கல்வலைக்கோடுகள்- கடிதம்

கல்வலைக்கோடுகள்

அன்பு ஜெ,

புதிய வாசகர் சந்திப்பின் போது தான் ஜெயராம் அவர்களைச் சந்தித்தேன். சில தனித்துவமான அங்க அடையாளங்கள் கொண்டிருப்பவர்களை நம்மால் மறக்க முடியாது. அப்படித்தான் ஜெயராம் எனக்கு. முதன் முதலில் பார்த்தபோது ஒரு அனிமேஷன் கதாப்பாத்திரம் போல மனதில் பதிந்திருந்தார். சுருள் மண்டைகளில் இப்படி ஒரு வகையா என்று நினைத்திருந்தேன். இவர் ஓவியம் வரைவார் என்று தெரிந்தபோது கூட இவரையே ஓவியமாகக் கற்பனை செய்து கொண்டேன்.

இரண்டு மாதங்களுக்கு முன் டிவிட்டரில் எதேச்சையாக இவருடைய ஓவியங்களைப் பார்த்தேன். ’இந்தியா டுடே’ விற்காக இவர் வரைந்திருந்த கொரனா கார்ட்டூன்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தேன். மோனாலிசாவை கொலை செய்யாத குறையாக ’டீ ஆத்தும் நோனாலிசா, வீரப்பன் மோனாலிசா, சீமண்ணெய் விளக்கு மோனாலிசா, மண்டையில் வாழைமரம்/குருவிக்கூடு முளைத்த மோனாலிசா என சிரிப்பு மூட்டுவனவாகவும் ஆச்சரியப்படுத்துபவனாகவும் அவர் வரைந்து வைத்திருந்தார். ஒரு படி மேலே போய் மோனாலிசாவின் கைகளின் அவரின் குழந்தைப் பருவத்தை வரைந்து தவழ விட்டிருந்தார். அவரைக் குழந்தையாக சுமந்திருந்த மோனாலிசா மட்டும் அவர் சாயலில் இருப்பதாகப் பட்டது. அதன் பின் மோனாலிசாவே ஜெயராம் தான் என்று நினைத்துக் கொண்டேன்.

பார்க்கும் படங்கள் தோறும் அவரே இருப்பது போல தோன்றியது. அவருடைய ஏதோ ஓர் தருணத்தின் உச்ச உணர்ச்சியைத் தவழ விடுவது போல இருந்தது. இரண்டு சுவரோவியங்கள் (WALL ART) அவர் வரைந்து வைத்திருந்தார். ஒன்று புத்தர், இன்னொன்று உணவு சாப்பிடும் நபர். இரண்டிலுமே நான் ஜெயராமைத்தான் பொருத்திப் பார்த்தேன். அதைத் தாண்டி அந்த சுவர் ஓவியங்களில் அவர் பயன்படுத்திய கோடுகள் வியக்கச் செய்தன. புத்தருக்கு உள்ளும் புறமும் என ஆற்றலை அள்ளித் தெளித்திருந்தார். அந்த வளைவுகள் அதன் போக்குகள் என ஒரு ஜூவாலையை சுவற்றில் பரப்பியிருந்தார்.

எல்லாவற்றையும் தாண்டி ஜெயராமையும் மறந்து அவரை உருவற்றவொருவராகக் கண்டது ’ஸ்கெட்சஸ்’ என்று அவர் தலைப்பிட்டு வரைந்த கல்வலைக்கோடுகளைத்தான். இந்த இரண்டொரு மாதங்காளாக அவ்வபோது இவற்றை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த கற்சிலைகள் உணர்வு கொண்டு பேசுவது போல, சிரிப்பது போல, கோபங்கொள்வது போல, சொல்லவியலா உணர்வுகளைக் கடத்துவதுபோலத் தோன்றியது. அவருடைய கோடுகளிலுள்ள அதீதத்தன்மை தான் அவ்வுணர்வெழுச்சியைச் தூண்டுகிறதோ? என்று கேட்டுக் கொண்டேன். எது? எது? இதனை இத்துனை உயிருள்ளதாக்கிக் காட்டுகிறது என்று சிந்தித்திருந்தேன். இன்று உங்கள் வரிகளில் தான் அவற்றைக் கண்டடைந்தேன்.

”சிற்பம் என்பது அதன் மொத்தக் கல்வடிவமும் அல்லஅதில் நாம் காணும் விசையும் உணர்வும்தான் அதுஅந்த நுண்மைகளை மட்டும் வைத்து அக்கல்வடிவத்தின் திரளலை தவிர்த்து கோட்டோவியமாக ஆக்கிவிடலாம்அதில் சிலைக்குப் பதில் சிலையென்றானவை திகழத்தொடங்குகின்றனஉள்ளமும் கலந்த கல்கனவிலெழுந்த கல்.” என்று நீங்கள் சொன்ன வரிகளைக் கொண்டு இன்று மீண்டும் அந்த கல்கோட்டு ஓவியங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆம்! அது கனவிலெழுந்த கல்லே தான்.

“கல் நீர்த்துளிபோல திரண்டு சொட்டிவிடக்கூடுமென காலத்தில் நின்றிருப்பதை கோட்டோவியங்களே காட்டுகின்றன.” என்ற வரிகளால் எனக்கான ஒரு கலையின் பார்வையை திறந்து வைத்தமைக்காக நன்றி ஜெ.

அன்புடன்

இரம்யா

முந்தைய கட்டுரைஉணவு எனும் தெய்வம்
அடுத்த கட்டுரைமலையாளப் படங்கள் கடிதங்கள்