தொடங்குதல்…

வணக்கம் ஜெ.

நான் மொட்டவிழ்ந்துகொண்டு இருக்கும் ஒரு இளம் எழுத்தாளர். என்னை நான் பெருமையாக நினைத்த தருணம் பல உண்டு. பத்தாம் வகுப்பில் முதல் மாணவியாக, வேளாண்மை பட்டதாரியாக, ஒரு இசை ஆர்வலராக, பாடகியாக, வாசிப்பாளராக இவை எல்லாவற்றையும் நானே என்னில் இரசித்ததுண்டு. ஆனால் நான் என்னையே எண்ணி எண்ணி பெருமை கொண்ட தருணம் என்று ஒன்று உண்டு. அது நான் எனது முதல் கதையை எழுதி என் தோழர் தோழிகளுடன் பகிர்ந்த போது, நான் இதுவரை இரண்டு கதைகள் வரை தான் நகர்ந்துள்ளேன். எழுத தொடங்கியதும் இந்த மாதம் தான். எனது புத்தக வாசிப்பு தண்ணீர் தேசம் என்ற வைரமுத்துவின் படைப்பில் இருந்து துவங்கியது அது வளர்ந்து அவரின் சில படைப்புகள், கல்கியின் இரண்டு மூன்று நாவல்கள் என நின்று போனது.

முதன் முதலில் எனது கல்லூரி இறுதி ஆண்டில் ஆல் இந்தியா டூர் செல்லும் பொழுது எங்கள் வேளாண்மை விரிவாக்க துறை பேராசிரியர் சொல்ல உங்களின் அறம் என்ற புத்தகம் என் மனதிற்குள் சென்றது. ரயிலில் அவரது இருக்கைக்கு சென்று ‘அந்த புக் இருக்கா சார்’ என்று கேட்டேன்.’அவர் நா இன்னும் முடிக்கல நீ இதில் யானை டாக்டர் மட்டும் இப்போ படிச்சுட்டு குடு’ என்றார். நானும் அந்த பகுதியை மட்டும் அன்று இரவு இரயிலில் வெளிச்சம் உள்ள இடத்தை தேடி, உறங்குபவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் படித்த அந்த நினைவும் அந்த யானை டாக்டர் என்னுள் தந்த உணர்வும் இன்றும் புத்தம் புதியதாய் அப்படியே இருக்கிறது.

அதன் பின் நான் என் கல்லூரி நண்பர்களுடன் Egalitarians என்ற அமைப்பின் மூலம் உங்களை நெருங்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த அமைப்பில் இணைந்த பின், என் நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பி வைத்தப்பின் தான் நான் அறம் புத்தகம் முழுமையாகப் படித்தேன். அதாவது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு. இத்தனை நாள் எங்க கோமால இருந்தீங்களா என்று கேட்க வேண்டாம். கிட்டத்தட்ட அப்படித்தான். காரணம், எனக்கு எந்த ஒரு புத்தகத்தையும் அச்சிடப்பட்ட தாளில் படித்தால் தான் ஒரு திருப்தி என என்னுள் நான் போட்டுக்கொண்ட வேலி என்னை ஒரு நல்ல வாசகராக வளர்க்கவில்லை. அறம் புத்தகத்தை தொடர்ந்து உங்களின் வலைதளத்தில் சிறு கதைகளில் ஆரம்பித்து இன்று வெண்முரசின் முதற்கனலில் நிற்கிறேன்.

என் மன வேலியை உங்களுக்காகவே நான் உடைத்துக் கொண்டேன் ஜெ. உங்கள் படைப்புக் கடலில் நான் கால் மட்டுமே நனைத்து இருக்கிறேன். இன்னும் உங்கள் படைப்பில் பயணிக்கவே ஒவ்வொரு இரவும் சீக்கிரம் மறைந்து புது விடியலாய் தோன்றுகிறதோ என எண்ணி கொள்வேன். இதில் அதிசயம் என்னவென்றால் நான் இன்னும் ஒரு நல்ல வாசிப்பாளராக ஆகும் முன்னே உங்கள் கடல் நீர் என்னை எழுத்தாளராக மாற்ற துவங்கி விட்டது. இதுவே உங்கள் எழுத்து என்னுள் நிகழ்த்திய அற்புதம்.

நன்றி ஜெ.

உங்கள் பதிலுக்காக பேனாவோடு காத்திருக்கும்,

பட்லூ ( நீனா)

அன்புள்ள நீனா,

உங்கள் கடிதம் கண்டேன். நீங்கள் எந்த தொழில்தளத்தில் செயல்பட்டாலும் எழுத்து உங்களுக்கு அகவயமான விடுதலையை, இளைப்பாறலை, குன்றாத இன்பத்தை அளிக்கும் ஒன்றாக நீடிக்க முடியும். ஆகவே அதை கைவிடாது கொள்க.

இலக்கியம் எழுதுவதென்பது தொடர்வாசிப்பின் வழியாகவே நிகழமுடியும். ஏன் நிறைய வாசிக்கவேண்டும் என்றால் இலக்கியத்திற்குரிய நடை உருவாகி வரவேண்டும் என்பதனால்தான். நாம் குறைவாக வாசித்தால் சூழலில் இருக்கும் நடையே நம்முடையதாகிறது. அது ஒன்று, நம் வணிகஎழுத்துச் சூழலில் புழங்கும் அலங்கார நடை. அல்லது முகநூல்சூழலில் புழங்கும் நாட்குறிப்புநடை. இரண்டுமே இலக்கியத்திற்குப் போதுமானவை அல்ல.

இலக்கியத்திற்கு நீங்கள் உங்கள் நடையை கண்டடையவேண்டும். உங்கள் உள்ளத்திற்குள் ஓடிக்கொண்டிருக்கும் சொற்களுக்கு சமானமான நடை அது. அதை தமிழின் சிறந்த படைப்புக்களை வாசித்து, அவற்றின் மொழிநடை வழியாக மேலே சென்று, உங்கள் நடையை கண்டடைவதன் வழியாகவே நிகழும்.

அத்துடன் நாம் ஒன்றை எழுதும்போது அது முன்னரே எழுதப்பட்டிருக்கிறதா என அறியவேண்டும். எழுதப்பட்டதைத் திரும்ப எழுதக்கூடாது. எழுதப்பட்டதற்கு அப்பால் சென்று எழுதினால்தான் இலக்கிய மதிப்பு. அதற்கும் நாம் வாசித்தாகவேண்டும்.

இலக்கியநூல்கள் தமிழில் ஏராளமாக உள்ளன. என் நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் என்னும் நூலை வாசித்தால் இலக்கியவாசிப்பு பற்றிய அறிமுகமும், நூல்பட்டியலும் கிடைக்கும். எழுதும் கலை என்னும் நூலில் எழுத்துமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

அழியாச்சுடர்கள் போன்ற இணையதளங்களில் இலவசமாகவே இலக்கியப் படைப்புக்களை வாசிக்கலாம். நிறைய வாசியுங்கள். என்னுடைய தளத்தில் மிக விரிவான இலக்கிய அறிமுகங்கள் உள்ளன.

உங்கள் இரு கதைகளிலும் கற்பனைத்திறனும் வாழ்க்கைமேல் ஆழ்ந்த கவனிப்பும் உள்ளது. வாசிப்பிலும் எழுத்திலும் பயிற்சி எடுத்துக்கொண்டால் நீங்கள் குறிப்பிடத்தக்க எழுத்தாளராக உருவாவீர்கள். வாழ்த்துக்கள்.

ஜெ

நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் வாங்க

எழுதும்கலை வாங்க


சிறுகதை எழுதுவது- கடிதம்

சிறுகதையின் திருப்பம்

சிறுகதையின் வழிகள்

சிறுகதை ஒரு சமையல்குறிப்பு

முந்தைய கட்டுரைசாத்தானைச் சந்தித்தல்-கடிதம்
அடுத்த கட்டுரைமௌனகுரு உரையாடல்