‘திசைதேர்வெள்ளம்’ வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

 ‘வெண்முரசு’ நாவல்தொடரில் 19ஆவது நாவல் ‘திசைதேர்வெள்ளம்’. இத்தலைப்பினை நாம் ‘திசையைத் தேர்ந்தெடுக்கும் வெள்ளம்’ என்று பொருள்கொள்ள வேண்டும். இந்த நாவலில் போரிடுபவர்களின் மனங்களே வெள்ளமாக உருவகிக்கப்படுகிறது. அந்த வெள்ளம் ‘வீரசுவர்க்கம்’ எனும் திசையைத் தேர்ந்தெடுக்கிறது.

போர்க்களத்தில் வீரர்கள் அணிமாற விரும்பும் மனநிலையையும் இறப்பு குறித்த படைவீரர்களின் உளநிலையையும்கூட நாம் ‘வெள்ளமாக’உருவகித்துக் கொள்ளலாம். என்னைப் பொருத்தவரை இந்த நாவல் விழைவுகளின் வெள்ளம்தான். இந்த விழைவுகளுள் தெய்வங்களின் விழைவுகளும் மானுடர்களின் விழைவுகளும் உள்ளடங்கியுள்ளன.

இந்த நாவல் முழுக்கவே போரைப் பற்றியதுதான். மகாபாரதப்போரில் பீஷ்மரின் தலைமையில் நிகழும் முதற்பத்துநாட்போர்தான் இந்த நாவலின் களம். பீஷ்மரின் அறமும் அறமீறலும் அவர் அடையும் வியக்கத்தக்க வெற்றிகளும் அவர் அடையும் வெறுக்கத்தக்க பின்னடைவுகளும் இந்த நாவலில் சுட்டப்பட்டுள்ளன. ஒருவகையில் பார்த்தால் இந்த நாவலின் ஒட்டுமொத்த நாயகன் ‘பீஷ்மர்’ என்றுதான் கருதத் தோன்றுகிறது.

பீஷ்மர் தனியொருவராகப் பாண்டவர்படையின் பாதியை அழித்து விடுகிறார். அவர் நடத்தும் கொலைத்தாண்டவத்தைப் பொறுக்க இயலாமல் இளைய யாதவர் தன் படையாழியை எடுக்க முயல்கிறார். அந்த அளவுக்குப் பீஷ்மரின் விற்திறம் மிளிர்கிறது. ‘தனக்கு முன் ஆயுதம் ஏந்தி நிற்பவர்கள் எவரானாலும் அவர்கள் தனக்கு எதிரியே!’ என்பதில் துளியும் ஐயமின்றியுள்ளார் பீஷ்மர். அதனால்தான் அவரால் இளையோரையும் முதியோரையும் கொன்று முன்னேற முடிகிறது. இது போர்நெறிதான். பாண்டவர் தரப்பினர் பீஷ்மரின் இந்த ஐயமற்ற போக்கினை எதிர்பார்த்திருக்கவில்லை. அதனால், அவர்கள் ‘எந்த வகையில் பீஷ்மரைக் கட்டுப்படுத்தலாம்’ என்று சிந்திப்பதிலேயே, திட்டமிடுதலிலேயே பத்துநாட்கள் கடந்துவிடுகின்றன.

பீஷ்மரின் கொலையாடலைக் கண்டு சகிக்காத பீமன் தன்னை அறமிலியாக, காட்டாளனாக அறிவித்துக்கொண்டு, தன் முழுத்திறனைக் கொண்டுக் கௌரவர்களின் படைகளை அழித்தொழிக்க முயற்சிசெய்கிறார். அனைத்து அறங்களையும் மீறி, தன்னால் இயன்றவரை கௌரவர்களையும் உபகௌரவர்களையும் கொன்றொழிக்கிறார். ஆனால், பீமனின் இந்தப் போக்கினைத் தருமர் ஒருபோதும் ஏற்கவில்லை. சிகண்டியை முன்னிறுத்திப் பீஷ்மரைக் கொல்லவேண்டும் என்று இளையாதவர் சூழ்ச்சி செய்யும்போது அதற்கு முதல் எதிர்ப்பினைத் தெரிவிப்பவர் பீமன்தான். ஆனால், அதற்கு முதல் ஏற்பினைத் தெரிவிப்பவர் தருமர்தான். இந்த முரணைப் புரிந்துகொள்ள இயலவில்லை.

இந்த நாவலில் எண்ணற்ற கொலைகளை நம் கண்முன் காட்டிச்செல்லும் எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் அவற்றுக்கு இடைவெட்டாகவும் நாவலின் வாசிப்பு ஒழுக்குக்காகவும் மூன்று மணநிகழ்வுகளையும் பின்கதைச் சுருக்கமாகக் காட்டிச் சென்றுள்ளார். ஒன்று – கலிங்க அரசியைக் கர்ணனுக்குக் கவர்ந்து வருதல். இரண்டு – அசங்கன், சௌம்யையின் திருமணவாழ்வு. மூன்று – கடோத்கஜன், அகிலாவதி திருமணம். வாசகர்கள் இந்த நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் ரத்தத்தால் நனைந்திருந்த வேளையில், இந்த மூன்று அகவாழ்வுச் சித்தரிப்புகளும் மனத்துக்கு இதமாகத்தான் இருக்கின்றன.

இந்த நாவலில் அபிமன்யூவின் திறமை முழுமுற்றாக வெளிப்படுத்தப் பட்டுள்ளது. இளமைக்கே உரிய எல்லைமீறலையும் எழுத்தாளர் அபிமன்யூவின் செயல்கள் வழியாகக் காட்டியுள்ளார். சான்றாக, பீஷ்மரிடம் தோற்று அர்சுணன் பின்டையும்போது, அபிமன்யூ பீஷ்மரைத் துரத்திச் சென்று போரிடும் காட்சியைக் குறிப்பிடலாம். பொதுவாகவே, இளையோர் தருணம் வாய்க்கும்போது தனக்கு முன்னோரையும் மூத்தோரையும் முந்திச் செல்லவே விரும்புவர். அதற்காகத் தன்னுயிரையும் இழக்க அவர்கள் தயார்நிலையில் இருப்பர். இதனை எழுத்தாளர்,

“இளமை எப்போதுமே தன்னைச் சற்று மிகையாகவே மதிப்பிட்டுக் கொள்கிறது, தனக்குரிய வாய்ப்புகள் அமையாதுபோகுமென்று அஞ்சுகிறது. வாழ்வு கண்முன் விரிந்து கிடக்கையில் அதைப் பணயம் வைத்தாடி, வாழ்வுக்கு அப்பாலென எதையோ அடையத் துடிக்கிறது.”

‘வாழ்வுக்கு அப்பாலென’ அபிமன்யூ அடையத் துடிப்பதுதான் என்ன? தன் நடுகல்லோ!

ஒட்டுமொத்த இளமையின் துடிப்புக்கும் விழைவுக்கும் தலையில் ஒரு ‘குட்டு’ (கொட்டு) வைப்பதுபோலப் பின்வரும் வரியை எழுதியிருக்கிறார் எழுத்தாளர்.

“பிறர் நினைவில் நின்றிருக்க வேண்டுமென்று ஒன்றைச் செய்வதைப் போல் பொருளற்ற பிறிதொன்று இருக்க இயலுமா?”

இது, இளயோருக்கு மிகவும் பொருந்தும் என்றாலும் எல்லா வயதினருக்கும் இது பொருத்தமுடையதுதான் என்பது என் கருத்து.

களம்பட்ட வீரர்களின் உடல்களுக்கு இறப்புச்சடங்குகள் (செல்கைச் சடங்குகள்) நடைபெறும் காட்சியை எழுத்தாளர் விளக்கும்போது, ‘பாணர் எருமைமறம் பாடினர்’ என்ற தகவலைத் தெரிவித்துள்ளார்.

“முந்தையநாள் இறந்தவர்களுக்கான செல்கைச் சடங்குகள் அரசர்களின் பாடிவீடுகளின் முற்றங்களிலேயே நிகழ்ந்தன. களத்திலிருந்து அவர்களின் உடல்கள் கொண்டுவரப்பட்டு முற்றங்களில் நிரையாக வைக்கப்பட்டிருந்தன. ஷத்ரிய முறைப்படி வெண்கூறைக்குமேல் வாளும் வேலும் சாத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த அவ்வுடல்களுக்கு இறந்தவர்களின் தந்தையர் வாய்க்கரிசியிட்டு வணங்கினர். அவர்களின் களப்போர்த்திறத்தையும் வெற்றியையும் போற்றிப் பாணர் எருமைமறம் பாடினர். அங்கிருந்து உடன்பிறந்தார் தொடர அவ்வுடல்கள் எரிகளத்துக்கு கொண்டுசெல்லப்பட்டன….. தழைந்த தோற்பரப்பில் விரல்கள் குழைந்தாட பருபருத்த குரலில் பாணர் பாடிய எருமைமறப் பாடல்கள் கேட்டவர்களை விழிநீர்விடச் செய்தன. அத்துயர் சொல்லில்லாமல் கடுங்குளிர் எனப் படையில் பரவியது.”

‘மறம்’ என்னும் துறை புறப்பொருளைச் சார்ந்தது. இந்தமறத்துறை பல வகையாகக் கூறப்பெறும். சான்றுகள் – எருமைமறம், தானேமறம், தேர்மறம், யானைமறம், குதிரைமறம்.

புறத்துறைகளுள் ஒன்றான ‘எருமைமறம்’, வீரன்  பகைவர் படையைத் தனியனாய் நின்று தாக்குவதைக்குறிக்கும். அதாவது, தன் படை முதுகிடும்போது தான் மட்டும்  அஞ்சாமல் பகைவர் படையை எதிர்த்து நிற்பதைக் குறிக்கும்.அந்த வீரனைப் புகழ்வதற்காகப் பாணர்கள் பாடப்படுவதே ‘எருமைமறம்’ ஆகும். இது குறித்த பாடல் புறநானூறில் இடம்பெற்றுள்ளது.

“கோட்டம் கண்ணியும் கொடுந்திரை ஆடையும்

வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்

ஒத்தன்று மாதோ இவற்கே செற்றிய

திணிநிலை அலறக் கூழை போழ்ந்து தன்

வடிமாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி

ஓம்புமின்ஓம்புமின்இவண்என ஓம்பாது

தொடர்கொள் யானையின் குடர்கால் தட்பக்

கன்றுஅமர் கறவை மான

முன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே. (புறநானூறு, 275)

வளைந்த மாலையும், வளைத்துக் கட்டப்பட்ட ஆடையும் அரசன் விரும்புவதைக் கூறி, அவனைத் தன் வசப்படுத்தும் இயல்பும் இவனிடம் பொருந்தியுள்ளன. மனவலிமையையுடன் போர்புரியும் படைவீரர்கள் அஞ்சி அலறப் படையைப் பிளந்துகொண்டு தான் செல்லும் திசையை நோக்கி, நன்கு செய்யப்பட்ட, சிறந்த, கூரிய வேலின் இலைமுகத்தை ஏந்திச் செல்கிறான். “இவனை இங்கேயே தடுத்து நிறுத்துங்கள்” என்று வீரர்கள் கூறித் தடுத்தாலும் அவர்கள் தடுப்பதைக் கடந்து, தளைபூட்டப்பட்ட யானைபோல், இறந்த வீரர்களின் குடல்கள் காலைத் தடுக்க, தன் கன்றை விரும்பும் பசுவைப் போல் பகைவரின் முன்னணிப் படையிரனால் சூழப்பட்டிருக்கும் தன் தோழனைக் காப்பாற்றச் செல்கிறான்.

‘சக்ரதனுஸ்’ தன்னுடைய எருமைமறத்தைக் காண தேவர்களை அழைப்பதாக ஓர் இடத்தில் எழுத்தாளர் காட்சிப்படுத்தியுள்ளார்.

“சக்ரதனுஸ் நமது குடித்தெய்வம் இங்கு வந்துள்ளதா?” என்றார்.

அனல்காற்றுகளின் தேவனாகிய விஸ்வம்பரன். அனைத்தையும் உண்ணும் ஃபுஜ்யு. பாலைமணலில் உறையும் பர்ஹிஸ். தேவர்களே! எங்குள்ளீர்கள்? என்னைச் சூழ்க! என் எருமைமறம் கண்டு மகிழ்க!என்று சக்ரதனுஸ் சொன்னார்.

அக்கணம் காற்று ஒன்று புழுதியுடனும் எரிமணத்துடனும் வீசி அவர் ஆடைகளையும் கொடியையும் படபடக்கச் செய்தது. அவர் கைக்கூப்பி அருள்க! என்மேல் கனிக!என்றார்.

பெருவீரர்களுக்கு இறுதியில் எஞ்சுபவை எருமைமறமும் நடுகல்லும்தானோ! இதற்குத்தானா இத்தனை வஞ்சமும் கொலைகளும்?

கடோத்கஜனின் மகன் பார்பாரிகன் துரியோதனனின் மகன் லட்சுமணனிடம் பேசும்போது, லட்சுமணனின் பொதுவான போர்நெறியைப் பின்பற்றி அவனைப் போரிலிருந்து விலக்குவது நம்மை வியக்க வைக்கிறது. ‘பார்பாரிகன் தன்னுடன் இருந்தால் நாலு பீமனைக்கூட வெல்லலாம்’ என்ற வாய்ப்பு இருக்கும்போது, லட்சுமணன் போர்மாண்பைப் பின்பற்றி, அவனைப் போரிலிருந்து விலக்குவது நம்மைத் தடுமாறச் செய்கிறது. தாதையிடமும் (திருதராஷ்டிரன்) தந்தையிடமும் (துரியோதனன்) இருக்கும் அதே உளவிரிவு லட்சுமணனின் குடிகொண்டுள்ளது என்றே கருதமுடிகிறது.

“துருமசேனன் நீ உன் குடியுடன் போரிடுவாயா?” என்றான்.

என் தந்தையுடனும் போரிடுவேன். எதிர்கொண்டு மோதினால் கொல்வேன். அது களநெறிஎன்றான் பார்பாரிகன்.

அவரை வெல்ல இவனால் எளிதில் இயலும்என்று அலம்புஷன் நடுவே புகுந்தான்.

இவன் நகரில் நிகழும் அனைத்துப் போர்களிலும் தன் தந்தையைக் கைக்குழவி என தூக்கி அறைந்திருக்கிறான். இவன் வல்லமை அவரைப் போல நால்வருக்கு நிகர்.

துருமசேனன் மெய்யாகவா?” என்றான்.

ஆம், தந்தையே. என்னால் எந்தையை மிக எளிதில் வெல்லமுடியும். தாதை பீமசேனரையும் இடரின்றி வெல்வேன். நேர்ப்போரில் என்னிடம் எதிர்நிற்கும் ஆற்றல் கொண்டவர் பால்ஹிகர் மட்டுமே. இளைய யாதவரும் அங்கநாட்டரசர் கர்ணனும் மட்டுமே என்னை வெல்லக்கூடும் என எந்தை சொன்னார்என்றான் பார்பாரிகன்.

லட்சுமணன் முகம் சுளித்து தலையைத் திருப்பிக்கொண்டு உன் அகவை என்ன?” என்றான்.

பதின்மூன்று, ஆனால்…” என அவன் தொடங்க, நீ களம்புகலாகாது. இது என் ஆணை!என்றான் லட்சுமணன்.

தந்தையே, நான்…” என அவன் சொல்லத் தொடங்க, என் சொல்அதை என் மைந்தர் மீறலாகாதுஎன்று லட்சுமணன் உரக்க சொன்னான்.

நீ மேற்குமூலை காவல்மாடத்தில் அமர்ந்துகொள்க! அங்கிருந்து போரை நோக்கு. ஒவ்வொருநாளும் போரில் என்ன நிகழ்கிறதென்பதை உள்ளத்தில் பதித்து அன்று மாலை என்னிடம் வந்து விரிவாகச் சொல்.

எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்களின் எழுத்தாற்றலுக்குரிய பல்வேறு சிறப்புக்கூறுகளுள் ஒன்றாக, ‘வாசகர் படிக்கும் போதே அந்தக்  காட்சியைத் தம் மனத்துள் காணச் செய்யும்நுட்ப’த்தைக் குறிப்பிடலாம். காட்சியை எழுத்தாக்கும் எழுத்தாளரின் மாயவித்தைக்கு ஒரு சான்று –

“அரைக்கணம் என பீஷ்மரின் பார்வை அபிமன்யூவைத் தொட வந்தது. அதன் பொருளை உணர்ந்த பிரலம்பன் தன் தேரிலிருந்து எழுந்து அபிமன்யூவின் தேரை நோக்கிப் பாய்ந்து, அந்தப் பேரம்பைத் தன் நெஞ்சில் வாங்கி, அபிமன்யூவின் மேல் விழுந்தான். அபிமன்யூ குனிந்து அவனைத் தூக்க, பிரலம்பன் நீருக்குள்ளென அவன் முகம் கலங்கித் தெரிவதை இறுதியாகப் பார்த்தான்.”

இத்தனை அழிவுகளுக்குப் பின்னர் பாண்டவர்தரப்போ அல்லது கௌரவர் தரப்போ சமாதானத்துக்கு முன்வரும் என்று இருதரப்புப் படைவீரர்களும் எதிர்பார்க்கின்றனர். ‘முற்றழிவை எந்த மன்னரும் விரும்புவதில்லை’ என்ற காரணத்தால்தான் அவர்கள் இந்தப் பொதுவான மனநிலையை எய்தி, எதிர்பார்க்கின்றனர். ஒருவேளை கௌரவர்களோ பாண்டவர்களோ சமாதானத்துக்கு முன்வந்தாலும்கூட அதைத் தடுக்கும் முதல்மனிதராக இளைய யாதவரே இருப்பார் என்பதை எழுத்தாளர் அழுத்தமாகக் காட்டிவிடுகிறார். இளைய யாதவர் சேகிதானனிடம் கூறும் கருத்துகள் முதன்மையானவை.

இளைய யாதவர் முழு நாட்டையும் அளிப்பார்கள் என்றாலும் இந்நிலத்திலிருந்து தன் உற்றாருடன் முழுமையாகவே விலகி பிற நிலம் ஒன்றுக்குச் செல்வதாக அவர் ஒப்புக்கொண்டாலும்கூடப் போர் ஒருகணமும் பின்னடைய நான் ஒப்பமாட்டேன். அவர்கள் இங்கே களத்திலிருந்து தப்பி ஓடினால் அவர்கள் செல்லுமிடமெங்கும் துரத்திச் செல்லச் சொல்வேன். பாரதவர்ஷத்தைவிட்டு அயல்நிலங்களில் அவர்கள் குடியேறினால் அங்கும் படைகொண்டு அவர்களை அழிப்பேன். கௌரவக் குடியின் இறுதித்துளி இந்நிலத்திலிருந்து முற்றாக அழிவது வரை இப்போர் முடியாதுஎன்றார்.

இளைய யாதவர் இந்த முடிவினைப் போர்முனையில் எடுக்கவில்லை என்பதையும் எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்.

“இளைய யாதவர், பாண்டவர்களில் இருவர் என்னைவிட்டு அகலமாட்டார்கள். இன்றுள பாண்டவப்படையில் இந்திரப்பிரஸ்தத்தினரும் பாஞ்சாலரும் விராடரும் மட்டுமே என்னைவிட்டுச் செல்வார்கள். எஞ்சியோரை என் ஆணை கட்டுப்படுத்தும். கௌரவர்களை நானே வெல்வேன். என் வஞ்சத்திலிருந்து அவர்கள் எங்கும் ஒளியமுடியாது. வேள்விச்சாலையிலோ மூதாதையர் ஆலயத்திலோ சென்று ஒளிந்து கொண்டாலும்கூட உட்புகுந்து வெளியே இழுத்து இட்டு கொல்வேன்என்றார். “இந்த முடிவு என்று அவர்களின் வேள்விச்சாலையிலிருந்து என் கால்பொடியைத்தட்டி உதறி அஸ்தினபுரிக்கோட்டை முகப்பை கடந்தேனோ அன்று எடுக்கப்பட்டது. எடுத்த முடிவுகளை நான் எந்நிலையிலும் மாற்றுவதில்லைஎன்றார்.”

ஆக, கௌரவர்களுக்கு முதன்மையான எதிரி பாண்டவர்கள் அல்லர்; இளைய யாதவர்தான். தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள பாண்டவர்களைத் தன் கருவியாகப் பயன்படுத்துகிறார் இளைய யாதவர்.

ஒருவகையில் பார்த்தால் எல்லாவற்றையும் மிகவும் திட்டமிட்டு நடத்துவது இளைய யாதவரே என்பது புரிந்துவிடுகிறது. ‘ஊழி’ன் மானுட வடிவாகத் திகழ்கிறார் இளைய யாதவர். இதனை அவரே வெளிப்படையாகத் தெரிவிக்கவும் செய்கிறார்.

சேகிதானன் பெருமூச்சுவிட்டான். பின்னர், அவர் கையிலிருந்த சுவடியைப் பார்த்தான். அவன் விழியசைவை நோக்கிய இளைய யாதவர், விருத்திர வைஃபவம். இனிய பாடற்சுவை கொண்டது. இந்திரனும் விருத்திரனும் அவர்களுக்கு அப்பாலிருக்கும் தெய்வங்களால் களத்தில் ஆட்டுவிக்கப் படுவதைக் கூறுவது. இங்குள எவரையும் களம்செல்லவேண்டாம் என்றோ, வஞ்சமொழிய வேண்டுமென்றோ நான் ஆணையிட மாட்டேன்! இவர்களாக விரிந்து எழுந்து போரிடுபவன் நானே. அனைத்து வஞ்சங்களும் என்னுடையவை” என்றார்.

துரியோதனன் எதையும் எண்ணித்துணிவதில்லை. துணிந்த பின்னர் பின்னடைவதுமில்லை. இதனைத் துரியோதனன் பல தருணங்களில் உரைத்துள்ளான். துரியோதனன் தன்னுள் உறைந்த உள்ளொளியின் வெளிச்சத்தில் செயல்படக்கூடியவன். அவனுக்கு அவனே இருள், அவனே ஒளி. இருளுக்கும் ஒளிக்கும் வேறுபாடு அறியாத தந்தையின் மைந்தன் அவன். அவன் ஒவ்வொரு முறையும் எழுவதும் விழுவதும் ஒளியென மயங்கி அவன் கால்வைத்த இருளில்தான்.

தன்னுடைய வாழ்முறையையே துரியோதனன் ருக்மியிடம் அறிவுரையாகப் பகர்கிறான்.

காலத்தின் பொருட்டும், குடியின் பொருட்டும், சொல்லின் பொருட்டும் ஒருவன் வாழ்வானெனில் அவன் இருளையே சென்றடைவான். உள்ளிருக்கும் ஒளியின் பொருட்டு வாழ்க!என்றான் துரியோதனன்.

திருதராஷ்டிரனுக்கு உரிய தனித்துவமான குணநலன்களுள் ஒன்று எல்லையற்ற உளவிரிவு. அதில் பாதியையாவது துரியோதனன் பெற்றிருக்கிறான் என்பதும் அவற்றை அவ்வப்போது செயல்படுத்துகிறான் என்பதும் வாசகருக்குப் பெரிய ஆறுதலைத் தருவனவாக உள்ளன.

“அன்றே அவர் தன் படைகளை அழைத்துக்கொண்டு அஸ்தினபுரியின் படைகளுடன் சென்று சேர்ந்துகொண்டார். காரூஷநாட்டுப் படைகளில் பெரும்பகுதியினர் அவருடன்தான் வந்தனர். ஏனென்றால் அரசருக்குரிய கணையாழியால் ஆணையிட அவரால் இயன்றது. அந்த ஓலைக்கு காரூஷநாட்டின் பதினாறு படைத்தலைவர்களும் கட்டுப்பட்டார்கள். அவர்கள் அஸ்தினபுரியின் படைகளை அடைந்தபோது அது குருக்ஷேத்ரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. கௌரவ அவையில் அவரை வரவேற்ற சகுனி மைந்தருக்கு எதிராகக் களம்நிற்கப் போகிறீர்கள்என்று சொன்னார்.

அச்சொல்லின் உள்ளுறை புரியாமல் அவர்கள் என் மைந்தர்கள் அல்லர். என் சொல்லைத் தட்டியதுமே என் எதிரிகளாகிவிட்டனர். நான் என் அன்னையின் ஆணையை ஏற்று இங்கே வந்தவன்என்றார் க்ஷேமதூர்த்தி.

துச்சாதனன் ஆனால், இங்கிருந்து அங்குச் செல்லவும் உங்கள் அன்னையல்லவா ஆணையிட்டாள்?” என்றான். அவையில் எழுந்த சிரிப்பின் ஒலி க்ஷேமதூர்த்தியைக் கூசச் செய்தது. ‘வந்திருக்கலாகாதோ!’ என்னும் எண்ணம் எழுந்தது. ஆனால், துரியோதனன் எவ்வண்ணமாயினும் என்ன? நம்மை நாடி வந்துவிட்டார். அவையமர்க, காரூஷரே! நம் வெற்றியில் மைந்தரும் வந்து இணையட்டும்என்றான். அவர் விழிநீர் வழிய இந்தப் பெருந்தோள்களுக்காகவும் அகன்ற உள்ளத்துக்காகவும்தான் இங்கே வந்தேன்என்றார் க்ஷேமதூர்த்தி.

நேரத்துக்கு ஏற்ப அணிமாறும் படையினரையும் அரவணைக்கும் பேருள்ளம் துரியோதனனிடம் இருக்கிறது. ஆனால், பாண்டவர் படையில் சேர்வதற்காகச் செல்லும் க்ஷேமதூர்த்தியைப் பீமன் புறக்கணிக்கிறார்.

‘பீமனைத் துரியோதனனின் ஆடிப்பாவை’ என்றுதான் எழுத்தாளர் முன்பு பலமுறை குறிப்புணர்த்தியிருந்தார். ஆனால், அந்த ஆடிப்பாவையில் மெய்ப்பாவையின் முதுகு தெரியாதுதானே! மெய்ப்பாவையின் எல்லாக் குணங்களையும் நாம் ஆடிப்பாவையிடம் எதிர்பார்ப்பது நமக்கு ஏமாற்றத்தையே  தரும். ‘கௌரவர்கள் நூற்றுவரும் நூறு உடல்கள்; ஆனால், ஒரே மனம்’ என்றுதான் எழுத்தாளர் குறிப்புணர்த்தினார். ஆனால், துரியோதனனுக்கு உள்ள            விரிந்த உள்ளம் துச்சாதனனிடம் சில விழுக்காடுகள்கூட இல்லை என்பதையும் நாம் இங்கு நினைவுகூர்தல் வேண்டும்.

சில எழுத்தாளர்கள் காட்சிகளை வாசகருக்குக் கவித்துவமாக விளக்க ஒலிக்குறிப்புகளைப் பயன்படுத்துவதுண்டு. ஆனால், இந்த எழுத்தாளர் ஒட்டுமொத்தப் போர்க்களத்தையும் ஒலிக்குறிப்புகளாக மாற்றிக் காட்டியுள்ளார்.

“சர்வதனும் சுதசோமனும் வருவதற்குள்ளாகவே பீமசேனரும் கௌரவர்களும் கடும்போரில் இறங்கிவிட்டிருந்தார்கள். துச்சலனும் துர்மதனும் இருபுறமும் நின்று அம்புகளால் தாக்க, துச்சகனும் சுபாகுவும் நேரெதிரில் நின்று போரிட்டனர். பீமசேனரின் இருபக்கங்களையும் பாஞ்சாலப் படையின் பரிவில்லவர் காத்தனர். அம்புகள் உரசிச்செல்லும் உலோகக் கிழிபடலோசை செவிகூச ஒலித்தது. அம்புமுனைகள் முட்டிய பொறிகள் கண்முன் வெடித்து வெடித்து சிதறின. பரிவில்லவர்கள் இருபுறமும் அலறி விழுந்துகொண்டிருந்தனர். அவ்விடத்தை நிரப்பிய பரிவில்லவர்கள் குளிர்நீரில் குதிக்கும் இளையோர்போல உரக்க கூச்சலிட்டனர். இரும்பின் ஓசைகளாகச் சூழ்ந்திருந்தது காற்று. அம்புகளின் ஓசை, கவசங்களின் ஓசை, சகடங்களின் ஓசை. அங்கே ஒரு மாபெரும் கொல்லப்பட்டறைச் செயல்படுவதுபோலத் தோன்றியது.

இந்த நாவலின் தொடக்கத்திலேயே அம்பையும் கங்காதேவியும் அருவுருவாகப் போர்க்களத்துக்குள் நுழைவதுபோலக் காட்டியுள்ளார் எழுத்தாளர். அம்பை பீஷ்மரைக் கொல்லும் நோக்கோடும் கங்காதேவி தன் மகன் பீஷ்மரைக் காக்கும் நோக்கோடும் ஒருவருக்கொருவர் போட்டியாகச் செயல்படுகின்றனர். பெருவீரர்களின் உள்ளங்களில் நுழைந்து மீள்கிறார்கள். ஒருவருக்கொருவர் சூளுரைக்கிறார்கள்.

இந்த நாவலின் இறுதியில் பீஷ்மர் களம்வீழ்கிறார். அம்பை திரௌபதியின் உடலைத் தன் வாகனமாக்கி, அதில் உட்புகுந்து, பீஷ்மரின் களவீழ்ச்சி பற்றிப் பேசுகிறார், கொண்டாடுகிறார். பீஷ்மரின் களவீழ்ச்சி பற்றியச் செய்தியை யாதவப்பேரரசிக்கும் (குந்திதேவி) பாஞ்சாலத்து அரசிக்கும் (திரௌபதி) தெரிவிப்பதற்காகத் தூது செல்கிறார் பூரிசிரவஸ். தூதுச் செய்தியைக் கேட்ட பாஞ்சாலத்து அரசி திரௌபதியின் நடவடிக்கை பற்றிப் பூரிசிரவஸ் சுபாகுவிடம் கூறுகிறார்.

“அவர் கண்கள் சிவந்து கலங்கியிருந்தன. முகம் காய்ச்சல் கண்டது போலிருந்தது. “ஆம்! அவன் வீழ்ந்தான். என் மைந்தனின் கையால் வீழ்ந்தான். வென்றது என் வஞ்சம். ‘பெண்பழி நின்றுகொல்லும்’ என்று அறிக இவ்வுலகு” என்றார். நான் திகைப்புடன் யாதவப் பேரரசியை பார்த்தேன். அவரும் திகைத்தது போலிருந்தார். ஆனால், விரைவிலேயே தன்னை மீட்டுக்கொண்டு எழுந்துசென்று, பாஞ்சாலத்து அரசியைத் தோள் பற்றி மெல்ல உலுக்கி, “பாஞ்சாலத்து அரசி, உன் சொற்கள் எதிர்நோக்கப்படுகின்றன” என்றார். பாஞ்சாலத்து அரசி துயில்கலைந்து விழித்துக்கொண்டவர்போலச் சிறு அதிர்வுடன் மீண்டு, என்னை நோக்கினார்.”

அம்பைக்குப் பீஷ்மர் மீது தீரா வஞ்சம். திரௌபதிக்குக் கௌரவர்களின் மீது தீரா வஞ்சம். ஆனால், இவர்களைவிடக் குந்திதேவிக்குத்தான் திருதராஷ்டிரர் உட்பட ஒட்டுமொத்த கௌரவர்களின் மீதும் வஞ்சம் இருக்கிறது. ஆனால், அம்பை திரௌபதியைத்தான் தேர்ந்தெடுக்கிறார். ஒரு வஞ்சநெஞ்சம் பிறிதொரு வஞ்ச நெஞ்சத்தைத்தான் தன் ஊர்தியாகக் கொள்ளும். ஆவியாக வந்தாலும் அம்பை குந்திதேவியை விலக்கி, திரௌபதியைத்தான் தேர்ந்தெடுக்கிறார். இது சிந்தனைக்குரியது.

சுபாகு தன் மகன் சுஜயனைக் கொன்ற அர்சுணனிடம் ‘சுஜயனின் விண்வாழ்வுக்காக வேண்டிக்கொள்க’ எனக் கோருவதும் கௌரவர்கள் தங்களால் களத்தில் பெரும்புண்பட்ட அர்சுணனின் மகன் அபிமன்யூவுக்குத் தங்களின் தரப்பிலிருந்து தென்னக மருத்துவர்குழுவை அனுப்புவதும் வியப்புக்குரியதாக உள்ளது. ‘விம்பிள்டன்’ விளையாட்டின் இறுதியில் இருதரப்பு வீரர்களும் வெற்றி-தோல்வி என்ற மனநிலைக்கு அப்பால், தங்களுக்குள் நட்புறவோடு கைக்குலுக்கிக் கொள்வதுபோன்ற ஒரு பெருந்தன்மையினை இங்குக் காணமுடிகிறது.

இந்த நாவலில் போர்க்களத்தின் பாடிவீடுகளில் தங்கியிருக்கும் படைவீரர்களுக்கு இரவில் வந்துபோகும் கொடுங்கனவுகள் பற்றிய சித்திரங்கள் வாசகரின் உள்ளத்தைப் பதைபதைக்கச் செய்கின்றன. தம் தரப்புப் பாடுவீடுகளையும் ஒட்டுமொத்த வீரர்களின் நிரைகளையும் பாதுகாக்கும் காவற்பணியாளர்களின் செயல்பாடுகள் நம்மை வியக்க வைக்கின்றன. அவர்களின் பகற்காவல் பணிகளும் இரவுக்காவல் பணிகளும் எத்தனை வலியுடையது என்பதை அறிய முடிகிறது. அவர்கள் போரிடவில்லை; ஆனால், தங்களுக்குள் ஒவ்வொரு கணமும் போரை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்த நாவலில் எனக்குப் பிடித்த இரண்டு வசனங்கள் பின்வருமாறு –

  1. பொறுப்புகளிலிருந்தே பெருஞ்செயல்கள் எழுகின்றன. பெருஞ் செயல்களால் மானுடர் சான்றோரும் வீரரும் ஆகிறார்கள்.” 2. “பிறர்போல் இருப்பது ஒரு விடுதலை. தனித்தன்மை என்பது பொறுப்பு

மிகுந்த பொறுப்புணர்வோடு ‘வெண்முரசு’ தொடர்நாவல்களை எழுதிய பெருஞ்செயலால்தான் எழுத்தாளர்  உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் உலக அளவில் தனித்துவமான எழுத்தாளராகத் திகழ்கிறார். ‘வெண்முரசு’ முழுமையாகப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் காலக்கட்டத்தில் என்னுடைய இந்தக் கருத்தினை உலகம் ஒருமனதாக ஏற்கும்.

முனைவர் . சரவணன், மதுரை

கார்கடல் வாசிப்பு முனைவர் ப சரவணன்

‘எழுதழல்’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன் 

கிராதம் முனைவர்  முனைவர் ப சரவணன் மதுரை

சொல்வளர்காடு – முனைவர் ப சரவணன் மதுரை

‘செந்நா வேங்கை’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன், மதுரை  

‘இமைக்கணம்’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன்

பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்,

‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்

காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை  

‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை

‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்

வண்ணக்கடல் வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

முதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன்

முந்தைய கட்டுரைவெண்முரசு நடையும் அறிவியல்புனைவும்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம், கடிதம்