அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். வெண்முரசு ஆவணப்படம், அமெரிக்க நகரங்களில் நல்ல வரவேற்பை பெற்று , வெண்முரசின் சிறப்பை சொல்லி, நிலை நிறுத்தி, வடக்குமுகமாக நகர்ந்து எழுத்தாளர் முத்துலிங்கம் அய்யா உதவியுடன், கனடாவிலும் திரையிடப்பட இருக்கிறது.
அடுத்து, ராஜன் சோமசுந்தரமும், நானும் , விஷ்ணுபுரம் இலக்கியவட்ட நண்பர்களின் உதவியுடன் மூன்று பெரும் தமிழ் ஆளுமைகளுக்கு இசை சமர்ப்பணம் செய்யலாம் என்று உள்ளோம்.
1) அ. முத்துலிங்கம் அவர்களின் கடவுள் தொடங்கிய இடம் நாவலுக்கு ஒரு இசை சமர்ப்பணம். புலம்பெயர்ந்து வாழும் மக்களின் வெற்றியை கொண்டாடும் விதமாக அதை அமைக்கலாம் என்று நினைத்திருக்கிறோம். நாவல் தொட்டுச் சென்ற விஷயத்தை கொண்டாடும் வகையில் இருக்கும்.
2) எழுத்தாளர் ஜெயகாந்தனின் கவிதை ஒன்றுக்கு இசையமைத்து வெளியிட இருக்கிறோம். சித்தர் மரபில் வந்த நவீன எழுத்தாளர்.
3) எழுத்தாளர் கி.ராஜ நாராயணன் கோபல்ல கிராமம் நாவலில், பல நூறாண்டுகளாக பாடப்பட்டு வரும் ஒரு கும்மிப் பாட்டை குறிப்பிட்டிருக்கிறார். கரிசல் நிலத்தில் குடியேறிய மக்கள் எப்படி கடின உழைப்பால், கொஞ்சம் கொஞ்சமாக அந்த நிலத்தை வாழத் தகுந்த நிலமாக மாற்றினார்கள் என்று பாடும் பாடல். அதற்கு இசை அமைத்து அவருக்கு ஒரு இசை வணக்கம்.
தங்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வரவேற்கிறோம்.
அன்புடன்,
சௌந்தர்.
அன்புள்ள சௌந்தர்
மிக முக்கியமான முயற்சிகள். இன்றைய ஊடகமென காட்சியூடகத்தையே சொல்லவேண்டும். இலக்கியம் அதன் அடிக்கட்டுமானமாகவே நிலைகொள்ள முடியும். இலக்கியத்தை காட்சியூடகம் வழியாக அறிமுகம் செய்தாகவேண்டிய சூழல் இன்றுள்ளது. அதை நீங்கள் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் செய்வது மிகுந்த ஊக்கமளிக்கும் செயல்.
இந்தியச்சூழலில் ஒரு விந்தையான பிளவு நிகழ்ந்துள்ளது. எல்லா மொழிகளிலும். குழந்தைகள் இளமையிலேயே தொழில் – வணிகக் கல்விக்கு தயார்செய்யப்படுகிறார்கள். கடுமையான போட்டிச்சூழல் காரணமாக அப்பயிற்சி இரவுபகலாக நிகழ்கிறது. அதில் அக்குழந்தைகள் வென்று வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள். ஆனால் அப்பயிற்சி காரணமாக பண்பாட்டுக்கல்வி அனேகமாக முற்றாகவே கைவிடப்படுகிறது. ஆகவே உயர்தரத் தொழில் – வணிகக் கல்வி பெற்று பெரியநிலையில் இருப்பவர்களின் பண்பாட்டுப்பயிற்சியும், ரசனைத்தரமும் அடிமட்டத்தைச் சேர்ந்தவையாக உள்ளன. பாமரர்களின் ரசனைக்கொண்டாட்டத்தையே அவர்களும் கொண்டிருக்கிறார்கள். இலக்கியம், கலை, இசை, சினிமா எதிலும் அவர்களின் தரம் அதுவே. அரசியல்கூட பாமர அரசியலே.
இந்த பிளவு காரணமாக பெற்றோர் பண்பாட்டுத் தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள். அடுத்த தலைமுறையையும் அவர்கள் அவ்வண்ணமே வளர்க்கிறார்கள். இந்தியச் சூழலில் கலையிலக்கியம் இரண்டுமே நடுத்தர வர்க்கத்தவர்களால் மட்டுமே பேணப்படுகின்றன. அதாவது அந்த வெறிமிக்க போட்டியில் ஈடுபடாத மிகச்சிறுபான்மையினரான நடுத்தரவர்க்கத்தவரால். ஆகவே இங்குள்ள இலக்கியவெற்றிகள், கலைவெற்றிகள் எவையுமே நம் சமூகத்தின் பெரும்பான்மையினருக்கு தெரிவதில்லை. அவர்களுக்கு அவற்றை அறிமுகம் செய்யவேண்டிய சூழல் இன்றுள்ளது. இல்லையேல் இன்னும் ஓரிரு தலைமுறையில் தமிழ் மறக்கப்பட்டுவிடும்
இந்தியாவிலும் புலம்பெயர்ந்த மறுநாடுகளிலும் நம்மவர் இப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களிடம் நம் இலக்கியத்தை, இலக்கியவாதிகளைக் கொண்டுசெல்லும் முயற்சி ஒரு மாபெரும் பணி. வாழ்த்துக்கள்
ஜெ