செயல், தடைகள்

ராம்குமார்

அன்புள்ள ஜெயமோகன் ஐயா,

உங்களின் தன்மீட்சி புத்தகம் படித்தேன். எனது வாழ்வில் உள்ள சிறிய குழப்பம்.. நான் IPS அதிகாரியாக ஆக வேண்டும் என்ற கனவோடு தேர்வுக்கு படிக்க ஆரம்பித்தேன். நீதியை நிலை நாட்டுவதும், தீயவையிடமிருந்து நல்லவரை காப்பாற்றுவதும், குற்றம் புரிந்தவர்களை தண்டிப்பதும் போன்ற விஷயங்களை என்னால் செம்மையாக செய்ய முடியும் என்று நம்பினேன். அப்போது இதற்குப் பெயர் தன்னறம் என்று எல்லாம் எனக்குத் தெரியாது.

இடையில் காதல் கல்யாணம் வந்தது. என் மனைவி மிகப் பிரியமானவர். என்னை விட்டு சிறிதும் விலகி இருக்க மாட்டார். எனது IPS விருப்பம் அறிந்தே என் மனைவி என்னை மணந்தார். எனினும் என் மனைவிக்கு நான் IPS வேலையால் அவரைப் பிரிந்துவி்டுவோமோ, நம்முடன் இருக்க நேரமே இருக்காதோ என்றெல்லாம் பயம். என்னிடம் IPS வேண்டாம்,IAS ஆகுங்கள் எனக் கெஞ்சுவார்.

நானும் ஒரு சில IPS அதிகாரிகள் “IPS ஆனால் குடும்பதைப் பார்த்துக் கொள்ள முடியாது. உங்கள் மகனின் பிறந்த நாளாக இருந்தாலும் அதில் கலந்துகொள்ள முடியாது” என்றெல்லாம் கூறுவதை நேராகப் பார்த்திருக்கிறேன். மிகுந்த யோசனைக்குப் பிறகு என் மனைவிக்காகவும் அவளின் சிறிய ஆசைக்காகவும் நான் IAS ஆகலாம் என்று முடிவு செய்தேன். ஒரு வருடம் ஆகிவிட்டது. படித்துக் கொண்டிருக்கிறேன். எனினும் ஒரு IAS அதிகாரியாக என்னவெல்லாம் செய்யலாமோ அவை எல்லாம் எனக்குப் பெரிதும் உந்துதலாக இல்லை.

IAS வேலையை எனது லட்சியமாக நானே உருவகப்படுத்திக் கொண்டாலும், எனக்கு கண்ணுக்குத் தெரியாத ஒரு சோர்வு படிப்பதில் ஏற்படுகிறது. சோர்வைப் பற்றிய வாசகர் கடிதத்திற்கு நீங்கள் “நீங்கள் ஆற்ற வேண்டிய பணி என்ன, அதில் உங்கள் திறன் என்ன, நீங்கள் சென்றடையும் இலக்கென்ன என்பதை நீங்கள் கண்டுகொண்டீர்கள் என்றால், அதில் முற்றாக ஈடுபடுவதொன்றே வழி” என்று பதிலளித்துள்ளீர்கள்.

இந்த வரிகளைப் படித்துப்  பார்க்கையில் IPS வேலையே, எனக்கு தேர்வுக்கான படிப்பில் உந்துதலைத் தருகிறது. இந்த சூழலில் நான் என்ன செய்வது. தன்னறமா இல்லை குடும்பத்திற்காக தன்னறத்தில் சிறிது விலக்கல் ஆகுமா?? நான் தற்போது பொதுத்துறையில் பணிபுரிகிறேன். என்னுடைய பொருளாதார நிலைக்கும் அடுத்த நிலை முன்னேற்றம் தேவை. எனினும் பொருளாதார நிலைக்காக தனியாரில் சென்று எனது முழு நேரத்தையும் அங்கு அளிக்கவும் விரும்பவில்லை. ஒரு பக்கம் எனது தன்னறத்தால் வாழ்வில் அடுத்த நிலை, மறுபக்கம் அந்த அடுத்த நிலையில் குடும்பத்தின் மகிழ்ச்சி எவ்வாறு இருக்குமோ.

எனினும் உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன். (நான் என் மனைவியிடம் தெரிவித்துத் தானே மணந்தேன், இப்போது ஏன் மாற வேண்டும் என்றும் தோன்றுகிறது..)

ஆர்.பி

தியடோர் பாஸ்கரன்

அன்புள்ள ஆர்.பி

உங்கள் கடிதத்தில் உள்ளது உண்மையான சிக்கல் அல்ல. வெறும் பதற்றம்தான். ஏனென்றால் நீங்கள் இன்னும் அச்சிக்கல்களைச் சந்திக்கவில்லை. அச்சூழல்களுக்குள் செல்லவில்லை. அந்த உலகமே உங்களுக்கு தெரியாது. நீங்களே கற்பனை செய்து கொள்கிறீர்கள். இது வெறும் அச்சமும் குழப்பமும்தான். இதையெல்லாம் இப்போது யோசிப்பதும் மனைவியிடமோ பிறரிடமோ விவாதிப்பதும் அபத்தமான செயல். உங்கள் மனைவி இதைப்பற்றி உங்களிடம் பேசுவதும் தேவையற்றது.

உங்கள் மனைவி ஒன்று தெரிந்துகொள்ளவேண்டும். ‘வினையே ஆடவர்க்கு உயிர்’ என்பது பழஞ்சொல். செயல்தளத்தில் வெற்றியடைந்தவனுக்கே தன்னம்பிக்கையும் நிமிர்வும் அமையும். அவனே தன் குடும்பத்திற்கும் குழந்தைகளுக்கும் உகந்தவன். இன்று ‘கூடவே இரு’ என சொல்லும் இதே மனைவி நாளை குழந்தைகள் வந்து அவர்களுக்கான வாழ்க்கைத்தேடலின்போது நீங்கள் வெற்றியடைந்தவரா என்று மட்டுமே பார்ப்பார். கூடவே இருக்கும்பொருட்டு தோல்வியடைந்தீர்கள் என்றால் குத்திக்காட்டுவார். அதை நீங்களும் உணரவேண்டும்.

அத்துடன், ஆடவர் வினையாற்றிய காலம் முடிந்துவிட்டது. இன்று ஒவ்வொருவரும் ஒரு செயற்களம் கொண்டிருக்கவேண்டும். ஆணோ பெண்ணோ. உங்கள் மனைவி உங்களுடன் ஒட்டிக்கொண்டிருக்க முயன்றால் காலப்போக்கில் ஏமாற்றமே அடைவார். இன்றைய வாழ்க்கையில் அது இயல்வதே அல்ல. அவர் தனக்கான உலகை கண்டடையவேண்டும். தனக்கான செயல்தளத்தை, தனக்கான வெற்றியை.

ஒரு பெருஞ்செயலுக்காக நாம் தொடங்கும்போது இப்படிப்பட்ட ஐயங்களையும் தயக்கங்களையும் அடைகிறோம். இரு முனைகளிலிருந்து இவை வருகின்றன. ஒன்று நாம் எதிர்கொள்ளும் உலகப்பெருவெளி அந்த தடையை அளிக்கிறது. அதை மீறிச்சென்றால்தான் நாம் தகுதியானவர்கள். விந்தணுவுக்கு கருப்பாதை அளிக்கும் எதிர்ப்பு போன்றது அது. இரண்டு, நாமே நமக்கு தடைகளை உருவாக்கிக்கொள்கிறோம். நம்முடைய தன்னம்பிக்கையின்மையால். இரண்டையும் நாம் கடந்தாகவேண்டும்.

குடும்ப வாழ்க்கைக்கு ஏற்ப புறவுலகை உருவாக்கிக் கொள்ளும் ஆண் ஏற்கனவே தோல்வியடைந்த மனிதன். புறவுலகுக்கு ஏற்ப குடும்ப வாழ்க்கையை உருவாக்கிக்கொள்வதே உண்மையான அறைகூவல். அதைச்செய்ய அவனுக்கு உதவுபவளே நல்ல மனைவி. குடும்பத்திற்குள் மட்டும் ஆணை நிற்கச்செய்ய முயலும் பெண் அவனுடைய வாழ்க்கையை நுட்பமாக அழிக்கிறாள். அதன்பெயர் அன்பல்ல.

அன்பு ஆக்கபூர்வமானதாக இருக்கும், தியாகம் செய்யும், அளிக்கும். அழிப்பதும், அடைவதில் வெறிகொண்டிருப்பதும் அன்பென்ற பேரில் முன்வைக்கப்படும் சுயநலம் அன்றி வேறல்ல. இது ஆணுக்கும் பொருந்தும். எந்த அன்பின் பேரிலும் பெண்ணின் உலகம் விரிவதை ஆண் தடுக்கலாகாது. எந்த எல்லைவரைக்கும் சென்று ஒத்துப்போகவேண்டும்.

ஆட்சிப்பணியில் இருந்தபடி அறிவுத்தளத்தில் பெரும் பங்காற்றியவர்கள் பலர் உண்டு. முன்னரே அதைப்பற்றி எழுதியிருக்கிறேன். தன்தேர்வு. என் நண்பர் ராம்குமார் ஆட்சிப்பணியில் இருந்தபடி இலக்கியம் வாசிக்கிறார், கதைகள் எழுதுகிறார், விஷ்ணுபுரம் அமைப்பின் மையத்தூண்களில் ஒருவராகச் செயல்படுகிறார், அதற்குமேல் பல சமூகப்பணிகளும் செய்கிறார். ஆட்சிப்பணியாளராக மிகப்பெரிய அளவில் நற்பெயர் பெற்ற சாதனையாளரும்கூட. செய்ய வேண்டுமென்றால் செய்யலாம். அதற்குரிய தளத்தை தெரிவு செய்துகொள்ளலாம்.

ஆனால் அதெல்லாமே வென்றபின். வெல்வது வரை வெல்வதைப்பற்றி மட்டுமே எண்ணுங்கள். அதில் உளம்குவியுங்கள்.

ஜெ

தன்தேர்வு
பத்து ஆசிரியர்கள் 6- ராம்குமார்
’அகதி’ ராம்குமார் முன்னுரை
தேவியின் தேசம்
செயலும் கனவும்- கடிதங்கள்
செயல் -ஒரு கடிதம்
செயல்

 

முந்தைய கட்டுரைஇரு  கேள்விகள்
அடுத்த கட்டுரைபழங்காசு, ஒரு கடிதம்