரம் என்னுள் விழித்த பின்பும் இருந்துகொண்டே இருந்தது. அதை புரிந்துகொள்ள என் reason-ஐ கொண்டு பலவாறாக முயன்றேன். ஆனால் குமரித்துறைவி இரண்டாம் பகுதி வாசிக்கத் துவங்கியபோதே அக்கனவும் இக்கதையும் ஒன்றாகிவிட்டன. என் reasonஆல் அன்று intuitionஆல். அதை விளக்கிக்கொள்ள போவதில்லை. உணர்ந்து நம்புகிறேன்.

இவ்வருட துவக்கத்தில் திருவட்டாரு பெருமாளை முதல்முறையாக தரிசனம் செய்தேன்.  நான் சென்ற நேரம் கும்பாபிஷேக பணிகள் நடந்துகொண்டிருந்தன என நினைக்கிறேன், மேலும் கொரோனா காரணமாக யாருமே இல்லை. அவ்விருட்டறையில் கண நேர மலைப்பில் நான் என்ன உணர்தேன் என தெரியவில்லை. சற்று நேரத்திலேயே வெளியே வந்துவிட்டேன். பின்னர் பேருந்தில் திரும்புகையில் வழி எங்கும் நீர். அத்தனை நீரை நான் வளர்ந்த காஞ்சியிலோ வேலூரிலோ கண்டதில்லை. வீடுகளின் முன் ஓடும் நீர், அதில் குழந்தைகளை பாட்டிகள் குளிப்பாட்டி கொண்டிருந்தார்கள். வளமை! அதை பார்த்துக்கொண்டே சென்றதில் திடீரென ஓடும் நீர் நின்று, அதன் மேல் பள்ளிகொண்ட ஆதிகேசவபெருமாளை கண்டேன். என் கற்பனையில் விரிந்து விரிந்து சென்றது அவ்வுருவம். கலை நிகழ்வது அக்கற்பனையில் தான், அந்த ஆழ்மனதில்.

இப்போது குமரித்துறைவி வாசித்ததும் உணர்ந்ததும் அதுவே. இதுவரை அக்கனவை வரைந்து பார்த்து சரியாக வரவில்லை இன்று ஏனோ வரையாமல் வேறு எதுவும் செய்ய முடியாது என்றொரு நிலை. வண்ணங்களில் அப்பிம்பத்தை அளக்க முயன்றேன். இருந்தும் அது என் மனதில் இருக்கும் அவ்வடிவில் வரவில்லை. ஆனால் இதை பார்க்கும் போது அந்த ஆழ்மன பிம்பத்தை கூர்ந்து உணர முடிகிறது.

நெடுநாட்கள் பிறகு முதல் வரி முதல் இறுதி வரை முகத்தில் புன்னகையுடன் அவ்வப்போது கண்ணில் நீருடன் வாசித்த கதை. ஆழ் உள்ளம் இதே போல்  குறையாமல்  வழங்க வேண்டும். நன்றி.

ஸ்ரீராம்

***

முந்தைய கட்டுரைவெண்முரசில் மிளிரும் மானுடம்-மணி வேலுப்பிள்ளை
அடுத்த கட்டுரைமனமென்னும் மாய அன்னம்